துப்பாக்கியோடு திரிகின்ற சிறுவனே
பக்கத்தில் வா!
உனக்கு வயது பதின்நான்கா
பதினைந்தா?
எத்தனையாக இருந்தாலும்
மகனே! அருகில் வா
உன் பாதத்தைக் காட்டு
தூசி படிந்த கால்களை
சேவிக்க விரும்புகிறேன்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
காலையில் சத்தியப்பிரமாணம்
செய்யும் போது
இந்த மந்திரச் சொல்லை
விசுவாசிப்பதாகக் கூறுகின்றாயே!
இந்த வேத மந்திரம்
உன்னை மலைபோல் நிமிர்த்துகின்றது.
உனக்கு துப்பாக்கிதூக்கும் வயதல்ல
வாய்ப்பாடு பாடமாக்கும் வயது
என்றாலும் நீ நடக்கும்போது
அட்டதிக்குகளும் அதிர்கின்றதே!
நீ மூச்சு விடும் போது.....
புயலொன்று புறப்படுகிறதே!
உன்னைப் பார்க்கும் போது
எனக்குப் பெருமையாக இருக்கிறது;
பொறாமையாகவும் இருக்கிறதே!
உன் வயதில் நானென்ன சாதித்தேன்
ஒன்றுமில்லை.....
ஒன்றுமேயில்லை
கிட்டி அடித்தேன்
கிளித்தட்டு மறித்தேன்
வெள்ளையப்பாவீட்டு விளாத்திக்குக்
கல்லெறிந்தேன்.
நீயோ
கையில் துவக்கேந்தி
களத்திலே நிற்கிறாய்
கொட்டும் மழையினிலும்
குறிபார்த்து நிற்கின்றாய்
தூங்காத விழியோடு
சென்றிக்கு நிற்கின்றாய்
உன் பாதத்தைக் காட்டு
கால்களை முத்தமிட
கவிஞன் விரும்புகிறேன்
நீயும் உன் போன்ற புலிகளும்
களத்தில் உலாவரும் காலம்வரை
உலகத்துப் பகையெல்லாம்
ஒன்றாய் எதிர்க்கிலும்
வேங்கைகள் பாய்ந்து......
வெற்றி கொள்ளும்
உணர்வு
தை 1990
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக