அமெரிக்க கம்ப்யூட்டர் தேர்வில் தமிழக சிறுவன் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளான். இவனது தந்தை ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை பாலமேடு பகுதியை சேர்ந்தவராவார். இந்த சிறுவன் குறித்த விபரம் வருமாறு:-
மதுரை ஜல்லிக்கட்டு புகழ் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண்குமார் வேலைக்காக அமெரிக்கா சென்றார். தற்போது லாஸ்ஏஞ்சல்சில் உள்ள ஒரு அமெரிக்கன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது 9 வயது மகன் பிரணவ் கல்யாண். அங்கு உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.
3 வயது இருக்கும் போதே கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கினான். இவனது ஆர்வத்தைக் கண்ட கல்யாண்குமார் கம்ப்யூட்டர் பற்றிய பல நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. மற்றும் என்.இ.டி. என்ற ப்ரீ வெப் புரோக்ராம் என்ற தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தேர்வு, ஒருவரின் புத்தி கூர்மை மற்றும் திறனாய்வு ஆகியவற்றை சோதிக்கும் விதமான பகுதிகளை உள்ளடக்கியது.
2 மணி நேரத்துக்கான இந்தத் தேர்வில் 40 முதல் 90 கொள்குறி வகை வினாக்கள், டிராக் அன்ட் டிராப், மற்றும் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. ஏ.எஸ்.பி., மற்றும் என்.இ.டி., ப்ரீ வெப் புரோக்ராமை பயன்படுத்தி, எச்.டி.எம்.எல்., சி.எஸ்.எஸ்., ஜாவா ஸ்கிரீப்ட்டுகளுடன் வெப்சைட்டுகளை உருவாக்குவது தொடர்பான கேள்விகளும் உண்டு.
இந்த தேர்வில் உலக அளவில் சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 9 வயது சிறுவன் பிரணவ் கல்யாண் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பிடித்தான். சாதனை படைத்த அந்தச் சிறுவனைப் பாராட்டி மைக்ரோ சாப்ட் நிறுவனம், அவனுக்கு, உலகின் இளைய சிறப்பு தொழில்நுட்ப வல்லுனர் என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தது.
இதுபற்றி சிறுவன் பிரணவ் கல்யாண் கூறுகையில், என்ஜினீயர் மணிவண்ணன், கணித ஆசிரியை நதியா, சதீஷ், ஜோனாதன் உட்பரி ராஜேஷ் போன்றோர் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்ததால் இந்த சாதனையை செய்ய முடிந்தது என்றான்.
பிரணவின் தந்தை கல்யாண்குமார் கூறுகையில், எனது மகன் 6 வயதிலேயே கம்ப்யூட்டர் புரோக்ராம்கள் எழுத ஆரம்பித்து விட்டான். நான் அவனை மைக்ரோ சாப்ட் சர்டிபிகேட் வாங்க ஊக்குவித்தேன். இந்த இளம் வயதில் உலக அளவில் அவன் சாதித்தது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் ராஜேஷ் கூறுகையில், ஏ.எஸ்.பி., மற்றும் என்.இ.டி. வெப் புரோக்ராம்கள் அமைப்பது பெரியவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் பிரணவ் போன்ற 9 வயது சிறுவனுக்கு இது கடினமே. அவனிடம் உள்ள தனித்திறமையால் இந்த சாதனையை அவனால் செய்ய முடிந்தது என்றார்.
சிறுவன் பிரணவின் தாத்தா மோகன் (70) கூறியதாவது: பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு என்ற பரபரப்புகளுக்கிடையில் எனது பேரனின் இந்த உலக சாதனையை கேள்விப்பட்டு எங்கள் குடும்பமே உற்சாகத்தில் திளைத்திருக்கிறது. நான் மதுரையில் 2 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்துள்ளேன். மதுரை பஸ் நிலையத்தில் கைக்குட்டை விற்றிருக்கிறேன். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு என் பிள்ளைகள் படிக்க உதவினேன்.
எனது 5 பிள்ளைகளில் கல்யாண்குமார் மட்டும் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் அமெரிக்கா சென்றான். இன்று அவளது மகனும் இளம் வயதில் உலக சாதனை படைத்திருப்பது கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
தமிழ்.களம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக