கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

காளைக்குக் கடனே!

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே


நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

திங்கள், 16 ஏப்ரல், 2012

நெடுந்தகை

பாடியவர்: ஐயூர் முடவனார்
திணை: வாகை
துறை : வல்லான் முல்லை

மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.

கவிஞன் அழுதான் கவியாயிற்று

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கிழமையும் நினதே!

பாடியவர்: மோசிசாத்தனார்
திணை: நொச்சி
துறை: செருவிடை வீழ்தல்

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.


'கிளி'நொச்சிநகர்


மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
மணிகள் கொத்துக்கொத்தாய் அமைந்தது போல் கரிய கொத்துக்கலையுடைய நொச்சியே!

போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
மலர்கள் மலந்த பல மரங்களுள்ளே சிறந்த(மிகுந்த)

காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
அன்பு கொள்வதற்குரிய நல்ல மரம் நீயேயாவாய் காவலையுடைய

கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
அகன்ற நகரத்தில் அழகான கண்கவர்

தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
வலையலை அணிந்த மகளிரின் இடையில் தழையாகவும் இருப்பாய்

காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
காவல் பொருந்திய மதிலிடத்தேயிருந்து அம்மதிலை கொள்வதற்கு எண்ணுவோர் பகைமையை அழிப்பதால்

ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
ஊர்ப்புறத்தைக் காவல் செய்கின்ற நெடுந்தகையின்

பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.
(தலையில்) அணிந்து கொள்ளப்படும் உரிமையும் உனதாகட்டுமே!

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

கூகைக் கோரியார்




பாடியவர்: கூகைக் கோரியார்
திணை: பொதுவியல்
துறை: பெருங்காஞ்சி

வாடா மாலை பாடினி அணியப்
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்
மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே

திங்கள், 9 ஏப்ரல், 2012

துறவறமே சிறந்த இன்பம்

திணை இலக்கியம்: புறநானூறு
பாடியவர்: வான்மீகியார்
திணை: காஞ்சி
துறை: மனையறம், துறவறம்


பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட் டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே


நன்றி,படம்:greatertelugu.com

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
கதிரவனால் சூழப்பட்ட இந்தப் பயன்படும் உலகம்

ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
ஒரு நாளில் ஏழு பேரை தலைவராகக் கொண்டாற் போன்ற தன்மையுடையது

வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
உலகியலான இல்லறத்தையும் தவ வாழ்வான துறவறத்தையும் சீர்தூக்கினால் தவத்துக்கு

ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
இல்லறம் கடுகளவேனும் நிகராகா ஆகையால்

கைவிட் டனரே காதலர் அதனால்
பற்றுவாழ்வைக் கைவிட்டவரே இவ்வுலகில் விரும்பப்படுவர்

விட்டோரை விடாஅள் திருவே
அவரை திருமகளும் கைவிடாள்

விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே
துறவறம் மேற்கொள்ளாதோரை அவள் கைவிடுவாள். அவர் உழன்றே வாழ்க்கையை நடத்துவர்....

வான்மீகியார்/'வான்' மீகனார்
நன்றி. படம்:pravachanam.com

பற்றிச் சிறிது பார்ப்போம்
இவர் காக்கும் தெய்வங்களான திருமாலையும் திருமகளையும் தன் தெய்வங்களாக வணங்கியிருக்கிறார். அதனால் அழித்தல் தெய்வமான சிவத்தை பின்பற்றவில்லை போலும். ஆனால் இராவணனோ சிவபத்தி நிறைந்தவன். இராவணனை இவருக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை. இராவணன் ஏழு நாட்டை ஆண்டான் என்ற செவிவழிச்செய்திகள் கூறுகின்றன அதாவது தமிழகத்தையும் சேர்த்தே ஆண்டான். இராமன் தந்தையின் சொல்கேட்டு நாட்டைத் துறந்தவன் அதற்கு முன் காத்தல் தொழிலைச் செய்தவன். ஆஃவே இராமன் இவரால் விரும்பப்பட்டவன் ஆகிறான்.அவனை அவள் மனைவி பின் தொடர்ந்தே சென்றாள். இருவரையும் தான் வணங்கும் கடவுளராய் எண்ணி இராமாயணம் என்னும் நூலைச் செய்திருக்கலாம். இப்புறப் பாடலை எழுதியவரும் அவரே.பெரும்பாலும் தமிழகம் சிவமத்தை மூலமதமாக கொண்டதாலும் தெற்கே சிவமத்தான் இராவணன் தமிழ்க் கொள்கையோடு வாழ்ந்தமையாலும் வான்மீகியார் துறவறத்தை விரும்பி வடக்கே புலம் பெயர்ந்த பின் அங்கு வாழ்பவர் அறிந்து கொள்ள இராமாயணத்தை வடமொழியில் எழுதியிருக்கலாம் என்பது துணிபு. இவர் காட்டும் மேற்கோளடிகளால் கண்டுணர்க.


நன்றி,படம்:ancientindians.wordpress.com

ஊரது நிலைமையும் இதுவே?

திணை இலக்கியம்: புறநானூறு
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை: மகள் பால் காஞ்சி
தோற்றக் கிடையாத போயின செய்யுள் இது.

மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே மற்றே
எண்ணா மையலன் தந்தை தன்னையர்
கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி
. . . . . . . . . . . . .?

மதிலும் ஞாயில் இன்றே
மதிலுக்கும் ஞாயில்(காப்பரண் காவல் உறுப்பு) இல்லை

கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்

அகழிக்கிடங்கும் நீர் இல்லாமல் கன்று மேய்ந்து திரிகிறது

ஊரது நிலைமையும் இதுவே
இந்த ஊரின் நிலைமையும் இவ்வாறே இருக்கிறது

மற்றே
எண்ணா மையலன் தந்தை தன்னையர்
கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி

இவள் தந்தையோ தமையரோ இவற்றை எண்ணிப்பார்க்கா போர் மயக்கத்தில் உள்ளனர்.
இவர்கள் கண்ணுக்கு அழகு மிக்க ஆத்திமாலையும் விரைவாக ஓடும் குதிரையும் உடைய கிள்ளி

. . . . . . . . . . . . .?
??


பின் புலம் அறியாது செய்யும் செயலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர் படம்பிடித்துள்ளார்.

வியாழன், 5 ஏப்ரல், 2012

செவிலிக்கூற்று

திணை இலக்கியம்: நற்றிணை
திணை: பாலை
துறை: செவிலிக்கூற்று
பாடியவர்: போதனார்

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஓக்குபு பிழைப்ப தெண்நீர்
முத்துஅரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரிமெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கு அறல்போல
பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே!

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
தேன் கலந்த வெண்பால் இனிய சுவையுள்ளது

விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்தி
ஒளிபொருந்திய பொற்கலத்தில் ஒரு கையால் ஏந்தி

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
புடைப்பாகச் சுற்றிய பூப்போன்ற மெல்லிய நுனியுடைய சிறிய கோலை ஏந்தி

உண்என்று ஓக்குபு பிழைப்ப தெண்நீர்
குடிஎன்று கூறிக் கோலை ஓங்கிய செயல் நிறைவேறாது போயிற்று

முத்துஅரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
தெளிந்த ஒளியுடைய முத்துக்களைப் போட்ட பொற்சிலம்பை அணிந்தவளை

அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
மெல்லியவாய் நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமைச் செவிலியர்

பரிமெலிந்து ஒழிய பந்தர் ஓடி
அவளைத் தொடர்ந்து ஓடியும் பிடிக்க முடியாமல் களைத்து விட்டனர் பந்தலுக்குள் ஓடியவள்

ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
வரமாட்டேன் என மறுத்தாள் அந்தச் சிறுக்கி, அவ்வாறு விளையாட்டுடையாளுக்கு

அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்
நல் அறிவும் ஒழுக்கமும் எங்கிருந்து உணர்ந்து கொண்டாளோ

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென
தன்னையடைந்த கண்வனின் குடி வறுமைபட்டதாகத் தன்னை

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
பெற்றுக் கொடுத்த தந்தையின் மிகுந்த செல்வத்தை நினையாதவளாய்

ஒழுகுநீர் நுணங்கு அறல்போல
ஓடும் நீரிலே கிடக்கும் நுண்ணிய மண்ல் போல

பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே!
ஒரு பொழுது மறுத்து மறுபொழுது உண்ணும் உறுதிப்பாடு உடையவள் ஆயினளே அச்சிறு பெண்ணே

தேன் கலந்த வெண்பால் இனிய சுவையுள்ளது. ஒளிபொருந்திய பொற்கலத்தில் ஒரு கையால் ஏந்தி புடைப்பாகச் சுற்றிய பூப்போன்ற மெல்லிய நுனியுடைய சிறிய கோலை ஏந்தி குடி என்று கூறிக் கோலை ஓங்கிய செயல் நிறைவேறாது போயிற்று தெளிந்த ஒளியுடைய முத்துக்களைப் போட்ட பொற்சிலம்பை அணிந்தவளை மெல்லியவாய் நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமைச் செவிலியர் அவளைத் தொடர்ந்து ஓடியும் பிடிக்க முடியாமல் களைத்து விட்டனர் பந்தலுக்குள் ஓடியவள் வரமாட்டேன் என மறுத்தாள் அந்தச் சிறுக்கி, அவ்வாறு விளையாட்டுடையாளுக்கு
நல் அறிவும் ஒழுக்கமும் எங்கிருந்து உணர்ந்து கொண்டாளோ! தன்னையடைந்த கண்வனின் குடி வறுமைபட்டதாகத் தன்னை பெற்றுக் கொடுத்த தந்தையின் மிகுந்த செல்வத்தை நினையாதவளாய் ஓடும் நீரிலே கிடக்கும் நுண்ணிய மண்ல் போல ஒரு பொழுது மறுத்து மறுபொழுது உண்ணும் உறுதிப்பாடு உடையவள் ஆயினளே அச்சிறு பெண்ணே

உடன் போக்கு

திணை இலக்கியம்: நற்றிணை
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ
துறை: உடன் போக்கு

அழிவில முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண்கண் டாஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழநின்
நலமென் பணைத்தோள் எய்தினம் ஆகலின்
பொரிப்பூம் புன்கின் அழல்தகை ஒண்முறி
சுணங்கு அணிவன முலைஅணங்கு கொளத்திமிரி
நிழல்காண் தோறும் நெடிய வைகி
மணல்காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வாலெயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்
நறுந்தண் பொழில கானம்
குறும்பல் ஊர யாம்செல்லும் ஆறே!

புதன், 4 ஏப்ரல், 2012

குதிரை மறம்

திணை இலக்கியம் : புறநானூறு
பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார்
(காமக் கணியார் எனவும் பாடம்).
திணை: தும்பை
துறை : குதிரை மறம்


ஓடித் தாவுபு உகளும் மாவே
தாவுபு - தாவி (வினையெச்சம்)

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும், மாவே பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
விண்ணிவர் விசும்பின் மீனும்
தண்பெயல் உறையும் உறையாற் றாவே

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும் மாவே

வளைந்து விட்ட மூங்கில் மேல் நோக்கி எழுவதைப் போல் குதிரைகள் பாய்ந்தோடித் திரிந்தன

பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட

பொன் பூக்கள் விறலியர் கூந்தலில் இடம் கொண்டன

நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்

நரந்தம் பூவால் பல ஆண்டுகளாத் தொடுக்கப்பட்ட மாலை சூடப்பெற்ற மெல்லிய தாளத்திற்கு ஏற்ப வளைந்த கொம்பையுடைய சிறிய யாழின் கைவிரலால் இசைத்தொழில் செய்ய இசைக்கும் நரம்பினை இயக்கிப் பாடுதலையுடைய பாணருக்குக் குறுகிய வழிகளையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள் கொடுக்கப்பட்டன

நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
விண்ணிவர் விசும்பின் மீனும்
தண்பெயல் உறையும் உறையாற் றாவே

பகைத்துப் பார்த்த ப்கைவரைக் கொல்லும் காளை போன்ற அவன் ஊக்கம் அவன் தன் வேலால் கொன்ற ஆண் யானைகளையெல்லாம் ஒவ்வொன்றான் எண்ணினால் முகில்கள் உலவும் பரந்த விண்ணில் காணப்படும் விண்மீன்களும் பொழியும் தண்மையான மழைத்துளிகளும் நிகராகா

பொருளுரை:
வளைந்து விட்ட மூங்கில் மேல் நோக்கி எழுவதைப் போல் குதிரைகள் பாய்ந்தோடித் திரிந்தன
பொன் பூக்கள் விறலியர் கூந்தலில் இடம் கொண்டன நரந்தம் பூவால் பல ஆண்டுகளாத் தொடுக்கப்பட்ட மாலை சூடப்பெற்ற மெல்லிய தாளத்திற்கு ஏற்ப வளைந்த கொம்பையுடைய சிறிய யாழின் கைவிரலால் இசைத்தொழில் செய்ய இசைக்கும் நரம்பினை இயக்கிப் பாடுதலையுடைய பாணருக்குக் குறுகிய வழிகளையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள் கொடுக்கப்பட்டன
பகைத்துப் பார்த்த ப்கைவரைக் கொல்லும் காளை போன்ற அவன் ஊக்கம் அவன் தன் வேலால் கொன்ற ஆண் யானைகளையெல்லாம் ஒவ்வொன்றான் எண்ணினால் முகில்கள் உலவும் பரந்த விண்ணில் காணப்படும் விண்மீன்களும் பொழியும் தண்மையான மழைத்துளிகளும் நிகராகா

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

சினவல் ஓம்புமின்!

திணை இலக்கியம் : புறநானூறு
பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்
திணை: வஞ்சி
துறை: பெருஞ்சோற்று நிலை


வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
வாய்வாள் பற்றி நின்றனென் என்று
சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
என்முறை வருக என்னான் கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே



வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
வேந்தனுக்காக பசும் பொன் மண்டையில் எடுத்துத் தந்த இனிய குளிர்ந்த மதுவை

யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
தனக்குரிய முறைப்படியே யாங்கள் கலந்து தந்தோம் அதனை வேண்டா என்று மறுத்து

வாய்வாள் பற்றி நின்றனென் என்று
தன் வாளை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நிற்றலாளான் என

சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
இவன் மீது சினம் கொள்வதைக் கைவிடுங்கள்

ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
இங்கு இவன் எவ்வாறு வாளைக் கைக்கொண்டானோ அதுபோல

என்முறை வருக என்னான் கம்மென
நான் பகைவரை எதிர்க்கக் கூடிய முறை வரட்டும் என இராமல்

எழுதரு பெரும்படை விலக்கி
விரைவாய்த் தனக்கு முன்னால் செல்கின்ற படையைத் தடுத்து நிறுத்தி விலக்கி

ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே
அங்கே முன்னால் நிற்கும் வீரமுடையவன் என்பதை நீவீர் அறிந்து கொள்வீராக!

பொருளுரை:
வேந்தனுக்காக பசும்பொன் மண்டையில் எடுத்துத் தந்த இனிய குளிர்ந்த மதுவை தனக்குரிய முறைப்படியே யாங்கள் கலந்து தந்தோம். அதனை வேண்டா என்று மறுத்து தன் வாளைக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நிற்றலாளான். என, இவன் மீது சினம் கொள்வதைக் கைவிடுங்கள். இங்கு இவன் எவ்வாறு வாளைக் கைக்கொண்டானோ அதுபோல நான் பகைவரை எதிர்க்கக் கூடிய முறை வரட்டும் என இராமல் விரைவாய்த் தனக்கு முன்னால் செல்கின்ற படையைத் தடுத்து நிறுத்தி விலக்கி அங்கே முன்னால் நிற்கும் வீரமுடையவன் என்பதை நீவீர் அறிந்து கொள்வீராக!

குறிப்பு:
மண்டை (மது வார்த்துக் கொடுக்கும் குவளை)
அது ஓரளவு மட்டமாக இருக்கும் ஆதலால் மண்டை எனப்பட்டது.ஒ.நோ கோ சூடுவது முடி இளங்கோ சூடுவது மண்டை.

குடிநிலையுரைத்தல்

பாடியவர்: ஔவையார்
திணை: கரந்தை
துறை: குடிநிலையுரைத்தல்

இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்
இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே

திங்கள், 2 ஏப்ரல், 2012

போர்க்களத்து நாயகன்

திணை இலக்கியம் : புறநானூறு
பாடியவர்: ஒரூஉத்தனார்
திணை: தும்பை
துறை: தானைமறம்


கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
திணிநிலை அலறக் கூவை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
ஓம்புமின் ஓம்புமின் இவண்! ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே!

கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய

வளைவாகக் கட்டப்பட்ட மாலையைச் சூடுதல் இவனுக்குப் பொருந்தியுள்ளது!வளைந்த அலை போன்ற ஆடையை அணிதலும் இவனுக்குப் பொருந்தியுள்ளது!வேந்தன் விரும்புவதையே தானும் விரும்பிச் சொல்லி அவனைத் தன் வயப்படுத்தலும் இவனுக்கே பொருந்தியுள்ளது

திணிநிலை அலறக் கூவை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி

(பகைவர்) வஞ்சம் கொண்டு புடைசூழ்ந்த போர்க்களத்தில் உள்ள பகைவீரர் அஞ்சி அலறி சிதறும்படி கூரிய வேலைக் கையில் எடுத்துக் கொண்டு படையைப் பிளந்து சென்றான். அப்போது,

ஓம்புமின் ஓம்புமின் இவண்என ஓம்பாது
"மேலே தொடர்ந்து செல்லாதபடு தடுத்துவிடுங்காள் தடுத்துவிடுங்கள்" என்று பகை தங்களுக்குள் கூறிக்கொண்டு தடுத்தனர்

தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே

அவர்களின் தடையை மீறிக்கடந்து சங்கிலியால் கட்டப்பட்ட யானைபோல் கொல்லப்பட்டு வீழ்ந்த வீரர் குடல்கள் காலைத் தடுக்கவும் வீச்சாய் கன்றை விரும்பும் ஆவைப்போல் முன்னரணில் பகைவரை எதிர்த்து பகைவீரர்களால் வளைத்துக்கொள்ளப்பட்டிருந்த தன் நண்பனிடம் வரலானான்.

அவனைப் போலவே இவனும்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

பெருநன் தாள் பணிவாயாக


திணை இலக்கியம்: புறநானூறு
திணை: கரந்தை
துறை: கையறுநிலை


பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
வண்டுமேம் படூஉம்இவ் வறநிலை யாறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
பெரிய ஆண் யானையின் அடிபோல விளங்கும் ஒரு கண்ணையுடைய

இரும்பறை இரவல! சேறி ஆயின்
பெரிய பறையை உடையவனே! இரவலனே நீ அவ்வழி செல்வாயின்

தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
தொழாமல் செல்வதைக் கைவிடுக (தொழுது போவாயாக)

வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யாறே
(அவ்வாறு செல்வாயானால் இந்தக் கொடியவழி வண்டுகள் இடைவிடாது மேம்பட்டு வாழும் இயல்புடையது, எமக்காய் வீழ்ந்தவன்

பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
பல ஆவின்கூட்டமான நிரையைத் தன்னுடன் மீட்டுவந்து

கல்லா இளையர் நீங்க நீங்கான்
அஞ்சியோடத் தான் மட்டும் போர்களத்தினின்று நீங்காதவனாய்ப்

வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
பகைவவர் விற்கள் எய்த அம்புகள் எல்லாம் தன் உடலில் பாய்ந்து புகக்

கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.
கரையை அழிக்கும் நீரில் அமைந்த அணையைப் போல எதிர்த்து நின்று விலக்கினான்

இதோ! இருக்கிறது அவன் நடுகல்




பொருளுரை:
பெரிய ஆண் யானையின் அடிபோல விளங்கும் ஒரு கண்ணையுடைய பெரிய பறையை உடையவனே! இரவலனே நீ அவ்வழி செல்வாயின் தொழாமல் செல்வதைக் கைவிடுக (தொழுது போவாயாக);அவ்வாறு செல்வாயானால் இந்தக் கொடியவழி வண்டுகள் இடைவிடாது மேம்பட்டு வாழும் இயல்புடையது, எமக்காய் வீழ்ந்தவன் பல ஆவின்கூட்டமான நிரையைத் தன்னுடன் மீட்டுவந்து அஞ்சியோடத் தான் மட்டும் போர்களத்தினின்று நீங்காதவனாய்ப் பகைவவர் விற்கள் எய்த அம்புகள் எல்லாம் தன் உடலில் பாய்ந்து புகக் கரையை அழிக்கும் நீரில் அமைந்த அணையைப் போல எதிர்த்து நின்று விலக்கினான் இதோ! அவன் நடுகல்