கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

புறநானூற்றில் தமிழர் வரலாறு



புறநானூற்றில் தமிழர் வரலாறு
=========================

கி.மு. 300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதியைச் சங்கக் காலம் என்பர். இக்காலத்தில் தோன்றிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திரு முருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல் வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பதினெட்டு நூல்களும் சங்க இலக்கிய நூல்களாகும். இவைகளில் உள்ள 2381 பாடல்களை 473 புலவர்கள் பாடி உள்ளனர். 102 பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் காணப்படவில்லை. தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய முதன்மைச் சான்றாதாரங்கள் புறநானூற்றில் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் அனைத்தும் இருப்பதாகக் கூறமுடியாது. தமிழர் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான குறிப்புகள் உள்ளன. தொல்பொருள், கருவி, கலம், கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மனித எலும்பு, இலக்கியம், கல்வெட்டு, ஓலைச்சுவடி, நாட் குறிப்பு, பயணிகளின் வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்று ஆவணங்கள், செவிமரபுச் செய்திகள், பழக்க வழக்கங்கள், மொழிநூல் சான்றுகள், நில நூல் சான்றுகள், கடல் நூல் சான்றுகள் ஆகியவைகளை வரலாற்றை எழுதுவதற்குரிய ‘வரலாற்று மூலங்கள்’ என்று கூறுவர். புறநானூற்றில் தமிழர் வரலாற்றை வரைவதற்குரிய வரலாற்று மூலங்கள் காணப்படுகின்றன.

புறநானூற்றில்...

தமிழ் மொழியை ‘வண்டமிழ்’ (தொல்.1336) என்றும் ‘தமிழ் என் கிளவி’ (தொல்.386) என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஒரு நாட்டின் இனத்தை வரையறுப்பதற்கு, எல்லைகளை உடைய நிலம் நிலையான அரசு, மொழி , ஒரு பண்பாடுடைய மக்கள் என்ற நான்கும் அவசிய மானதாகும். இந்நான்கு பண்புகளும் தமிழ் இனத் திற்கு அடையாளமாக அமைந்துள்ளன. தமிழகமே தமிழ் மக்களின் ஆதி தாயகம் என்றும், தமிழர்களே தமிழகத்தின் மூலக்குடிகள் என்றும் மொகஞ் சதாரோ நாகரிகம், திராவிட நாகரிகமே என்றும் கீராசு பாதிரியார் மற்றும் சர் சான் மார்சல் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். புறநானூற்றிலிருந்து, (1) தமிழர் தோன்றிய வரலாறு, (2) அரசியல் வரலாறு, (3) பண்பாட்டு வரலாறு, (4) சமுதாய வரலாறு ஆகியவற்றை அறிந்துக் கொள்ளலாம்.

தமிழர் தோன்றிய வரலாறு.

தமிழர்களின் கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கு புறநானூறு ஓரளவு துணை செய்கிறது எனலாம்.

தமிழர் தோன்றிய இடம் குமரிக்கண்டம் (இலெமூரியா) என்று அறிஞர்கள் கூறுவர். கடல் கோளால் அழிந்து போன இக்குமரிக் கண்டத்திலிருந்தே தமிழர்கள் தோன்றினர் என்று தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். இலெமூர்களிடம் காணப்பட்ட சைவ வழிபாடு, பிணத்தைத் தாழியில் வைத்துப் புதைத்தல், தாய்த்தெய்வ வழிபாடு, தாய்வழி உரிமை போன்ற பழக்க வழக்கங்களின் எச்சங்கள் இன்றும் தமிழர்களிடம் காணப்படுவதால், தமிழர்கள் இலெமூரியாவில் இருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்று கா.அப்பாதுரையார் கருதுகின்றார். குமரிக் கண்டத்திலிருந்து அழிந்து போன பஃறுளி ஆற்றைப் பற்றி, ‘முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி’ (புறம்.9) என்னும் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது. கடல் கோளுக்குப் பிறகு எஞ்சியிருந்த பழம் பாண்டிய நாட்டுப் பகுதியின் இடையே ‘குமரி’ என்னும் நதி ஓடியது என்பதை, ‘தெனாஅ துருகெழு குமரி’ (புறம்.6) என்னும் புறப்பாடல் எடுத்துக் கூறுகிறது. சிலப்பதிகாரத்திலும் (11:20௨1) இச்செய்தி சுட்டப் படுவதைக் காணலாம்.

அரசியல் வரலாறு.

சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றக் தொடங்கியிருந்த காலமாகும். அதனால், புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோருடைய ஆட்சி அதிகாரம் அரசியல் அமைப்பை வழி நடத்திச் செல்வதைக் காண முடிகிறது. மன்னனே உலகின் உயிர் போன்றவன் என்பதை ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ (புறம்.186) என்ற புறப்பாடல் உணர்த்துகிறது.

கரிகாற்சோழனின் முன்னோர் கடல் கடந்து கப்பல் ஓட்டி மீண்டதை புறநானூறு (புறம்.66) கூறுகிறது. பருந்து ஒன்று புறாவை உண்பதற்காகத் துரத்தியது. புறா அடைக்கலமாக செம்பியன் காலடியில் விழுந்தது. அதைக் காக்க பருந்திற்கு தன் தசையை அறுத்துத் தந்தான் என்னும் செய்தியை ‘தன் கைப்புக்க குறுநடைப் புறவின்’ (புறம்.43) என்ற புறப்பாடல் எடுத்துரைக்கிறது. இதன் மூலம் மன்னர்கள் எளிய உயிர்களின் மீது அன்பு கொண்டிருந்த பண்பு புலப்படுத்தப்படுகிறது.

சேர மன்னர்களுள் ‘இந்திரன்’ என்னும் பட்டப் பெயர் கொண்ட ஒருவன் வெளிநாட்டிலிருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் பயிர் செய்தான். அவனுடைய மரபில் வந்த அதிய மான் நெடுமான் அஞ்சியைப் பற்றி ‘அரும்பெறல் மரபின் கரும்பி வட்டத்து’ (புறம்.99) என்ற பாடலும், அவனுடைய மகன் பொகுட் டெழினியைப் பற்றி ‘கரும்பில் வட்டத்தோன் பெரும் பிறங் கடையே’ (புறம்.392) என்ற பாடலும் எடுத்துரைக்கின்றன. பாரி (புறம்.109), எவ்வி (புறம்.24), எயினன் (புறம்.361), பிட்டங் கொற்றன் (புறம்.168), இருங்கோவேள் (புறம்.201), பேகன் (புறம்.141), அதியமான் (புறம்.91,95,99), ஓரி (புறம்.152), குமணன் (புறம்.160), விச்சிக்கோ (புறம்.200) ஆகிய குறுநில மன்னர்களைப் பற்றி புறநானூறு குறிப்பிடுகின்றது.

புறநானூற்றுக் காலத்தில் ஆரிய செல்வாக்கு தலை தூக்கி நின்றது. மன்னர்கள் தமிழர் பண்பாட்டைப் புறக்கணித்து, ஆரியர்களின் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தனர். வேள்வி (யாகம்) செய்வதைப் பெருமையாக மன்னர்கள் கருதினர். அதனால் தான் பாண்டியன் ‘பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பட்டப் பெயரை ஏற்றுக் கொண்டிருந்தான். அதுவும் ஆரிய முனிவர்களைப் போல ‘குடுமி’ வைத்துக் கொள்வதில் மன்னர்கள் பெரு விருப்பம் கொண்டிருந்தனர். இருங்கோவேள் (‘நீயே வடவால் முனிவன்’, புறம்.20), பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி (‘இறைஞ்சுக பெரும நின் சென்னி’, (புறம்: 6), கரிகாற் பெருவளத்தான் (‘பெருவை நுகர்ச்சிப் பெருந்தூண் வேத வேள்வித் தொழின் முடித்து’, (புறம். 224) ஆகியோர் ஆரியத் துறவியர்களின் செல்வாக்கிற்கு அடிமைப்பட்டிருந்ததை புறநானூறு காட்டுகிறது.

“இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே”

(புறம்.252)

என்னும் ஒரே ஒரு புறப்பாடல் மட்டுமே துறவைக் கண்டித்துப் பேசுகிறது.

“வேத கால இலக்கியங்கள் துறவிகளின் பெருமையைப் பேச, சங்க இலக்கியத்தில் ஒன்றான புறநானூறு, வீரனாக இருந்து துறவியாக மாறிய ஒருவனின் துறவு வாழ்க்கையைக் கண்டு வருந்தி, மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டு வனாக இருந்து, பின் துறவியாக மாறிய அவனது நிலைக்கு வருந்திப் பாடுகின்றது”

என்று கூறுவர். மன்னர்கள் ‘வீரம்’ என்ற பெயரில் பிற மன்னர்களோடு அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்தனர். போரில் தோற்ற மன்னனின் மகனை தேர்க்காலில் இட்டுக் கொல்லத் துணியும் (புறம்.46) அளவுக்கு அரசர்கள் இரக்கமற்றவர்களாகவும், போர் வெறியர்களாகவும் இருந்தனர். ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்ற பாடலில் ‘அல்லது’ (தீமை) செய்யாமல் இருக்குமாறு புலவர்கள், மன்னர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு மன்னர்கள் செய்த தீமை அளவு கடந்து காணப்பட்டது.

பண்பாட்டு வரலாறு.

பண்பாடு அல்லது நாகரிகம் என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் போன்றவைகளும் மனிதன் சமுதாய உறுப்பினனாக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்கங்களும் அடங்கியதாகும் என்று டைலர் என்பார் குறிப்பிடுகின்றார். ஒரு சமுதாயத்தின் பண்பாடு என்பது எண்ணப்போக்கு செயல்பாடு, பொருள்களின் பயன்பாடு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுவர். தமிழர்களின் இம்மூன்று பண்பாட்டுக் கூறுகளையும் வெளிப்படுத்தும் போக்கு புறநானூற்றில் காணப்படுகிறது.

கருவிகளின் வளர்ச்சியைக் கொண்டு ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை அளந்து காண்பர். கற்களால் கருவி செய்யப்பட்ட காலம் கற்கால மாகும். அஃதே போல் பொன்னால் பொருட்கள் செய்யப்பட்ட காலத்தைப் பொற்காலம் என்பர். பொன் (புறம்.5,9,116,117,123), வெண்கலம் (புறம்.3, 281), வெள்ளி (புறம்.390) ஆகியவைகளைப் பயன்படுத்திப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர். நெல் (புறம்.331), உப்பு (புறம்.116,60) ஆகியவைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தினர். ‘பருத்திப் பெண்டிர் பனுவலன்ன’ (புறம்.125) என்னும் புறப்பாடல் பருத்தியைக் கொண்டு நூல் நூற்ற செய்தியை விளக்குகிறது. யவனர்கள் கொண்டு வந்த கலத்தில் மது அருந்திய நிகழ்ச்சியை ‘யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்’ (புறம்.56) என்னும் பாடல் சுட்டுகிறது. எனவே தமிழர் பொருள்சார் பண்பாட்டில் (ஆயவநசயைட உரடவரசன) மேலோங்கி இருந்தனர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சமுதாய வரலாறு

‘மலினோவ்ஸ்கி’ போன்றோர் சமூகத்தின் செயல்கள், மக்களின் உணவு,உடை, உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாக கொண்டவை என்று கூறுகின்றனர். இதனை, ‘தேவைக் கோட்பாடு’ என்று அழைத்தனர். ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள சாதி, சமயம், குடும்பம் போன்ற நிறுவனங்களை ஆராய்வது அவசியமானதாகும். ஆரியர்களின் சார்பால் புறநானூற்றுக் காலத்திலேயே சாதி வேறுபாடு தோன்றக் தொடங்கிவிட்டது. ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் ‘வேற்றுமை தெரிந்து நாற் பாலுள்ளும்’ (புறம்.183) என்ற பாடல் நான்கு வகையான சாதி வேறுபாடுகளைக் குறிப்பிடுகிறது. மாங்குடி கிழார் ‘துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை’ (புறம்.334) என்ற பாடலில் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு வகைச் சாதிகள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இதில் ‘சாதி’ என்ற சொல்லைக் கவிஞர் கையாளவில்லை என்றும் ‘குடி’ என்று அவர் கூறியது பழங்குடிகளையே குறிக்கும் என்றும் ந.சுப்பரமண்யன் கூறுகின்றார். ஆனால் இது வலிந்து கூறுவதாகும்.

குடி என்பது சாதிகளையே குறித்து வந்துள்ளது. தேவநேயப் பாவாணரும் ‘இக்கூற்று ஒரு குறிப்பிட்ட இடம் பற்றியது அன்றிப் பொதுபடக் கூறிய தன்று’ என்று கூறுகின்றார். இதுவும் பொருத்த மானதாகத் தெரியவில்லை. ஆரியப் பண்பாட்டுக் கலப்பு நிகழ்ந்த போது தமிழகத்தில் சாதியும் வர்ணமும் தோன்றிவிட்டன. ‘கட்டில் இழிசினன்’ (புறம்.82), ‘துடி எறியும் புலைய, எறிகோல் கொள்ளும் இழிசின’ (புறம்.267) போன்ற புறநானூற்றுத் தொடர்கள் ‘சாதி இழிவு’ குறித்துக் குறிப்பிடுகின்றன. கணவனை இழந்த பெண்கள் நெருப்பில் இட்டுக் கொல்லப்பட்டதை ‘நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே’ (புறம்.246) என்னும் புறப்பாடல் கூறுகிறது. இதில் பெண்ணே விரும்பி நெருப்பில் விழுந்ததாகப் பொய்யுரையைப் புலவர் கூறியுள்ளார். குழந்தைகளை யானையின் காலில் இட்டு கொல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதைப் புறநானூற்றுப் பாடல் (புறம்.46) சுட்டிக்காட்டுகிறது.

புறநானூற்றை மறுவாசிப்புச் செய்து கட்டுடைத்துப் பார்த்தால் ‘தமிழர் வரலாற்றின்’ வன்மை, மென்மைகளைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். கருவி, வாகனம், நெருப்பு, உணவு, அணிகலன், தொழில் போன்ற பொருட் பண்பாட்டில் தலைசிறந்து நின்ற தமிழர்கள், சமுதாயப் பண்பாட்டில் தரம் தாழ்ந்து நிற்கின்றனர். மன்னர்கள் ஆரியப் பண்பாட்டிற்கு அடிமையாகி தலை குனிந்து நின்ற காட்சியைப் புறநானூறு காட்டுகிறது. அரசர்கள் போர் வெறி கொண்டவர்களாக இருந்தனர்; குழந்தைகளைக் கொல்ல முயன்றனர். சாதி வேறுபாடும், தொழில் வேறுபாடும் சமுதாயத்தில் ஊடாடி நின்றன. ‘இழிசினர்’ என்று ஒரு பகுதி மக்கள் இழித்துரைக்கப்பட்டனர். பெண்கள் நெருப்பில் இட்டுக் கொல்லப்பட்டனர். இவைகளெல்லாம் அக்காலத் ‘தமிழர் வரலாறு’ மேன்மைக்குரியதாக இல்லை என்பதையே காட்டு கின்றன. எனினும் மலையமான் மக்களை யானைக் காலில் இட்டுக்கொல்ல, கிள்ளி வளவன் முயன்ற போது, அதனைத் தடுத்து நிறுத்தி, மன்னனுக்கு அறிவுரைக் கூறிய கோவூர் கிழாரின் செயல் போற்றுதலுக்குரியதாகும். அதிகாரத்தை எதிர்க்கும் இவருடைய குரலில் மென்மையும் உள்ளடங்கிய தன்மையும் காணப்படுகிறது. ஆயினும் அதிகாரத்தை எதிர்க்கும் இத்தகைய குரலே தமிழர் வரலாற்றில் மின்னல் கீற்றாய் ஒளி வீசி நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது எனலாம்.

வரலாறு உதவி : தூய தமிழ்ச்சொற்கள்

கருத்துகள் இல்லை: