கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

சினவல் ஓம்புமின்!

திணை இலக்கியம் : புறநானூறு
பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்
திணை: வஞ்சி
துறை: பெருஞ்சோற்று நிலை


வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
வாய்வாள் பற்றி நின்றனென் என்று
சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
என்முறை வருக என்னான் கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே



வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
வேந்தனுக்காக பசும் பொன் மண்டையில் எடுத்துத் தந்த இனிய குளிர்ந்த மதுவை

யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
தனக்குரிய முறைப்படியே யாங்கள் கலந்து தந்தோம் அதனை வேண்டா என்று மறுத்து

வாய்வாள் பற்றி நின்றனென் என்று
தன் வாளை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நிற்றலாளான் என

சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
இவன் மீது சினம் கொள்வதைக் கைவிடுங்கள்

ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
இங்கு இவன் எவ்வாறு வாளைக் கைக்கொண்டானோ அதுபோல

என்முறை வருக என்னான் கம்மென
நான் பகைவரை எதிர்க்கக் கூடிய முறை வரட்டும் என இராமல்

எழுதரு பெரும்படை விலக்கி
விரைவாய்த் தனக்கு முன்னால் செல்கின்ற படையைத் தடுத்து நிறுத்தி விலக்கி

ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே
அங்கே முன்னால் நிற்கும் வீரமுடையவன் என்பதை நீவீர் அறிந்து கொள்வீராக!

பொருளுரை:
வேந்தனுக்காக பசும்பொன் மண்டையில் எடுத்துத் தந்த இனிய குளிர்ந்த மதுவை தனக்குரிய முறைப்படியே யாங்கள் கலந்து தந்தோம். அதனை வேண்டா என்று மறுத்து தன் வாளைக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நிற்றலாளான். என, இவன் மீது சினம் கொள்வதைக் கைவிடுங்கள். இங்கு இவன் எவ்வாறு வாளைக் கைக்கொண்டானோ அதுபோல நான் பகைவரை எதிர்க்கக் கூடிய முறை வரட்டும் என இராமல் விரைவாய்த் தனக்கு முன்னால் செல்கின்ற படையைத் தடுத்து நிறுத்தி விலக்கி அங்கே முன்னால் நிற்கும் வீரமுடையவன் என்பதை நீவீர் அறிந்து கொள்வீராக!

குறிப்பு:
மண்டை (மது வார்த்துக் கொடுக்கும் குவளை)
அது ஓரளவு மட்டமாக இருக்கும் ஆதலால் மண்டை எனப்பட்டது.ஒ.நோ கோ சூடுவது முடி இளங்கோ சூடுவது மண்டை.

கருத்துகள் இல்லை: