கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 நவம்பர், 2012

மகாபாரதம்



மகாபாரதம் ஓர் ஆய்வு....! (பாகம் 1)

புராணங்கள் என்றவுடன் அவைகள் கட்டுக்கதைகள் பொய்களை அழகிய உதாரணங்களோடு கூறி மக்கள் மத்தியில் குருட்டுத்தனமான பக்தியை வளர்ப்பதற்கு பயன்படுபவைகள் என்றே பலரும் கருதி வருகிறார்கள். ஆனால் அவைகள் மூடநம்பிக்கைகளின் களஞ்சியங்கள் அல்ல அறிவாற்றலை வளர்ப்பதற்கான மிகச் சிறந்த கருவிகளே ஆகும் என்ற குருஜியின் கருத்தும் அவர் ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள அறிவார்த்தமான விஷயங்களை மிக 
விரிவாக விளக்கிக்கூறிய பின்பு புராணங்களின் மீது அலாதியான ஈடுபாடும் மரியாதையும் எனக்கு ஏற்படலாயிற்று. ஆகவே ராமாயணத்தின் அடுத்தவளர்ச்சியான மகாபாரதத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள குருஜியின் முன்னால் சில கேள்விகளை வைத்தேன்.

கேள்வி:

புராணங்களில் மிகச் சிறந்தது மகாபாரதம் என்று கேள்விபட்டிருக்கிறேன். அந்த மகாபாரதம் சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதைப்பற்றி விரிவாக கூற இயலுமா?


பதில்:

முதலில் நீ மகாபாரதத்தை புராணங்கள் வரிசையில் கூறுவது மிகப்பெரும் தவறுதலாகும். புராணங்கள் என்றால் பழையது புராதனமானது என்ற அர்த்தம். கொள்ளவேண்டும் சிவபுராணம், விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம், தேவி புராணம் என்று பதினெட்டு புராணங்கள் உள்ளன. அந்த பதினெட்டு புராணவரிசையில் ராமாயணமும், மகாபாரதமும் வராது. இவை இரண்டும் இதிகாசங்கள் என்ற வகையைச் சார்ந்ததாகும். இதிகாசம் என்றால் இப்படி நடந்தது அதாவது இதி என்றால் இப்படி என்றும் காசம் என்றால் நடந்தது என்றும் பொருள் கூறப்படுகிறது. அதாவது நடந்த வரலாறு என்று நாம் பொருள் கொள்ளலாம். மகாபாரதம் இதிகாசம் என்ற பெயரில் நடந்த வரலாறு என்று கொண்டால் அது நடந்ததற்கான ஆதாரம் எங்கே உள்ளது என்று கேட்கத் தோனும் அதற்கான பதில் நான் ராமாயணத்தைப்பற்றிக் கூறும்போதே சொல்லியிருப்பதனால் அந்த பதிலே இதற்கும் பொருந்தும் என்பதனால் நாம் மற்ற விஷயங்களைப்பற்றி சிந்திப்போம்.

கேள்வி:

இதிகாசத்திற்கும் புராணத்திற்குமுள்ள வேறுபாடு நன்றாகப்புரிந்தது. மகாபாரத்தை வியாசர் எழுதியதாகக் கூறப்படுகிறது. வியாசர் என்பவர் யார்? வேதங்களைத்தொகுத்த வியாசரும் இவரும் ஒருவரா அல்லது வேறு வேறான நபர்களா?

பதில்:

நமது சங்ககால தமிழ் இலக்கியங்களில் புலவராக கூறப்படும் ஒளவையார் ஒருவரா, பலரா என்ற சர்ச்சை தொடர்ந்து நடப்பதைப்போன்று வடமொழி இலக்கிய வரலாற்றிலும் வியாசர் ஒருவரா, பலரா என்ற சர்ச்சை நடந்து வருகிறது. இருப்பினும் வேதங்களைத் தொகுத்த வியாசரும் மகாபாரதம் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றை எழுதியது ஒரே வியாசர் தான் என்ற வலுவான கருத்தும் பரவலாக உள்ளது.

நம் பாரதத்திருநாடு கணக்கற்ற ஞானபுருஷர்களை உருவாக்கிய புண்ணிய பூமியாகும். நம் நாட்டில் தோன்றிய தலைசிறந்த ஞானிகளில் தலைமையானவர் வியாசரே ஆவார். வானத்தில் இருக்கின்ற சூரியன் ஓய்வு என்பதே இல்லாதவாறு நமது பூமிக்கு வெளிச்சத்தை வாரி வழங்குவதுபோல் இம்மண்ணுலகில் வாழ்ந்த காலமெல்லாம் ஞான பொக்கிஷங்களை வாரி வழங்கியவர் வியாசரே ஆவார். வேதங்களை தொகுத்த வியாசர், பாரத பெருங்காவியத்தைப் படைத்த வியாசர் வேதாந்த சூத்திரத்தை உருவாக்கிய வியாசர், பதினெட்டு புராணங்களையும் உருவாக்கி மிகப்பெரும் சிந்தனைப் புதையல்களுக்கு நம்மை சொந்தக்காரர்களாக ஆக்கியிருக்கிறார்.

வியாசரின் உருவ அமைப்பு கம்பீரமே வடிவானது என்று பாரதம் கூறுகிறது. அவர் விழியிலிருந்து வழிகின்ற அருள் ரசம் சிந்தனை தென்றலையும் அவர் ஜடாமுடியில் ஜொலிக்கும் ஞான அக்னி தவத்தின் மேன்மையையும் நமக்குக் காட்டுவதாக பாரதம் பறைசாற்றுகிறது.

பிள்ளைப் பிராயத்தில் கண்ண பரமாத்மா துள்ளிவிளையாடிய யமுனைநதி கரையோரத்தில் வியாசர் பிறந்தார். இவரை ஈன்றெடுத்த தாய் தர்மமே வடிவான சத்தியவதி ஆவாள். தகப்பனாரோ தவத்தின் மறுவடிவான பராசர மகரிஷி ஆவார். தர்மத்திற்கும் தவத்திற்கும் மகனாகப் பிறந்த வியாசர் அறிவுக் கடலாகவும், ஞானச்சுடராகவும் வாழ்ந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.

இவர் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத எதுவும் ஒழுக்க நெறியாக இருப்பதில் எந்த பயனும் இல்லை என்கிறார். எனவே தான் மகாபாரதம் முழுவதும் நெறியான ஒழுக்கத்தை தனியாக கட்டம் கட்டியும் சில கதைகள் மூலமாகவும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகக் கூறுகிறார்.

கட்டுப்பாடின்றி நாலாதிசையும் அலைவது புலன்களின் இயல்பாகும். அப்படி அலைந்து திரிகின்ற புலன்களை மனம் என்னும் பட்டுக் கயிற்றால் கட்டி தர்மத்தின் வழி நிற்க செய்ய வேண்டும். தர்மம் என்றுமே அழிந்து போகாது. அது நிலையானது. அதே போன்றே ஆத்மாவும் நிலையானது உடல் மட்டும் தான் அழிந்து போகக்கூடியது. எனவே அழியாத உயிருக்கு மேன்மை தரக்கூடிய தர்மங்களை மட்டுமே மனிதன் செய்ய வேண்டும். அழிந்து போகும் உடலோடு கூடிய புலன்கள் விரும்பும் செயல்களைச் செய்து ஆத்மாவைக் கேவலப்படுத்தக்கூடாது என்பதே வியாசரின் கொள்கை இதுதான் மகாபாரத்தின் மையக் கருத்து

மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களால் ஆன பெரிய நூலாகும். இதை அப்படியே எந்த மாற்றமும் செய்யாமல் அச்சு வடிவில் கொண்டு வந்தால் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்கங்களைக்கொண்ட பெருநூல் தொகுதியாகவே விரியும் இதில் பதினெட்டு பருவங்கள் உள்ளன. மேலும் சுமார் நூறு சிறிய பருவங்களும் உள்ளன. மிகப்புகழ் வாய்ந்த பகவத்கீதை மட்டுமல்ல அனுகீதை, பராசர கீதை போன்ற வேறுசில கீதை நூல்களும் இதில் அடங்கியுள்ளன.

மகாபாரதத்தில் எண்ணிக்கையில் அடங்காத கிளைக்கதைகள் பற்பல உள்ளது. அவற்றில் நளதமயந்தி வரலாறு, சத்தியவான் சாவித்திரி வரலாறு, ராமன் வரலாறு, துஷ்யந்தன் சகுந்தலை வரலாறு, அரிச்சந்திரன் வரலாறு, குசேலன் கதை, கந்தப்பெருமான் கதை, பரசுராமன் கதை போன்றவைகள் குறிப்பிடத் தக்கதாகும். இவை தவிர ஏராளமான ரிஷிகள் முனிவர்களைப் பற்றிய விவரங்களும் நகுஷன் போன்ற அரசர்களைப் பற்றிய குறிப்புகளும் அடங்கியுள்ளது.

இனி கதைப்போக்கில் கூறப்பட்டுள்ள சம்பவங்களின் உள்ளார்த்தத்தை சற்று பார்ப்போம். மகாபாரதம் வெறுமனே குருவம்சத்தின் வரலாற்றைக் கூறுவதற்காக உருவான இதிகாசம் அல்ல வாழ்க்கை தத்துவங்கள் அனைத்தையும் எடுத்துக் காட்டுவதற்கு உருவான இதிகாசமாகும்.

இதனால்தான் இம்மாபெரும் இதிகாசம் நம்நாட்டிலுள்ள அனைத்து மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம்பெற்று அமரத் தன்மையோடு திகழ்வதோடல்லாது வெளிநாடுகளிலும் இதன் புகழ் பரவியுள்ளது. கிரேக்க நாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வருகை தந்த மெகஸ்தனிஸ் என்ற ராஜ தூதர் இதிலுள்ள சீரிய கோட்பாடுகளை அறிந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே போற்றி புகழ்ந்திருக்கிறார். இதுமட்டுமல்ல 2500 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய நாட்டில் கட்டப்பட்ட ஆலயங்களில் மகாபாரதத்தை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது அந்த ஆலயங்களில் மகாபாரதம் முழுவதும் அக்காலத்தில் ஓதப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. துருக்கியிலும், மங்கோலியாவிலும் மகாபாரதத்தின் சிறப்பு மிக்க பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டு மக்களால் வாசித்தறிய பட்டுள்ளது. சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே ஜாவா மொழியில் மகாபாரதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ரஷ்யநாட்டிலும் மகாபாரதம் மிகவும் விரும்பி ஏற்கப்படுகிறது.

நமது நாட்டில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலும் மகாபாரதம் எழுதப்பட்டுள்ளன. நம் தமிழகத்தைப்பொறுத்தவரை சங்ககால இலக்கியங்களுக்கு கடவுள் வாழ்த்து பாடிய பெருந்தேவன் என்ற புலவர் பெருந்தகை பாரதத்தை தமிழில் முதல் முறையாக மொழியாக்கம் செய்துள்ள தகவல் இருக்கிறது. அவர் எழுதிய தமிழ் மகாபாரத நூல் இன்று கிடைக்கவில்லை யென்றாலும் அவர் உள்ளிட்ட ஒன்பது பெரும்புலவர்கள் மகாபாரதத்தை தமிழில் பாடியுள்ளனர்.

மகாகவி பாரதியின் தேசப்பற்றுக்கு ஊக்கம் தரும் வகையிலும் வீர உணர்ச்சியை பெருக்கிடும் வகையிலும் பாரதம் உறுதுணை புரிந்துள்ளது. இதைச் சுப்ரமணிய பாரதியின் பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட அனைத்து கவிதைகளிலும் நாம் அறியலாம். மேலும் பழந்தமிழ் மன்னர்கள் மக்களிடத்தில் யுத்தகாலம் அல்லாத மற்றக் காலங்களில் வீர உணர்வு முனை மழுங்கிப்போகக்கூடாது என்பதற்காக பட்டி தொட்டி யெங்கும் பாரத மண்டபங்கள் கட்டி வைத்து தினசரி மகாபாரதத்தை மக்களுக்கு வாசித்துக்காட்டவும் வழிவகை செய்துள்ளனர். அதனாலேயே பழந்தமிழ் கலைகள் பலவற்றில் பாரதக்கதையே பின்புலமாக அமைந்துள்ளது. இன்று கூட தெருக்கூத்துகளிலும், சினிமாக்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் மகாபாரதம் நடித்து காட்டப் படும்போது மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெறுகிறது.





2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு ஆய்வுத்தொடர்... தொடர்கிறேன்...

S. Arul Selva Perarasan சொன்னது…

நான் தமிழில் முழு மகாபாரதத்தை மொழி பெயர்க்க முயன்று வருகிறேன். அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முழு மஹாபாரதம்

உங்களைப் போன்றோர் ஆதரவும் அந்தப் பணிக்கு மிக அவசியம். குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.