கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 8 ஜூலை, 2011

திங்கள், 6 ஜூன், 2011

இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கை சாதாரண மக்கள் உபயோகத்தில் தமிழ்மொழியும் எழுத்தும்

சிலகாலத்துக்கு முன்னர் இலங்கையின் தென்மாகாணத்தில் இருக்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராமா (மஹாஹம) என்னும் இடத்தில் நடைபெற்ற தெல்லியல் அகழ்வாய் வொன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டது.

இது பற்றிய விபரம் எதுவும் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், இக்கல்வெட்டுப் பற்றிய குறிப்பொன்றும் வாசிப்பும் படமும் 24ஆம் திகதி யூன் மாதம் 2010ஆம் ஆண்டு (24.06.2010) இந்துப் பத்திரிகையில் கல்வெட்டியல் மூதறிஞரான திரு.ஐதாவரம் மகாதேவன் அவர்களால் வெளிக்கொணரப்பட்டிருந்தன.

திரு.மகாதேவனது குறிப்பின்படி இம்மட்பாண்டத் துண்டை ஆய்வுக்குழியின் அதிஆழமான மண்படையில் இருந்து வெளிக்கொணரந்த ஜேர்மனிய ஆய்வாளர்கள் அதனை கி.மு 200 ஆண்டுக்குரியதாக காலக்கணிப்புச் செய்திருந்தார்கள்.

இம்மட்பாண்டத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தை தமிழ் பிராமி என்றும் வாசகத்தைத் தமிழ் என்றும் இனங்காணும் மகாதேவன், அதனை 'திரளி முறி" என்று வாசித்து 'அவையோரின் எழுதப்பட்ட உடன்படிக்கை" என்று அதற்கு விளக்கம் கொடுக்கிறார்.

இலங்கைத் தீவின் தென்பாகத்தில் உள்ளூர் தமிழ் வணிகர் குழுமமொன்று கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் உள்நாட்டிலும் கடல் கடந்தும் வணிகம் செய்தமைக்கான சான்று இம்மட்பாண்டத்திற் கூடாக வெளிப்படுவதாகக் கூறுகிறார் திரு.மகாதேவன்.

இம்மட்பாண்டம் குறித்த கருத்தையறியும் நோக்குடன் இலங்கையின் கல்வியாளர்கள் சிலர், இதன் தெளிவான படமொன்றையும் யூலை மாதம் 2010ஆம் ஆண்டளவில் இக்கட்டுரையாளருக்கு அனுப்பியிருந்தார்கள்.

கிடைத்த சான்றுகளின்படி, மகாதேவன் அவர்கள் எழுத்துக்களை தமிழ் பிராமி என்று இனங்கண்டிருப்பதும் அவருடைய வாசகமும் மறுக்க முடியாதவை. எனினும், வாசகத்திற்கான விளக்கத்திற்கு மாற்றீடுகள் இருக்கக் கூடிய சாத்தியமுண்டு.


இம்மட்பாண்ட எழுத்துக்கள், படிக்கக் கூடிய தமிழப் பிராமியின் அதனோடு சேர்ந்து பெருங்கற்கால/ ஆதி வரலாற்றுக் காலத்துக்கு உரியதாகிய, படிக்க முடியாத, குறியீட்டு எழுத்துக்களும் இணைந்த கலவையாகும்.

படத்தில் காணப்படுவதன்படி இடமிருந்து வலமாக முதன்மூன்றும் பிராமி எழுத்துக்கள். அடுத்த இரண்டும் குறியீடுகள். தொடர்ந்து வரும் கடைசி எழுத்துக்கள் இரண்டும் பிராமியில் அமைந்துள்ளன. சிறிது தள்ளி, ஒரு நெடுங்கோடு உள்ளது. இது முற்றுப்புள்ளியாக இருக்கலாம்.

மகாதேவன் முதன்மூன்று எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக 'திரளி" என்றும், இறுதி இருவெழுத்துக்களை இடமிருந்து வலமாக 'முறி" என்றும் படித்திருக்கிறார்.

பிற தென்னாசிய எழுத்துக்களைப் போலவே பிராமி எழுத்துக்களும் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக படிக்கப்படுவதே வழமையானது. எனினும், சில சந்தர்ப்பங்களில், வலமிருந்து இடமாக எழுதப்பட்ட பிராமி கல்வெட்டுகளும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அறியப்பட்டிருக்கின்றன.

இம்மட்பாண்டத் துண்டைப் பெறுத்தவரை, படிக்க முடியாத இருகுறியீட்டு எழுத்துக்களை நடுவில் இருத்திப் படிக்கக் கூடிய தமிழ் பிராமி எழுத்துக்கள் ஒருபுறம் வலமிருந்து இடமாகவும் இன்னொரு புறம் இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டுள்ளன.

முழுவாசகத்திலும் மிகவும் இடப்புறமாக இருக்கும் எழுத்து, மிகவும் தெளிவாக தமிழ் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் 'ளி" என்ற எழுத்தாகும். தமிழிலோ சிங்களத்திலோ அல்லது பிராக்கிருதம் சமஸ்கிருதம் போன்றவற்றிலோ எந்தச் சொல்லும் இந்த எழுத்துடன் ஆரம்பிப்பதில்லை. எனவே, முதன்மூன்று எழுத்துக்களை வடமிருந்து இடமாக 'திரளி" என்று மகாதேவன் படித்திருப்பது தற்கபூர்வமானதே. இறுதி இரு எழுத்துகளையும் இடமிருந்து வலமாகவும் பொருள் தருவதாகவும் 'முறி" என்று படித்திருப்பதும் தற்கபூர்வமானதே.

எனினும், 'திரளி முறி" என்ற இவ்வாசகம், 'அவையின் எழுதப்பட்ட உடன்படிக்கை" என்று வணிகக் குழும பின்னனிலில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதுவும், அதை விட இது ஏன் அன்றாட பாவனைக்குரிய ஒரு சாதாரண மட்கலத்தில் காணப்பட வேண்டும் என்பதுமே கேள்விக்குரியவையாகின்றன. வழமையாக, இத்தகைய மட்கல வாசகங்கள் மட்கலத்தின் உரிமையாளரையோ அல்லது அதனது உபயோகத்தையோ குறிப்பிடுவதாகவே இருப்பதுண்டு.
திரளி மற்றும் முறி ஆகிய இரு சொற்களும் திராவிட சொற்பிறப்பியல் அகராதி வரிசைப்படுத்தும் திரள், முறி, முறை ஆகிய சொற்களுடன் தொடர்புடையவை (திராவிட சொற்பிறப்பியல் அகராதி 3245, 5008, 5010, 5015).

'முறி" என்ற சொல்லுக்கு ஆவணம், உடன்படிக்கை போன்ற பொருள்கள் பிற்கால இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. ஆனால் முறை என்ற சொல்லுக்கு பங்கு, அளவு, பாகம் போன்ற பொருள்கள் சங்க இலக்கியந்தொட்டு காணப்படுபவை (நற்றினை 336:6; நெடுநல்வானை 70,177). மேற் கூறிய கருத்துக்களும் பங்கிடுவது, பிரிப்பது என்ற பொருள் தரும் முறி என்ற வினையடியாகவே பிறந்தவை ( திராவிட சொற்பிறப்பியல் அகராதி 5008). பழந்தமிழ் நிகண்டுகளில் முறை என்ற சொல்லுக்கு கூட்டியள்ளப்பட்டது என்ற கருத்தும் உண்டு (பின்கல நிகண்டு 10:953)

சில தமிழ்க் கல்வெட்டுக்களில் 'முறி" என்பது நிலத்தைப் பாகமிடுவது என்ற பொருளிலும் வழங்கப்பட்டிருக்கிறது. சுமகால ஈழத் தமிழில் குறிப்பிடக் கூடிய உதாரணம் மீன்முறி என்ற சொற்பதம். இது, குழம்பில் இருக்கும் ஒரு மீன் துண்டை, அதாவது ஒரு பாகத்தை குறிப்பிடுவதாகும்.

எனவே, இம்மட்பாண்டத்தில் இருக்கும் 'முறி" என்ற சொல் இம்மண்பாண்டத்தை கொத்து போன்ற ஒரு அளவிடும் கருவியாக குறிப்பிடுகிறது என்று கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

திரளி என்ற சொல்லுக்கு திரட்டுவது எனறு பொருள் கொள்ளலாம் ( திராவிட சொற்பிறப்பு அகராதி 3245). திரள் என்ற சொல்லுக்கு குவியல், சோற்றுருண்டை போன்ற கருத்துக்கள் இருப்பதையும் குறிப்பிட வேண்டும். எனவே, திரளிமுறி என்ற சொற்பதம் சோற்றையளந்து பங்கிடும் கருவி என்று பொருள் தரக் கூடியது.

இவ்வாறான வகையில் பொங்கலை தளிசையாக்கி பரிமாறும் முறை கோவில்களில் இருப்பதையும் அதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை தளிகை அல்லது தளிகைக் கிண்ணம் என்று வழங்குவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கடந்த காலத்தில் கோவில்களிலும் பிற இடங்களிலும் ஊழியஞ் செய்வோருக்கு வேதனமாக சோறு இவ்வாறான முறையில் அளவிடப்பட்ட கட்டிகளாகவே வழங்ப்பட்டது. இனறும் தமிழ் நாட்டின் உணவு விடுதிகளில் சோறு இவ்வாறான முறையிலேயே அளந்து பரிமாறப்படுவதையே காணலாம்.

திஸ்ஸமஹாராமையில் கண்டெடுக்கப்கட்ட சிறுவட்டில் வடிவிலான இம்மட்கலம் இவ்வாறான முறையில் சாதாரன மக்களால் பயன்படுத்தப் பட்டிருந்தமைக்கும் அதை அளவு கோலாக குறிப்பிடுவதற்காகவே திரளிமுறி என்ற வாசகம் அதில் எழுதப்பட்டிருந்தது என்று கொள்வதற்கும் இடமுண்டு.

வாசகத்தின் நடுவில் இருக்கும் படிக்க முடியாத குறியீடுகளுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதனை முதலில் வரைந்த பின்னரேயே இருபுறமும் எழுத்துக்களை எழுதியிருக்க வேண்டும். குறியீடுகளுக்கும் எழுதப்பட்டிருக்கும் வாசகத்துக்கும் இருக்கக் கூடிய தொடர்பு என்ன என்பது ஆராயப்படவேண்டியது. ஓலிவடிவ பிராமி எழுத்துக்களில் எழுதிய அதே விடயத்தையே இந்துவெளி எழுத்துக்களைப் போன்ற குறியீட்டு எழுத்துக்களிலும் குறிப்பிட்டிருக்கக் கூடும்.

இவ்வாறான வகையில் குறியீட்டெழுத்துக்கள் ஒரு வரியிலும் பிராமிய எழுத்துக்கள் இன்னுமொரு வரியிலுமான எழுதப்பட்ட முத்திரைக் கல்வெட்டொன்று 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.



இலங்கையில் அம்மாந்தோட்டை மாவட்டத்தில் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துப்பொறித்த வட்டில் வடிவிலான மட்கலத்துண்டம் இடமிருந்து வலமாக முதலாவது எழுத்து ளி. இரண்டாவது ர. மூன்றாவது தி. வலமிருந்து இடமாக இவற்றை திரளி என்றும் படிக்கலாம் நாலாவதும் ஐந்தாவதும் படிக்க முடியாத குறியீடுகள். ஆறாவது எழுத்து மு. ஏழாவது றி. கடைசி இரண்டு எழுத்துகளும் இடமிருந்து வலமாக முறி என்று படிக்கப்படக் கூடியவை. சுற்றுத் தள்ளி ஒரு நெடுங்கோடு உள்ளது. இது முற்றுப் புள்ளியாகலாம். இந்த படமும் வரைபடமும் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினராலும் ஜேர்மனிய ஆயவாளர்களாலும் ஆவணப்படுத்தப் பட்டவை. எனினும், திஸ்ஸமஹாராம அகழ்வாய்வில் உத்தியோகபூர்வ ஆய்வறிக்கையில் இவை வெளியிடப்படவில்லை. இம்மட்கலத்துண்டு, தற்பொழுது எங்கிருக்கிறது என்பது எவருக்கும் தெரியவில்லையென்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன (நன்றி; இலங்கை தொல்லியல் திணைக்களத்திற்கும் இந்த ஆவணத்தை அனுப்பி வைத்த கல்வியாளருக்கும்).
நன்றி.
பொன்னம்பலம்.இரகுபதி
(உரிமை ஆசிரியருக்கு)

சனி, 21 மே, 2011

தராகி - சிவராம்

தமிழிலக்கியத்தில் சிவராமின் ஆளுமையும் தேடலும்

11.08.1959 – 28.04.2005

தென் தமிழீழத்தின் மட்டக்களப்பில் 1959 ஓகஸ்ட் 11ஆம் நாள் அன்று மகேஸ்வரி அம்மாளுக்கும் புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.

சிவராம் குடும்பத்தினர் அக்கரைப்பற்றில் நிலபுலன் மிகக் கொண்டிருந்தவர்கள். தர்மரட்ணம் வன்னியனார் அங்கு மிகச் செல்வாக்காக வாழ்ந்தவர்.

சிவராமுடனான இக்கட்டுரையாளரின் முதல் சந்திப்பு, கொழும்பு Fred E de Silva நாடக அரங்கில், நடைபெற்ற நாடக விழா ஒன்றின் போது, 1989ஆம் டிசம்பர் மாதம் பத்தி எழுத்தாளர் கே.எஸ் சிவகுமாரன் முகதாவில் நிகழ்ந்தது.

சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம் (வன்னியனார்) 1938ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். சிவராம் அவர்கள் தராகி என்ற புனை பெயரில் ஆங்கிலத்தில் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989இல் எழுதினார்.

அவரின் கட்டுரைகள் வெளிவந்த காலத்தில் நீலன் திருச்செல்வம் அவர்கள், இவரால் எப்படி தேர்ந்த ஆங்கிலத்தில் எழுத முடியும். யாரோ எழுதிக் கொடுக்கிறார்கள் போலும் எனக் கூறினாராம். ஆனால் சிவராம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு கற்றுக் கொண்டிருந்த போதுதான் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டு பல்கலைக் கழகத்திலிருந்து விலகியவர் என்பதும், தந்தையார் அந்தக் காலத்திலேயே கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதும், அவரின் வீட்டு நூலகத்தில் இருந்த அளப்பரிய நூல்களை இளமைக் காலத்திலேயே வாசித்து முடித்தவர் என்பதும் இவருக்குத் (நீலன் திருச்செல்வம்) தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிவராமின் அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான அறிவார்ந்த பார்வை, கட்டுரைகள் பற்றி யாவரும் அறிவர். உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தமை பலரும் அறிந்தவை. ஆனால் அவரது தமிழ் இலக்கிய அறிவு, முயற்சிகள், தேடல்கள் பற்றி சிலரே அறிவர். இக்கட்டுரையின் நோக்கமும் அது பற்றிப் பேசுவதே.

மட்டக்களப்பு வாசகர் வட்டமும், ஆனந்தனும் அந்த நாட்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தன. அவற்றிலும் பிரபலம் வாய்ந்தவை மகாவித்துவான் F.X.C நடராஜாவும் சிவசுப்ரமணியமும். அவர்களை மட்டக்களப்பில் ”படிச்சாக்கள்” என்பர்.

நடராஜா அவர்கள் ”மட்டக்களப்பு மாண்மியம்” வரலாற்று நூலின் மீள் தொகுப்புக் காரணகர்த்தா (அதன் முக்கிய பாகங்கள் 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரரின் நெருக்குவாரத்தில் முன்னர் தொகுக்கப்பட்டது)

இக்கால கட்டத்தில் பட்டதாரியும் மட்டக்களப்பு புள்ளி விபரத் திணைக்களத்தில் பதவியிலிருந்தவருமான மகாதேவாவுடன் மேற்கூறிய இருவரும் நடாத்திய தமிழ் மொழி வகுப்புகளுக்கு சிவராம் செல்லத் தொடங்கினார்.

சம்மாந்துறையில் பிறந்த ஆனந்தன், பொதுக் கல்விப் பத்திர உயர்தரத்தில் (Advanced Level) கிருத்தவமும் இஸ்லாமும் படித்த இந்து ஆவார். தமிழ் இலக்கிய இலக்கணத்தில் பாடம் கேட்ட சிவராம், தனது வலராற்று ஆசிரியருக்குக் கொடுத்த பேட்டியில், ”தொன்மத் தமிழில் எனது ஈடுபாடு அதிகமாக அதிகமாக என்னையறியாமல் அது என்னை ஒரு தமிழ்த் தேசியவாதி ஆக்கியது. இங்கே ஒரு அருமையான மொழி எம் வசம் இருக்கிறது என எண்ணினேன். அரசு அதனை பலாத்;காரமாக அழிக்க ஏன் இடம் கொடுப்பான்? ஆழமாக ஆழமாகத் தமிழைக் கற்க விழைந்த போது, மேலும் மேலும் தமிழ்த் தேசியவாதியானேன்.

எப்படியெனில், தமிழ் மொழியின் செழிப்பைக் கண்டு, தமிழ்க் கவிதைகளின் அழகைக் காதலிக்கத் தொடங்கினேன். இலக்கியத் தமிழின் மாணாக்கனான நான், தொன்மைத் தமிழ்ப் பண்பாட்டின் சுவைஞனானேன்.

1980ஆம் ஆண்டளவில் சிவராமும் இலக்கிய நண்பர்களும் பரிசுத்த மைக்கல் பாடசாலையில் தங்கள் பழைய ஆசிரியர்களான வித்துவான் கமலநாதன், எஸ்.பொன்னுத்துரை(எஸ்.பொ), மகாவித்துவான் F.X.C நடராஜா, சிவசுப்ரமணியம் ஆகியோரிடம், அவர்களின் தமிழறிவைத் தங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டி நின்றனர்.


வித்துவான் நடராஜா சென்னையில் அப்பொழுது இருந்த வாசகர் வட்டம் பற்றிப் பிரஸ்தாபித்தரர். அப்பொழுது மட்டக்களப்பு வாசகர் வட்டம் பிறந்தது. அதில் சிவராம், பி.மகாதேவா யாழ் பல்கலைக் கழக பட்டதாரியான தேவகுகன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.

பின்னர் அது 40 உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்தது. அதில் பாலு மகேந்திரா கூட இருந்திருக்கலாம். ஆனந்தன் இணைந்த பின்பே யாப்பு, நிர்வாகக் குழு போன்றவை தோன்றின. சுப்வராமை மட்டக்களப்பு வாசகர் வட்ட தோற்றத்தின் கர்த்தாவாகக் கருதலாம். ஆனந்தன் இக்காலகட்டத்தில் மலையாள மொழியைக் கற்று, அதன் மூலம் பல சிறந்த கதைகள் கட்டுரைகளைப் படித்து, அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பினை வாசக வட்டத்திற்கு வாசிக்கத் தொடங்கினார். கமுன் (Gamon), சார்த்தே (Sarthe), மோப்பசான் (Maupassant) மற்றும் கோர்க்கி (Gorky) ஆகியோரின் ஆக்கங்களின் பரீட்சயம் வாசக வட்டத்தினருக்குக் கிடைத்தது.


இந்தக் காலகட்டங்களில் வாசக வட்டத்தினர் பல நற்காரியங்களை முன்னெடுத்தனர். உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய வகுப்புகளை நடாத்தினர். புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேச்சாளர்களை அழைத்து பேசச் செய்தனர். நாட்டாரியல், நவீன தெற்காசிய திரைப்படங்கள், மலையாள இலக்கியங்கள் பற்றிய கருத்தரங்குகளை நடாத்தினர். இந்தக் கால கட்டத்தில், பரீட்சைக்குத் தோன்றிய சிவராமும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினால் விலகினார்.


உயர் தரப் பரீட்சைக்குப் பின்னர் பல்கலைக் கழகத்திற்கு புகக் காத்திருந்த வேளையில் சிவராம் தமிழ் பற்றிய ஒரு நுட்பமான கட்டுரையை எழுதி, தனது அறிவுலக ஆதர்ச நாயகனாகத் திகழ்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.


அக்கட்டுரை பின்வருமாறு அமைந்திருந்தது:


பழந்தழிலில் உள்ள பெயரெச்சங்களில் காணப்படுகின்ற சொற்புணர்ச்சி முறைத் தொழிற்பாடுகளும், சொற்பொருளியல் கூறுகள் சிலவும் என்று தலைப்பிட்டு, பெயரெச்சங்களின் சொற்பொருள் தனித்தன்மைகள், சங்கத் தமிழ்க் கவிதைகளில் சொல்லிணக்கக் கூறுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதோடு, தொன்மைத் தமிழைக் கற்கும் போது, எழக்கூடிய மொழியியற் புதிர்கள் பற்றி ஆராய்வதற்கு எத்தகைய ஆராய்ச்சி முறைமைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த பிரச்சினைகள் குறித்தும் சிவராம் குறிப்பிட்டுள்ளார்.


இதனை வாசித்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், தமிழ் மொழிப் பேராசிரியர்களே அப்போதுதான் இது குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ள ஒரு விடயத்தைப் பற்றித் தான் முன்பின் தெரியாத இளைஞர் ஒருவர் கட்டுரை எழுதியுள்ளமையை வியந்துள்ளார். தன்னுடன் படியினில் நின்றபடி அக்கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்த பேராசிரியர் கைலாசபதியிடம் அவர் யாரெனக் கேட்டபோது, தம் முன்னைநாள் தமிழ்ப் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் மருகர் என்றிருக்கிறார் அவர். பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது போல தமிழ் இனத்தின் வரலாற்றில் அதீத அக்கறை கொண்டவராக சிவராம் திகழ்ந்தார். அவரின் வாசிப்பும் தேடல் வீச்சும் ஆழமும் அகலமும் மிக்கது.


புறநானூற்றில் தொடங்கி சங்க கால இலக்கியங்கள், தென்னிந்திய சமூக குழுமங்களின் வரலாற்றில் இதுவரை பார்க்கப்படாத வீர, போரியல் மரபினையிட்டு அவர் கவனம் செலுத்தினார். அது பற்றிய ஆய்வில் அவரின் வாழ்க்கை கொடூரமான முறையில் 28.04.2005இல் முடிவுக்கு வரும் வரை ஈடுபட்டிருந்தார்.

சிவத்தம்பி குறிப்பிடுவது போல புதுமைப்பித்தன் வேறொரு தருணத்தில் கூறியவாறு, அவர் ஒரு அழிவற்ற வானத்துத் தாரகை போல இப்பூமியில் வந்துதித்து அதே போலவே மறைந்தார்.

-காசிநாதர் சிவபாலன்

சனி, 14 மே, 2011

சங்கே முழங்கு

நன்றி.மக்கள்

முத்தமிழ் மூத்த இலக்கியம்'சிலம்பு அதிகாரம்'
புலியூர் கேசிகன் அவர்களின் உரையில் இளங்கோவடிகளின் மூல காப்பியத்தை ஓடியோடி ஐந்து மாதங்கள் பாடியும் படித்தும் மகிழ்ந்தேன். ஓடியோடி எப்படி படிப்பது? பேரூர்தியை ஓட்டுனர் செலுத்திக் கொண்டிருக்க யான் இருக்கையில் இருந்து கொண்டு சிலப்பதிகாரத்துக்குள் மனதை ஓடவிட்டேன். மனம் சிலம்பைச் சுற்றியது பேரூர்தி நகரைச்சுற்றியது. சிலம்பில் பல செய்திகள் உள்ளன அதை யானும் பகிர்ந்து கொள்கிறேன்.

"எனது பெயர் கண்ணகி. யான் பூம்புகார் நகரில் ஒரு வணிகனுக்கு மகளாகப் பிறந்தேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு இருக்கும். எனக்குத் தந்தையானவர், யான் பூப்படைந்ததும் என்னை அவரின் நண்பர் மகனான கோவனுக்குகட்டிக் கொடுத்தார். இரு வீட்டார் விருப்போடும் திருமணம் இனிதே நடந்தேறியது.அப்போழ்து அவருக்கு (கோவனுக்கு) அகவை பதினாறு. அவர் துடிப்புள்ள இளைஞன். அது மட்டுமல்ல யானையோடும் சண்டை செய்து வெல்லக்கூடிய வீரன். அவரை சிறு அகவையிலிருந்து காதலித்து வந்ததால் அவர் செய்யும் சிறு குற்றங்களைக் பொறுத்திருக்கிறேன். வணிகத்துறையில் கைதேர்ந்தவர். அவருக்கு ஈடாய் பூம்புகாரில் யாருமில்லை. இது புகழ்ச்சியன்று உண்மை.பல நாடுகளுக்கும் சென்று வணிகத்தில் ஈடுபட்டு மீண்டும் நாடு திரும்புவார். சோழனின் நம்பிக்கைக்கு ஏற்றவராய் சோழநாட்டை மேம்படுத்தியவர் என் கண்ணாளர் கோவலன்."

ஞாயிறு, 1 மே, 2011

செந்தமிழ் நானென்னும் போதினிலே


புறம்பு நூறு


புறநானூறு, பொங்கிவரும் வீரத்தின் புனலாறு; செங்கழல் அணிந்த வேந்தர்களின் செந்தழல் சீற்றம் குருதியாக அப்புனலாற்றில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெகுளியின் வெப்ப ஊற்றுப் பெருக்கில் விளைந்த பாடல்கள் அவை. இரும்பின் சுவை கண்ட வஞ்சினமிக்க வீரர்கள் புகுந்து விளையாடிய போர்களப் பாடல்கள் புறநானூற்றில் பதிவாகியுள்ளன; ஆழ்ந்தகன்ற அறிவுடன் கூடிய செறிவுமிக்க அறப்பாடல்களும் வாழ்க்கைக்கு விதியாகியுள்ளன. மொத்தத்தில் பண்டைத் தமிழர் வரலாற்று ஆவணம் இந்நூல்._(முனைவர் இராம குருநாதன்)

ஆம், முனைவர் இராம. குருநாதன் அவர்களின் புறநானூறு ஒரு புதிய பார்வை அருமையான கையேடு. புறப்பாடல்களை பாட விரும்புவோர் ஐயாவின் இந்தக் கையேட்டை வைத்திருப்பது சிறந்தது. அக்குவேறு ஆணிவேறாய் ஒவ்வொரு பாடலையும் ஆய்ந்து எழுதியிருக்கும் குறிப்பு ஒவ்வொன்றையும் தமிழர் அறிந்திருக்க வேண்டும். இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகால மக்களின் வரலாற்றில் நிகழ்ந்துள்ள நன்மை தீமைகளை அறிய இந்நூல் உதவுகிறது. ஒவ்வொரு தமிழரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய அரிய நூல். நன்றியன் ச.உதயன்.

இயல் - புறநானூறு

பாடியவர்: கணியன் பூங்குன்றன்

திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி


யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(192)

**
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ;

வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(192)


உற்றுணந்தது:

உலகத்து ஊர்களிலே உலகத்தார் அனைவரும் உறவுகளே அவ்வுறவுகளோடு கூடி வாழ்கையில்,
தீமையும் நன்மையும் பிறர்தருவதில்லை; நோவதும் அந்நோயிலிருந்து நீங்குவதும் முன்பு கூறியது போன்றதே;சாதலும் புதியதன்று; வாழ்தல் இனிது என்று மகிழ்தலும் இல்லையே;சினந்து இவ்வுலகம் நிலையில்லாதது என்பதும் இல்லைவேயில்லை;

மின்னல் வானம் இடைவிடாது நீரை வார்க்கத் தலைப்பட்டது; அந்நீர் கற்களிலே அடிபட்டு அடிபட்டு ஒலித்துக்கொண்டு வலிமையான பெரிய ஆறாய் ஓட; அந்நீரில் பயணிக்கும் ஒற்றை துடுப்புடைய புணை(தெப்பம்,பரிசில்)அவ்வழியே செல்லும்; அதுபோல் அருமையான இந்த உயிரைக் கொண்ட வாழ்வும் தலைப்பட்டது என்று திறனுடையோர் கண்டு தெளிந்தனர். ஆதலின், பெருமையாய் பெரியோரென்று புகழ்தலும் இல்லை அதனினும் சிறியோரென்று இகழ்தலும் இல்லையே.

"பட்டது தான் வாழ்க்கை;படுவது தான் யாக்கை"_கிருஸ்ணன் பாலா
"கையில் நூலைப் பிடித்துக்கொண்டு நூல்கட்டையை ஓடவிடும் போழ்து நூலிருக்கும் வரைதான் கட்டை ஓடும் என்பது சித்தாந்தம்"
பதிவர்: _ச.உதயன்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

வீணைக் கொடியுடைய வேந்தனே Veenai Kodiyudaiya






எஞ்சா மரபின் வஞ்சி!
இயல் - புறநானூறு
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண் . துறை: இயன்மொழி.

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,
கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல,
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,

இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.(378)

சனி, 26 மார்ச், 2011

தமிழர் சொல்லும் வகை

அசைத்தல் - அசையழுத்தத்துடன் சொல்லுதல்.அசையழுத்தம்.
அறைதல் - அடித்து (வன்மையாய் மறுத்து)ச் சொல்லுதல்
இசைத்தல் - ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்
இயம்புதல் - இசைக்கருவி யியக்கிச் சொல்லுதல்
உரைத்தல் - அருஞ்சொற்கு அல்லது செய்யுட்குப் பொருள் சொல்லுதல்
உளறுதல் - ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்
என்னுதல் - என்று சொல்லுதல்
ஓதுதல் - காதிற்குள் மெல்லச் சொல்லுதல்
கத்துதல் - குரலெழுப்பிச் சொல்லுதல்
கரைதல் - அழைத்துச் சொல்லுதல்
கழறுதல் - கடிந்து சொல்லுதல்
கிளத்தல் - இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்
கிளத்துதல் - குடும்ப வரலாறு சொல்லுதல்
குயிலுதல்,குயிற்று - குயில்போல் இன்குரலிற் சொல்லுதல்
குழறுதல் - நாத் தளர்ந்து சொல்லுதல்
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல் - பலரறியச் சொல்லுதல்
செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்
நவிலுதல் - நவினால் ஒலித்துப் பயிலுதல்
நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
நுவலுதல் - நூலின் நுண்பொருள் சொல்லுதல்
நொடித்தல் - கதை சொல்லுதல்
பகர்தல் - பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்
பறைதல் - மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்
பன்னுதல் - நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்
பனுவுதல் - செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்
புகலுதல் - விரும்பிச் சொல்லுதல்
புலம்புதல் - தனக்குத் தானே சொல்லுதல்
பேசுதல் - ஒரு மொழியிற் சொல்லுதல்
பொழிதல் - இடை விடாது சொல்லுதல்
மறுதல் - உரையாட்டில் மாறிச் சொல்லுதல்
மிழற்றுதல் - மழலை போல் இனிமையாய்ச் சொல்லுதல்
மொழிதல் - சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல்
வலத்தல் - கேட்போர் மனத்தை பிணிகச் சொல்லுதல்
விடுதல் - மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்
விதத்தல் - சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல்
விள்ளுதல் - வெளிவிட்டுச் சொல்லுதுதல்
விளத்துதல் - (விவரித்துச்) சொல்லுதல்
விளம்புதல் - ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்

செவ்வாய், 22 மார்ச், 2011

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

1. நாகரிகம் என்னும் சொல்விளக்கம்

நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர் + அகம் = நகரகம். நகரகம் - நகரிகம் - நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதன்முதல் நகரப் பெயரினின்று நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர்கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும், நாகரிகமில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக்காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க. நகரப்பதி வாழ்நர் என்னும் சொல் நாகரிகமுள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக.

ஆங்கிலத்திலும், நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீன் சொல் நகர்ப் பெயரினின்று தோன்றியதே.L.civitas, city or city - civis citizen, L. civilis - E.civil - civilize

நகரங்கள் முதன்முதல் தோன்றியது உழவுத்தொழிற்குச் சிறந்த மருதநிலத்திலேயே. உழவுத்தொழிலும் நிலையான குடியிருப்பும் ஊர்ப்பெருக்கமும் நாகரிகம் தோன்றுவதற்குப் பெரிதும் துணைசெய்தன. உழவுத் தொழிலால் வேளாண்மையும், பதினெண் பக்கத் தொழில்களும், பிறதொழில் செய்வார்க்கும் போதியவுணவும், வாணிகமும் ஏற்பட்டன. நிலையாகக் குடியிருப்பதனால் உழவன் குடியானவன் என்னைப் பெற்றான். இல்வாழ்வான் என்று திருவள்ளுவராற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றவனும் உழவனே. இல்வாழ்வானைக் குறிக்கும் என்னும் பழ நார்வேயச் சொல்லினின்றும் உழு அல்லது பயிர்செய் என்று முன்பு பொருள்பட்ட என்னும் பெயர்ச் சொல்லும், உழவுத்தொழிலைக் குறிக்கும் என்னும் தொழிற்பெயரும், ஆங்கிலத்தில் தோன்றியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது.நிலையான குடியிருப்பால் ஒழுக்கப் பொறுப்பும் , ஊர்ப் பெருக்கமும் ஆட்சியமைப்பும் ஏற்பட்டன. இதனால், மருதநிலமும் உழவுத் தொழிலும் எங்ஙனம் நாகரிகத்தைத் தோற்றுவித்தன என்பது தெளிவாகும்.


நகர் என்னும் சொல், முதன்முதல், ஒரு வளமனையை அல்லது மாளிகையையே குறித்தது.

நகர் = 1.வளமனை
"கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்"
(புறம் 70)

2. மாளிகை.
"பாழி யன்ன கடியுடை வியனகர்"
(அகம்.15)

மாளிகை அரசனுக்கே சிறப்பாக வுரியதாதலால், நகர் என்னும் சொல் அரண்மனையையும் அரசன் மனை போன்ற இறைவன் கோயிலையும் பின்பு குறிக்கலாயிற்று.

நகர் = 1.அரண்மனை

"முரைசுகெழு செல்வர் நகர்"
(புறம்127)

"நிதிதுஞ்சு வியனகர்"
(சிலப்.27:200)

"முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே"
(புறம்.6)

"உத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடி"
(திருவாச.16:3)

என்பதால், கோயிலுக்கும் மாளிகைப் பெயருண்மை அறியலாம்.

சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெரும் மண்டபம் மாளிகை போன்றிருத்தலால், திருத்தக்கதேவர் நகர் என்னும் சொல்லை மண்டபம் என்னும் பொருளில் ஆன்டார்.
"அணிநகர் முன்னி .னானே"

நகர் என்னும் சொல் மனையைக் குறித்தலாலேயே மனை, இல்,குடி என்னும் சொற்கள் போல் இடவாகு பெயராய் மனைவியையும் குறிக்கலாயிற்று.

நகர் = மனைவி

"வருவிருந் தோம்பித் தன்னகர் விழையக் கூடி" (கலித்.8)

சிறந்த ஓவிய வேலைப்பாடமைந்த சிப்பிச் சுண்ணாம்புச் சாந்தினால் தீற்றப்பெற்று வெள்ளையடிக்கப்பட்ட கரைச்சுவர்க் கட்டடம், மண்சுவர்க் கூரை வீட்டோடு ஒப்பு நோக்கும்போது, மிக விளங்கித் தோன்றலால், மாளிகை நகர் என்னப்பட்டது. நகுதல் விளங்குதல் நகு - நகல் - நகர். வெண்பல்லையும் பொன்மணியணி கலத்தையும் முகமலர்ச்சியாகிய சிரிப்பையும் உணர்த்தும். நகை என்னும் சொல்லை நோக்குக.
நகு - நகை.

ஆசான்: தேவநேயப் பாவாணர்
கருவி: முன்னுரையிலிருந்து
நூல்: பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்
தொடரும்................

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

சீனத்துப் புறம்

ஆடையும் அணியும் அழகுற விருந்தும்
அவற்றை நீதான் அணிதற்கில்லை
தேரு மாவும் கொண்டனை எனினும்
ஏறி வூர்வலம் வருதற் கில்லை
இறப்பினி யதற்குள் இடைப்படின் அவற்றைப்
பிறனொரு வேந்தன் பெறுவா னறிக !

மயனமை முன்றிலும் மணிமண் டபங்களும்
பயன்படுத் தாமலே பளிச்சென் றிருக்கும்
ஒலிதரு மணியும் உரத்தெழு பறையும்
ஓசையெழுப் பாமலே உறங்கிக் கிடக்கும்
இறப்பினி யதற்குள் இடைப்படின் அவற்றை
பிறனொரு வெந்தன் பெறுவா னறிக !

களிக்கும் கள்ளும் கடிசுவை யுணவும்
அளிக்கும் சுகத்தொடு யாழினை மீட்டிக்
கடிதே செல்லும் காலந் தன்னை
நெடிதா யாக்கி நிறைவு கொள்வாய்
இல்லெனின் எவனோ எளிதாய் அவற்ரை
வெல்வான் என்படை விரைந்துநீ அறிகவே !

போரே வாழ்வெனவிருந்த சீனநாட்டு மன்னனுக்கு அந்நாட்டுப் புலவன் கூறிய அறிவுரைகள்.
மொழிப்பெயர்ப்பு முனைவர் இராம.குருநாதன்.
நூல்:புறநானூறு ஒரு புதிய பார்வை

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தமிழர்களின் கணக்கு - ஒரு அலசல்

தமக்கென்றோர் ஆண்டுக் கணக்கீட்டினைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிய போதும், கணக்கியலில் தமிழர் என்றுமே சளைத்தவராக இருந்ததில்லை. நானறிந்தவரை தமிழர்களின் பல்வேறு கணக்கீட்டு முறைகளை

எடுத்துரைக்கும் பழம்பாடல்களை இங்கிட்டிருக்கிறேன். தவறுகள் ஏதேனும் இருப்பின் அது எடுத்துரைத்த என்னுடைய குற்றமே அன்றி, தமிழ்ச் செய்யுள்களின் குற்றமன்று. இவற்றில் வரும் பல கணக்கீட்டு முறைகளின் விளக்கங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தெரிந்த விளக்கங்களைப் பாடல்களின் கீழேயே இட்டிருக்கிறேன். ஆயினும் இதை என் தளத்தில் இடாததற்குக் காரணம் சரிபார்க்கப்படாத பல விவரங்களே!

மேலும் நானொரு கணித வல்லுனன் அல்ல; எனவே அவ்விதம் தமிழ், கணிதம் இரண்டிலுமே ஆர்வம் இருப்பவர்கள் இவ்வாராய்ச்சியில் அதிகம் உதவக் கூடும்.

எண்ணறிதல்:

(1)

இம்மிதானீ ரைந்தரை யெனவே வைத்திதனைச்

செம்மைதரும் கீழ்முந் திரைசெய்து - பின்னையவை

மூன்றுபடி பத்திரட்டி முந்திரையே யொன்றென்றார்

ஆன்ற வறிவி னவர்.

(அளவீடுகளின் பெயர்கள் இம்மி, கீழ்முந்திரை, மேல்முந்திரை, ஆனால் அவற்றின் தொடர்புகளை அறிய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்த, சரிபார்க்கப் படாத விவரங்கள்: 1 முந்திரை= 1 / 320, ஒரு கீழ்முந்திரை= 1 / 102400, ஒரு இம்மி = 1/ 2150400 )

(2)

முந்திரைய ரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய்

வந்ததோர் காணிநான் மாவாக்கிச் - சிந்தித்து

நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதனை

நாலாக்கி ஒன்றாக நாட்டு.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: முந்திரை, காணி, அரை, அரைக்காணி, கால், நான்மா, ஒன்று. நான் அறிந்த சரிபார்த்த விவரங்கள்: ஒன்று=1, அரை=1/2, கால்=1/4; சரிபாராத விவரங்கள்: நான்மா=1/5, காணி=1/80, அரைக்காணி=1/160)

நிலவளம் அறிதல்:

(1)

உற்றசீர்பூமி யதனிளொளி பவளங்

கொற்றவேற் கண்ணாய் குவளையெழும் - மற்றை

இடைநிலத்து வேல்துராய் என்றி வைகளாகும்

கடைநிலத்து வெண்மையுவர் காண்.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: பவளம், வேல், குவளை, துராய், வெண்மையுவர் நிலம்; சரிபாராத விவரங்கள்: (1) உத்தம நிலம்: குவளை, சடை, காந்தை, காவேடு, காவேளை, பவளக்கொடி, புல், செற்றுப்பயிர். (2) மத்யம நிலம்: செருப்படை, துராய், கண்டங்கத்திரி, வேல், அறுகு, சாமை, கேழ்வரகு. (3) அதம நிலம்: ஓடு,

தலை, பொரி, விரை, துடைப்பம், வெண்ணுவர்நிலம், பருத்திக்குமாம்.

நுட்பம் அறிதல்:

(1)

சின்னம்பத் தேமுக்காற் செப்புந் தொகைநுண்மை

நுண்மையில் மூன்று நுவலிம்மி - யிம்மி

இருபத் தரையொன்றாங் கீழாக வேதான்

வருகுமுந் திரையெனவே வாட்டு.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: சின்னம், நுண்மை, இம்மி, முந்திரை, கீழ், பத்து, முக்கால், மூன்று, இருபத்தரை, முந்திரை)

கழஞ்சு வருமாறு:

(1)

ஒன்று மிரண்டாம் பிளவுமிரண் டாங்குன்றி

குன்றிய மஞ்சாடியைத் தாகும் - என்று

ஒருநா லொன்றா குமென்றோ துவாரெங்கள்

திருமாதே தேனே தெளி.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்:ஒன்று, இரண்டு, பிளவு, குன்றி, மஞ்சாடி. சரிபாராத விவரங்கள்:

ஒருதனி நெல் எடை=வீசம், 4 நெல் எடை= 1 குன்றி, 2 வீசம் = 1 பிளவு, 2பிளவு=1 குன்றி, 2குன்றி=1மஞ்சாடி,

5மஞ்சாடி= 1/4 கழஞ்சு, 4 கால்கழஞ்சு=1 கழஞ்சு)

எடையறிதல்:

(1)

கண்டகழஞ் சீரிரண்டு கைசாக்கை சாநாலு

கொண்ட பலநூறு கூறுநிறை - கண்ட

இரண்டு துலாமுப்ப தோடிரண்டாம் பாரம்

திரண்ட விளமுலையாய் செப்பு.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: கழஞ்சு, கைசா, பலம், நிறை, துலாம், பாரம். சரிபாராத விவரங்கள்: 2கழஞ்சு= 1கைசா, 4கைசா= 1பலம், 100பலம்= 1 நிறை, 2நிறை= 1துலாம், 22துலாம்= 1 பாரம்)

தமிழன்பர்கள் மேலதிக விவரங்கள் இருப்பின் அறியத்தர வேண்டுகிறேன். இன்னும் ஆழ இதனைப் பற்றி ஆராயலாம்.

_பாவலர் இராஜ. தியாகராஜன்.

தொடரும்...............

திங்கள், 17 ஜனவரி, 2011

குறுந்தொகைச் செல்வம்

முனைவர் உயர்திரு. மு.வரதராசன் அவர்கள் தொகுத்து வைத்த குறுந்தொகைச்செல்வம் அருமையான சொல்லோவியம். இளகிய தென்றல். குறுந்தொகைப் பாடல்களிலிருந்து தமக்குப் பிடித்த பாக்களை எல்லோரும் விரும்பி வண்ணம் உரைகளுடன் தொகுத்துள்ளார். தம் நீண்ட முன்னுரையிலே மிகத் தெளிவாய் எல்லோருக்கும் விளங்கும் வகையில் உரையைக் கட்டியுள்ளார்கள். நீலம் படர்ந்த ஆழியிலே அசைந்து செல்லும் படகைப்போல். 'குறுந்தொகைச்செல்வம்' எனும் நூல்.

குறுந்தொகையை பாடும் போழ்து எனக்குள் தோன்றிய சிறுதொகை

ஆழியிலே ஆடுகின்ற பாடகு போலே
அந்தரத்தில் ஆடுகின்ற வாழ்வு தனைஇ
பாடுபொருள் ஊடு தமிழ்கட்டி வைத்த
பாங்குடை நூலெனிலோ குறுந்தொகை யேஆம்.


அந்நூலில் யானுணர்ந்த பாட்டுகளை பதிவு செய்ய விழைகிறேன்.

*புதுமை யுணர்தல்

காட்சி:௧

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முள்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே!


_(அள்ளூர் நன்முல்லையார். குறுந்.202)

"நோகின்ற என் நெஞ்சே நோகின்ற என் நெஞ்சே
வளம் குறைந்த நிலத்தில் நெருங்கி வளரும்
சிறுசிறு இலைகளைக் கொண்ட
கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் அழகினையுடைய
மலர்களைக் கொண்ட நெருஞ்சி பின்
முட்களைக்கொட்டி வைப்பது போன்று
அன்பைத் தந்து கனவுத் தந்து
அருகிலிருந்து இன்பமூட்டிய
காதலுறவு
பின்பு,
அவராலேயே துன்பத்துக்கு
கரணியமானதென்று நோகிறாயே என் நெஞ்சே"

காட்சி:௨

கான மஞ்ஞை அறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரோடு ஒராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே



_கபிலர்,குறுந்.38.

காட்டு மயில் பாறையிடுக்கில் இட்ட முட்டையை வெய்யிலில் விளையாடிக் கொண்டிருக்கும் கருங்குரங்கின் குருளை (குட்டி) அறியாது உருட்டுவது போன்று;காதலியான மனைவி கண்ணீர் விட்டு நொந்திருக்க அவள் துன்பத்தை உணராது உள்ளானே.அவனும் அறிந்து செய்ய வில்லை அறியாமலே செய்கிறான் என்பதனை உணத்துகிறார் புலவர்

காட்சி:௩

கண்தர வந்த காம ஒள்ளெரி
என்புற நலியினும் அவரோடு பேணிச்
சென்றுநாம் முயங்கற்கு அருங்காட் சியமே
வந்தஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திட களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது
களைவோர் இலையான் உற்ற நோயே


_குப்பைக் கோழியார்,குறுந்.305.

உரிமைப்போரில் சண்டையிடும் கோழிகள் வெற்றி கொள்வதற்காக உயிர் நீங்கும் வரை சண்டையிட்டுக்கொண்டே இருக்கும்;அதே போன்று வீட்டில் அடைபட்டு இருக்கும் காதல் கொண்ட பெண் தன் காதலன் மீட்டுக்கொண்டு செல்லும் வரை உயிர் நீங்கிலாலன்றி தன் நிலையிலிருந்து பின்வாங்காள் என்பதனைப் புலவர் கூறும் வகைதான் என்னே!


*பிறருள்ளம் உணர்தல்

காட்சி:௧

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே


_குறுந்.3.தேவகுலத்தார்.

தோழி:) "என்னடி தோழி(தலைவி)? உன்னை விட்டுப்பிரிந்த கண்ணாளன் தம் வேலை முடித்துத் திரும்பவில்லை. கூடா நட்பினால் உன்னை மறந்து விட்டாரோ. வருவதற்கு மனமின்றி வேறூரில் நிரந்தரமாக தங்கிவிட்டாரோ"?

தலைவி:) "எங்கள் காதலையறிந்த நீயுமா, அவரைப் பற்றி தவறாக கருதுகிறாய்.அவர் என்மீது வைத்துள்ள அன்பும் நேசமும் அளவற்றது;அது போல் நான் அவரை................................"( எண்ணிய போது),

அவள் நெஞ்சத்தில் பெரிய நிலவுலகம் உவமையாக நின்றது. அந்த உறவின் உயர்வை நினைத்தபோது வானம் தோன்றியது. அளத்தற்கரிய பெற்றியை நினைத்த போழ்து கடல்நீர் தோன்றியது. அவன் வாழும் மலையை நினைத்த பொழுது அவள் உள்ளம் பெருமிதம் எய்தியது. அந்த மலையில் இழைக்கப்படும் தேன் பெருந்தேனாக, அவற்றைத் தந்த மலர்கள் உயர்ந்த குறிஞ்சி மலர்களாக, அவளுடைய நினைவெல்லாம் சிறந்து விளங்கியது. கற்பு வழிபட்ட ஒரு பெண்ணின் உரமான நம்பிக்கையைப் புலவர் தேவகுலத்தார் கூறும் வகையை உணர்ந்தவரே அறிவர்.

காட்சி:௨

சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்து
எல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும்
பெரும்புலர் விடியலும் மாலை
பகலும் மாலை துணையி லோர்க்கே


_மிளைப்பெருங்கந்தன்.குறுந்.234.

சேப்ப - சிவக்க, படர் - துன்பம், கூர்ந்து - மிகுந்து,எல் அறு - ஒளிஅற்ற, நகர் - வீடு.

தோழி :) தோழி உன் துணைவர் இன்னும் வீடுதிரும்பாத கரணியத்தால்
மாலைப் பொழுதில் மனம் நோவாயென்றே உனக்குத் துணையாக வந்தேனடி.

தலைவி:) அப்படியா? நீ வந்ததில் மகிழ்கிறேன். ஆனாலும் கேளடி தோழி

"கதிரவன் மேற்கே மறைய அந்திவானம் சிவக்க ஒளி மயங்கும் ஒரு பொழுதைக் கண்டு,அப்போது முல்லை மலர்வதையும் கண்டு,அதுதான் மாலைக் காலம் என்று பலரும் கூறுகின்றனர்.அவர்கள் அனைவரும் அறிவு மயங்கியவரே, அது மட்டும் மாலைப்பொழுது அன்று;வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வருந்தும் என்போன்றவர்க்கு எல்லாம் மாலைக்காலமே. கோழி கூவும் விடியற்காலையும் மாலைக் காலமே;பகற்பொழுதும் மாலைக் காலமே" என்றாள். ஒரு பெண்ணின் மனதை கூறிய ஆண் புலவரின் திறந்தான் சிறப்பு.


*சொல்லும் திறன்

காட்சி :௧

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்ககத்துப் பாய்ந்து.உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்தும் யாமே.


_குறுந்.69. கடுந்தோட்கரவீரன்.

"கரிய கண்களையுடைய வலிய ஆண்குரங்கு இறந்துவிட, விதவை வாழ்விலிருந்து உய்ய முடியாத அழகிய பெண்குரங்கு அறிவற்ற தன் குட்டியைச் சுற்றத்திடம் சேர்த்துவிட்டு, உயர்ந்த மலைப்பகுதியில் ஏறிக் கீழே பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளும்"
என்று தன் தலைவியின் இடரை உவமையாற் அவள் தம் காதலனுக்குச் சொல்லும் சொற்றிரம் தான் என்னே!

யாரால்: தோழியால்

யாருக்கு : தலைவனுக்கு (தன் தலைவியின் காதலனுக்கு)

எவ்வேளை: தலைவியின் காதலனாகிய தலைவனுக்குச் சொன்னது அதாவது தலைவியைக் காணவரும் பாதையோ காட்டுவழியில் அமைந்ததால் அவனுக்கு இடர் நேர்து விடுமோ என தலைவி அஞ்சியதால் தோழியால் கூறப்பட்டுள்ளது.


*காதல் தந்த ஆற்றல்
*ஏமாற்றம்
*பாலையிலும் அன்பு
*துன்பத்திற்குத் துணை
*குடும்பப் பண்பாடு
*உணர்வோவியம்

*பழக்கவழக்கங்கள்

இவன்இவள் ஐம்பால் பற்றவும் இவள்இவன்
புன்தலை ஓரி வாங்கினள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
ஏதில் சிறுசெரு உறுப மன்னோ;
நல்லை மன்ற பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணையல் அன்னைவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே

(குறுந்,229.மோதாசனார்)

சில சொற்குறிப்புகள்
ஐம்பால் - மகளிர் கூந்தல், ஓரி - ஆண்தலைமயிர், வாங்கினாள் - வாங்கி - இழுத்து, தவிர்ப்ப - விலக்க, ஏதுஇல் - காரணியமற்ற, செரு - சண்டை, மன்ற - திண்ணமாக, பால் - ஊழ், துணை - இரட்டை, பிணையல் - மாலை.

எனதுரை: காரணியமற்று(காரணமற்று) இருவரும் அதாவது இவனும் இவளும் ஒருவரை ஒருவர் தலைமயிரை இழுத்து சண்டைசெய்கின்றனர். இவர்களை வளர்த்தவர்கள்(செவிலியர்) மறிக்கவும் விட்டுக்கொடாது சண்டைசெய்தவர்கள் பின்னாளில் தாம் துணையாகி புரிந்துணர்வோடு உறுதியாக இணைந்து வாழும் வாழ்வு, ஊழ்வினையால்(விதியால்)
அமைந்ததன்றோ!



*குறிக்கோள்
*கேளாத பேச்சு
*பறவை விலங்குகளின் வாழ்க்கை
*கற்பனைக் குறிப்பு
*உவமைத் திறன்

இன்னும் தொடரும்.........
வலைப்பதிவர்
ச.உதயன்.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

தைப்பொங்கல்


வள்ளுவராண்டு சுறவம் ௨ய௪௨ (2042)
இவ்வாண்டிலிருந்து படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும் பதிவாகவே அமைகின்றது. பேராளர்களால் எழுதி வைத்த இலக்கியங்கள் பேசும் தளமாக மாறுகிறது 'பதிவேடு'.பார்ப்போருக்கு நல்ல பொங்கலாக அமையும் என்றே நம்புகிறோம்.