கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 24 டிசம்பர், 2012

சித்தர்கள்


    நன்றி


சித்தர்களைத் தெரிந்து கொள்வோம்!

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..”

என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம்.

சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது.

மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது. முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்!

தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்...

“முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே”
(திருமந்திரம்)அதனால்தான்
“அருமலர் மொழியுஞான அமுதர்த
செந்தமிழைச் சொல்வாம்”

என்கின்றார் ஞானவெட்டியான்.

ஆம்..! தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை. ஞானாமிர்தமாகப் பார்க்கிறார். அது மட்டுமல்ல,. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது,

“பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து
தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே”

என்றும் பாராட்டுகின்றார். தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார்.

“பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போதத் தமிழ் வாக்கியம்”

என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார்.

அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்?
“சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே - செந்தமிழ்
நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்”
(அகத்தியர் ஞானம் 100)

என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.

பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார்.

“முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்
இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச்
சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்”

இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: