கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 31 ஜனவரி, 2009

அசோகச் சக்கரத்தில் ஊசலாடுகிறது தமிழக்குமுகம்








புத்தனைக் கொன்றாய்
நபிகளைக் கொன்றாய்
விவேகானந்தனைக் கொன்றாய்
கொல்வேன் கொல்வேன் கொல்வேன்

காந்தியைக் கொன்றாய்
திலீபனைக் கொன்றாய்
அன்னைபூபதியைக் கொன்றாய்
கொல்வேன் கொல்வேன் கொல்வேன்

குழந்தையைக் கொன்றாய்
குடும்பத்தைக் கொன்றாய் - முத்துக்
குமரனையுங் கொன்றாய்
கொல்வேன் கொல்வேன் கொல்வேன்

இறைமையைக் கொன்றாய்
உரிமையைக் கொன்றாய்
அமைதிப்புறாவையுங் கொன்றாய்
கொல்வேன் கொல்வேன் கொல்வேன்

வெள்ளி, 30 ஜனவரி, 2009

முத்துக்குமரன்





மாவீரன் முத்துக்குமரனின் தந்தை இப்படத்தின் இடப்பக்கத்தில்


தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்

தொப்புள் கொடியில்
உயிர்க் கொடி
ஏற்றிய தோழா
ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!

இணையத்திலே உன் அழகிய
முகம் பார்த்தோம்
இதயத்திலே கருகிப் போனது
எங்கள் மனம்!

எவ்வளவு இளகிய
மனம் கொண்டவன் நீ
எங்களுக்காய்...
ஏன் கருகிப் போனாய்?

தூத்துக்குடியில்
முத்துக் குளித்தவன் நீ
சாஸ்திரி பவனில்
ஏனையா தீக்குளித்தாய்?

குடம் குடமாய்
நாங்கள் அழுது வடித்த
எங்கள் கண்ணீரில்
உன் முகமே பூக்கிறது!

எம் தமிழ்மீது
நீ கொண்ட பற்றுக்கு
எல்லையே இல்லை என்பதை
இப்படியா உணர்த்துவது!

தமிழினத் தலைவர்கள்
என்று சொல்லத் துடிக்கும்
எங்கள் தலைவர்களின்
நாக்கை அறுத்தாய் நீ!

கையாலாகாத பரம்பரை
என நினைத்தாயோ
பூவாய் இருந்தவன் நீ
புயலாய் ஏன் வெடித்தாய்?

முப்பது ஆண்டுகள்
நாம் சுமந்த வலிகள்
போதாத ஐயா
ஏனையா எரிந்து போனாய்?

பெரு வலியோடு
உனைப் பெற்ற தாயை
எந்த முகத்தோடு போய்
நாங்கள் இனிப் பார்ப்போம்

எட்டாத தூரத்தில்
வாழ்ந்தாலும்
வாகை மரம் போல
வாடிப் போய் நிற்கிறோம்

மண்ணெணையை
உன் மீது ஊற்றி
தமிழ்மண்ணைக் காக்க
ஏனையா உனைக் கொடுத்தாய்?

தமிழீழம் வாழவே
எங்களை வாழ்த்தி
உன் வாழ்வை
ஏனையா நீ அழித்தாய்?

மரணத்திடம் மண்டியிடாமல்
மண் எங்கும் ஓடுகிறோம்
மரணத்தை தேடி நீ
ஏனையா ஓடினாய்?

தமிழீழ வரலாற்றில்
முத்தான உன் பெயர்
இனி எழுத்தாணிகளின்
முதல் வரியாகட்டும்!

உன் தியாகத்தின் முன்
நாங்கள் வெறும் சருகுகளே!
தமிழகத்தின் தாய்மடியில்
கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!

வசீகரன்
நோர்வே
29.01.09

நன்றி வசீகரன்

சனி, 17 ஜனவரி, 2009

வெல்வோம் நாம்

தாய்த் தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவுப் போராளி
திரு.தொல்.திருமாவளவனின்
சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆதரித்து நோர்வே வாழ் தமிழ்மக்கள் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றனர். தமிழாசான் பதிவேடு இணைவலையும் உளமாற வாழ்த்துகிறோம்.உன்னத்தமிழனுக்கு உலகம் என்றும் பின்னிற்கும்.

திருமாவளவன் அண்ணாவிற்கு...

திலீபனை இழந்தோம்
பூபதி அம்மாவையும் இழந்தோம்
மறைமலை நகரிலே உண்ணாநிலையில்
உங்களையும் இழப்பதா?

அறவழிப் பாதையில் விழுந்து
ஆயுதப் போரிலே எழுந்தோம்
அதுபோதும் மீண்டும்
அறவழிப் பாதையில் வீழ்வதா?

இலங்கையில் போரை நிறுத்த
இறுதி வழியாக நினைத்து
உறுதியாய் எழுந்த உங்களை
எங்கள் இதயங்களில் சுமக்கிறோம்.

உங்கள் கருத்துகள் வெல்லட்டும்
நாங்கள் வாழ்த்துகிறோம்
உங்களை இழந்த பிறகு
நாங்கள் வெல்வதை விரும்பவில்லை!

வடக்கு வாசலில் குந்தியிருந்து
வயிறு நிறைய உண்டு
மனம் மகிழும் மந்திரிகளுக்கு
உங்கள் பசியின் அருமை புரியாது!

நீர்த் தடாகங்களில்
நீச்சலடிக்கும் மீன்களால்
நெருப்புக் கடலில்
நீச்சலடிக்க எப்படி முடியும்?

மரணத்தின் எச்சங்களுக்கு நடுவில்
வாழ்ந்தே பழக்கமில்லாதவரிடம்
மரணக் குழிகளில் வாழ்வது பற்றி
எப்படி வாதிட முடியும்?

இந்த உலகத்தின்
விளிம்புகளை எல்லாம்
அதிர வைத்திடும் உங்கள்
குரல் எமக்கு வேண்டும்.

காசாவிற்கு குரல்கொடுக்க
ஆயிரம் தலைவர்கள் இருக்கலாம்
ஈழத் தமிழருக்காய் குரல்கொடுக்க
என்றும் நீங்கள் வேண்டும்.

காசாவில் அமைதியைத் தேடும்
உங்கள் இந்தியப் பிரதமருக்கு
இலங்கையில் நிகழும் போரை
நிறுத்திட மனமில்லையே... ஏன்?

வசீகரன்
நோர்வே
18.01.2009
நன்றி வசீகரன்

புதன், 14 ஜனவரி, 2009

பொங்குதமிழ்

பொங்குதமிழ்
தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் அன்புறவுகளே!
தமிழகத்தில் அரிசிப்பொங்கல் தமிழீழத்தில் அரத்தப்பொங்கல்
கதிர் தோன்றினாலும் ஒளி இல்லையே
மொழி இருந்தாலும் நாடில்லையே
உறவுகள் இருந்தாலும் உதவியில்லையே
இருந்தாலும் தடைகள் தொல்லையே
விடியவில்லையே பொங்குவதற்கு

சனி, 10 ஜனவரி, 2009

பிறந்த நாட் செய்தி

இந்துமாவாரியில் மூழ்கியுள்ள குமரிக்கண்டத் தென்கோடியில் கி.மு.50,000(ஐம்பதினாயிரம் ) ஆண்டிகளுக்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியும் திராவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகும். தேவமொழியென்று ஏமாற்றித்
தமிழகத்திற் புகுத்தபட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேற்வதற்குத் தமிழ் வடமொழியினின்றும் விடுதலையடைதல் வேண்டும். வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிகோள். தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயரமுடியும்.அதற்குத் தமிழர் இனி எல்லா வகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும்.முதற்கண் தமிழர் அனைவரும் தமிழ்ப் பெயர் தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதோறும் கொண்டாடி வருவது நன்று.பிறந்த அண்மையிற் பிறமொழிப் பெயர் பெற்றவரெல்லாம் அந்நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொள்ளலாம்.அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க்கறிவிக்கலாம்.

தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர்.தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும்.கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும்.

இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர்தம் அடிமைத்தனமும்,அறியாமையும் அடியோடு நீக்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.

ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடையவில்லை. ஆரியம்நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாம்.

ஆசான்: தேவநேயப்பாவாணர் நூல் : தமிழ் வளம்.