கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

மகாபாரதம்-பாகம் 2



மகாபாரதம் ஓர் ஆய்வு....! (பாகம் 2)

இந்த இதிகாசத்தில் நல்லொழுக்கம் சமுதாய சட்டதிட்டங்கள் அரசாங்க கோட்பாடுகள் போன்றவை பிரதானப்படுத்தி காட்டப்பட்டாலும் அறம், பொருள், இன்பம் வீடுபேறு ஆகிய தனிமனித கொள்கைகளும் சமுதாய நெறிகளுமே மூலமானதாக விவரிக்கப்படுகிறது. மேலும் இந்த நூலில் தர்மம் என்றால் என்ன என்ற கேள்விக்கு மிக விசாலமான பதில் தரப்பட்டுள்ளது. சமுதாய மேன்மைக்காக, தனிமனித ஒழுக்கத்திற்காக, ஆன்மீக ம
ுன்னேற்றத்திற்காக கடைப்பிடிக்கப்படும் அனைத்து கடைமைகளுமே தர்மம் என்று கருதப்படுகிறது.

இக்காப்பியத்தில் தனிமனித ஒழுக்கம்தான் சமுதாயத்தின் நெறியாக பரிணாமம் அடைகிறது என்ற கொள்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது. மேலும் சமுதாயத்தில் எத்தகைய உயர்வான நிலையில் இருந்தபொழுதும் ஒரு நபரின் கடந்தகாலம் என்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் பாரதக்கால மனிதர்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது. இதை தர்மன் ராஜசூய யாகம் நடத்தும்போது கண்ணபெருமானுக்கு முதல் மரியாதை செய்ததை கண்டித்து சிசுபாலன் பேசுவதன் மூலமாக அறியலாம்.

கிருஷ்ணனுக்கு யாகத்தில் முதல் மரியாதை செய்யவேண்டும் என்று பீஷ்மர் ஆலோசனை சொல்கிறார். அந்த மரியாதையைச் செய்தவன் தர்மனின் பிரதிநிதியான சகாதேவனே ஆவான். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சிசுபாலன் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால் கோபாவேசப் பட்ட அவன் யோசனை கேட்ட தர்மன் குற்றமுள்ள கர்ப்பத்தில் பிறந்தவன். யோசனை கூறிய பிஷ்மரோ உயர்ந்த இடத்தில் பிறந்தாலும் தாழ்வை நோக்கி ஓடுகின்ற நதிக்கு பிறந்தவர். யோசனையை நிறைவேற்றிய சகாதேவனும் குற்றமான முறையிலேயே கருவானவன். இவர்கள் செயலை ஏற்றுக்கொண்டு முதல் மரியாதையைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணரோ ஆடு, மாடுகள் மேய்க்கும் யாதவன், இடையன். இப்படிப் பட்டவர்களால் செய்யப்படும் செயல்கள் சரியானதாக இருக்குமென்று கருதுவது அறிவுடைமை ஆகாது. இதைப்பார்த்தும் தட்டிக் கேட்க தைரியம் இல்லாது வாய்மூடி மௌனியாக சபையோர்கள் இருப்பது விந்தையிலும் விந்தை.

தர்மனே நீ பாண்டவரில் மூத்தவன். இங்குள்ள அனைவரிலேயும் கிருஷ்ணனைத் தான் உயர்வானவன் என்று கருதுகிறாயா மற்ற எவருமே சிறந்தவராக உனக்கு படவில்லையா எனவே உனது பார்வையில் குற்றம் இருப்பது புலனாகிறது.

ஓரம்சாய்ந்து பார்ப்பவன் இல்லாததை இருப்பதாக காண்கிறான். அலட்சியமாக பார்ப்பவன் இருப்பதை இல்லாததாக காண்கிறான். இந்த இரண்டு பார்வையுமே குறைவுடையதாகும். ஓரம் சார்தலும், அலட்சியமும் உன்னிடமுள்ள மிகப்பெரும் குறைகளாகும்.

தர்மம் என்பது மிக நுட்பமான விஷயம் அதைப்புரிந்து கொள்ளும் தகுதியில்லாத சிறுவர்களாய் பாண்டவர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். கிருஷ்ணன் அரசன் அல்ல எனவே அரசர்கள் கூடியிருக்கும் சபையில் அவனுக்கு மரியாதை செய்வது எந்த தர்மத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். வயதில் முதிர்ந்தவர்களுக்கு முதல் மரியாதை தரலாம். ஆனால் கிருஷ்ணனோ சிறுவனான தர்மனைவிட சிறியவன் அவனைவிட வயது முதிர்ந்த அவன் தந்தை வசுதேவர் இங்கே இருக்கும் பொழுது சின்னவனான கண்ணனுக்கு மரியாதை செலுத்துவது எந்த வகையில் தர்மம்?

ஆச்சார்ய புருஷர்களுக்கு முதல் மரியாதை அளிக்கும் வழக்கம் உண்டு. இந்த சபையில் அனைவருக்குமே குருவான துரோணர் இருக்கும் பொழுது எந்தக் கலையிலும் வல்லவனாக இல்லாத கிருஷ்ணனுக்கு எப்படி முதல் மரியாதை கொடுக்கலாம்?

யாகத்தை நடத்தி வைக்கும் வேதப் பண்டிதர்களுக்கு முதல் மரியாதை செய்வதுதான் பழக்கம். அப்படிப்பட்ட பண்டிதர்களுக்கெல்லாம் பண்டிதனாக இருக்ககூடிய வியாசர் இங்கே இருக்கும்பொழுது குரு குலத்தில் சுள்ளிகளைப் பொறுக்கிய கிருஷ்ணனுக்கு எப்படி மரியாதை கொடுக்கலாம்?


செயற்கரிய செயல்களைச்செய்து வரங்கள் பெற்ற மகா புருஷர்களுக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டிருந்தால் அது தவறல்ல. விரும்பிய நேரத்தில் சாகலாம் என்ற வரம் பெற்றுள்ள பீஷ்மரைவிட உயர்ந்த வரம் எதையாவது கிருஷ்ணன் பெற்றிருக்கிறானா? குலம், கல்வி இவைகளில் உயர்வு இல்லாது போனாலும் சிறந்த வீரர்களுக்கு இத்தகைய மரியாதை செலுத்தலாம். ஆனால் கிருஷ்ணனின் வீரமோ கேலிக்குரியது, பரிதாபத்திற்குரியது. சகல அஸ்திரங்களிலும் தேர்ந்தவன் யுத்தசாஸ்திர நிபுணன் அஸ்வத்தாமா, அரசர்களுக்கெல்லாம் அரசனான துரியோதனன், பாரத வம்சத்திற்கே ஆசாரியனாகிய கிருபர், மாவீரன் ஏகலைவன், ஈடு இணையற்ற பராக்கிரமம் பொருந்திய சிறந்த வீரன், சிறந்த மனிதன் கர்ணன் போன்ற மாவீரர்கள் நிறைந்திருக்கும் பொழுது கிருஷ்ணனுக்குக்கொடுக்கும் முதல் மரியாதை அனைவரையும் அவமானப்படுத்தும் செயலே ஆகும்.

ஆக கிருஷ்ணன் மூத்தவனும் அல்ல, ஆசாரியனும் அல்ல, உயர்ந்தவனும் அல்ல, யாகத்தை நடத்துபவனும் அல்ல, வீரம் உடையவனும் அல்ல அத்தகைய தகுதிகள் எதுவும் இல்லாத மாமனையே கொலைசெய்த இழிந்தவனுக்கு தர்மா நீ மரியாதை செய்திருக்கிறாய் என்றால் அது மாடு மேய்க்கும் இடையனின் ஆதரவு வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

பெண்களின் சேலைகளைத் திருடுபவனும், வெண்ணை பானைகளை உடைப்பவனுமாகிய சிறுபிள்னளத்தனமான அறிவில்லாத கிருஷ்ணனின் ஆதரவுதான் உனக்கு வேண்டுமென்றால் அரசர்களுக்குகெல்லாம் அரசர்களான மேன்மை பொருந்திய எங்களை அழைத்து ஏன் அவமானப்படுத்துகிறாய் என்று கர்ஜித்த சிசுபாலன் உலகையெல்லாம் திருவாய்க்குள் காட்டியவனும் உலகத்தையே உண்ணக்கூடிய வலிமைபெற்றவனுமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நோக்கி இப்படி கூறுகிறான்.

முறை தவறியவழியில் எமன், வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள் இவர்கள் மூலமாக குந்தி தேவி பெற்றெடுத்த சக்தியற்ற பாண்டவர்கள் பயந்தவர்களாக இருப்பதனால் உன் ஆதரவை வேண்டி இந்த பூஜையை உனக்கு செய்திருக்கலாம். ஆனால் இந்த மரியாதை நமக்கு தகுமா என்று யோசித்திருக்க வேண்டாமா?

இடையர்களின் வீடுகளில் வெண்ணெயை திருடி திருடனாக அகப்பட்ட நீ அப்பாவி பெண்களின் சேலையைத்திருடி வரம்பு மீறிய நீ வயதில் மூத்த பெண்களோடு பிறந்த மேனியாக ராஜ கிரீடை செய்த காமுகனான நீ அரச போகத்திற்காக தாய்மாமனையே வஞ்சக வழியில் கொலை செய்த நீ இந்த முதல் மரியாதையைப்பெறுவது எப்படி இருக்கிறது தெரியுமா?

யாகத்தில் சேரவேண்டிய நெய்யானது தவறுதலாக தரையில் கொட்டிவிட்டால் அதை யாருமில்லாத நேரத்தில் நாய் வந்து திருட்டுதனமாக நக்கி உண்ணுமே அதே போன்றுதான் உனது செயல் இருக்கிறது. முதல் மரியாதை ஏற்றுக்கொண்ட நீயும் அதை உனக்கு தரச்சொன்ன பீஷ்மரும், தந்த தர்மனும் ஈனப்பிறவிகள். என்பது உங்களது கடந்தகால வாழ்க்கையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஆண்மையற்ற பேடி திருமணம் செய்து கொள்வதுபோல் உனது செயல் வெட்கக்கேடானது. என்றெல்லாம் ஆத்திரம் மேலிட பேசுகிறான்.

மேலே சிசுபாலன் பேசியதாக வரும் வசனங்கள் சோ.ராமசாமி போன்றவர்கள் மொழிபெயர்த்த மகாபாரத நூல்களில் வரும் பகுதிகளாகும். இதே போன்ற வசனங்கள்தான் சிசுபாலன் பேசியதாக வியாச பாரதத்திலும் இருக்கின்றன. இதை இந்த இடத்தில் நான் கூறுவதற்கு மிக முக்கியமான காரணங்கள் உண்டு. இந்த வசனங்களை நன்றாகச்சிந்தித்து பார். சிசுபாலன் பேச்சில் ஜாதி துவேஷம், ஒழுங்கற்ற முறையிலான குழந்தைபிறப்பு போன்றவைகள் பிரதானமாகக் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் அலெக்ஸôண்டர் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த பிறகுதான் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் தீர்மானிக்கப்பட்டது என்ற கருத்து வலுவிழந்துபோகிறது. அப்படியென்றால் உண்மையாலுமே ஜாதியப் பாகுபாடு மகாபாரத காலத்தில் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது.

இன்னொரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிட்டு ஆகவேண்டும். தனுர் வேதத்தை கற்றுக்கொள்ள ஏகலைவன் துரோணரிடம் வந்தபொழுது சத்ரியர்களுக்கு மட்டுமே தான் வித்தைகளை கற்றுக்கொடுக்க முடியும் மற்றவர்களுக்கு கற்றுத்தர இயலாது என்கிறார். குணத்தின் அடிப்படைதான் குலமுறை என்றால் ஏகலைவனும் ஒரு சத்ரியனே. ஆனால் அவனை அந்த வகையில் துரோணர் அங்கீகாரம் செய்யாமல் புறக்கணிப்பது பிறப்பையே அடிப்படையாகக் கொண்டுதானோ என்ற வலுவான சந்தேகம் நமக்குத்தோன்றுகிறது.

ராமாயணத்தில் ஒருவனின் ஜாதி அவனது பிறப்பின் காரணம் என்று குறிப்பிடபடவில்லை. ராவணனின் தந்தை ஒரு வேத விற்பன்னன். ராவணனும் கூட நான்கு வேதங்களிலும் சிறந்த பண்டிதன். பல யாகங்களையும் தானே செய்த அனுபவசாலி ஆனால் அவன் தொழில் முறையில் அரசன் என்பதினால் சத்ரிய இயல்புடையவனாகவே கருதப்பட்டான். எனவே ராமாயண காலத்திலிருந்த ஜாதிகள் பற்றிய கொள்கை மகாபாரத காலத்தில் மாறிவிட்டதோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுவதில் எந்த தவறும் இல்லை.

மகாபாரத காலத்தில் பிறப்பு முறையிலேயே ஜாதிகள் வழங்கப்பட்டு இருந்தால் பகவத் கீதையிலேயும் அதன் தாக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கீதையில் அத்தகைய கருத்துக்கள் எங்கேயும் நேரடியாக சொல்லப்படவில்லை. பாரதத்தின் நடுவேயுள்ள 745 சுலோகங்களில் எங்கேயும் குறிப்பிடப்படாத இந்த கருத்துக்கள் மற்ற சிலபகுதிகளில் மட்டும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப்படுவது ஏன்? என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும். இதற்கு மீண்டும் ஒருமுறை பாரதத்தின் செய்யுள் எண்ணிக்கையைத் துல்லியமாக கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். 18 பருவங்களான மகாபாரதத்தில் ஒவ்வொரு பருவத்திலும் எத்தனை சுலோகங்கள் உள்ளது என்பதை தெளிவாகக்கூறுகிறேன் கேள்.

ஆதிபருவம் 10,889 சுலோகங்களும்,
சபாபருவம் 4,367 சுலோகங்களும்,
வனபருவம் 12,476 சுலோகங்களும்,
விராடபருவம் 3,494 சுலோகங்களும்,
உத்யோக பருவம் 6,753 சுலோகங்களும்,
பீஷ்ம பருவம் 5,809 சுலோகங்களும்,
துரோண பருவம் 10,012 சுலோகங்களும்,
கர்ண பருவம் 4,975 சுலோகங்களும்,
சல்லியபருவம் 3,596 சுலோகங்களும்,
சௌப்தீக பருவம் 815 சுலோகங்களும்,
ஸ்தீரி பருவம் 807 சுலேகங்களும்
சாந்தி பருவம் 15,151 சுலோகங்களும்,
அனுஷாஷன பருவம் 11,194 சுலோகங்களும்,
ஆஸ்வமேதிக பருவம் 4,555 சுலோகங்களும்,
ஆச்சரம வாஷிக பருவம் 1098 சுலோகங்களும்,
மௌசல பருவம் 301 சுலோகங்களும்,
மகாப்ரஸ்தானிக பருவம் 111 சுலோகங்களும்,
சொர்க்க ஆரோகனு பருவம் 232 சுலேகங்களும்

ஆக 99635 சுலோகங்கள் மகாபாரதத்தில் தற்பொழுது இருக்கிறது. ஆனால் வியாசர் 6 லட்சம் சுலோகங்களை எழுதியதாக கருதப்படுகிறது. அவற்றில் கால் பகுதிதான் நம் கைவசம் இருக்கிறது மறைந்துபோன முக்கால் பகுதியில் என்னென்ன கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன எத்தகைய சம்பவங்கள் தீட்டப்பட்டிருந்தன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது. மீதமுள்ள கால் பகுதியை வைத்துக்கொண்டு கதையின்போக்கு கெடாதவாறு பல மாறுபாடுகள் காலந்தோறும் செய்யப்பட்டிருக்கலாம்.

பல இடைச்செருகல்களும் ஏற்பட்டு இருக்கலாம். அப்படி மாறுபாடு செய்தவர்களும் இடைச்செருகல் புரிந்தவர்களும் தங்களின் சுயக்கருத்துக்களையும் தாங்கள் வாழும் காலத்தில் உள்ள சமூக அமைப்புக்களை நியாய படுத்துவதற்காகவும் பாரதத்தில் பல மாற்றங்கள் செய்திருக்கலாம். அப்படி இருக்கவே இருக்காது மகாபாரதத்தின் இயல்பே பிறப்பின் அடிப்படையில் ஜாதி முறையை கொண்டதுதான் என்று யாராவது சொன்னால் அதை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் சிசுபாலனின் கூற்றுக்களில் வேறு சில உண்மைகளும் தெரியவருகிறது. பெரியவர்களை மதிப்பது என்பது அவர்களின் வயதைப்பொறுத்து அல்ல இயல்பைப்பொறுத்தே மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதும் குருபக்தி என்பது தர்மங்களுக்கு முதலிடம் கொடுத்தே வழங்கப்பட்டது குருட்டுத்தனமாக அல்ல என்பதும் ஞானமும், கல்வியும் சிறப்பாக அமையப்பெற்ற எவனும் அரசர்களைவிட மேலானவனாகக்கருதப்பட்டான் எனவும் பாரதக் குறிப்புகளிலிருந்து நன்கு விளங்குகிறது.

தொடரும்..................................


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுலோகங்களின் தொகுப்பு அருமை... நன்றி...