கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

பிட்டங் கொற்றன்


புறநானுற்று பாடல்களின் ''பிட்டங் கொற்றன்'' எனும் குறுநில மன்னனைப் பற்றி ஒரு பாடல் இருக்கின்றது.சங்கக் காலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வியலை அப்படியே நம் கண்முன்னே நிறுத்துகின்றது .அதே நேரத்தில் நம் முன்னோர்கள் இயற்கையோ
டு சேர்ந்து செய்த விவசாயம் முறை நமை ஆச்சரியப்பட வைக்கின்றது.அப்பாடலின் எளிய உரை:-

‘''''அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
கடுங்கட் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
முந்து விளை யாணர்” - புறநானூறு : 168'''''

''அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச்சாரலில் காந்தள் மலர்கள் மலர்ந்து இவ்விடத்தில் மனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த காந்தள் மலர்களின் கொழுந்த கிழங்குகளைக் கிளறித் தின்னுவதற்காக காட்டுப் பன்றிகளின் கூட்டம் அங்கு வருகின்றன. தங்களின் கூரிய கொம்புகளால் (பற்கள்) நிலத்தைக் குத்தி,கிளறி,நொண்டி காந்தள் மலர்களின் கிழங்குகளை வெளிய எடுத்து தின்று விட்டு செல்கின்றன.இப்பொழுது அந்த நிலம் பார்ப்பதற்கு ஏர் கொண்டு உழுந்த வயல்க்காட்டைப் போன்று காட்சியளிக்கின்றது.இதைப் பார்த்த அந்த மலைவாழ் மக்கள் நிலத்தின் மேலிருந்த காந்தள் தழைகளை எடுத்து வீசி விட்டு அதன் மீது தினையை விதைக்கின்றார்கள்.விதைத்த தினை கதிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்குத் அணியமாகின்றன.தினை கதிர்களை அறுவடை செய்ய அந்த மலைவாழ் மக்கள் ஒரு நல்ல நாளுக்காகக் காத்திருந்தனர்.நல்லநாளும் வந்தது.அறுவடை செய்ய முதல் விளைச்சலை கடவுளுக்குப் படைப்பது அவர்களின் மரபு.சந்தனக் கட்டைகளால் அடுப்பில் தீ மூட்டி அதன் மீது காட்டு ஆமாக்களிடமிருந்து (மாடு) நுரை தளும்ப கறக்கப்பட்ட புதிய பால் உற்றப் பட்ட பானையை வைக்கின்றார்கள்.பால் நன்றாக கொதித்ததும் அதில் தினையை போட்டு பொங்கல் சமைத்து கடவுளுக்குப் படைக்கின்றனர்.''

இப்பாடல் நமக்கு பல வரலாற்று செய்திகளை சொல்கின்றது.ஒன்றாவது பண்டைய தமிழர்கள் இயற்கையை அழித்து விவசாயம் செய்யாமல் இயற்மையோடு சேர்ந்து விவசாயம் செய்திருக்கின்றார்கள்.இப்போது இருகின்ற இயற்கை அறிஞர் நம்மாழ்வார் போன்றவர்கள் இதுப் போன்ற வியசாய முறைகளைக் கடைப்பிடிக்க வழியுறுத்துகின்றனர் .இரண்டாவது பொங்கல் சங்கக் காலத்திலேயே கொண்டாடப்பட்டிருகின்றது இப்பாடல் உறுதிப்படுத்துகின்றது.மூன்றாவது இப்பாடல் பாடப்பட்ட இடம் குதிரை மலை .நம் தமிழ் பாட்டனான பிட்டங்கொற்றன் ஆண்ட மலை.ஆனால் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் தற்போது குதிரை மலை தமிழகத்தின் பகுதியில் இல்லை .மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட்ப் பொழுது குதிரைமலையை கன்னட மாநிலத்திடம் இழந்தோம் .தற்போது இந்த குதிரை மலை தென் கன்னட நாட்டில் உள்ளது.இதன்வழி பண்டைய தமிழக இப்பொழுது இருப்பதை விட பரந்து விரிந்து இருந்தது என்பதை தெரிந்துக் கொள்ள முடிகின்றது.இப்பொழுது நம் உரிமைகளை இழந்து எப்படி சுருங்கி விட்டோம் என்றும் உணர முடிகின்றது.


தகவல் - தமிழன் வள்ளுவம்.

கருத்துகள் இல்லை: