கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சரித்திரத்தின் படையெடுப்பு



இந்திய சரித்திரத்தின் வீரப்புருஷர்கள் தற்காப்பு யுத்தத்தையே தூக்கிப் பிடித்தபோது, எதிரிகள் மீது படையெடுத்து அவர்களைப் பந்தாடிய இரண்டு தமிழர்கள் இருந்தார்கள். வடக்குப் படையெடுப்புகளால் முடக்கப்பட்டபோது, தெற்கை எட்டுத்திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்கும் பளபளக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி தகதகவென மின்னும் தந்தையும், மகனும் வந்தார்கள். அவர்கள் வாள் வீச்சு வடக்கையும் தாக்கி

து, கடல் கடந்தும் தாவியது. வேழம் அவர்களுக்கு வெள்ளாடாகவும், மலைகள் அவர்களுக்கு மண்மேடாகவும் காட்சியளித்தன.

‘வடமேற்கில் தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு மாவீரன் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வடக்கு நோக்கி வந்து சேர்ந்தான். அவனுடைய வீரர்களை யாராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. இன்றைய ஹைதராபாத், ஒடிஸா, வங்காளம் எல்லா நாடுகளும் அந்த மன்னன் வீரத்தின்முன் மண்டியிட்டன’ என்று, ‘வந்தார்கள்-வென்றார்கள்’ என்ற சரித்திரம் படைத்த சரித்திர நூலில் மதன் குறிப்பிடுகிறார். அவர் எழுப்பியுள்ள வினாவைப்போல கஜினியும், ராஜேந்திர சோழனும் சந்தித்திருந்தால், இந்தியாவின் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் ராஜேந்திரனின் ஆர்வமோ மலேயா, சுமத்திராவைக் கைப்பற்ற வேண்டும் என்பதாக இருந்தது.

எவரும் சிந்திக்காத திசையில் ராஜேந்திர சோழனால் மட்டும் எப்படி யோசிக்க முடிந்தது? வாளைச் சுழற்றிக்கொண்டு வான் முட்டும் வீரமுழக்கம் இட்டுக்கொண்டு எப்படி வங்கம் வரை செல்ல முடிந்தது? காரணம் எளிது. எதிரியாய் எண்ணி அவர்கள் பலங்களைத் துல்லியமாகக் கவனித்து, அவற்றை உடைக்கும் வலிமையை உருவாக்கிக் கொண்டான். வெளிநாடுகளில் சிம்ம கர்ஜனை புரிந்து சீறி எழுந்து அந்நாட்டு வீரர்களை துவம்சம் செய்ய அவனால் எளிதில் முடிந்ததற்கு அவனுடைய இந்த உத்தியே காரணம்.

போர் என்பது உடல்களுக்குள் நடக்கிற யுத்தம் மட்டுமல்ல, அது மனங்களிடையேயும் நிகழும் மல்யுத்தம் என்பதை அவன் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் முன்கூட்டியே ஊகித்து அவற்றைக் கச்சிதமாக உடைத்துத் தகர்த்தவன் அவன்.

தந்தை ராஜராஜன் என்கிற மாபெரும் நிர்வாகி உருவாக்கித்தந்த அடித்தளமும், ஈட்டிய செல்வப்பொதியும், உண்டாக்கிய நிலநிர்வாக முறையும், அடிக்கல் நாட்டிய கடற்படையும் அவனுக்குப் பரந்துபட்ட வாய்ப்பை உருவாக்கியது. அதில் மளமளவென கட்டுமானம் செய்து உயர்ந்த கோபுரத்தை அவனால் எழுப்ப முடிந்தது.
ராஜேந்திரசோழனின் சாகசங்கள் சுவாரசியமானவை. அவனும் அவன் தந்தையும் ராஷ்டிரகூடர்களைப் போர்க்களத்தில் ஓட ஓட விரட்டியவர்கள். வடமேற்குக் கர்னாடகா, தெற்கு மகாராஷ்டிரம் ஆகியவற்றில் சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினர். துங்கபத்ராவைத் தாண்டி சாளுக்கியர்களை வீழ்த்தினார்கள். பனவாசி, மனயகேடா நாட்டு மன்னர்கள் சோழர் படைகள் வருவதைக்கண்டதும் பயந்துபோய் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒளிந்து கொண்டார்கள். வடக்கு ஹைதராபாத்தையும் கைப்பற்றினர்.

பராந்தகன், பாண்டியர்களைப் பந்தாடிய போது, பயந்து ஓடிய பாண்டிய மன்னன் இலங்கை மன்னனிடம் மகுடத்தை ஒப்படைத்து ஓடிப்போனான். அதைத் தன் படையெடுப்பில் மீட்டான் ராஜேந்திரன். சிங்களமன்னனின் மகுடத்தைத் தட்டிப்பறித்து அவனைக் குறுகச் செய்தான். சிங்கள மன்னன் ஐந்தாம் மஹிந்தனைக் கைது செய்ய... அவன் 12 ஆண்டுகள் சோழர் சிறையில் இருந்து இறந்துபோனான்.
பாண்டியர்களையும், சேரர்களையும் அமுக்கி வைத்துக் கப்பம் கட்டும் நாடுகளாக மாற்றினான். பிறகு தன் மகனை ஜயவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில் மதுரையின் ஆளுநராக நியமித்தான். ராஜேந்திரன் கலிங்கத்தை வென்றான். அப்போது கோதாவரிக்கரையின் படையின் பின்வரிசையில் அவனே நின்று பகைவர்கள் தாக்காதபடி பாதுகாப்பு வளையம் அமைத்தான். வங்க மன்னன் மஹிபாலாவை போர்க்களத்தில் வென்றான்.

ராஜேந்திரசோழன் இயல்பாகவே துணிச்சலும், வீரமும் கொண்ட தளபதி. போரின் நுணுக்கங்களையும், அசைவுகளையும் சரியாகக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன். எதற்கும் அஞ்சாத தைரியம் கொண்ட அவன் எப்படிப் போர்க்களத்தில் அவனை எதிர்த்து வந்த மதம் பிடித்த யானையை தனியொரு வீரனாக வெட்டிச் சாய்த்தான் என்பதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதுவரை தமிழகத்தில் படை திரட்டுவது என்கிற பழக்கமே இருந்தது. ஆனால் ராஜராஜன் நிலையான படையை உருவாக்கி, அதில் இருக்கும் வீரர்களை செதுக்கி செதுக்கி சிறந்த திறன் கொண்டவர்களாக மாற்றினான். அவனுடைய மகனும் அவர்கள் எப்போதும் கூர்மைப்படுத்தப்பட்ட குத்தீட்டியாகத் திகழும்படி போர்களை வடிவமைத்தான். ராஜேந்திரன் காலத்தில் சோழப்படை துளியும் ஓய்வின்றி தொடர்ந்து போர்க்களத்திலேயே கழித்தது. ஆனாலும் அவர்கள் அலெக்ஸாண்டருடைய வீரர்களைப்போல ‘ஹோம் சிக்’ என்று அடம்பிடிக்கவில்லை.

ராஜேந்திரனுடைய வங்கப்படையெடுப்பு அவனுடைய கடற்படை தெற்காசிய நாடுகளுக்குப் படையெடுப்பதற்கான முன்னோட்டமாகவே இருந்தது. பிற்காலச் சோழர்கள் இந்தியப் பெருங்கடலையும், வங்காள விரிகுடாவையும் நிலப்பரப்பாக நினைக்குமளவு கப்பல் கட்டும் பணியில் தேர்ந்து விளங்கினர். கடலும், காற்றும் அவர்கள் கலங்களுக்குக் கட்டுப்பட்டன. அவர்கள் கடல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இரவும் பகலும் சோழக் கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, வணிகக்கப்பல்கள் பத்திரமாகப் பயணிக்கப் பாதுகாப்பு அளித்தன. அதுவரை அப்படியொரு அமைப்பு தமிழகத்தில் விரிவாக ஏற்படுத்தப்படவில்லை. வர்த்தகம் செழிக்க ஏற்படுத்தப்பட்ட நாவாய், விரிவுபெற்று சக்தி வாய்ந்த கடற்படையாக உருவம் பெற்றது. ‘சோழர்கள் கடலின் தோழர்கள்’ என்ற நிலை ஏற்பட்டது.

பத்தாம் நூற்றாண்டின் பின்பாதியில் மூன்று புதிய சக்தி வாய்ந்த பேரரசுகள் உலகில் உதயமாயின. எகிப்தில் பாட்டிமிட்ஸ், சீனத்தில் சாங், இந்தியாவில் சோழர்கள். மூவருமே இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டனர். வரலாற்று ஆசிரியர்கள், சோழர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து கடற்படையெடுப்பை நடத்தியதாக சிலாகிக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் அவசரக் கோலத்தில் படையெடுப்பு நிகழ்த்தவில்லை. எந்தப் போர்க்களத்திலும் சின்ன சிராய்ப்புகூட ஏற்படாமல் சோழப்படை தொடர்ந்து வெற்றிக்கொடியையே நாட்டியது. இலங்கையும், மாலத்தீவுகளும் அவர்களுடைய கடல் வணிகத்திற்கு முக்கிய மையங்களாகத் தேவைப்பட்டன. ஒரிஸா, வங்கம் போன்ற நாடுகளும் அவர்களுடைய கடல்வணிகத்தைத் தடைசெய்து அவ்வப்போது வியாபாரிகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததால் ஏற்பட்ட எரிச்சலால் அவற்றை அடித்து நொறுக்கி, ‘வாலைச் சுருட்டிக்கொண்டு இருங்கள், இல்லாவிட்டால் நான் வாளை உயர்த்தவேண்டியிருக்கும்’ என்று எச்சரிப்பதற்காகவே ராஜேந்திரன் படைகளுடன் திக்விஜயம் செய்தான்.

சோழர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே அமைதியாக வாழமுடியும் என்கிற சூழல் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்பட்டது. ஆர்ப்பரிக்கும் அலைகள் வழியிலுள்ள நாடுகளில் ஆழிப்பேரலை வந்ததைப்போல் ஆரவாரம் நிகழ்த்தும். பிரளயம் போன்ற பேரோசையுடன் கம்பீரமாய் நீரைக் கிழித்துச் செல்லும். சோழர்கள் நாவாய் புறப்பட்டால், கடலையே ஆக்கிரமித்துக்கொண்டு மீன்கள் நீந்தக்கூட இடமில்லாத அளவு மரக்கலங்கள் அணிவகுக்கும். அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே எதிரிநாட்டு மன்னர்கள் நடுங்கி ஒளியுமளவு அவை காட்சியளித்தன. அங்கோர்வாட் மன்னன் முதலாம் சூர்ய வர்மன் விசுவாசத்தை நிரூபிக்க, எதிரிகளை வதைக்க உபயோகப்படுத்திய அவனுடைய சொந்தத்தேரை ராஜேந்திரனுக்குப் பரிசாக அளித்து தாஜா செய்தான்.

கடாரத்தை ஆண்ட ஸ்ரீவிஜய ராஜ்ஜியத்திற்கும் சோழர்களுக்குமிடையே நட்புறவு இருந்துவந்தது. ராஜராஜன் காலத்திலிருந்து விலையுயர்ந்த பரிசுகளைச் சோழர்களுக்கு அளித்து, அவர்களிடம் கடார மன்னர்கள் கடமைப்பட்டவர்களாகவே காட்டிக்கொண்டனர். 1016ம் ஆண்டு ஸ்ரீவிஜயம் ஜாவாவை வீழ்த்தியவுடன், சீனத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பெரும் சக்தியாக ஊடுருவப் பார்த்தார்கள். ராஜேந்திரன் சீனத்திற்கு 1020ம் ஆண்டு ஒரு தூதுக்குழுவை அனுப்பி, சாங் சாம்ராஜ்ய மன்னன் எந்த வகையிலும் கடற்படையெடுப்புக்கு ஊறு விளைவிக்காதவாறு பார்த்துக்கொண்டான். அதுதான் அவனுடைய ராஜதந்திரம். ஏற்கெனவே 1022-23ம் ஆண்டுகளில் கலிங்கம் மூலமாக கங்கைவரை சென்று எச்சரிக்கை செய்து, தான் எடுக்கவிருக்கும் படையெடுப்புக்கு இடைஞ்சலில்லாமல் பார்த்துக்கொண்டான். புலிவேட்டைக்குப் போகும்போது, எலிகள் வந்தால் அவற்றை நசுக்க சக்தி விரயமாகுமே என்பதால்தான்.

1025ம் ஆண்டு ஸ்ரீவிஜயம் நாட்டிற்குச் சோழக் கடற்படை புறப்பட்டது. ஒவ்வொரு கப்பலிலும் திறம் வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சோழ வீரர்கள். வாளைச் சுழற்றுவதிலும், அம்பில் பந்தத்தைச் சுற்றி நெருப்புக்கோளங்களை குறி தவறாமல் எறிவதிலும் அவர்கள் கில்லாடிகள். உணவு, உடை, ஆயுதம் என்று நுணுக்கமாகச் செய்யப்பட்ட அத்தனை ஏற்பாடுகளுடன் அந்தப் படையெடுப்பு முடுக்கிவிடப்பட்டது. ஏற்கெனவே பரிச்சயமான வழியில், ஏதோ பள்ளிக்குப் போவதைப்போல பதற்றமில்லாமல் பயணம். சோழர்கள் வழியில் மலாய, சுமத்ரா என்று அவர்கள் அத்தனை துறைமுகங்களையும் அடித்து நொறுக்கியவாறு முன்னேறினர். சீனத்துடன் தொடர்பில்லாமல் இருந்த அந்த நாடுகள், சீன உதவியையும் கோரமுடியவில்லை.

நேர்த்தியாக வாள் வீசும் வாள் பெற்ற கைக்கோளர்களும், குறி தப்பாமல் அம்பை இலக்கில் சரமாரியாகச் செலுத்தும் வில்லிகளும் எதிரிகளை வெட்டிச்சாய்த்தும், குத்திக்கிழித்தும் கடலைச் சிவப்பாக்கும் வேலைகளைச் செய்தனர். கடாரம் படையெடுப்பின்போது ராஜேந்திரனே சோழப் படையின் தளபதியாய் இருந்தான். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் சோழப் படையெடுப்பில் ஆடிப்போனது. சோழர்களின் மரக்கலங்களை எதிர்த்து புறப்பட்டு வந்த ஸ்ரீவிஜயக் கப்பல்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்த எரியம்புகளாலும், தீப்பந்தங்களாலும் சேதமடைந்து சின்னாபின்னமாயின. ராஜேந்திரனின் வீரர்கள் விட்ட அம்புகள் கப்பல் செலுத்தியவர்களின் கழுத்திற்குக் குறி வைத்தன. சீறிப் பாய்ந்த சோழவீரர்கள் அந்தப் படகில் இருந்த கடார சிப்பாய்களைக் கண்டந்துண்டமாக வெட்டினர். கடார சிப்பாய்களின் கால்சராய் நனைய கடல் மட்டம் உயர்ந்தது. சோழப்படையின் வேகமும், புயல் போன்ற தாக்குதலும் அவர்களை கதிகலங்க வைத்தன. கடாரத்தையும், ஸ்ரீவிஜயத்தையும் சோழர்படை சூறையாடியது.

அந்நாட்டு மன்னனே கைதியாகும் சூழல் ஏற்பட்டது. சங்க்ரம விஜயதுங்கவர்மன் சிறைபிடிக்கப்பட்டான். ராஜேந்திரனின் கால்களில் விழுந்து விடுதலை பெற்றான். கப்பற்படை திரும்பி வரும் வழியில் மலேயா, சமிரி, நிக்கோபார் தீவுகளையெல்லாம் வெற்றிபெற்றுத் திரும்பியது.

ராஜேந்திரனுடைய தொடர் வெற்றி, படை பலத்தாலோ உணர்ச்சியும், உள்ளுணர்வு மிக்க வீரர்களாலோ மட்டும் விளையவில்லை. அது நேர்த்தியான ஒருங்கிணைப்பின் பலன். பல்லாண்டுகள் சிறிது சிறிதாக வடிவமைக்கப்பட்ட வெற்றிக்கோட்டை. எதிரிகள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து அந்தத் தடைகளை அப்புறப்படுத்திவிட்டு சுற்றுலா போவதைப்போல அவன் படைகள் சென்றுவர ஏற்பாடுகள் செய்தான். அவனுக்கு அவனே எதிரியாய் எண்ணி செயல்பட்டதால், எதிரிகள் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவன் பெருமைக்காகப் படையெடுக்கவில்லை. அந்த நாட்டின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீரனின் உள்ளத்தில் ஏற்பட்டதாலும், பொருளாதாரம் மேம்படும் பொது நோக்கமிருந்ததாலும் அவன் வெற்றியைத் தவிர வேறெதையும் சந்திக்கவில்லை




நன்றி : Mehandran Hari

கருத்துகள் இல்லை: