நன்றி
தமிழர்களின் தொன்மை இசைக் கருவியான பறை என்றால் நமக்கு தெரியும். அதில் எத்தனை வகை உண்டு என்பது பற்றி தெரியுமா ?
பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமானவை வருமாறு;-
1.அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை.
அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688).
2.ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை.[7]
ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40).
3. உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு)
4.சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு)
5.சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் பறை.
6.வெட்டியான்பறை - சில விசேடகாலங்களிற் கொட்டும் பறை.
7.நெய்தற்பறை - நெய்தல் நிலத்துக்குரிய பறை.திருக்குறள்௧115
8.பம்பை - நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு).
தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக சிந்தாமணி.40).
9.மீன்கோட்பறை - நெய்தனிலப் பறை. (இறை. 1, பக். 17.)
10.மருதநிலப்பறை - மருதநிலத்திற்குரிய பறை.
11.கல்லவடம் - ஒரு வகைப்பறை
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
கல்லவடமிட்டுத் திசைதொழு தாடியும் (தேவாரம். 576, 6).
12. குரவைப்பறை - குறிஞ்சிநிலத்துக்குரியது. குறிஞ்சிப்பறை = குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டகப் பறை.
13.தடறு - தொண்டகப் பறை. (அக. நி.)
14.குறும்பறை - குறும்பறை யசைஇ (புறநானூறு. 67, 9)
15.கொடுகொட்டி - ஒரு வகைப்பறை
கொடுகொட்டி யாடலும் (சிலப்பதிகாரம். 6, 43), குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவாரம். 225, 2).
16.கோட்பறை - செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை.
17.தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.
18.நிசாளம் - ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப். 3, 27, உரை).
19.சூசிகம் - ஒருவகைப் பறை. தகுதியெனக் கூறும் நெறி.
20.தக்கை - அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்கல நிகண்டு); (சிலப்பதிகாரம். 3, 26, உரை.)
21.தடாரி - பம்பையென்னும் பறை. (பிங்கல நிகண்டு)
22.பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம். 3, 27, உரை)
23.தலைப்பறை - யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.
24.படலை - வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)
25.பண்டாரமேளம் - அரச விளம்பரங் குறிக்கும் பறை.
26.பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)
27.முரசம், வெருப்பறை - போர்ப் பறைகள்.
முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநானூறு. 288).
28.பூசற்றண்ணுமை - பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)
29.முருகியம் - குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)
30.வெறியாட்டுப்பறை - குறிஞ்சிநிலப் பறை.
31.வீராணம் - ஒருவகைப் பெரிய பறை.
வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ். 264).
32.பஞ்சமாசத்தம் - சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை.
நன்றி : தன்மானம் கலைக்களம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக