கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

உலக தாய்மொழி தினம்


நன்றி
தாய் மொழியை போற்றும் அனைவருக்கும் உலகத் தாய் மொழி தின வாழ்த்துகள். அந்நிய மொழியின் தாக்கத்தில் இருந்து நம் தாய் மொழியை காப்போம் . தாய் மொழியில் பெயர் சூட்டுவோம் தாய் மொழியில் கலப்பின்றி பேசுவோம். தாய் மொழியில் கையெழுத்து போடுவோம். உயிரினும் மேலாக தாய் மொழியை நேசிப்போம். இந்திய நாட்டின் மொழித் தீண்டாமை கொள்கையை மாற்றி அமைத்து நம் தாய் மொழியை பேணுவோம் என்று இந்நாளில் சூளுரைப்போம்.


உலக தாய்மொழி தினம் 

ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், "உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர்.கடந்த, 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.

தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர்.ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது."ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது.

சமீபத்தில், தனியார் நிறுவனத்தினர், எளிதாக வாசிக்கும் வகையில், 8 வரிகள் கொண்ட பத்தியை வடிவமைத்து, தமிழகத்தில் உள்ள, 28 மாவட்டங்களில் பயிலும், பள்ளி மாணவர்களிடம் வாசிக்க கொடுத்தனர்.இந்த ஆ#வில், முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவீத குழந்தைகளால் மட்டுமே, தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும், 43.6 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 5ம் வகுப்பு படிக்கும், 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே, 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது. என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு.
"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது' என்பது, பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

இனத்தின் அடையாளம் மொழி:

உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில், ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், ஒரு தாய்மொழி இருக்கும். இவற்றின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிப்., 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மொழிகள், தாய்மொழி, தேசிய மொழி, தொடர்பு மொழி என 3 விதமாக உள்ளன. பேச்சு வழக்கை தாண்டி, கல்வியிலும் மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என யுனெஸ்கோ வலியுறுத்துகிறது.

எத்தனை மொழிகள்:

இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

எப்படி தொடங்கியது:

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உருது இருந்தது. 1952ம் ஆண்டு, அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்தனர். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1952, பிப்., 21ம் தேதி ஊரடங்கு உத்தரவையும், மீறி தாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, 1999ல் இத்தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியது.

தாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை:

மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும்.
மனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான, நமது மொழியின் அருமை தெரியாமல், பிறமொழி மோகத்தில் தமிழை, தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம். தாய் மொழி தமிழின் அருமையை, இனிமையை, மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.தாய் மொழியின் பெருமை பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள்?

க.ஞானசம்பந்தன் பேராசிரியர், தியாகராஜர் கல்லூரி, மதுரை.:தாயிடமிருந்து பெறுகிற முதல் விஷயம், அவள் கற்றுத் தரும் மொழி தான். "அவள் வாத்திச்சி... அறை வீடு கழகம்' என்பார், பாரதிதாசன். அம்மா தான், மொழியை கற்றுத் தரும் முதல் ஆசிரியை. உறவை, உணவை, உணர்வை கற்றுத் தருவது அவள் தான். எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், காதலையும், வேதனையையும் தாய்மொழியில் தான் முழுமையாகச் சொல்ல முடியும். ஆபத்து சமயத்தில் தானாக வருவது தாய்மொழி தான். உலகநாடுகளில் அனைவருமே, அவர்களது தாய்மொழியில் தான் பேசுகின்றனர். சொல்வங்கி உருவாவது, தாய்மொழியில் தான். வீட்டில் பெற்றோர், உறவினர்கள் தமிழில் குழந்தைகளிடம் பேசாவிட்டால், மொழியில் சங்கடம் தான் ஏற்படும். மொழி அழிந்தால், அந்த இனமே அழிந்து விடும். நமது அடையாளமே தமிழ்மொழி தான். மென்மையான உறவுகளைச் சொல்வது, தகுதியான சொல்லை வெளியிட முடிவது, தாய்மொழியில் தான். மூத்தோரிடம் இருந்து உடம்புக்குள், உயிருக்குள் ஊறிவரும் விஷயம் தாய்மொழியே. தாய்மொழியில் சிந்திப்பவர்களே, உயர்வடைவர்.

வி.தங்கமணி குடும்பத்தலைவி, மதுரை:எனக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்திருந்தேன். தமிழே வரவில்லை. எனவே, நான்காம் வகுப்பில் இருந்து தமிழ்வழிக் கல்விக்கு மாற்றினேன். தற்போது ஏழாம் வகுப்பு படிக்கிறாள். மகன் தமிழ் வழியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். தாய்மொழி நன்கு தெரிந்தால் தான், பிறமொழிகளை எளிதாக படிக்க முடியும். எனவே, கல்லூரி செல்லும் வரை, தமிழுக்கே முக்கியத்துவம் கொடுப்போம்.

இ.வீரத்தேவன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர்:தாய்மொழி தெரியாவிட்டால் எந்த மொழி படித்தாலும், புரியாது. தாய்மொழியில் தான் சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். எங்கள் பள்ளியில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழில் பலவீனமாக இருக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்துகிறோம். நன்றாக உச்சரிக்கும் ஒரு மாணவன், உச்சரிப்பு சரியில்லாத மாணவனை தத்தெடுக்க வேண்டும். அந்த மாணவனுக்கு உச்சரிப்புத் திறனை கற்றுத் தர வேண்டும். இந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பர். தமிழின் சிறப்பு எழுத்துக்களை, பழைய பழமொழி, புதிர், விடுகதைகள் மூலம் கூறுகிறோம்.

கருவில் கற்கும் மொழி :

தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை, குழந்தை கற்றுக் கொள்கிறது என்கிறார், மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.

அவர் கூறியதாவது: தாய்மொழியை அறிமுகப்படுத்துவது, தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள், வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ, அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே, குழந்தைகளால்
கற்றுக் கொள்ள முடியும். மொழியை நன்கு பழகிய பின், மூன்றரை வயதுக்கு மேல், இரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.
தமிழ்மொழியில் நிறைய சப்தங்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு உச்சரிப்பு வேறுபாட்டை நாக்கை சுழற்றுவதன் மூலம், கற்றுத் தருவது எளிது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கு தமிழ் மொழியே உதவும். வாயின் எல்லாப் பகுதிகளையும் நாக்கு தொட்டு, மடங்கிப் பேசமுடிவது, தமிழ்மொழியில் தான். பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும்.வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் தாய்மொழியில் தான் பேசவேண்டும். அப்போது தான் குழந்தை எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்ளும். வீட்டில் பல மொழிகள் பேசினால், மூன்று வயது வரை, மொழி வளர்ச்சி இல்லாமல், பேச்சு மொழி தாமதப்படும். ஒரே மொழியில் பேசும் போது, பழகும் போது மொழி வளர்ச்சி வேகமாக, தெளிவாக இருக்கும்.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்: இன்றைய தலைமுறையினருக்கு, தாய்மொழி தினம் இருப்பதே தெரியாது. அதைக் கொண்டாட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். எதற்கெடுத்தாலும் தமிழ், ஆங்கிலம் கலந்து பேசும் சூழல்; அதை விட அவலமான விஷயம், தமிழில் படிப்பதை, பேசுவதை அந்தஸ்து குறைவாக நினைப்பது. மேலை நாடுகளுக்குச் செல்லும் போது, ஒரு ஆப்பிரிக்கன் இன்னொரு ஆப்பிரிக்கனை சந்தித்தால், நைஜிரிய மொழியில் தான் பேசுவார். எல்லா மொழி பேசுபவர்களும் அப்படித்தான். ஆனால் தமிழன் இன்னொரு தமிழனை சந்தித்தால், ஆங்கிலத்தில் பேசுகின்றார்.தமிழ் மொழி, 3500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்கது. அதை பேசுகிற ஒருவராக பெருமையும், புனிதமும் கொள்ள வேண்டும். தமிழ், செம்மொழி ஆக்கப்பட்ட பின், ஓரளவு புரிதல் வந்தது. ஆங்கில மொழி உருவாகி 500 ஆண்டுகள் தான் ஆகிறது. அறிவியல் தமிழ், வானவியல் சாஸ்திரம், கணிதம் குறித்த சொற்கள், பழந்தமிழில் இருந்தன. அதில் பயன்பாட்டில் இருந்ததை, இலக்கியச் சான்று மூலம் தெரிந்து கொள்ளலாம். அறிவியல் பெயர்களை, தமிழில் சொல்ல முடியவில்லை என, கூறமுடியாது. தமிழனைப் போல அகம், புறம் என, வாழ்க்கையை பிரித்து, அதன்படி வாழ்ந்தவர்கள், வேறு நாட்டில் கிடையாது.

கருத்துகள் இல்லை: