மாவீரர்களின் கனவுகளை மனதோடு சுமந்திருப்போம்…
==========================================
கார்த்திகைத் திங்களிலே கார் சூழ்ந்து நிற்கையிலே காலத்தை வென்ற – எம் காவிய நாயகர்களின் கல்லறையை கண்ணீரால் நீராட்டி கனத்த இதயத்துடன் பூஜித்து நிற்கின்றோம்.
தாய்மண்ணே மூச்சென்று தலைவனின் வழிநின்று பகைவென்ற வீரர்களே உம்பாதம் தேடி ஓடோடி நாம் வந்து ஒருகணம் தியானிப்போம்.
உள்மனம் தேம்பியழ, கண்மணிகளே….
உங்கள் கனவுகள் கலைந்துதான் போகலாமோ?
தமிழரெம் தலைவிதியும் தலைகீழாய் மாறலாமோ?
தளைத்து நின்ற எம்தேசம் சிதைவுண்டு போகலாமோ?
சிதறுண்ட எம்மினம் சிறைப்பட்டு வாடலாமோ?
கறைபட்ட கைகளிடம் கையேந்தி நிற்கலாமோ?
எம்தேசத்தின் விடுதலை வித்துக்களே விலைமதிப்பற்ற அழியாச்சொத்துக்களே என்றும் மனதில் குடியிருக்கும் முத்துக்களே, உங்கள் கல்லறைகளைக்கூட இந்தக்காடையர்கள் விட்டார்களா..? அவர்கள் அழித்தது கல்லறைகளை மட்டும்தான். எங்கள் நெஞ்சறைகளில் குடியிருக்கும் உங்களின் நீங்கா நினைவுகளையல்ல. ஆண்டாண்டுகாலம் ஆனாலும் அழியாது உங்கள் நினைவுகள். மறவோம் ஒருநொடியும் மாணிக்கங்களே! உமை தொழுவோம் நாம் அனுதினமும். செழித்துத் தளைத்தோங்கிநின்ற தமிழீழ தேசமதின் தன்னிகரற்ற வளர்ச்சிகண்டு கிளர்த்தெழுந்ந வல்லரசுகள் வந்துவிடுமோ? வல்லரசாய் தலைநிமிர்ந்த தமிழீழதேசம் என அஞ்சி வஞ்சகமாய் எம்மினத்தை அடியோடு அழிப்பதற்கு குவிந்துவந்து அடித்ததல்லோ?
உலக வல்லரசுகளை களத்தில் கதிகலங்கவைத்து காவியமாகிய வீரத்தளபதிகளும் சூரப்புலிவீரர்களும் ஏராளம் ஏராளம். எப்படி நாமிதை மறப்பது? நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறதே, கண்ணீர் பெருக்கெடுக்கிறதே…
மாவீரர்கள் ஒவ்வொருவரும் எஞ்சியிருக்கும் எச்சத்தமிழர்கள் நாமும் கண்ட தமிழீழக் கனவு கலைந்துபோகவிடலாமோ, ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்!’ என்று அன்று பாடினான் பாரதி. ஈழத்தமிழர் நாம் தமிழீழப் பயிரை கண்ணீரோடு சேர்த்து செந்நீரையும் சிந்தி வளர்த்தோம்.. எப்பெரும் தியாகங்களால் வளர்த்த தமிழீழப் பயிரை தமிழர் நாம் கருகவிடலாமோ ?
உறுதியால் உங்கள் உள்ளங்களை உரமேற்றுங்கள். மனது தளராதீர்கள். இதுவே வழியயன வழிகாட்டிய தலைவன் ஈழமண்ணுக்காய் தன் தனயனையும் ஈகம் செய்தான். அப்பெரும் உன்னதத் தலைவனின் சிந்தனைகள் எம்மை நெறிப்படுத்தட்டும். அவரது ஆசிகள் எம்மை வழிநடத்தட்டும், வருங்காலம் என்னவென்று ஏங்குகின்ற இதயங்களே கலங்காதீர்கள் காலம் பதில் சொல்லும்.
தமிழீழக் கனவை மனமுழுதும் சுமந்திருக்கும் புலம்பெயர்வாழ் அன்புறவுகளே…
அணையாது ஒளிரட்டும் உங்கள் ஒற்றுமைச்சுடர்.
அழியாது தொடரட்டும் பேரார்ப்பாட்டங்கள்.
அதன்பால் அகலட்டும் எம்மீதான பயங்கரவாதத்தடை.
அதுவரை கொளுந்து விட்டெரியட்டும் எம்மின மீட்சிக்கானஇலட்சியத்தீ…!
தடைகள் தளர்ந்தபின் அரிதாரங்கள் பல களையப்படும் கவலைகள் காணாமல் போகும், ஈழத்தமிழரெம் தமிழீழ தேசத்திற்கான பயணத்தை தொடருவோம் நிச்சயம் கிடைக்கும் வெற்றி என்ற நம்பிக்கையோடும் மாவீரச்செல்வங்களின் கனவுகளை மறவாமல் சுமந்து செல்லும் மனதோடும்..!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
உதயன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக