கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இரத்த பூமி


நன்றி
படத்துக்கும் பதிவுக்கும்



இரத்த பூமியின் கறை எப்போது நீங்கும்?
*********************************************

நாளிதழ்களில் எவ்வளவோ செய்திகள். அதில் ஒரு குறிப்பிட்ட செய்தியும் புகைப்படமும் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தன. நம் தமிழகத்தில் இன்று எவ்வளவோ கட்சிகள், அந்த கட்சிகளுக்கெல்லாம் தலைவர்கள், தங்களுக்கென பிரத்யேகமான கொள்கைகள், தொண்டர்கள். தேர்தல் நேரங்களில் கூட்டணி அமைவதைப் பொறுத்து இவர்களிடையே ஒற்றுமை, வேற்றுமை நிலவுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் எல்லாக் கட்சியினரும் ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக ஒன்றுபடுவது என்பதோ, பள்ளி மாணவர்கள்போல் கைகோர்த்துக் கொண்டு நிற்பது என்பதோ அத்தி பூக்கும் அதிசயமாகும். அப்படி ஒரு அதிசயமாகத்தான் எனக்கு அந்த புகைப்படமும், அதன் பின்பலமும் காட்சியளித்தன. அவர்கள் ஒன்றாய் சேர்ந்து நின்று உரத்த குரல் எடுத்து பேசியதும் கோஷமிட்டதும் இலங்கைப் பிரச்னைக்காக என்பதுதான் இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்!

இலங்கை… மிக இனிய நிலப்பரப்பை உடைய ஒரு நாடு. அருவிகள், ஏரிகள், ஓடைகள், ஆறுகள் என்று இயற்கையின் அற்புத சாம்ராஜ்யம் இது.

ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இங்கே மண்தான் அழகாக புஷ்டியாக உள்ளது. மனிதம் எப்போதுமே போராட்டத்தோடுதான் இருக்கிறது.புராணம் பக்கம் போனால் ராமாயணம் இதன் அழகைச் சொல்வதோடு அனுமனால் அது அழிக்கப்பட்டதையும் சேர்த்தே சொல்கிறது. சரித்திரத்திலும் நிறையவே சங்கதிகள்! சோழனும் சேரனும் இலங்கையோடு நெருங்கிய உறவினை பலமுனைகளில் வைத்திருந்திருக்கின்றனர். ஐம்பெரும் காப்பியங்களில் புகுந்தால் இலங்கை குறித்து நிறையவே செய்திகள். முருகனுக்கான அறுபடை வீடுகளில் ஒருபடை வீடு கதிர்காமம் என்று கூறுவோர் இன்றும் இருக்கிறார்கள்.

தனி நாடாகிப் போனதால் சகஜமாக போய்வர இயலாதுபோய், ஆறாவது படை வீட்டை பழமுதிர் சோலையாக நம்மவர்கள் வரித்துக் கொண்டார்கள் என்பார்கள்!

நமக்கெல்லாம் பக்கத்து மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் எல்லாமும் சற்று தொலைவில்தான் உள்ளன. இலங்கைதான் மிக மிகப் பக் கத்தில் உள்ள மண்! இங்குதான் எப்போதும் துக்கம் நிறைந்திருக்கிறது. அதிலும் சமீபத்தில் அங்கு முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த யுத்தமும் அடக்கு முறையும் அசுரத்தின் உச்சம். அன்றைய ராவணன்கூட தன்னை எதிர்த்த ராமனின் படையோடு அப்படி ஒரு யுத்தம் நிகழ்த்தியிருக்கவில்லை. அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்துப் போய், ஊரே சுடுகாடான கொடுமையை நாமெல்லோருமே கண்டோம்.

இப்போது நினைத்தாலும் வேதனையாகவும் இனம்புரியாத தவிப்பாகவும் உள்ளது. நம் தமிழகத்து நெல்லை மாவட்டத்து மகேந்திர மலைக் குன்றின் மேல் நின்று தொலைநோக்கி கருவி வழியாக பார்த்தோமானால், இலங்கையின் திரிகோணமலை புலனாகும். அந்த அளவுக்கு பார்க்க முடிந்த தூரத்தில் உள்ள ஒருநாடு. அங்கே எமன் முகாம் போட்டு உயிர்களை அள்ளி அள்ளி எடுத்துச் சென்றிருக்கிறான். உயிர் தப்பியவர்கள் அழுத அழுகை, விண் ஊளையாகப் போய்விட, இங்கே நாம் பொழுது விடியவும் எழுந்து, பல் துலக்கி, காப்பி குடித்து, பேப்பர் படித்து, அரட்டை அடித்து, டி.வி. பார்த்து நமக்கென்ன என்று இருந்திருக்கிறோம்.

நமக்குள்ளேயும் ஒரு தூண்டல் இல்லை; தூண்டுவோரையும் நாம் பொருட்படுத்தவில்லை. அது அயல்நாட்டு விவகாரம் என்கிற ஊத்தைக் காரணத் தை நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, நாம் வாழும் இந்த வாழ்வுக்கு ஒரு பங்கமும் வரப்போவதில்லை என்று கருதிக் கொண்டிருக்கிறோமே…! நம்மைவிட ஒரு சுயநலவாதி, நம்மைவிட நம்மை ஏமாற்றிக் கொள்கிற ஒரு முட்டாளை நாம் புறத்தே பார்த்துவிட முடியுமா? நம் கடல் எல்லைக்கு முப்பது மைல் தொலைவுக்கு அப்பால் குண்டுகளும் தோட்டாக்களும் மட்டுமா வெடித்தன… ராணுவ யுத்தத்துக்கும் பெண் மக்கள் கற்பழிப்பிற்கும் என்ன சம்பந்தம்? இதுவா யுத்த தர்மம்?

இத்தனைக்கும் நிராயுதபாணியாய் நின்ற ராவணனைப் பார்த்த ராமன், இவனைத் தாக்குவது தர்மமாகாது என்று ‘‘இன்று போய் நாளை வா’’ என்று சொல்லி அனுப்பிவைத்தது அங்கேதான்! யுத்த தர்மத்துக்கு இப்படி இலக்கணம் வகுக்கப்பட்ட பூமியில்தான் கொடிய மீறல்கள். இங்கே தழைக்க முடியாத பௌத்தம், சம்மணம் போட்டு அமர்ந்து, தொடை தட்டிச் சிரிப்பதும் அங்கேதான். பௌத்தம் என்ற உடனேயே மனதில் மூளும் ஒரே உணர்வு அஹிம்சை, அடக்கம், எளிமை, ஈகை இதெல்லாம்தானே?

அழகிய தலை முடிகூட ஆசையைத் தூண்டும் என்று அதைக்கூட வளர்க்காமல் துலராடையோடு திரியும் பிட்சுக்களும் பிக்குணிகளும் பசுக்கூட்டத்தைவிட மென்மையானவர்களாயிற்றே?

இவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி இப்படி அசுரர்களாயினர்?

ஒருவேளை இங்கே பௌத்தம் கால் காசுக்குகூட பெறாது மதிப்பிழந்து விட்டதா?

அப்படி என்ன தமிழ்ச்சாதி அங்கே ஆதிக்கம் செய்ய முயன்றது?

எல்லோரையும் சமமாக நடத்து என்றுதானே சொன்னது? நூற்றுக்கணக்கான மொழி கள், விதவிதமான கலாசாரங்கள் இவைபோக, மதச்சார்பற்ற நிலைப்பாட்டால் எல்லா மதங்களுக்குமான கோயில்களோடு நமது பாரதம் வேற்றுமை யில் ஒற்றுமையோடு திகழ்ந்து வருவதும், உலகமே இதைக்கண்டு வியந்து வருவதும் எத்தனை பெரிய விஷயம்! இத்தனை பெரிய விஷயத்தை கூப்பிடு தூரத்தில் உள்ள நம்மிடம் கண்டும், இந்த இலங்கையால் அதைப் பின்பற்றவோ, செயல்படுத்தவோ ஏன் முடியவில்லை?

புராணப்படி அம்மண் குபேர மண்!

ஆம், குபேரனால்தான் அந்த நாடு வடிவமைக்கப்பட்டது. ராவணன் அவனிடம் இருந்து அந்த நாட்டை பறித்து தனதாக்கிக் கொண்டான். அதன்பின் வேதமும் வளர்த்தான். மோகமும் வளர்த்தான். அனுமன் சீதையைத் தேடி இலங்கைக்குள் புகுந்த நிலையில் இதற்கு சான்றான காட்சிகளை எல்லாம்தான் காண்கிறான் அது ஒரு வினோதம். ராவண வதத்துக்குப்பின் விபீஷணன் அரசாண்ட போதிலும் அசோக வனத்தில் ஓராண்டுக்கும் மேலாகச் சீதை அடைந்து கிடந்ததால் ஏற்பட்ட துக்கமும் சோகமும் அந்த மண்ணை விட்டு அகலவேயில்லையோ?

அன்று அவள் சிந்திய கண்ணீர்தான் இன்றும் அம்மண்ணில் பெண்கள் கண்ணீர் சிந்தக் காரணமோ?

இப்படி எல்லாம் காவிய ஒப்புமையோடு சிந்தித்து பார்ப்பது ஒரு கோணம். அன்றுபோல் ஒரு ராமன் ஏன் இன்று வரவில்லை என்று எண்ண வேண்டியிருப்பதே இன்றைய கோணம்!

ராமனாக ஐ.நா.சபையைக் கருதித்தான் தாமதமாகவாவது நம் தலைவர்கள் ஒன்றாய் கூடி ஜெனிவா வரை சென்று கோரிக்கை வைத்துவிட்டு வந்தி ருக்கின்றனர். இதுதான் என்னை நெகிழ்த்தியது. இந்த கூட்டுறவுக்கு இலங்கை பயன்பட்டதை எண்ணி மகிழச் செய்தது. இது சம்பிரதாயமாகப் போய் விடாமல் இதனால் நன்மை விளைந்து இலங்கைத் தமிழன் இன்புறாவிட்டாலும் துன்புறாது இருக்க வேண்டுமே என்றும் ஏங்கியது. என்ன செய்ய, எல்லோரோடும் சேர்ந்து நானும் வேடிக்கை பார்த்தவன்தானே?

ஒரு குண்டு காயத்துக்கு மருந்து போட வாய்ப்பு கிடைத்திருந்தாலும் ஒரு ஆறுதல் இருந்திருக்கும்.

அதுதான் அயல்நாட்டுப் பிரச்னை ஆயிற்றே!
அவர்கள் எல்லோரும்தான் யாரோவாயிற்றே!
அதுதான் சாப தேசமாயிற்றே!

இவ்வேளையில் ராமாவதாரம் திரும்ப நிகழக்கூடாதா, அனுமன் சேனை ஒன்று புதிய பாலம் கட்டாதா, அதன் வழியாக இதுதான் சாக்கு என்று எல் லோருமாகப் போய் ஒரு எத்து எத்தினால் அல்லவா நாமும் மனிதர்கள்?

இவ்வேளையில் ஒரு செரிவுள்ள ராம கதை நினைவுக்கு வருகிறது. ராமன் ஒரு இடத்தில் தன் கோதண்டத்தை நிறுத்தி அம்பை நிலத்தில் தைக்கி றான். அந்த இடத்தில் ஒரு தவளை இருந்து அம்பு அதைத் தைத்து விடுகிறது. அதை அறியாத ராமன் அம்பை எடுக்கும்போது தவளை குற்றுயிராகக் கிடந்ததைப் பார்த்த ராமன் பதைத்து போனான். ‘‘தவளையே, என் அம்பு உன்னைத் தைக்கும்போது ஏன் குரல் கொடுக்கவில்லை? அப்போதே உன் னைக் காப்பாற்றியிருப்பேனே’’ என்று வேதனையுடன் கூறினான். உடனே தவளை, ‘‘பிறர் துன்புறுத்தும்போது ‘ராமா காப்பாற்று’ என்று உன்னைதான் அழைப்பேன்; நீயே துன்புறுத்தும்போது நான் யாரை அழைப்பேன்?’’

என்று கேட்டதாம்.

இன்று ராமனாக நாம்; தவளையாக இலங்கைத் தமிழ் மக்கள்!

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்
வழிமூலம் தினகரன் தமிழ்நாடு

கருத்துகள் இல்லை: