கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 15 ஜூலை, 2007

நினைவுகள்

  1. விபுலானந்த அடிகள் (27.03.1892 - 19.07.1947).
  2. வாக்கியப் பஞ்சாங்க கணித மேதை இராகுநாத ஐயர் நினைவுநாள் ( 1969 ).
  3. தனிநாயகம் அடிகளார் நினைவுநாள் ( 02.08.1913 - 01.09.1980 ).
  4. புலோலியூர் சைவப்பெரியார் க. சிவபாதசுந்தரனார் நினைவுநாள் ( 17.01.1878 - 14.08.1953 ).
  5. சிறீ இராமகிருஸ்ண பரமஹம்ஸர் நினைவு நாள் ( 17.02.1836 - 16.08.1884 ).
  6. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப்பிள்ளை நினைவு நாள். ( 19.10.1888 - 24.08.1972).

திங்கள், 9 ஜூலை, 2007

செப்புமொழி

  • உன் மகன் நல்லவனாக இருந்தால், நீ ஏன் சேமிக்கவேண்டும். உன் மகன் தீயவனாக இருந்தால் ( அவனுக்காக ) நீ ஏன் சேமித்து வைக்கவேண்டும். * இந்தியா*
  • பிறரை சீர்திருத்தும் கடமையைவிட தன்னை சீர்திருத்துவதே முதல் கடமை. உன் கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே * கீதை*
  • பணத்தை மனிதன் ஆளவேண்டுமே தவிர, பணம் மனிதனை ஆளக்கூடாது.
  • தனது மனவுலக ஆசைகளிருந்தும், அச்சங்களிருந்தும் தன்னை விடுதலை செய்துகொள்பவன் தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகமையைப் பெறமுடியும். *வே.பிரபாகரன்*
  • ஒரு வார்த்தையை உன் உதடுகள் உதிர்க்கும் முன் உன் உள்ளம் அதனை இரு தடவைகளேனும் சிந்திக்குமானால் அதன் விளைவு ஒரு போதும் விபரீதமாக இருக்காது.

செவ்வாய், 3 ஜூலை, 2007

துருவவடலிகள்

புலத்தில் வாழும் குழந்தைகளின், இளையவர்களின் சாதனைகளைப் பற்றிப்பேசவேண்டும் பேசியாகவேண்டும். பிற மொழியில் படித்து அவர்கள் விரும்பும் கல்வியையோ துறையையோ தெரிவுசெய்தாலும் கூட தமது தாய் மொழியிலும் நிறைய படைப்புகளை படைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தமது மொழி, இசை, கலைகள் அழியாது பேணவேண்டும் என்று விருப்புக்கொண்டவர்கள். எந்த படைப்புகளாக இருந்தாலும் அந்தப்படைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டிய கடைமைப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அவர்கள் ஆக்கங்கள் பற்றிப்பேசுவதே ஊக்கம் கொடுப்பதற்கு நிகராகிறது. 'துருவவடலிகள்' துருவத்தேச தமிழ்ச் சாதனையாளர்களை அடையாளப்படுத்துவதிலும் தமிழாசான் மகிழ்வுகொள்கிறேன்.

*அர்ச்சனா.ஆனந்தகரன்*

அர்ச்சனா. ஆனந்தகரன் நோர்வேயிலேயே பிறந்து வளர்ந்து வரும் சிறுமி. தனது ஐந்தாவது அகவையில் பாடல் போட்டியில் பாடி முதல் பரிசு பெற்றுக்கொண்டாள். தமிழ்க்கல்வி தேர்வுகளிலும் முதல் மாணவியாகத் திகழ்பவள். புலத்து தமிழ்க்குயிலாக சில பாடல்களை பாடியுள்ளாள். வெளியிட்ட முதல் ஒலிவட்டு ' புலத்திலிருந்து ஒரு தமிழ்க்குயில்' .இவ் ஒலிவட்டு வெளியீட்டின் போது தமிழீழத்தின் வெளியீட்டுகுழுவினரால்'சின்னக்குயில்' பட்டமும் கொடுக்கப்பட்டது.26 மார்கழி கடற்கோளினால் தமிழீழ மக்கள் இறப்பைக் கண்டும் கேட்டும் அச்சோக நிகழ்வை எண்ணி 'Mørke dager' (இருண்ட நாட்கள்) என்று ஓர் உரைநடையை நோர்வே நாட்டு மொழியில் எழுதி நோர்வே நாட்டு மக்களுக்கு தாம் தொப்புள்கொடி உறவை மறக்காமல் இருப்பதை அவ் உரைநடையில் உணர்தினாள். அவ் உரைநடைபரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

*ரூபன். சிவராஜா*

இலங்கையில் பிறந்து சிறுஅகவையிலே நோர்வேக்கு குடிபெயர்ந்த இவர் தமிழிலும் நோர்வேசிய மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். இவருடைய கட்டுரைகள் பல தாளிகைகளில் ( பத்திரைகையில் ) இடம் பெற்றுள்ளன. நோர்வேத்தழிழ் நாடகக்குழுவோடு சேர்ந்து சில நாடகங்களை எழுதியும் உள்ளார். அத்தோடு பல நாடகங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்தும் உள்ளார். சிறந்த பாடல்களை எழுத்தக்கூடிய பாடல் ஆசிரியராக மட்டும் அல்லாது தனித்தமிழுக்கும் உரமூட்டி வருகிறார் . இவர் இலக்கியப் பணி தொடர நாமும் வாழ்த்துகிறோம். இவர் எழுதிய பாடல் தொகுப்பு சுதந்திரவாசல் இறுவெட்டு வெளிவந்துவிட்டது.

*வசீகரன்.சிவலிங்கம்*

தமிழீழ தாயகத்தில் பிறந்து புலத்தில் வளர்ந்து வாழ்ந்து வரும் மூத்த தலைமுறைப் படைப்பாளி இவர். முதன்முதல் வெளியிட்ட நூல் ' இன்ரநெற்றும் இருபதாம் நூற்றாண்டும் ' ஆகும். அதோடு பாடல்களையும் கவிதைகளையும் எழுத வல்லவர். இவருடைய கவிதைகள் தாளிகைகளில் இணையத்தளங்களில் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய காதல் பாடல்களின் தொகுப்புகளாய் வெளியிட்ட ' காதல் கடிதம்' ' காதல் மொழி ' உலக தமிழ் மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழக பாடலாசியர்களின் காதல் பாடல்களுக்கு இணையாக இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் வெளியிட்ட ஒலிவட்டுகளில் ஒன்றான 'காதல் கடிதம்' பாடல்களைக் கொண்டு 'காதல் கடிதம்' திரைக்காவியமாக திரையில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தனி முயற்சியால் தமிழக கலைஞர்களையும் இணைத்து படைப்புகளை செய்யும் இவரையும் தமிழாசான் வாழ்த்துகிறேன்.

*கவிதா.இரவிக்குமார்*

சின்னஞ்சிறு அகவையில் இடம்பெயர்ந்து நோர்வேநாட்டில் குடியேறிய பின்பு நோர்வேயில் தமிழும் கற்று புது உரைநடை எழுதுவதில் வல்ல பெயர் சொல்லத்தக்க இளம் பெண் எழுத்தாளராகத் திகழ்பவர். குமுகத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதையும் அதிலிருந்து பெண்கள் எப்படித் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை உரைநடையே அவர் எழுத்தில் இடம்பெறும். அவர் வெளியிட்ட நூல்கள் கரைசேரும் கடிதங்கள், பனிப்படலத்தாமரை ஆகும். நல்ல பாடல்களையும் தருபவர் அவர். நடனத்தையும் கற்று பல புலத்து அவலத்தையும் அக்கலை ஊடாக வெளிப்படுத்தி வருபவர். அவர் எழுத்தும் கலையும் மேம்பட தமிழாசான் வாழ்த்துகிறேன்.

www.nortamil.com