கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 22 மார்ச், 2011

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

1. நாகரிகம் என்னும் சொல்விளக்கம்

நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர் + அகம் = நகரகம். நகரகம் - நகரிகம் - நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதன்முதல் நகரப் பெயரினின்று நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர்கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும், நாகரிகமில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக்காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க. நகரப்பதி வாழ்நர் என்னும் சொல் நாகரிகமுள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக.

ஆங்கிலத்திலும், நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீன் சொல் நகர்ப் பெயரினின்று தோன்றியதே.L.civitas, city or city - civis citizen, L. civilis - E.civil - civilize

நகரங்கள் முதன்முதல் தோன்றியது உழவுத்தொழிற்குச் சிறந்த மருதநிலத்திலேயே. உழவுத்தொழிலும் நிலையான குடியிருப்பும் ஊர்ப்பெருக்கமும் நாகரிகம் தோன்றுவதற்குப் பெரிதும் துணைசெய்தன. உழவுத் தொழிலால் வேளாண்மையும், பதினெண் பக்கத் தொழில்களும், பிறதொழில் செய்வார்க்கும் போதியவுணவும், வாணிகமும் ஏற்பட்டன. நிலையாகக் குடியிருப்பதனால் உழவன் குடியானவன் என்னைப் பெற்றான். இல்வாழ்வான் என்று திருவள்ளுவராற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றவனும் உழவனே. இல்வாழ்வானைக் குறிக்கும் என்னும் பழ நார்வேயச் சொல்லினின்றும் உழு அல்லது பயிர்செய் என்று முன்பு பொருள்பட்ட என்னும் பெயர்ச் சொல்லும், உழவுத்தொழிலைக் குறிக்கும் என்னும் தொழிற்பெயரும், ஆங்கிலத்தில் தோன்றியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது.நிலையான குடியிருப்பால் ஒழுக்கப் பொறுப்பும் , ஊர்ப் பெருக்கமும் ஆட்சியமைப்பும் ஏற்பட்டன. இதனால், மருதநிலமும் உழவுத் தொழிலும் எங்ஙனம் நாகரிகத்தைத் தோற்றுவித்தன என்பது தெளிவாகும்.


நகர் என்னும் சொல், முதன்முதல், ஒரு வளமனையை அல்லது மாளிகையையே குறித்தது.

நகர் = 1.வளமனை
"கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்"
(புறம் 70)

2. மாளிகை.
"பாழி யன்ன கடியுடை வியனகர்"
(அகம்.15)

மாளிகை அரசனுக்கே சிறப்பாக வுரியதாதலால், நகர் என்னும் சொல் அரண்மனையையும் அரசன் மனை போன்ற இறைவன் கோயிலையும் பின்பு குறிக்கலாயிற்று.

நகர் = 1.அரண்மனை

"முரைசுகெழு செல்வர் நகர்"
(புறம்127)

"நிதிதுஞ்சு வியனகர்"
(சிலப்.27:200)

"முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே"
(புறம்.6)

"உத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடி"
(திருவாச.16:3)

என்பதால், கோயிலுக்கும் மாளிகைப் பெயருண்மை அறியலாம்.

சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெரும் மண்டபம் மாளிகை போன்றிருத்தலால், திருத்தக்கதேவர் நகர் என்னும் சொல்லை மண்டபம் என்னும் பொருளில் ஆன்டார்.
"அணிநகர் முன்னி .னானே"

நகர் என்னும் சொல் மனையைக் குறித்தலாலேயே மனை, இல்,குடி என்னும் சொற்கள் போல் இடவாகு பெயராய் மனைவியையும் குறிக்கலாயிற்று.

நகர் = மனைவி

"வருவிருந் தோம்பித் தன்னகர் விழையக் கூடி" (கலித்.8)

சிறந்த ஓவிய வேலைப்பாடமைந்த சிப்பிச் சுண்ணாம்புச் சாந்தினால் தீற்றப்பெற்று வெள்ளையடிக்கப்பட்ட கரைச்சுவர்க் கட்டடம், மண்சுவர்க் கூரை வீட்டோடு ஒப்பு நோக்கும்போது, மிக விளங்கித் தோன்றலால், மாளிகை நகர் என்னப்பட்டது. நகுதல் விளங்குதல் நகு - நகல் - நகர். வெண்பல்லையும் பொன்மணியணி கலத்தையும் முகமலர்ச்சியாகிய சிரிப்பையும் உணர்த்தும். நகை என்னும் சொல்லை நோக்குக.
நகு - நகை.

ஆசான்: தேவநேயப் பாவாணர்
கருவி: முன்னுரையிலிருந்து
நூல்: பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்
தொடரும்................

கருத்துகள் இல்லை: