கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 26 ஜனவரி, 2008

நறுக்குகள்

காசியானந்தன் நறுக்குகளே இவை.

வல்லாண்மை
பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருப்பவனை
அணுகுண்டு
வைத்திருப்பவன்!

இயக்கம்
வைக்காதே சிலை
தொழிலாளிக்கு
எங்கும்
செயலற்று
நின்றதில்லை
இவன்
என்றும்!

தாய்
சொன்னாய்
அடிமைப்பட்டதை
தாய்மொழியும்
தாய்நாடும்

சொல் முதலில்
தாய்
அடிமைப்பட்டதை!


போராளி
செத்தவனுக்காக
அழுதவன்
நீ
இவன்
அழுதவனுக்காக
செத்தவன்!

மண்
மண்ணில்
உழவன் வாழ்க்கை
அறுவடைக்கு முன்

உழவன் வாழ்க்கையில்
மண்அறுவடைக்குப்
பின்!


தமிழன்
களத்தில்
இருந்த
வில்
இசைக் கருவியாய்........

வேல்
சாமியாய்.......

குதிரை
விளையாட்டாய்.....

தமிழன்
அடிமையாய்!


தேர்தல்
"ஏழைகளின்
நண்பன்
நான்"
இம்முறையும்
வேட்பாளர்
முழக்கம்
சேரியில்....

என்றென்றும்
நாங்கள்
ஏழையாய்....
அவர்கள்
நண்பராய்...


ஒருமை
சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!


குமுறல்
செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்.....
சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?


நாகஸ்வரம்
கலைஞன்
வாயிலிருந்து
நாகஸ்வரத்தில்
பாய்ந்தது
எச்சில்
நாகஸ்வரத்திலிருந்து
ரசிகன் காதில்
பாய்ந்தது
தேன்!

கருத்துகள் இல்லை: