கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 5 ஏப்ரல், 2012

செவிலிக்கூற்று

திணை இலக்கியம்: நற்றிணை
திணை: பாலை
துறை: செவிலிக்கூற்று
பாடியவர்: போதனார்

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஓக்குபு பிழைப்ப தெண்நீர்
முத்துஅரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரிமெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கு அறல்போல
பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே!

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
தேன் கலந்த வெண்பால் இனிய சுவையுள்ளது

விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்தி
ஒளிபொருந்திய பொற்கலத்தில் ஒரு கையால் ஏந்தி

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
புடைப்பாகச் சுற்றிய பூப்போன்ற மெல்லிய நுனியுடைய சிறிய கோலை ஏந்தி

உண்என்று ஓக்குபு பிழைப்ப தெண்நீர்
குடிஎன்று கூறிக் கோலை ஓங்கிய செயல் நிறைவேறாது போயிற்று

முத்துஅரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
தெளிந்த ஒளியுடைய முத்துக்களைப் போட்ட பொற்சிலம்பை அணிந்தவளை

அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
மெல்லியவாய் நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமைச் செவிலியர்

பரிமெலிந்து ஒழிய பந்தர் ஓடி
அவளைத் தொடர்ந்து ஓடியும் பிடிக்க முடியாமல் களைத்து விட்டனர் பந்தலுக்குள் ஓடியவள்

ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
வரமாட்டேன் என மறுத்தாள் அந்தச் சிறுக்கி, அவ்வாறு விளையாட்டுடையாளுக்கு

அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்
நல் அறிவும் ஒழுக்கமும் எங்கிருந்து உணர்ந்து கொண்டாளோ

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென
தன்னையடைந்த கண்வனின் குடி வறுமைபட்டதாகத் தன்னை

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
பெற்றுக் கொடுத்த தந்தையின் மிகுந்த செல்வத்தை நினையாதவளாய்

ஒழுகுநீர் நுணங்கு அறல்போல
ஓடும் நீரிலே கிடக்கும் நுண்ணிய மண்ல் போல

பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே!
ஒரு பொழுது மறுத்து மறுபொழுது உண்ணும் உறுதிப்பாடு உடையவள் ஆயினளே அச்சிறு பெண்ணே

தேன் கலந்த வெண்பால் இனிய சுவையுள்ளது. ஒளிபொருந்திய பொற்கலத்தில் ஒரு கையால் ஏந்தி புடைப்பாகச் சுற்றிய பூப்போன்ற மெல்லிய நுனியுடைய சிறிய கோலை ஏந்தி குடி என்று கூறிக் கோலை ஓங்கிய செயல் நிறைவேறாது போயிற்று தெளிந்த ஒளியுடைய முத்துக்களைப் போட்ட பொற்சிலம்பை அணிந்தவளை மெல்லியவாய் நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமைச் செவிலியர் அவளைத் தொடர்ந்து ஓடியும் பிடிக்க முடியாமல் களைத்து விட்டனர் பந்தலுக்குள் ஓடியவள் வரமாட்டேன் என மறுத்தாள் அந்தச் சிறுக்கி, அவ்வாறு விளையாட்டுடையாளுக்கு
நல் அறிவும் ஒழுக்கமும் எங்கிருந்து உணர்ந்து கொண்டாளோ! தன்னையடைந்த கண்வனின் குடி வறுமைபட்டதாகத் தன்னை பெற்றுக் கொடுத்த தந்தையின் மிகுந்த செல்வத்தை நினையாதவளாய் ஓடும் நீரிலே கிடக்கும் நுண்ணிய மண்ல் போல ஒரு பொழுது மறுத்து மறுபொழுது உண்ணும் உறுதிப்பாடு உடையவள் ஆயினளே அச்சிறு பெண்ணே

கருத்துகள் இல்லை: