நன்றி
தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை..!
தாழி..!
தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை..!
அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை..!
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.
தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.
தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.
தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.
1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.
இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.
1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.
இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.
1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.
அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.
ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.
ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.
இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு. –
இளம்வழுதி கலையரசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக