இறுதி நாட்களும் எனது பயணமும் - 3
************************************
இப்போதல்லாம் மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா இருந்தார்கள்… எல்லாத்தறப்பாள்களின் கீழேயும் பதுங்குகுழிகள் வெட்டப்பட்டிருந்தன. ஆயிரம் நூறாயிறமாய் காப்பகழிகள் நிலமெல்லாம் முளைத்தன.
எல்லாக் குழிகளிலுமே தம் வாழ்வைத்தொலைத்த, உறவுகளை இழந்த மனிதர்கள், பசித்த வயிறுகளோடும் புளுங்கிய மனங்களோடும் குந்திக்கொண்டிருந்தார்கள். பாலிலும் தயிரிலுமாக வாழ்ந்த எத்தனையோ பேர் கஞ்சிக்குக்கூட வழியற்றுக்கிடப்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.
குழந்தைகள் பசியால் மயங்கி விழுந்தனர். அதை ஒரளவாவது தாங்கும் திட்டமாக சந்திகளில் கஞ்சிக்கொட்டில்கள் முளைத்தன. போராளிகளேதான் அந்த கஞ்சிக்கொட்டில்களை நடத்தினார்கள்.
இப்போதைக்கு பட்டினிச்சாவை தடுத்தால் போதும் என்று நினைத்தார்கள். தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பெண்கள் புனர்வாழ்வு நிறுவனம், அரசியல்துறை போன்றவற்றால் இயக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் போதவில்லை என்று படையணிப் போராளிகள்கூட தத்தமது இருப்பிலிருந்த அரிசியில் கஞ்சிகாய்ச்சி ஊற்றினார்கள். மூன்று வேளையும் கஞ்சி வழங்கப்பட்டது.
வரிசையில் நின்று பாத்திரங்களில் கஞ்சி வாங்கிக்குடித்த மக்களைப் பார்த்து, எங்கள் மக்களுக்கா இந்தநிலை என்று நெஞ்சம் கொதிக்க போராடிய போராளிகளில் சிலர் படையினருடன் உக்கிரமாகப்போரிட்டு மாண்டனர்.
மரணம்கூட அழைக்க மறுத்தவர்கள் கண்ணீரில் கரைந்தனர். மாலை நேரங்களில் குழைத்த மா உருண்டை ஒன்றும் ஒரு குவளை பாலும் சிறுவர்களுக்காக வழங்கப்பட்டது. கஞ்சி கொட்டில்களில் அதற்காக குவிந்தது சிறுவர் பட்டாளம்.
வரிசை வரிசையாக நின்ற சிறுவர்கள் தத்தம் குடும்ப அட்டைகளை காட்டி அவற்றை பெற்றுக்கொண்டார்கள். அரசியல்துறை பெண்கள் பிரிவினர் வாய்ப்பன் தயாரித்து கொடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தனர்.
வெறும் கோதுமை மாவை பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட வாய்ப்பனுக்கு ஏகமாய் வரவேற்பு இருந்தது. அவை பசியை ஓரளவு கட்டுப்படுத்த கூடியன. மாவும் எண்ணெயும் கொடுத்து, இவ்வளவிலும் இத்தனை வாய்ப்பன்கள் செய்யவேண்டும். அத்தனையையும் இந்த விலையில் மட்டும்தான் விற்கவேண்டும். அதன் வருமானம் மட்டும்தான் உங்களுக்கான கூலி. இந்தாருங்கள் மாவும் எண்ணெயும். சட்டியும் விறகும் நீங்கள் கொண்டுவந்து சுட்டுவிட்டு, விற்பவரிடம் கொடுத்துவிட்டு உங்கள் கூலியை பெற்றுக்கொண்டு போங்கள், என்று சில பெண்களிடம் பொறுப்பை கொடுத்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக