கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தி.த.கனகசுந்தரம்பிள்ளை

திருகோணமலை தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் 1863 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 24 ஆம் நாள் பிறந்தார்.இன்று அவரது பிறந்த தினம். யாழ்பாணத்துக்கு ஆறுமுகநாவலர், மட்டக்களப்புக்கு விபுலானந்தர், திருகோணமலைக்கு யார் எனக்கேட்டால் கனகசுந்தரம்பிள்ளை என்பதே பதிலாயமையும். தமிழ் நாட்டுக்கு தமது பதினேழாவது வயதில் சென்று அங்கு அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்விமானாக அவர் திகழ்ந்தார். திருகோணமலை அரச உத்தியோகத்தரான தம்பிமுத்துப்பிள்ளை அவர்களின் மகனான அவர் திருமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். பதினான்கு வயதுக்குள்ளாகவே மும்மொழிகளிலும் செறிந்த அறிவினைப் பெற்றார். மறைசை அந்தாதி, திருவாதவூரடிகள் புராணம் முதலிய நூற்களுக்கு பொருள் விளக்கத்தக்க அறிவையும் பெற்ற அவர் நிகண்டு, நன்னூல் ஆதியனவற்றிலும் சிறந்த அறிவுடன் திகழ்ந்தார்.

நல்லோன்;;;;;; கனகசுந்தரன்

என்றும் எழிலுடன் எங்கள் தமிழன்னை
நின்று நிலவ நிறைதமிழில் - ஒன்றுதிருக்
கோணா மலைக்கான சுந்தரன் மாண்பணியை
ஏணாகக் கொள்வோம் எடுத்து.

கற்றுமிக வாய்ந்து கனகசுந்த ரன்திறனில்
உற்ற தமிழ்ச்செய்திப் பெற்றிதனை - நற்றமிழர்
பற்பலர் கொண்டனர்காண் பைந்தமிழ்ச் சீரினுக்கே
பொற்பாய் மிளிர்ந்த தமிழ்.

ஏடுகளிற் ஏறி எழிலாக வீற்றிருந்த
பீடுதமிழ்த் தெய்வத்தைப் புத்தகமாய் - நாடுகளில்
பல்லோர் பகர்ந்தேத்தப் பாங்காய்ப் பரிந்துழைத்தான்
நல்லோன் கனகசுந்தரன்.

எழுத்தியலும் சொல்லியலும் ஏடுகளில் தேர்ந்து
வழுக்களைந்து வான்தமிழை வாரி - வழங்கியதால்
கற்றார்உள் ளத்தில் கனகசுந்தரன் நின்றான்
கொற்றத் தமிழனவன் காண்.

அன்னை தமிழுக்கே ஆய்ந்தழகு தான்செய்தான்
உன்னுந் திருக்கனக சுந்தரன் - முன்னாள்
இவர்போல் தமிழ்ப்பணி ஈழநன் னாட்டார்
தவமாய்த் தழுவல் தகும்.

_புலவர் நா. சிவபாதசுந்தரனார்.

தி.த.காவின் பதிப்பு முயற்சிகளை பின் வருமாறு குறிப்பிடலாம்:
1. தொல் - எழுத்ததிகாரம் - நச்சினார்கினியர் உரையுடன்
2. தொல் - சொல்லதிகாரம்
3. கம்பராமாயணம் - பாலகாண்டம்
4. தமிழ் நாவலர் சரிதம்

1.தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து வெளியிட விரும்பிய கனகசுந்தரம் பிள்ளை அவர்கள், ஏட்டுப்பிரதிகள், அச்சுப் பிரதிகள் பலவற்றையும் சேர்த்தெடுத்து அவற்றை ஆராயும் பணியில் ஈடுபட்டார். முதலில் எழுத்ததிகாரப் பணியை மேற்கொண்டார். ஏட்டுப்பிரதிகளையும் நூற் பிரதிகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து சூத்திரங்கள் சிலவற்றில் காணப்பட்ட பிழைகளையும் திருத்தியும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட உதாரணச் செய்யுள்கள் எந்தெந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவென எடுத்துக்காட்டியும் பிள்ளையார் அவர்களால் தயாரிக்கப்பட்ட நச்சினார்க்கினியர் உரையுடன் எழுத்ததிகாரத்தை திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. மேற்படி கழகம் அந்நூலுக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன், திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை B.A அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் பதிபிக்கப்படுகிறது".

2.தொல்காப்பியம் - சொல்லதிகாரம்
தொல் - சொல்லதிகாரம், பிள்ளையவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது.

3.கம்பராமாயணம் - பாலகாண்டம்
பிள்ளையவர்கள் சுண்ணாகம் குமாரசுவாமி புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு அரிய உரையை எழுதி வெளியிட்டும், கம்பராமாயணத்தை பிழையறப் பரிசோதித்து கூடிய மட்டில் ஏட்டுப்பிரதிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கிச் சுத்த பாடம் கண்டு முழுவதையும் அரும்பதவுரையுடன் அச்சிட முயன்று முதலில் பாலகாண்டத்தை அவ்விதம் வெளியிட்டனர். அயோத்திய காண்டத்துக்கு அரும்பதவுரை பூர்த்தியாகும் முன்பே இவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர்.மேற்கூறிய பாலகாண்டப்பதிப்புப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை "...ஆறு காண்டங்களுள் சுண்ணாகம் குமாரசுவாமிப்பிள்ளையும், தி.த.கனகசுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த 'பாலகாண்டம்' ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது" என்று கூறியுள்ளார். இது வசிட்டர் வாயிலிருந்து வந்த கூற்றல்லவோ!

4.தமிழ் நாவலர் சரிதை -1921-
இந்நூலினை இயற்றியவர் யாரென்பது தெரியவில்லை.எனினும் தமிழ் புலவர் வரலாற்றினைக் கூறப்புகுந்த முதல் நூல் எனப்பெருமை பெற்றது. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய பல்வேறு தமிழ் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக்கூறும் இந்நூலில் வரும் பாடபேதங்கள், பிரதிபேதங்கள், புதிதாகப் புகுத்தப்பட்ட பாடல்கள் ஆதியனவற்றையும் புலவர்கள் காலம், அவர்களின் பாடல்கள் முதலியனவற்றையும் ஆராய்ந்து பிள்ளையவர்கள் தாம் திருத்தித் தயாரித்த நூலை 1921 இல் வெளியிட்டுள்ளார். தமிழ் நாவலர் சரிதையை நாராயணசாமி முதலியார் என்பார் ஏற்கனவே 1916 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

புறத்திரட்டு - சென்னை சர்வகலாசாலை தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் 1- 1232 - ஏடு - 1938

1.இலக்கிய தீபம் - எஸ்.வையாபுரிப்பிள்ளை - 1952 பக்கம் 114

2.இலக்கிய மணிமாலை - எஸ். வையாபுரிப்பிள்ளை - 1954 - பக்கம் 114

3.அகராதி நினைவுகள் - எஸ். வையாபுரிப்பிள்ளை - 1954 - பக்கம் - 6

4.குறுந்தொகை - டாக்டர் உ.வே.சாமிநாதையர் - 1941 - பக்கம் - 12

5.நற்றிணை - அ.நாராயணசாமி ஐயர் - 1915 முகவுரை - பக்.2 தி.த.க - 2 பிரதிகள்

6.நாராயணசாமி ஐயர் மரணித்த பின்னும் தி.த.க பரிசோதித்து அச்சிடுவித்தார்.

7.சீவகசிந்தாமணி - நான்காம் பதிப்பின் முகவுரை:

8.சீவசிந்தாமணி சம்மந்தமாக ஒரு தனிப்பாடல் ஒரு சுவடியில் காணப்படுவதாகத்
திருக்கோணமலை த.கனசுந்தரம்பிள்ளை அவர்கள் தெரிவித்து அதனை ஒரு கடிதத்தில்
எழுதியனுப்பியிருந்தார்கள். அச்செய்யுள் வருமாறு:

"பனகமாற்ற முன்னிறாய்ப் பத்திலம்பத் தோடு
நகைமாற் றியதுறவி ,னோடும் - தொகையேற்றின்
மூவா யிரத்தோடு முந்நூற்று மூவைந்தே
கோவாய சீவகன்மேற் கூற்று"

9.அகநானூறு: மூலமும் பழைய உரையும் உ.வே.ரா.இராகவையங்கார் பரிசோதித்தது
வத்ஸசக்கரவர்த்தி இராஜகோபாலாரயன் பதிப்பு : 1933. பக்கம் 15 முகவுரை

10.புறப்பொருள் வெண்பா மாலை இரண்டாம் பதிப்பு: டாக்டர் உ.வே.சாமிநாதையர்
பதிப்பு : 1915. முதற் பதிப்பின் முகவுரை : பக்கம் 8.

11. ஆசாரக்கோவை:T.செல்வக்கேசரவாய முதலியார் பதிப்பு :1918
சிறிமான் தி.கனகசுந்தரம்பிள்ளையவர்கள் B.ஏ உதவிய பிரதியுமேயாம்.

12.கயாதரம்: எஸ்.வையாபுரிப்பிள்ளை (B.A.B.L) சென்னை சர்வகலாசாலை 1939.
திரு.த.கனகசுந்தரம் பிள்ளைக்குரியது பக்கம்13.
அவரது மகன் சிறிராயேஸ்வரன் அவர்கள் எனக்க்குத் தந்து உதவியது.
ஆறுமுகநாவலர் சரித்திரம் - த.கைலாசபிள்ளை - 1919

"இச்சரித்திரத்தை விரிவாக எழுதுதல் வேண்டுமென்று சிறி.தி.த
கனகசுந்தரம்பிள்ளை B.A முதலானவர்கள் என்னைக் கேட்டாரகள்"

13.நான்மணிக்கடிக்கை: ச.வையாபுரிப்பிள்ளை:ஒப்புநோக்கிய
ஏட்டுப்பிரதிகள்: திரு.தி.த கனகசுந்தரம்பிள்ளை - இராஜசேகரன் ஏடு எழுதி முடிந்தது பக்.16.

பதித்த நூல்கள்

1.தமிழ் நாவல் சரிதை 1921

இனி, இந்நூலை இயற்றினார் யாவரென்பது ஒருவாற்றானும் புலப்படவில்லை.
நாராயணசாமி முதலியார் பதிப்பு : 1916 - கரந்தைக் கட்டுரை: வெள்ளி விழா
நினைவு மலர் பக்.121. தமிழ்நூல் விபர அட்டவணை 1916 - 1920 பக் 449. நூல் எண் 2231.

2.வால்மீகி ராமாயண வசனம் - சுந்தரகாண்டம் - தி.த கனகசுந்தரம்பிள்ளையால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

எழுதிய கட்டுரைகள்

1. யாப்பிலக்கணம். செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 8, பரல்: 7.பக்:388 - 395

2. இராமாயணம். செந்தமிழ் செல்வி : சிலம்பு : 9 பரல் : 2 பக்.53 - 60

3. திருவள்ளுவர். செந்தமிழ் செல்வி : சிலம்பு : 9 பரல் : 3 பக்.121 - 133

4. தமிழ் வரலாற்றின் ஆராய்ச்சி : தஞ்சை சீனிவாசப்பிள்ளை. இது 26 - 3 - 1922ல்
தஞ்சை சீனிவாசப்பிள்ளையவர் கட்டுத் திருவாளர் தி.த. கனகசுந்தரம்பிள்ளையவர்கள் எழுதிய கடிதத்தினின்றும் எடுத்துப் பதிப்பிக்கப்பட்டது. செந்தமிழ்ச் செல்வி : சிலம்பு : பரல் :10,11 பக்கம் 610 - 618 பக்கம் 677 - 686.

குமாரசுவாமிப் புலவர் அவர்கள் பதிப்பித்து உரையுடன் வெளியிட்ட யாப்பருங்காலக்காரிகையில், புலவர்வாள், தி . த .க பற்றிக் குறிப்பிடுகையில் ஆங்கில திராவிட பண்டிதரும் வித்தியாவினோதரும் அதிகாரபுருடருமாய் இப்போது சென்னை நகரில் வசிக்கும் சிறிமான திரு. த.கனகசுந்தரம்பிள்ளையவர்களும், இவ்வுரையைப் பலமுறை பரிசீலனம் செய்து பல திருத்தங்களோடு எடுத்துக்காட்டுக்கள் சிலவற்றுக்கு நூற்பெயர் காட்டியும், அச்சிடுகையில் பரீட்சித்தும் வண்ணங்களைச் சேர்ப்பித்தும் பலவாறு
சிறப்பித்தவர். அக்காலத்தில் சென்னையில் வெளியிடப்பட்ட நூல்கள் பல
அவ்வாசிரியர்களினால் வெளியிட்டு முன்னர் "தி. த. க. வினால் பார்வையிடப்பட்டது" எனக் குறிப்பிட்டு பெருமை சேர்த்துக் கொண்டனர். இப்படியாக தி.த.க அவர்கள் தம் தமிழ்ப் புலமையினால் திருகோணமலைக்கும் ஈழத்தமிழ் நாட்டுக்கும் பெருமை கொண்டு சேர்த்தார்.

உசாத்துணை நூல்கள் (கருவி நூல்கள்)
1.'ஈழத்து தமிழ்ச்சான்றோர்' வித்துவான், தமிழ் ஒளி க.செபரத்தினம் B.A,M.litt,Dip in Edu.. மணிமேகலை பிரசுரம். சென்னை, 2002.
2.திறனாய்வாளர் திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை.தொகுப்பு: கலாபூசணம் த.சித்தி அமரசிங்கம், ஈழத்து இலக்கியச் சோலை, திருகோணமலை 2003.
(வித்துவான் நடராசா, நா.பாலேஸ்வரி, பேரா.செ.யோகராசா ஆகியோரின் கட்டுரைகளை உள்ளடக்கி - முன்னுரை வழங்கியுள்ளார் கா.சிவபாலன் அவர்கள்(இக்கட்டுரையாளர்).
3.தமிழ்நாடும், ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும் வித்துவான் தமிழ் ஒளி க.செபரத்தினம் B.A,M.litt,Dip in Edu. மணிமேகலைப் பிரசுரம். சென்னை, 2005.
*
**24.08.2010**
_ திருகோணமலை காசிநாதர் சிவபாலன்(முதுகலைமாணி/சர்வதேச உறவுகள்,சட்டவாளர்)_

அடுத்த பக்கத்தில் தொடரும்........

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

திருகோணமலை தமிழ் அறிஞர் வரலாறு

திருகோணமலை சிவபூமி, தென்கைலை என அழைக்கப்படுவது.ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாக கோணேஸ்வரம் அந்நாட்டில் அமைந்துள்ளது. 'கத்தோலிக்கருக்கு எப்படி ரோம் உள்ளதோ அப்படி மிலேச்சருக்கு திருக்கோணேஸ்வரம் ' என போர்துகேசிய இராணுவ ஜெனரல் கூறியது பதிவு செயப்பட்டுள்ளது. (இங்கே 'மிலேச்சர்' என்பது கத்தோலிக்கர் அல்லாத இந்துக்களை குறிப்பிடுவது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்).
திருஞானசம்பந்தரால் கோயிலும் சுணையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலையமர்ந்தாரே' என்றும் 'குடிதனைப்ப்பெருக்கி நெருக்கமாய்த்தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே' என்றும் பாடல் பெற்ற ஸ்தலம். அருணகிரி நாதர் பாடிய ஸ்தலம். அஹஸ்தியர் ஸ்தாபனம் அமைந்த மாவட்டம். உலகத்திலேயே பெயர் பெற்ற இயற்கை துறைமுகம் அமைந்த இடம். தமிழர் தாயகத்தின் தலை நகர் என்று கொள்ளப்பட்ட இடம். இராவணன் ஆண்ட இடம் என்று கூறப்படும் நிலம்.

மேலும் சோழர் ஆதிக்கம் ஈழத்தில் கி.பி.10,11ஆம் நூற்றாண்டில் திகழ்ந்தபோது திருகோணமலையில்
அவர்களின் செல்வாக்கு விரவிக் காணப்பட்டது. பராந்தக சோழன், 'மதுரையும் ஈழமும் கொண்ட சோழன்' என்ற விருதைப் பெற்றிருக்கிறான். (Nilakanda Sastri, Epigrophia Indica,1955. Vol 1,No.1,pp 19-24). தற்போதைய கந்தளாயில் உள்ள தமிழ் குடியிருப்பு, 'சதுர்வேதி மங்கலம்' என அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவன் கோவிலில் இப்பொழுதும் சோழரின் பிரதிநிதி, இலங்கேஸ்வர சோழனின் கல்வெட்டு உள்ளது. (குணசிங்கம்.செ,கோணேசுவரம்..பேராதனைப் பல்கலைக்கழகம்,1972)
தமிழர்களின் தேசிய அடையாளங்களான சைவ சமயமும், தமிழ் மொழியும், தமிழ் கலை கலாச்சாரமும் திருகோணமலையில் கோலோச்சியிருந்திருக்கின்றன.
அந்தவகையில் திருகோணமலையில் பல புலவர்களும், தமிழ் அறிஞர்களும், கலைஞர்களும் தமிழ் மொழியையும்,தமிழ் கலைகளையும் பேணி வளர்த்திருக்கிறார்கள். வித்துவான் க.தம்பையாபிள்ளை, சட்டம்பி தம்பையர் சரவணமுத்துக் குருக்கள், கதிர்காமத்தம்பிப்புலவர், தி.த.கனகசுந்தரம்பிள்ளை, தி.த.சரவணமுத்துப்பிள்ளை, புலவர் வே. அகிலேசபிள்ளை, ஆறுமுகம், பூர்ணானந்தேஸ்வரக்குருக்கள், மாசிலாமணி, முத்துக்குமாரபிள்ளை, பீதாம்பரனார், சரவணமுத்துப்பண்டிதர், பெ.பொ.சிவசேகரனார், கலாநிதி,புலவர் சத்தியமூர்த்தி,தா,சி.வில்வராசா(திருகோணமலை கவிராயர்), தர்மு சிவராம்(பிரேமிள்), சித்தி அமரசிங்கம் (வெளியீட்டாளர்), மேலும் ஈழத்தில் தமிழின் முதலாவது நாவல் என பல காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த,'ஊசோன் பாலந்தை கதை' எழுதிய கிறித்துவப் பெரியார் எஸ்.இன்னாசித்தம்பி, மூதூர் வ.அ. இராசரத்தினம், தமிழ் காவியங்கள் படைத்த மூதூர் முஸ்லிம் புலவர்கள், கிண்ணியா கவிஞர் அண்ணல், அண்மையில் மறைந்த பண்டிதர், சைவப்புலவர் இ.வடிவேல் என்போர் இதில் அடங்குவர்.விரிவு கருதி நாடகத்துறையில் தடம் பதித்த பலரையும் நான் குறிப்பிடவில்லை. இன்னும் பலரும் விடு பட்டிருக்கலாம். பொறுத்தருளல் வேண்டும்.
இவர்களுள் தி.த.கனகசுந்தரம்பிள்ளை,அவர்தம் இளவல் தி.த.சரவணமுத்துப்பிள்ளை.('மோகனாங்கி' வரலாற்று நூல் ஆசிரியர்), தர்மு சிவராமு (பிரேமிள்)-தமிழில் புதுக்கவிதை பிதாமகர்களில் ஒருவர்,ஆனால் மரபுக் கவிதையிலும் ஆற்றல் மிக்கவர்- தமிழ் நாட்டிலும் பெரும் புகழ் மிக்கோர். இந்த வரிசையில் முதலாவதாக நாம் ,
'என்றும் எழிலுடன் எங்கள் தமிழன்னை
நின்று நிலவ நிறை தமிழில் -ஒன்றுதிருக்
கோணமலை கனக சுந்தரம் மாண்பணியை
ஏணாகக் கொள்வோம் எடுத்து'
என்று நா.சிவபாதசுந்தரனார் பாடிப்போற்றிய தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்களைப்பற்றி முதலில் பார்ப்போம்.

_ திருகோணமலை காசிநாதர் சிவபாலன்(முதுகலைமாணி/சர்வதேச உறவுகள்,சட்டவாளர்)_

அடுத்த பக்கத்தில் தொடரும்........