நன்றி
அகநானூறு
அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும்
இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்
இது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளது. அவை:
களிற்றியானைநிரை:
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
மணிமிடை பவளம்:
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
நித்திலக் கோவை:
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.
அகநானூற்றால் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்:
அகப்பொருள் நூலான அகநானூறில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிவிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலும் வாணிபமும்:
நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகந்நானூறு வழி தெரிகிறது. யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை
"யவனர் தந்தவினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"
என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.
வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள்
அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக