கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 6 ஜூன், 2011

இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கை சாதாரண மக்கள் உபயோகத்தில் தமிழ்மொழியும் எழுத்தும்

சிலகாலத்துக்கு முன்னர் இலங்கையின் தென்மாகாணத்தில் இருக்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராமா (மஹாஹம) என்னும் இடத்தில் நடைபெற்ற தெல்லியல் அகழ்வாய் வொன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டது.

இது பற்றிய விபரம் எதுவும் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், இக்கல்வெட்டுப் பற்றிய குறிப்பொன்றும் வாசிப்பும் படமும் 24ஆம் திகதி யூன் மாதம் 2010ஆம் ஆண்டு (24.06.2010) இந்துப் பத்திரிகையில் கல்வெட்டியல் மூதறிஞரான திரு.ஐதாவரம் மகாதேவன் அவர்களால் வெளிக்கொணரப்பட்டிருந்தன.

திரு.மகாதேவனது குறிப்பின்படி இம்மட்பாண்டத் துண்டை ஆய்வுக்குழியின் அதிஆழமான மண்படையில் இருந்து வெளிக்கொணரந்த ஜேர்மனிய ஆய்வாளர்கள் அதனை கி.மு 200 ஆண்டுக்குரியதாக காலக்கணிப்புச் செய்திருந்தார்கள்.

இம்மட்பாண்டத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தை தமிழ் பிராமி என்றும் வாசகத்தைத் தமிழ் என்றும் இனங்காணும் மகாதேவன், அதனை 'திரளி முறி" என்று வாசித்து 'அவையோரின் எழுதப்பட்ட உடன்படிக்கை" என்று அதற்கு விளக்கம் கொடுக்கிறார்.

இலங்கைத் தீவின் தென்பாகத்தில் உள்ளூர் தமிழ் வணிகர் குழுமமொன்று கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் உள்நாட்டிலும் கடல் கடந்தும் வணிகம் செய்தமைக்கான சான்று இம்மட்பாண்டத்திற் கூடாக வெளிப்படுவதாகக் கூறுகிறார் திரு.மகாதேவன்.

இம்மட்பாண்டம் குறித்த கருத்தையறியும் நோக்குடன் இலங்கையின் கல்வியாளர்கள் சிலர், இதன் தெளிவான படமொன்றையும் யூலை மாதம் 2010ஆம் ஆண்டளவில் இக்கட்டுரையாளருக்கு அனுப்பியிருந்தார்கள்.

கிடைத்த சான்றுகளின்படி, மகாதேவன் அவர்கள் எழுத்துக்களை தமிழ் பிராமி என்று இனங்கண்டிருப்பதும் அவருடைய வாசகமும் மறுக்க முடியாதவை. எனினும், வாசகத்திற்கான விளக்கத்திற்கு மாற்றீடுகள் இருக்கக் கூடிய சாத்தியமுண்டு.


இம்மட்பாண்ட எழுத்துக்கள், படிக்கக் கூடிய தமிழப் பிராமியின் அதனோடு சேர்ந்து பெருங்கற்கால/ ஆதி வரலாற்றுக் காலத்துக்கு உரியதாகிய, படிக்க முடியாத, குறியீட்டு எழுத்துக்களும் இணைந்த கலவையாகும்.

படத்தில் காணப்படுவதன்படி இடமிருந்து வலமாக முதன்மூன்றும் பிராமி எழுத்துக்கள். அடுத்த இரண்டும் குறியீடுகள். தொடர்ந்து வரும் கடைசி எழுத்துக்கள் இரண்டும் பிராமியில் அமைந்துள்ளன. சிறிது தள்ளி, ஒரு நெடுங்கோடு உள்ளது. இது முற்றுப்புள்ளியாக இருக்கலாம்.

மகாதேவன் முதன்மூன்று எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக 'திரளி" என்றும், இறுதி இருவெழுத்துக்களை இடமிருந்து வலமாக 'முறி" என்றும் படித்திருக்கிறார்.

பிற தென்னாசிய எழுத்துக்களைப் போலவே பிராமி எழுத்துக்களும் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக படிக்கப்படுவதே வழமையானது. எனினும், சில சந்தர்ப்பங்களில், வலமிருந்து இடமாக எழுதப்பட்ட பிராமி கல்வெட்டுகளும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அறியப்பட்டிருக்கின்றன.

இம்மட்பாண்டத் துண்டைப் பெறுத்தவரை, படிக்க முடியாத இருகுறியீட்டு எழுத்துக்களை நடுவில் இருத்திப் படிக்கக் கூடிய தமிழ் பிராமி எழுத்துக்கள் ஒருபுறம் வலமிருந்து இடமாகவும் இன்னொரு புறம் இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டுள்ளன.

முழுவாசகத்திலும் மிகவும் இடப்புறமாக இருக்கும் எழுத்து, மிகவும் தெளிவாக தமிழ் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் 'ளி" என்ற எழுத்தாகும். தமிழிலோ சிங்களத்திலோ அல்லது பிராக்கிருதம் சமஸ்கிருதம் போன்றவற்றிலோ எந்தச் சொல்லும் இந்த எழுத்துடன் ஆரம்பிப்பதில்லை. எனவே, முதன்மூன்று எழுத்துக்களை வடமிருந்து இடமாக 'திரளி" என்று மகாதேவன் படித்திருப்பது தற்கபூர்வமானதே. இறுதி இரு எழுத்துகளையும் இடமிருந்து வலமாகவும் பொருள் தருவதாகவும் 'முறி" என்று படித்திருப்பதும் தற்கபூர்வமானதே.

எனினும், 'திரளி முறி" என்ற இவ்வாசகம், 'அவையின் எழுதப்பட்ட உடன்படிக்கை" என்று வணிகக் குழும பின்னனிலில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதுவும், அதை விட இது ஏன் அன்றாட பாவனைக்குரிய ஒரு சாதாரண மட்கலத்தில் காணப்பட வேண்டும் என்பதுமே கேள்விக்குரியவையாகின்றன. வழமையாக, இத்தகைய மட்கல வாசகங்கள் மட்கலத்தின் உரிமையாளரையோ அல்லது அதனது உபயோகத்தையோ குறிப்பிடுவதாகவே இருப்பதுண்டு.
திரளி மற்றும் முறி ஆகிய இரு சொற்களும் திராவிட சொற்பிறப்பியல் அகராதி வரிசைப்படுத்தும் திரள், முறி, முறை ஆகிய சொற்களுடன் தொடர்புடையவை (திராவிட சொற்பிறப்பியல் அகராதி 3245, 5008, 5010, 5015).

'முறி" என்ற சொல்லுக்கு ஆவணம், உடன்படிக்கை போன்ற பொருள்கள் பிற்கால இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. ஆனால் முறை என்ற சொல்லுக்கு பங்கு, அளவு, பாகம் போன்ற பொருள்கள் சங்க இலக்கியந்தொட்டு காணப்படுபவை (நற்றினை 336:6; நெடுநல்வானை 70,177). மேற் கூறிய கருத்துக்களும் பங்கிடுவது, பிரிப்பது என்ற பொருள் தரும் முறி என்ற வினையடியாகவே பிறந்தவை ( திராவிட சொற்பிறப்பியல் அகராதி 5008). பழந்தமிழ் நிகண்டுகளில் முறை என்ற சொல்லுக்கு கூட்டியள்ளப்பட்டது என்ற கருத்தும் உண்டு (பின்கல நிகண்டு 10:953)

சில தமிழ்க் கல்வெட்டுக்களில் 'முறி" என்பது நிலத்தைப் பாகமிடுவது என்ற பொருளிலும் வழங்கப்பட்டிருக்கிறது. சுமகால ஈழத் தமிழில் குறிப்பிடக் கூடிய உதாரணம் மீன்முறி என்ற சொற்பதம். இது, குழம்பில் இருக்கும் ஒரு மீன் துண்டை, அதாவது ஒரு பாகத்தை குறிப்பிடுவதாகும்.

எனவே, இம்மட்பாண்டத்தில் இருக்கும் 'முறி" என்ற சொல் இம்மண்பாண்டத்தை கொத்து போன்ற ஒரு அளவிடும் கருவியாக குறிப்பிடுகிறது என்று கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

திரளி என்ற சொல்லுக்கு திரட்டுவது எனறு பொருள் கொள்ளலாம் ( திராவிட சொற்பிறப்பு அகராதி 3245). திரள் என்ற சொல்லுக்கு குவியல், சோற்றுருண்டை போன்ற கருத்துக்கள் இருப்பதையும் குறிப்பிட வேண்டும். எனவே, திரளிமுறி என்ற சொற்பதம் சோற்றையளந்து பங்கிடும் கருவி என்று பொருள் தரக் கூடியது.

இவ்வாறான வகையில் பொங்கலை தளிசையாக்கி பரிமாறும் முறை கோவில்களில் இருப்பதையும் அதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை தளிகை அல்லது தளிகைக் கிண்ணம் என்று வழங்குவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கடந்த காலத்தில் கோவில்களிலும் பிற இடங்களிலும் ஊழியஞ் செய்வோருக்கு வேதனமாக சோறு இவ்வாறான முறையில் அளவிடப்பட்ட கட்டிகளாகவே வழங்ப்பட்டது. இனறும் தமிழ் நாட்டின் உணவு விடுதிகளில் சோறு இவ்வாறான முறையிலேயே அளந்து பரிமாறப்படுவதையே காணலாம்.

திஸ்ஸமஹாராமையில் கண்டெடுக்கப்கட்ட சிறுவட்டில் வடிவிலான இம்மட்கலம் இவ்வாறான முறையில் சாதாரன மக்களால் பயன்படுத்தப் பட்டிருந்தமைக்கும் அதை அளவு கோலாக குறிப்பிடுவதற்காகவே திரளிமுறி என்ற வாசகம் அதில் எழுதப்பட்டிருந்தது என்று கொள்வதற்கும் இடமுண்டு.

வாசகத்தின் நடுவில் இருக்கும் படிக்க முடியாத குறியீடுகளுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதனை முதலில் வரைந்த பின்னரேயே இருபுறமும் எழுத்துக்களை எழுதியிருக்க வேண்டும். குறியீடுகளுக்கும் எழுதப்பட்டிருக்கும் வாசகத்துக்கும் இருக்கக் கூடிய தொடர்பு என்ன என்பது ஆராயப்படவேண்டியது. ஓலிவடிவ பிராமி எழுத்துக்களில் எழுதிய அதே விடயத்தையே இந்துவெளி எழுத்துக்களைப் போன்ற குறியீட்டு எழுத்துக்களிலும் குறிப்பிட்டிருக்கக் கூடும்.

இவ்வாறான வகையில் குறியீட்டெழுத்துக்கள் ஒரு வரியிலும் பிராமிய எழுத்துக்கள் இன்னுமொரு வரியிலுமான எழுதப்பட்ட முத்திரைக் கல்வெட்டொன்று 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.



இலங்கையில் அம்மாந்தோட்டை மாவட்டத்தில் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துப்பொறித்த வட்டில் வடிவிலான மட்கலத்துண்டம் இடமிருந்து வலமாக முதலாவது எழுத்து ளி. இரண்டாவது ர. மூன்றாவது தி. வலமிருந்து இடமாக இவற்றை திரளி என்றும் படிக்கலாம் நாலாவதும் ஐந்தாவதும் படிக்க முடியாத குறியீடுகள். ஆறாவது எழுத்து மு. ஏழாவது றி. கடைசி இரண்டு எழுத்துகளும் இடமிருந்து வலமாக முறி என்று படிக்கப்படக் கூடியவை. சுற்றுத் தள்ளி ஒரு நெடுங்கோடு உள்ளது. இது முற்றுப் புள்ளியாகலாம். இந்த படமும் வரைபடமும் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினராலும் ஜேர்மனிய ஆயவாளர்களாலும் ஆவணப்படுத்தப் பட்டவை. எனினும், திஸ்ஸமஹாராம அகழ்வாய்வில் உத்தியோகபூர்வ ஆய்வறிக்கையில் இவை வெளியிடப்படவில்லை. இம்மட்கலத்துண்டு, தற்பொழுது எங்கிருக்கிறது என்பது எவருக்கும் தெரியவில்லையென்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன (நன்றி; இலங்கை தொல்லியல் திணைக்களத்திற்கும் இந்த ஆவணத்தை அனுப்பி வைத்த கல்வியாளருக்கும்).
நன்றி.
பொன்னம்பலம்.இரகுபதி
(உரிமை ஆசிரியருக்கு)