கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 24 அக்டோபர், 2012

தமிழர் நில அபகரிப்பு


இலங்கையில் இன்றுள்ள ஒன்பது மாகாணங்களை மூன்று மாகாணங்களாக மாற்றுவதற்கு இலங்கை அரசு போடும் சதி திட்டம் பற்றி நேற்று முதல் நாள் நான் இலங்கை தமிழ் ஊடகங்களில் தெரிவித்திருந்தேன். 

இது பற்றி இன்று, தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு. ராமதாஸ் பேசியுள்ளார். 

இதுபற்றி நாம் தமிழர், மதிமுக , விடுதலை சிறுத்தைகள், நெடுமாறன் அவர்களது இயக்கம் மற்றும் அதிமுக, திமுக, தமிழக காங்கிரஸ், பிஜெபி, கம்யூனிஸ்
ட் கட்சிகள், திராவிடர் கழகங்கள் என்று தமிழகம் முழுக்க பேச வேண்டும்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களின் எல்லைகளை மாற்றி, அங்குள்ள பகுதிகளை தனியே பிரித்து எடுத்து, அவற்றை பக்கத்தே இருக்கின்ற சிங்கள பெரும்பான்மை மாகாணங்களுடன் இணைத்து, தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் எந்த ஒரு மாகாணத்திலும் பெரும்பான்மையாக வாழ முடியாத திட்டத்தை இலங்கை அரசு போடுகிறது.

இது எப்படி என்றால், தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை பிரித்து எடுத்து கர்நாடகாவுடன் சேர்த்துவிட்டால் எப்படி இருக்கும்?

அதேபோல், கோயம்புத்தூர், தேனீ, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை பிரித்து எடுத்து கேரளாவுடன் சேர்த்துவிட்டால் எப்படி இருக்கும்?

அதேபோல், வேலூர், திருவள்ளூர், சென்னை மாநகரம் உட்பட காஞ்சிபுரம் மாவட்டங்களை பிரித்து எடுத்து ஆந்திராவுடன் சேர்த்துவிட்டால் எப்படி இருக்கும்?

அதேபோல், மத்திய பிரதேசத்தில் இருந்தும், பீகாரில் இருந்தும் சுமார் பத்து லட்சம் பேரை கொண்டு வந்து படிப்படியாக, அரசாங்கமே திட்டமிட்டு, காணி-நிலம்-வீடு-நிதி வசதி-இராணுவ பாதுகாப்பு வழங்கி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் குடியேற்றினால் எப்படி இருக்கும்?

இதுதான் இப்போது இலங்கையின் தமிழர் நிலங்களில் நடக்கிறது.

இந்தியாவில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்துக்கு உரிய சுமார் 16, 000 சதுர கிலோ மீட்டர் பரப்பு நிலம் அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம். அவற்றை இப்போ தமிழக தமிழர்கள் திருப்பி கேட்க முடியுமா? ஏழுமலையான திருப்பதியை மீண்டும் ஆந்திராவிலிருந்து கேட்க முடியுமா? இதெல்லாம் முடிந்துபோன விடயங்கள்.

நான் மேலே தந்துள்ள விளக்கங்களின் மூலம், இலங்கையில் தமிழர் எதிர்நோக்கும் நில அபகரிப்பு அபாயத்தை தமிழக உடன் பிறப்புகள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.

இந்த சதித்திட்டத்துக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச தலைமை தாங்குகிறார். அவருக்கு ஆளும் கூட்டணியின், சிங்கள் தீவிரவாத பங்காளி கட்சிகள் துணை இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மகிந்த ராஜபக்சவின் ஆசீர்வாதம் உண்டு.

இன்னொரு மேலதிக தகவல். இலங்கை அரசின் இந்த சதி திட்டம் பற்றி இந்திய நடுவண் அரசுக்கு தெரியும் என நான் நினைக்கிறேன். அவர்களும் தெரிந்தும், தெரியாதது போல் காட்டி கொள்கிறார்கள். என்ன........, தமிழர் நிலம் அபகரிப்பு நடந்து முடிந்துவிட்டால், அதன்பிறகு இலங்கை தமிழர்கள் சுற்றி வளைக்கப்பட்டிருப்போம். நம்மால், எதுவும் பேசவோ, கோரிக்கைகள் முன் வைக்கவோ முடியாது. அதனால், இலங்கை தமிழர் பிரச்சினை என்ற தொல்லையும் முடிந்துவிடும் இந்திய மத்திய அரசு நினைக்கின்றது போலும் !

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல்தான் ஒரு இனம் தனித்துவமாக வாழ நிலம் வேண்டும்.

இந்த நிலம் பறி போவது என்பது அனைத்து விடயங்களையும் விட அதி பயங்கரமானது. எனவே, இந்த விடயம் பற்றி தமிழகத்தில் அதிகமாக பேசப்பட வேண்டும் இதை வாசிக்கும் தமிழக நண்பர்களும், ஊடக நண்பர்களும் அதை செய்விக்க வேண்டும்.

இதுபற்றி, நாம் தமிழர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நெடுமாறன் அவர்களது இயக்கம் மற்றும் அதிமுக, திமுக, தமிழக காங்கிரஸ், பிஜெபி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகங்கள் என்று தமிழகம் முழுக்க பேச வேண்டும்.

முதலில், எனது இந்த பதிவை இயன்றவரை மீள்பதிவு (SHARE) செய்யுங்கள்.

திரு.மனோ கணேசன்,
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.

கருத்துகள் இல்லை: