கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 1 டிசம்பர், 2012

மொழி ஆய்வு


நன்றி

படத்துக்கும் பதிவுக்கும்



சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்
***********************************************

மொழி ஆய்வுத்துறையின் முக்கிய பிரிவுகளில் முதன்மையானது சொல்லாய்வுத் துறை. ஒரு சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிந்து விளக்கிக்கூறும் சொல்லாய்வு மூலம் ஒரு மொழியின் செவ்வியல் தன்மையை உணர முடியும். சொல்லாய்வுத் துறையில் தன்னிகரற்றுத் திகழ்ந்து தமிழுக்கு அணி சேர்த்தவர் பாவாணர். பாவாணருக்குப் பிறகு மொழி ஆய்வை மிக நுட்பமாக முன்னெடுத்துச் சென்றவர்கள் சிலரே. அவர்களில் தனித்துவமான கோணத்தில் தமிழின் தொன்மையை ஆய்ந்து வருபவர் மொழியறிஞர் ம.சோ. விக்டர். இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவரது தமிழறிவு மிகப் பரந்தது என்றால் மிகையில்லை.

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டையைச் சேர்ந்தவர் விக்டர். இவரது முதல் ஆய்வு நூலான “எபிரேயத்தின் தாய்மொழி தமிழே’ நுட்பமான கவனம் பெற்றது. இந்த நூலைத் தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் பத்தொன்பது தமிழாய்வு நூல்கள், தமிழ்மொழியின் தொன்மையை ஆணித்தரமான தரவுகளோடு முன்வைக்கின்றன. இவரது ஆய்வின் தெளிந்த குரல், தமிழ்மொழி தனது தாக்கத்தை உலக மொழிகளில் செலுத்தியிருப்பதை நிறுவுகிறது. இவரை “இனிய உதயம்’ இதழுக்காகச் சந்தித்தோம்…

ஒரே ஆசிரியரின் உழைப்பில், ஒரே நேரத்தில் பத்தொன்பது மொழி ஆய்வு நூல்கள் வெளிவருதல் என்பது தமிழ் கூறும் நல்லுலகில் மிகுந்த ஆச்சரியமூட்டக்கூடியதாகவும், தமிழ்மொழி குறித்த ஆய்வில் இதற்குமுன் நிகழ்ந்திராத பாய்ச்சலாகவும் இருக்கிறது. இத்தகைய பதிப்பு முயற்சி எப்படிச் சாத்தியமானது? தவிர, 2004-ல் வெளிவந்த உங்களது முதல் மொழி ஆய்வு நூலான “எபிரேயத்தின் தாய்மொழி தமிழே’ புத்தகத்துக்கு எத்தகைய எதிர்வினைகளைச் சந்தித்தீர்கள்?

“”எபிரேயத்தின் தாய்மொழி தமிழே’ புத்தகத்துக்கான எதிர்வினைகள் பற்றிப் பேசுவதற்கு முன்பு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மொழி ஆய்வில்- குறிப்பாக சொல்லாய்வு என்று வருகிறபோது, மிக ஆழமான ஆய்வினை வரலாற்றின் துணை கொண்டு, புவியியலின் துணைகொண்டு நிறுவிட வேண்டும். நான் எனது முதல் சொல்லாய்வை முடித்த கையோடு அதைப் புத்தகமாகவும் எழுதி முடித்தேன். அதனைப் பதிப்பிக்கும் முன்பு, தமிழறிஞர் கள், பேராசிரியர்களிடம் கொடுத்து கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். எனவே ஒளியச்சு செய்த பிரதியை பதினைந் துக்கும் அதிகமானவர்களிடம் கொடுத்து விட்டுக் காத்திருந்தேன். ஆனால் ஒருவர் கூட எனக்கு ஒப்புதலான கருத்தையும் தரவில்லை; எதிரான கருத்தையும் தர வில்லை. இறுதியாக சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் மொழி யியல் அறிஞருமான பொற்கோ அவர்களைச் சந்தித்து பிரதி யைக் கொடுத்தேன். தாமதமின்றி படித்து முடித்த பொற்கோ என்னை அழைத்து, “உங்கள் ஆய்வும், அதன் முடிவுகளும் மறுக்க முடியாதபடி வலுவாக இருக்கின் றன. யார் என்ன சொன்னாலும் எதை யும் காதில் போட் டுக் கொள்ளாதீர்கள். உடனடியாக இதைப் பதிப்பித்து வெளி யிடுங்கள்’ என்று உற்சாகப்படுத்தினார். அதன் பிறகே எனது சொந்தப் பணத்தில் அந்த நூலைப் பதிப் பிக்கும் வேலைகளில் இறங்கினேன். எழு பதாயிரம் ரூபாய் செலவு பிடித்தது. எனது பொருளாதா ரச் சூழலுக்கு இந்தத் தொகை பெரிய சுமைதான். எனினும் தயக்கமின்றி பதிப்பித்தேன். ஆய்வின் முடிவுகள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதற்காக அறிஞர்கள், பேராசிரியர்கள் என்று பலருக்கும் இலவசமாகக் கொடுத்தேன். ஆனால், ஓராண்டுகள் வரை எந்த விதமான எதிர்வினைகளும் இல்லை. பதிப்பிக்கும் போதே சில நண்பர்கள், “தங்களின் தாய்மொழி குறித்து மட்டுமல்ல; பண்பாடு குறித்தும் கவலை அற்றவர்களாக தமிழர்கள் வாழத் தலைப் பட்டு விட்டார்கள். இவர்களை நம்பி நீங்கள் இத்தனை பெரிய தொகையைச் செலவு செய்ய வேண்டுமா?’ என்றார்கள். ஆனால் நான் அவர்களுக்கு மறுமொழியாக, “இந்த பூமிப்பந்தில் கடைசித் தமிழனும் அழிந்து விட்டால்கூட, தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும். இன்று நூற்றுக் கும் அதிகமான உலக மொழிகளில் தமிழின் தாக்கம் இருக்கிறது. அதுதானே எனது ஆய்வு. எனவே நிச்சயம் சில தமிழர்களாவது இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு நம்மை ஆதரிக்க வருவார்கள். அதுவரை காத்திருப்போம்’ என்று அவர்களைச் சமாதானப்படுத்தினேன்.

நண்பர்களை அமைதிப்படுத்தி விட்டேனே தவிர, தொடர்ச்சி யாக நமது ஆய்வுகளைப் புத்தகமாகக் கொண்டு வரமுடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இந்த நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் எனது நூலை அச்சிட்டுக் கொடுத்த அச்சக உரிமையாளர் “தி பார்க்கர்’ கருணாநிதி என்னை முடுக்கிவிட்டார். “”எபிரேயத்தின் தாய்மொழி தமிழே’ ஆய்வு நூல், இருபதுக்கும் அதிகமான ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது’ என்றார். எனக்கு வியப்பாக இருந்தது. அடுத்த புத்தகம் வராது என்ற அச்சம் காரணமாக, நான் தனித்தனி ஆய்வுகளாக முன்னெடுக்க விரும்பிய பல முடிவு களை இந்த ஒரே புத்தகத்தில் கொட்டியிருந்தேன். அதை அவர் கண்டுபிடித்து விட்டார். நல்லேர் பதிப்பக வெளியீடுகளாக வந்திருக்கும் பத்தொன்பது புத்தகங்களின் சுருக்கம்தான் “எபிரேயத்தின் தாய்மொழி தமிழே’ ஆய்வு நூல்.

பிறகு அச்சாளர் கருணாநிதி கேட்டுக் கொண்டபடி முதல் புத்தகத்தில் நான் ஆய்ந்து முன்வைத்த செய்திகளை விரிவு படுத்திப் புத்தகங்களை எழுத ஆரம்பித்தேன். கடந்த நான்காண்டு காலத்தில் இப்படிப் பதினைந்து புத்தகங்களை எழுதி முடித்து, கையெழுத்துப் பிரதியை நண்பர் கருணாநிதிக்கு அனுப்பிவிடுவேன். அவர் ஒளியச்சு செய்து, எனக்குப் பிழைப் படியை அனுப்புவார். நான் பிழை திருத்தி அவருக்கு அனுப்புவேன். எங்கே நான் சோர்ந்துவிடுவேனோ என்று எண்ணி, “உங்கள் ஆய்வுகளைப் பதிப்பிக்க நிச்சயம் யாராவது வருவார் கள். யாராலும் நிராகரிக்க முடியாத ஆய்வுகள்’ என்று என்னை இடையறாது இயங்க வைத்தார். அவரது நம்பிக்கையும் எனது நம்பிக்கையும் வீண் போகாத வண்ணம் ஓர் அற்புதம் நடந்தது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சதாசிவம் என்பவர் எனது நூலைப் படித்துவிட்டு, என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நான் உங்களைச் சந்திக்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல், முதன்முறையாக என்னைத் தூங்கவிடாமல் செய்துவிட்டது’ என்றார். பிறகு சென்னை வரும்போது அவரை சந்திப்பதாகச் சொன்னேன். அவ்வாறே அவரைச் சந்தித்தேன். அவர் ஒரு நல்ல தமிழ் ஆர்வலர், பரந்துபட்ட வாசகர் என்பதும், தமிழ் மொழி சார்ந்த நற்பணிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாயைச் செலவு செய்து வருபவர் என்றும் தெரிந்தது. எனது ஏனைய ஆய்வுகளைப் பற்றித் தெரிந்துகொண்ட அவர், தமிழ் மய்யம் அமைப்பை நிறுவி, தமிழ்ப் பணியாற்றி வரும் அருட்தந்தை ம. ஜெகத் கஸ்பர் அவர்களிடம் என்னை அழைத்துச் சென்றார். சதாசிவம் மூலமாக எனது முதல் நூலை ஏற்கெனவே கஸ்பர் அவர்கள் படித்திருக்கிறார். முதலில் எனது பத்து நூல்களை வெளியிடுவதாக அவர் சொன்னதும் எனக்கு பெருவியப்பு. பத்து நூல்களின் ஒளியச்சுப் பிரதிகளைப் படித்துப் பார்த்த கஸ்பர், “உங்களது மற்ற ஆய்வு நூல்களையும் கொண்டு வாருங்கள்’ என்றார். பின்னர் அனைத்தையும் படித்து முடித்து “மொழி ஆய்வில் தவிர்க்க முடியாத நூல்கள் இவை’ என்று அவர் சொன்னதும் எனது கண்கள் பனித்து விட்டன. இப்படித்தான் எனது முதல் நூலான “எபிரேயத் தின் தாய்மொழி தமிழே’ புத்தகத்துடன் சேர்த்து மொத்தம் இருபது நூல்களை தமிழ் மய்யத்தின் நல்லேர் பதிப்பகம் ஒரே நேரத்தில் வெளியிட்டது.”

இத்தனை நூல்களுக்கான தரவுகளைத் திரட்டி, அவற்றை ஆய்ந்து எழுதி முடிக்க உங்களுக்குத் தேவைப்பட்ட கால அவகாசம் எவ்வளவு? முக்கியமாக இந்த ஆய்வு களில் இறங்க உங்களைத் தூண்டியது எது? உங்களின் பின்னணி பற்றியும் கூறுங்களேன்…

“”எனது சொந்த ஊர், இன்றைய அரியலூர் மாவட்டத்தின், ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராஜன்பேட்டை. ஒரு எளிய கத்தோலிக்க கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது பெற்றோர் கடலூரில் உள்ள தூய வளனார் உயர்நிலைப்பள்ளியில் என்னைச் சேர்த்து விட்டார்கள். முதல் வகுப்பு தொடங்கி பள்ளி இறுதி வகுப்பாகிய பத்தாம் வகுப்பு வரை அங்கேயே பயின்றேன். அது மிகச்சிறந்த பள்ளி. அந்தப் பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர்- புலவர் நற்குணம் என்ற தமிழறிஞர். எனக்குள் தமிழுணர்வை விதைத்தவர் அவர்தான். இன்னொரு பக்கம் நான் பள்ளியிறுதி வகுப்பு படிக்கிற காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சி என்னை வெகுவாகப் பாதித்தது. அண்ணாவின் பேச்சும், அவர் எழுத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் மொழிநடை அந்தக் காலகட்டத்தின் புதுமை, எழுச்சி ஆகியவற்றின் கலவையாக இருந்தது. அண்ணா வைத் தொடர்ந்து கலைஞரின் பேச்சும் எழுத்தும் என்னைக் கவர்ந்தன. பதினைந்து வயது இளைஞனாக, முப்பது கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் சென்று, சிதம்பரத்தில் அவரது பேச்சைக் கேட்கச் சென்றேன். தமிழ் இலக்கியம் குறித்து அவர் பேசியவை என்னை சங்க இலக்கியம் வாசிக்க வைத்தது. அத்தனை சிறிய வயதில், நமது சங்க இலக்கியத்தில் தமிழரின் வாழ்வும் வரலாறும் இருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டேன்.

இன்னொரு பக்கம் எனது பள்ளியில் நடத்தப்பட்ட மறைக் கல்வி வகுப்புகளில் பைபிள் வாசிப்பு என்பது மிக முக்கியமான ஒரு பகுதியாக இருந்தது. அந்த வயதில் பைபிளின் மொழியும், அதில் கூறப்படும் வரலாறுகளும், அந்த வரலாறுகள் நிகழ்ந்த தாகக் கூறப்படும் நாடுகளும் பற்றிய ஒரு சித்திரம் எனக்குள் எழுந்தது. பின்னர் பைபிளில் குறிப்பிடப்படும் இடங்கள் இன்றைய உலக வரைபடத்தில் எந்த நாடுகளில் இருக்கின்றன, அங்கே வசிக்கும் மக்கள் யார், பேசும் மொழி, அவர்களது வழிபாடு, பண்பாடு பற்றி நூலகங்களில் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித் தேன். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு வேலைக்குச் செல்ல வேண்டிய குடும்பச் சூழல் இருந்ததால், திருச்சியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து இரண் டாண்டுகள் பயின்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். மழைக்குக்கூட கல்லூரியில் ஒதுங்க முடியாத வாழ்க்கைச் சூழல். ஆனால் ஆசிரியர் பணி அமைதியாகச் சென்று கொண்டிருந் தது. எனக்கு ஒரு வகையில் அது சாதகமாக அமைந்து விட்டது. தமிழ் இலக்கியங்களை ஒன்றுவிடாமல் வாசிக்கத் தொடங்கினேன். இந்த நேரத்தில் பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தனித்தமிழ் இதழ்கள் எனக்குக் கிடைத்தன. அவர் வெளியிட்ட “தென்மொழி’ இதழின் தொடர் வாசகனாக மாறினேன். அந்த இதழில்தான் தேவநேயப் பாவாணர் எனக்கு அறிமுகமானார். “தென்மொழி’யில் அவரது கட்டுரைகள் அவ்வப்போது வெளிவரும். அந்த கட்டுரைகள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இறுதியாக பாவாணர் எழுதிய இரண்டு நூல்கள் பற்றி “தென் மொழி’ மூலம் அறிந்து, அவற்றை வாங்கிப் படித்தேன். அந்த இரண்டு புத்தகங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன என்றுதான் சொல்ல வேண்டும். “தமிழ் வரலாறு’, “தமிழர் வரலாறு’ ஆகிய இரண்டு புத்தகங்கள்தான் அவை. இவற்றைப் படித்து முடித்த தும், பாவாணரின் அத்தனை ஆய்வு நூல்களையும் தேடிப்பிடித்துப் படித்தேன். கடற்கோளால் அழிந்து போன குமரிக்கண்டம் குறித்தும், தமிழர்கள் உலகெங்கும் சென்று பரவி வாழ்ந்தது குறித்தும் தனது ஆய்வில் கோடிட்டுக் காட்டுகிறார். அதே நேரம் தமிழ் மொழியின் சொற்தொகுதியில் எவை தமிழ்ச் சொற்கள், எவை பிறமொழிச் சொற்கள், அவற்றை எப்படிக் கண்டறிவது என்று தமிழுக்கு ஒரு புதிய பரிணாமத்தை- புதிய கண்ணோட் டத்தை பாவாணர்தான் முதலில் வகுத்தார். விரிவான மொழி ஆய்வுக்கு வித்திட்டவர் பாவாணர்தான். பாவாணர் வழியில் நான் சொல்லாய்வைத் தொடங்கக் காரணமாக அமைந்தது பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் உள்ள “ஊர்’ என்ற சொல். ஆபிரகாம் குடியேறி வாழ்ந்த பகுதியின் பெயர், எபிரேய மொழி எனப்படும் ஹீப்ரு மொழியிலும் “ஊர்’ என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஊர் என்பது தூய தமிழ்ச் சொல்லாயிற்றே! இது எப்படி அங்கே போனது என்ற கேள்வியோடு ஆய்வில் இறங்கினேன். இப்படித் தான் கடந்த இருபது ஆண்டுகளாக சொல்லாய்விலும் மொழி யாய்விலும் எனது வாழ்வைச் செலுத்தி வருகிறேன்.”

பாவாணரின் வழியில் மொழி ஆய்வை இடையறாது செய்து வருவதாகச் சொல்கிறீர்கள். பாவாணரின் ஆய்வுகளுக்கு உரிய அங்கீகாரமும் சிறப்பும் அவர் வாழும் காலத்தில் கிடைத்ததா?

“”பாவாணர் என்றில்லை; தொல்காப்பியருக்கே கூட ஆதரவு கிடைக்காத நிலை இருந்திருக்கலாம். இதற்குக் காரணம் ஒரு ஆய்வாளனுடைய முடிவு களை உடனே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் ஒரு ஆய்வு நூறு விழுக்காடு சரியாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. பாவாணருக்கும் அதுதான் நேர்ந்தது. பாவாணரின் ஆய்வுகள் இன்றைக்கும் விவாதப் பொருளாக இருந்தாலும், அவரது பங்களிப்பை- தமிழ்மொழிக்கு அவர் சீர்செய்ததைப்போல யாரும் செய்துவிடவில்லை. அதுதான் உண்மை. மிகப்பெரிய இலக்கண ஆசிரியர்- தமிழையும் தமிழர்களின் வரலாற்றையும் புத்துயிர் பெறச் செய்த தொல்காப்பியரே பல தவறுகளைச் செய்திருக்கிறார் என்று பாவாணர் பட்டியலிட்டார். தொல்காப்பியர் மிகப்பெரிய மேதை. அவர் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்திருக்கலாமா என்று துணிந்து கேட்டவர் பாவாணர். தனது வாழ்நாள் வரை யிலும் தமிழ்ப்பணி செய்தவர் பாவாணர். தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் பிறகு சுமார் பதினெட்டு நூற்றாண்டு இடைவெளியில் தோன்றிய மாபெரும் தமிழறிஞர் பாவாணர். சொல்லப்போனால், தொல்காப்பியருக்கு உரிய இலக்கண அறிவும், திருவள்ளுவரிடம் காணப்படும் கவித்துவ மேதமையும், இவற்றோடு வரலாற்று அறிவும் பாவாணரிடம் ஒருங்கே அமையப் பெற்றிருந்ததால் ஒரு மிகப்பெரிய ஆய்வாளராக அவர் திகழ்ந்தார். அவருக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்காதது குறித்து தமிழர்களாகிய நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும்.”

பாவாணருக்கு முன்பு தமிழாய்வை முன்னெடுத்த அறிஞர்கள் என்று யாரைக் கணக்கில் கொள்ளலாம்?

“”பாவாணர் அளவுக்கு விரிவான மொழி ஆய்வை முன்னெடுத் துச் செல்ல வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் யாருமில்லை. பாவாணருக்கு முன்பு என்று வருகிறபோது, யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் உலகளாவிய பரவலைப் பற்றி கருத்து சொன்னார்களே அன்றி முறையான ஆய்வினை யாரும் செய்யவில்லை. இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால் கால்டுவெல் பாதிரியாரை, மொழி ஆய்வை முன்னெ டுத்த முன்னோடி என்று குறிப்பிட முடியும். தமிழின் பல சொற்கள், ஐரோப்பிய மொழிகளில் வழக்கிலிருப்பதை அவர் தான் முதன்முதலில் சொன்னவர். தென்னகத்தில் பேசப்படும் திராவிட மொழிகளின் ஒற்றுமையை விளக்கி ஒப்பிலக்கணம் கொடுத்தவர். குறிப்பாக ஸ்கேண்டிநேவிய நாடுகள் என்று குறிப் பிடப்படுகிற நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் பேசப்பட்ட மொழிகளுக்கும் தமிழுக்கும் தொடர்பிருப்பதை முதன் முதலில் சுட்டிக்காட்டியவரும் கால்டுவெல்தான். அதேபோல சமஸ் கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிக் கோடிட்டுக் காட்டினார். கிறிஸ்துவ மிஷனரிக்காக இறைப்பணியாற்ற வந்த கால்டுவெல்லின் மொழி ஆய்வு தீவிரத்தன்மை கொண்டது இல்லை எனினும், கணக்கில் கொள்ளத்தக்க முன்னோடியானது. இவரைப் போலவே மிஷனரி சேவைக்கு வந்த வீரமாமுனிவர், போப்பையர், சீகன்பால்க் போன்றவர்கள் மொழி ஆய்வு, சொல்லாய்வுகளுக்கு வரவில்லை. மாறாக, அவர்கள் இலக்கியம் படைப்பதிலும், அச்சுப்பணியிலும், மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு காட்டினார்கள்.

இவர்களுக்குப் பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பரிதிமாற் கலைஞர் வருகிறார். இந்திய மொழிகளில் மூப்புடைய மொழி தமிழே. அதற்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று முதன் முதலில் சொன்னார். ஆனால் அவர் சொன்னதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஏதோ தமிழின்மீதுள்ள ஆர்வத்தில் சொல்லுகிறார் என விட்டுவிட்டார்கள். அதன்பிறகு மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கமே நடத்திக் காட்டினார். மறைமலைக்குப் பிறகு 1940-களில்தான் பாவாணர் அறிமுகமாகிறார்.”

எபிரேயத்தின் தாய்மொழி தமிழ்மொழிதான் என்ற ஆய்வை முன்வைக்கும் நீங்கள், மேலைநாட்டு வரலாற்றாசிரியர்கள், மொழியறிஞர்களிடம் காணும் குறைபாடு, பலவீனம் என்று எதைச் சொல்வீர்கள்? எபிரேய மொழியை ஆய்வு செய்த மேலை நாட்டறிஞர்கள் தமிழின் தொடர்பைக் குறிப் பிட்டிருக்கிறார்களா?

“”கீழை மொழிகள் குறித்த பரிச்சயம் இல்லாதது தான் மேலைநாட்டு மொழியறிஞர்களின் மிகப்பெரிய குறைபாடு என்று நான் சொல்வேன். எபிரேயம் பற்றிப் பேசுகிறபோது, தமிழ்நாட்டில்- தமிழறிஞர் களிடம்கூட எபிரேயம் என்ற சொல்லைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லை. எபிரேயம் என்பது கி.மு.3000 ஆண்டுகளில் பாபிலோன் நாட்டிற்குக் குடிபெயர்ந்த ஒரு மக்களினத்தின் பெயர் என்று சொல்கிறார்கள். ஏபிரேயர்கள், எபிரேயம் என்ற சொல் எப்படி வந்ததென்றால், “ஹீப்ரு’ என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தும்போது அது எபிரேயம் ஆயிற்று என்கிறார்கள். “ஹீப்ரு’ என்ற சொல் எப்படி வந்தது, அதனுடைய மூலச்சொல் என்ன என்று ஆராய்கிறபோது, அது “அப்பிரு’ (ஆல்ல்ண்ழ்ன்) என்ற சொல்லிலிருந்து வந்தது என்கிறார்கள். அப்பிரு என்ற சொல் எப்படித் தோன்றியது, அதன் பொருள் என்ன என்று பார்த்தால், அது முழுமுற்றாகத் தமிழ்ச்சொல். இன்றைய ஈராக் நாட்டில், இரட்டையாறு என்று அழைக்கப்படுகிற டைகிரீஸ், யூப்ரடீஸ் நதிகள் ஓடுகின்றன. இன்றைய ஈராக் அன்றைய பாபிலோன். இவற்றில் டைகிரீஸ் ஆறு கிழக்குப் பக்கமாகவும், யூப்ரடீஸ் ஆறு மேற்குப் பக்கமாகவும் இருக்கிறது. டைகிரீஸ் ஆற்றங்கரைக்கு கிழக்குப் பக்கமிருந்து குடிபெயர்ந்து வந்த ஒரு இன மக்களைத்தான், அங்கே ஏற்கெனவே வசித்து வந்த மக்கள் “அப்பிரு’ என்று அழைத்தார்கள். அந்த மக்கள் கிழக்குப் பகுதியிலிருந்து ஏன் வந்தார்கள்; அவர்கள் யார் என்பதையெல்லாம் இதுவரை எந்த வரலாற்று ஆசிரியர்களும் சொல்லவில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கிறார்கள். டைகிரீஸ் ஆற்றுக்கு அந்தப் பக்கமிருந்து வந்ததால் அவர்கள் “அப்பிரு’ என்று அழைக்கப்பட்டார்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதாவது அந்தப் பக்கம் என்பதற்கு “அப்பிரு’ என்று அவர்கள் சொல்வது “அப்புற’ என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. அப்புறத்து மக்கள் என்பதற்கு வரலாற்றாசிரியர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் “பட்ஹற் ள்ண்க்ங் ர்ச் ற்ட்ங் தண்ஸ்ங்ழ்.’ ஆனால் “அப்பிரு’ என்ற சொல், “அப்புற’ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஆய்வு செய்தவர்கள் அத்தனை பேரும் மேலை நாட்டு அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள். கீழை வரலாற்று அறிவோ, மொழிகள் குறித்தோ அறியாதவர்கள்.

டைகிரீஸ் ஆற்றின் அப்புறத்திலிருந்து வந்து நதிக்கரையில் குடியேறிய மக்கள் சில காலம் கடந்த பிறகு, பாபிலோன் தலைநகராக இருந்த “ஊர்’ நகரில் குடியேறினார்கள். இந்த “ஊர்’ நகரை உருவாக்கியவர் கள் சுமேரியர்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய ஈரான், ஈராக், லெபனான், சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல், அரேபியா, எகிப்து ஆகிய பகுதிகளில் வாழ்ந்திருந்த- வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மக்களைப் பற்றி தெளிவான வரையறையோ வரலாறோ இதுவரை யாரும் கண்டறிந்து சொல்லவில்லை. குறிப்புக்களை மட்டுமே கொடுக்கிறார்கள். ஆனால் சுமேரிய மக்கள் உருவாக்கிய பாபிலோனிய நாகரீகம் கி.மு. 3000 ஆண்டுகளில் செழித்தோங்கி வளர்ந்து நின்றது என்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். சுமேரியர்களுக்கு முன்பு, அங்கே “செமிட்டிக் இன’ மக்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். செமிட்டிக் இனம் எங்கிருந்து வந்தது, அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பது தெரிய வில்லை. காலப்போக்கில் சுமேரிய இனமும் செமிட்டிக் இனமும் கலந்தபோது, ஒரு புதிய மொழி உருவாகி இருக்கிறது. அதை அக்கார்டிய மொழி என்கிறார்கள். இவர்களோடு அப்புறத்திலிருந்து வந்த “ஹீப்ரு’ மக்கள், “ஊர்’ நகரில் குடியேறி அந்த இனம் பல்கிப் பெருகும்போது, ஏற்கெனவே அங்கே வாழ்ந்திருந்த சுமேரிய மக்கள், செமிட்டிக் இன மக்களுடன் கலந்தபோது, அப்புறத்து மக்கள் பேசிய மொழி சுமேரிய மொழி, செமிட்டிக் மொழியுடன் கலந்து புதிய மொழி உருவானபோது- அதை எபிரேபிய மொழி- அதாவது “ஹீப்ரு’ என்று தனிமைப்படுத்திக் கொண்டார்கள். ஹீப்ரு எனும் எபிரேய மொழி பேசிய மக்கள் வசித்த “ஊர்’ நகரத்துக்கு கிழக்கே அரபு மக்கள் இருக்கிறார்கள். மேற்குப் பகுதியில் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள். இப்படி கி.மு.3000 ஆண்டுகளில், மத்தியதரைக் கடலை ஒட்டிய கிழக்குப் பகுதியில் பேசப்பட்ட இத்தனை மொழிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. இந்த மொழி களைப் பேசிய மக்கள் மிகச்சிறந்த நாகரீகத்தில் செழித்தோங்கி வாழ்ந்திருக்கிறார்கள். மிக முக்கியமாக கி.மு. 3000 ஆண்டுகளிலேயே வரிவடிவத்திலேயே இலக்கியங்களைப் படைத் திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சுமேரியர்கள், “ஆப்பு’ எழுத்து என்று சொல்லத்தக்க வகையில் களிமண் தட்டுக்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த சுமேரிய வரிவடிவங்களும் சிந்துவெளியின் வரிவடிவங்களும் ஒன்றுதான் என்பது எனது ஆய்வின் உறுதியான முடிவு. ஆனால் மேலை மொழி அறிஞர்கள் யாரும் புதைந்துபோன இந்த வரலாற்று உண்மையைக் கண்டறியவில்லை. குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர்கள், அங்கே நகரிய நாகரீகத்தை வளர்த்து வாழ்ந்து வந்தனர். பின்னர் சிந்துவெளி மக்களின் ஒரு பகுதி மக்கள், புலம்பெயர்ந்து சென்று பாபிலோன் மற்றும் “ஊர்’ நகர நாகரீகத்தை உருவாக்கி வாழ்ந்தார்கள். இப்படி சிந்துவெளியிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழினமே சுமேரியர், யூதர், போனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம். இதற்கு சிந்துவெளி, சுமேரிய நாகரீகங்களின் வரிவடிவங்கள் ஒத்துப்போவதை மட்டும் நான் சான்றாகக் கூறவில்லை. ஏபிரேய மாகிய “ஹீப்ரு’ மொழியில் இருக்கும் எண்ணிறந்த தமிழ்ச் சொற்களின் கூட்டமே சான்று.”

சிந்துசமவெளி- மொகஞ்சதாரோ நாகரீகங்கள் பற்றித் தெரிய வந்தபோது, அவற்றை ஆரிய நாகரீகம் என்றல்லவா அறிவித்தார்கள்? அப்படியானால்- வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் இன- மத பற்று கொண்டவர்களா?

“”எல்லாரையும் அப்படிப் பொதுமைப்படுத்திவிட முடியாது. ஆனால் பலர் ஆரியச் சார்பு கொண்டவர்களாக இருந்திருக்கி றார்கள். அவ்வளவு ஏன்… தமிழ்ச்சூழலில், மொழி ஆய்வு என்றால் ஒரு குறிப்பிட்ட தமிழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் செய்வது மட்டும் தான் ஆய்வு என்று சாதி பார்த்து அங்கீகரிப்பதும் நிராகரிப் பதும் நடந்து வந்திருக்கிறது. இன்றும் இப்படி துலாக்கோல் தூக்குகிற அவலம் இருந்தாலும்கூட, இத்தகைய பார்வைகள் வெகுவாகக் குறைந்து வருவது ஆய்வுகளை ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்க உதவியிருக்கிறது.

சிந்து சமவெளி நாகரீகம் என்று வருகிறபோது அங்கே இருந்த தமிழர் சமயம், வாழ்வியல் என்பது ஆரியர்களுக்குக் கிஞ்சிற்றும் தொடர்பற்ற ஒன்று. சிந்துவெளி எழுத்துகளை ஐந்நூறுக்கும் அதிகமான எண்ணிக்கையில் தொல்லியலாளர்கள் படித்துப் பார்த்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பொருள் கூறியிருக்கிறார்கள். இப்படிப் படித்துச் சொன்னவர்களில் மேலை நாட்டு அறிஞர்களும் சிலர் உண்டு. அவர்களில் டாக்டர் “பர்பலோ’ என்பவர் சொன்ன செய்திகள் தமிழுக்கும் தமிழருக்கும் மிகவும் சாதகமான கருத்துகள். மிகுந்த நடுநிலையும், வரலாற்றுத் தெளிவும் கொண்டவை. அதாவது “சிந்துவெளி எழுத்துகள் முழுக்க முழுக்க தமிழ் எழுத்துகளே- சிந்துவெளி மொழி என்பது தமிழ்மொழியே’ என்று அவர் கூறினார். இந்தக் கருத்து ஆரிய சார்புடைய ஆய்வாளர் களைப் பெரிதும் எரிச்சலடையச் செய்தது. பிறகு 1920-களில் டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஆங்கிலேயர்கள் இருப்புப் பாதை போட்டபோது பல மண்மேடுகள் எதிர்ப்பட்டன. இவற் றைத் தகர்த்து எறியும்போது பானை ஓடுகள், காசுகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் எல்லாம் கிடைத்தன. பிறகு அந்த மேடு களில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டபோது அங்கே ஒரு நகரமே புதைந்து கிடந்ததைப் பார்த்தார்கள். அதுதான் மொகஞ்ச தாரோ. இது என்ன நாகரீகம், இங்கே வாழ்ந்த மக்கள் யார் என்றெல் லாம் தெரியாத நிலையில், “இது ஆரிய நாகரீகமே’ என்று அறிவித்து விட்டார்கள். அப்போது பம்பாய் நகரில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த கத்தோலிக்க பாதிரியாரான “ஈராஸ்’ என்பவர், மொகஞ்சதாரோவுக்கும் சிந்து வெளிக்கும் சென்று, அங்கே கிடைத்த பானை ஓடுகள், வரிவடிவ எழுத்துகள், இன்னபிற பொருட்களை எல்லாம் ஆய்ந்து பார்த்து, இது திராவிட நாகரீகம் என்று அதிரடியாகச் சொன்னார். இவர் இப்படிச் சொன்னதும், இந்தியா முழுவதும் ஒரு மாபெரும் அதிர்ச்சி அலை பரவியது. ஆரிய சார்புடைய ஆய்வாளர்கள் அவரைப் பைத்தியக்காரன் என்று தூற்றினார்கள். அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று சுமேரிய எழுத்துகளையும் சிந்து வெளி எழுத்துகளையும் ஆய்வு செய்து இரண்டும் ஒன்றுதான் என்றார். இத்தனை தீர்க்கமாகவும் தெளிவாகவும் அவர் ஆய்வு செய்து சொன்னதற்கு அவர் பன்மொழிப் புலமையும் பைபிள் அறிவும் வரலாற்று அறிவும் கொண்டவராக இருந்தார். மிகக் குறிப்பாக கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட இருபது செவ்வியல் மொழிகளில் பரிச்சயமும் தேர்ச்சியும் பெற்றவராக அவர் இருந் ததுதான். தமிழரின் வரலாற்றுக்கு மாபெரும் திருப்பு முனையைக் கொடுத்தது ஈராஸ் பாதிரியாரின் இந்த ஆய்வுதான். ஈராஸ் பாதிரியாரின் தெளிவான ஆய்வும், அவரைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் வெளிவந்த பிறகே ஆரிய சார்புடைய ஆய்வாளர்கள் இனி மூடி மறைப்பதற்கு எதுவு மில்லை என்று வாயை மூடிக் கொண்டார்கள்.

இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நீலகண்ட சாஸ்திரி, பரிதிமாற்கலைஞர், ஐராவதம் மகாதேவன், ராகவன் அய்யங்கார் என்று பல அறிஞர்கள் பிராமணர்களாக இருந்த போதிலும், தமிழர்களாகவே பிறந்து வாழ்ந்ததால் மொழி ஆய்வில் ஆரிய சார்பு இல்லாமல் மாபெரும் சாதனைகளைச் செய்திருக்கி றார்கள். இவர்களையும் நாம் மறந்துவிடக்கூடாது; முடியாது.”

நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை என்றாலும், பெரும் பான்மையான ஆரிய பண்டிதர்கள், இந்தியாவின் முதல்மொழி சமஸ்கிருதமே என்றும்; தமிழை நீசமொழி என்றும் தாழ்த்தி வந்திருப்பதை- இன்னும்கூட தாழ்த்தப்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

“”சமஸ்கிருதம் என்பது தேவமொழி, அதிலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற கருத்து மக்கள் மனதில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. நான்கு வேதங்களும் சமஸ்கிருத மொழியில் தான் எழுதப்பட்டன; அதை சூத்திரன் படிக்கக் கூடாது என்றெல் லாம் விதிகளை வகுத்தார்கள். ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழர்கள் வேதங்களைப் படிக்க வில்லை. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே இவர்களுக்குத் தெரியாது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தபோது அவர்கள் சமஸ்கிருத மொழியில் ஆர்வம் காட்டினார்கள். குறிப் பாக மேக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர் சமஸ்கிருத மொழியை ஆய்வு செய்தார். அதில் பல கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள லாம்; இன்னும் பலவற்றை நிராகரித்தும் விடலாம். பின்னர் வில்சன் என்ற ஆங்கில அறிஞர் ரிக் வேதத்தைப் படித்து அதற்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அந்த நூல் ரிக் வேதத்தை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது. அதுவரை வேதத்தைப் படித்தறியாத பலருக்கும் இந்த நூல் வேதம் பற்றிய மாபெரும் மாயைகளைத் தகர்த்தது. தமிழர்கள் பலரும் இந்த மொழிபெயர்ப்பின் வாயிலாக ரிக் வேதம் என்ன என்பதைக் கண்டு கொண்டார்கள். எனக்கும் வில்சனுடைய ஆங்கிலப் பிரதியே ஆய்வுக்குப் பயன் பட்டது. வரலாற்றறிஞர்கள் தங்களுடைய ஆய்வில், “கி.மு. 2000-க்கு முன்பு ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை’ என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டார்கள். கி.மு.2000 என்பது அதிகபட்ச கால வரையறை. தற்காலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஒரு புதிய சான்று கிடைத்தது. அப்போது முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறையின் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். அவர், “இந்த சான்றின் அடிப்படையில் சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் கி.மு.7,500 என்று அரசு முடிவு செய்கிறது’ என்று அறிவித் தார். அதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர், “இது திராவிட நாகரீகமா அல்லது ஆரிய நாகரீகமா?’ என்று கேட்டார். ஜோஷிக்கு திராவிட நாகரீகம் என்று சொல்ல மனமில்லை. ஆரிய நாகரீகம் என்று சொல்லச் சான்றில்லை. மாறாக “இந்திய நாகரீகம்’ என்று சமாளித்தார். இப்போது வரும் சான்றுகளின்படி, கி.மு.10,000 ஆண்டுகளில் சிந்துவெளியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான செய்திகள் வருகின்றன.

ஆரிய சார்புடைய அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது பெரிய பின்னடைவு. சமஸ்கிருதத்தை இந்தியாவின் முதல் மொழி என இனி எப்படிச் சொல்வதென்று திகைத்து நிற்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டதைப்போல தமிழை நீச பாஷை என்று கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள். பிறகு திராவிட இயக்கம் எழுச்சி பெற்றபோது தோன்றிய எதிர்ப்புக்க ளைக் கணக்கில் கொண்டு, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாகத் தோன்றிய மொழிகளே தமிழும் சமஸ்கிருதமும் என்று பதுங்கினார்கள். ஆனால் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற எண்ணத்திலிருந்து அவர்கள் மாறுவதாக இல்லை. இந்த நிலையில்தான் பாவாணரது ஆய்வுகள் ஆணித்தரமாக வெளிவந்தன. “சமஸ்கிருதம் தமிழில் இருந்து பிறந்த மொழி’ என்று பாவாணர் சொன்னார். அதுமட்டுமல்ல; “சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்கூட்டத்தில் நூற்றுக்கு நாற்பது விழுக்காடு சொற்கள் தமிழ்ச் சொற்களே’ என்றார். இப்போது ரிக் வேதத்தைப் படித்துப் பார்க்கிறபோது பாவாணர் குறிப்பிட்ட நாற்பது விழுக் காட்டினையும் தாண்டுகிறது.

ம.சோ. விக்டர் நேர்காணல்

ஈகரை தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை: