கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 4 ஏப்ரல், 2012

குதிரை மறம்

திணை இலக்கியம் : புறநானூறு
பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார்
(காமக் கணியார் எனவும் பாடம்).
திணை: தும்பை
துறை : குதிரை மறம்


ஓடித் தாவுபு உகளும் மாவே
தாவுபு - தாவி (வினையெச்சம்)

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும், மாவே பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
விண்ணிவர் விசும்பின் மீனும்
தண்பெயல் உறையும் உறையாற் றாவே

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும் மாவே

வளைந்து விட்ட மூங்கில் மேல் நோக்கி எழுவதைப் போல் குதிரைகள் பாய்ந்தோடித் திரிந்தன

பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட

பொன் பூக்கள் விறலியர் கூந்தலில் இடம் கொண்டன

நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்

நரந்தம் பூவால் பல ஆண்டுகளாத் தொடுக்கப்பட்ட மாலை சூடப்பெற்ற மெல்லிய தாளத்திற்கு ஏற்ப வளைந்த கொம்பையுடைய சிறிய யாழின் கைவிரலால் இசைத்தொழில் செய்ய இசைக்கும் நரம்பினை இயக்கிப் பாடுதலையுடைய பாணருக்குக் குறுகிய வழிகளையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள் கொடுக்கப்பட்டன

நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
விண்ணிவர் விசும்பின் மீனும்
தண்பெயல் உறையும் உறையாற் றாவே

பகைத்துப் பார்த்த ப்கைவரைக் கொல்லும் காளை போன்ற அவன் ஊக்கம் அவன் தன் வேலால் கொன்ற ஆண் யானைகளையெல்லாம் ஒவ்வொன்றான் எண்ணினால் முகில்கள் உலவும் பரந்த விண்ணில் காணப்படும் விண்மீன்களும் பொழியும் தண்மையான மழைத்துளிகளும் நிகராகா

பொருளுரை:
வளைந்து விட்ட மூங்கில் மேல் நோக்கி எழுவதைப் போல் குதிரைகள் பாய்ந்தோடித் திரிந்தன
பொன் பூக்கள் விறலியர் கூந்தலில் இடம் கொண்டன நரந்தம் பூவால் பல ஆண்டுகளாத் தொடுக்கப்பட்ட மாலை சூடப்பெற்ற மெல்லிய தாளத்திற்கு ஏற்ப வளைந்த கொம்பையுடைய சிறிய யாழின் கைவிரலால் இசைத்தொழில் செய்ய இசைக்கும் நரம்பினை இயக்கிப் பாடுதலையுடைய பாணருக்குக் குறுகிய வழிகளையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள் கொடுக்கப்பட்டன
பகைத்துப் பார்த்த ப்கைவரைக் கொல்லும் காளை போன்ற அவன் ஊக்கம் அவன் தன் வேலால் கொன்ற ஆண் யானைகளையெல்லாம் ஒவ்வொன்றான் எண்ணினால் முகில்கள் உலவும் பரந்த விண்ணில் காணப்படும் விண்மீன்களும் பொழியும் தண்மையான மழைத்துளிகளும் நிகராகா

கருத்துகள் இல்லை: