கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 28 ஜூன், 2007

சாமர்களின் வரலாறு

சாமர் ( Samar )
.
உலகெங்கும் " ஆதிப் பழங்குடி மக்கள் " என்று ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 300 மில்லியன் மக்கள் 70 நாடுகளில் பரந்து வாழ்ந்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக கிறீன் லாந்தில் வாழும் எக்சிமோவர் , வட அமெரிக்காவில் வாழும் இந்தியானர் , மற்றும் அவுஸ்ரேலியாவில் வாழும் பழங்குடி மக்கள் போன்றோர் வரிசையில் இந்த சாமரும் அடங்குவர் . சாமி மொழியை வீட்டுப்பாவனை மொழியாகக் கொண்டவர்களை சாமர் என்று அழைப்பர். இவர்கள் ஏறத்தாழ 70,000 பேர் உலகில் வாழ்கின்றார்கள் . இவர்கள் வாழும் பிரதேசம் " சாம லாண்ட்" அல்லது " லப்லாண்ட்" என்று அழைக்கப்படும்.
இது ஏறத்தாழ 150,000 km2 பரப்பளவை உள்ளடக்கியது. இந்தப்பிரதேசம் வடநோர்வே , வடசுவீடன் , வட பின்லாந்து மற்றும் ரஸ்சியாவின் கோலா பிரதேசங்களைக் கொண்டு அமைந்துள்ளது. நோர்வேயில் சுமார் 40,000 சாமரும் , சுவீடனில் 20,000 சாமரும், பின்லாந்தில் 6,000 சாமரும், மற்றும் ரஸ்சியாவில் 2,000 சாமரும் வாழ்கின்றார்கள். இம்மக்கள் கூட்டத்தினர் தங்களுக்கே உரித்தான தனித்துவமான பண்பாடு , சமய , மற்றும் சமூக வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டவர்கள்.
இவர்கள் பேசும் மொழி சாமி மொழியாகும். இது பின்ஸ்க் - உர்கிஸ்க் ( Finsk -Urkisk ) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது பின்லாந்து , லற்வியா , எஸ்ரோனியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் பேசப்படும் மொழிகளின் சகோதர மொழியாகும் . சாமி மொழியிலும் பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன. சாமர் வாழும் பிரதேசத்திற்கு ஏற்றவாறு மொழியிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. வடசாமி , தென்சாமி , கிழக்கு அல்லது கோலாசாமி மற்றும் மத்தியசாமி அல்லது லுலசாமி என்பனவாகும் .
சாமி மொழி ஒரு வளம் நிறைந்த மொழியாகும் . அதிலே " Snow" ஐ அதாவது பனித்துகள்களை குறிப்பதற்கு 300 வகையான சொற்கள் பயன்படுகின்றன. சாமர்களின் மதம் " ஷாமானிஸம்" எனப்படுகின்றது. இவர்கள் சூரியன் , இடி மற்றும் மின்னல் போன்றவற்றை வணங்குகின்றார்கள். இவர்களின் ஆடை அணிகலன்கள் பல வர்ணங்களைக் கொண்டவை. அவ் ஆடைகள் கைகளால் பின்னப்படுகின்றன. அவற்றில் ஆண் , பெண் வேறுபாடுகளைக் காணக் கூடியதாக இருப்பதுடன் பிரதேச வேறுபாடுகளையும் காணலாம்.
உணவுப் பழக்கத்தைப் பொறுத்த வரையில் துருவ மானின் இறைச்சியை பதப்படுத்தி உணவாக்கி உண்கிறார்கள். அவற்றின் தோலை கூடாரம் அமைக்கவும் வீட்டுப் பாவனைப் பொருட்களாகவும் பயன்படுத்துகிறார்கள். சாமரின் இசை வடிவம் "ஜொய்க்" என்று அழைக்கப்படுகிறது. இது மலைச்சாரலில் காற்று வீசும் போது எழுப்பும் ஒலி வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனித்துவமான இசை வடிவம் ஆகும். விளையாட்டைப் பொறுத்தவரையில் சாமர் பனிச் சறுக்கல் ஓட்டம், பனிச்சறுக்கல் வண்டியில் துருவ மான்களை இணைத்து ஓடுதல் மற்றும் துருவ மான்களை கயிறு வீசிப் பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
தொழிலைப் பொறுத்த வரையில் கடலை அண்டிய பிரதேசங்களில் வாழும் கரையோரச் சாமர் மீன் பிடித்தல் மற்றும் வேட்டையாடலை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர்.
மலையை அண்டிய பிரதேசங்களில் வாழும் மலைச்சாரல் சாமர் துருவ மான் வளர்ப்பு மற்றும் வேட்டையாடலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். சாமர்கள் வருடத்தில் 11 நாட்களை சிறப்பு நாட்களாகக் கொண்டாடி வருகின்றார்கள். அவற்றுள் பெப்ரவரி 6 ஆம் திகதி சமாரின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது. சாமருக்கு என்று ஒரு தேசியக் கொடியும் தேசிய கீதமும் இருக்கிறது. எனினும் அவர்களுக்கென்று சுதந்திரமான தனியான நாடு இல்லை. ஏனைய பழங்குடி மக்கள் போன்று சாமரின் உரிமைகளும் காலம் காலமாக மறுக்கப்பட்டே வந்துள்ளன. அவர்கள் தமது உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்கள். நோர்வேயில் சுமார் 1850 முதல் 1950 வரையான 100 ஆண்டு காலப்பகுதியில் சாமரின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்களின் சாம அடையாளங்களை அழித்து, அவர்களை தூய நோர்வேசியர்களாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பபட்டது. எனினும் சில சாமர்கள் விழித்துக் கொண்டு , நாடுகள் தழுவிய ரீதியில் சாமரின் தேசிய மாநாட்டைக் கூட்டினர். இந்த மாநாடு 1917 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி " துரோண்கெய்ம்" ( Trodheim-Norway) என்னும் இடத்தில் நடைபெற்றது. அந்த மகாநாட்டில் சாமரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். அந்த நாளே சாமரின் தேசிய நாளாக இன்றும் கொண்டாடப் படுகின்றது. 1959 ஆம் ஆண்டுவரை நோர்வேயில் சாம மொழியை பொது இடங்களில் பயன்படுத்துவற்குத் தடை இருந்தது. 1980களில் நோர்வே அரசு, வட நோர்வேயில் உள்ள அல்தா ( Alta ) என்ற இடத்திலுள்ள ஆற்றை மறித்து அணை கட்ட முயன்றது. இந்த முயற்சி சாமரின் வாழ்வியலைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார்கள். எனினும் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தது. நோர்வே தாம் நினைத்தது போல் அணையைக் கட்டி முடித்தது. ஆயினும் இப்போராட்டம் சாமரிக்கிடையே மேலும் ஒற்றுமையை ஏற்படுத்தியது.
சாமர்கள் எங்கு வாழ்ந்தாலும் , அவர்கள் எல்லோரும் ஒரே கொடியை சாம தேசியக் கொடியாகவும் , ஒரே கீதத்தை சாம தேசிய கீதமாகவும் 1986 முதல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சாமரின் தேசியக் கொடி பல வர்ணங்களால் ஆனது. அது அவர்களின் பனி படிந்த பிரதேசத்திலே தோன்றுகின்ற சூரிய , சந்திர காட்சிகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.1906 ஆம் ஆண்டு நோர்வேசியரான ஈசாக்- சாபா ( Isak Saba ) என்பவரால் இயற்றப்பட்ட பாடலே தேசிய கீதமாக விளங்கி வருகிறது. சாமரின் முக்கியமான கொண்டாட்டங்கள் அனைத்திலும் அவர்களது தேசியக்கொடி ஏற்றலும் , தேசியகீதம் இசைத்தலும் முக்கிய கடமையாக மேற்கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் சாமரின் உரிமைகளைப் பாதுகாக்க நோர்வேயில் ' சாமதிங்' எனப்படும் சாம பாராளுமன்றம் 1989 இல் உருவாக்கப்பட்டது. இதற்கு ஜனநாயக முறைப்படி 4 வருடங்களுக்கு ஒரு தடவை, மக்கள் வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் படுகின்றார்கள். இந்த வாக்களிப்பில் சாமராய்த் தம்மை பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். நோர்வேயில் பல்லாயிரக்கணக்கான சாமர்கள் வாழ்ந்த போதிலும் 1989ல் 5500 சாமர் மட்டுமே தம்மை சாமராக பதிவு செய்து கொண்டனர். ஒருவர் தன்னைச் சாமராகப் பதிவு செய்வதற்கு அவரின் வீட்டு அன்றாடப் பாவனை மொழி சாமியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. நோர்வேயில் பல்லாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட , சாமரை தூய நோர்வேசியர்களாக்கும் முயற்சி, அவர்கள் பலரின் சாம அடையாளங்களை இல்லாது ஒழித்துவிட்டது.
அத்தோடு சிலர் தம்மை சாமராகப் பதிவு செய்ய முன்வரவும் இல்லை. இந்த 'சாமதிங்' எனப்படும் சாமப்பாராளுமன்றுக்கு நிறைவேற்று அதிகாரங்கள் எதுவும் இன்று வரை கிடையாது. வெறும் ஆலோசனை சபையாகவே செயற்படுகின்றது. நோர்வே அரசால் சாமர் தொடர்பான விடையங்களில் முடிவு எடுக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது இந்த சபை அதற்கு ஆலோசனைகள் வழங்குவதாக அமையும். இந்த சபையின் நோக்கம் சாமரின் தனித்துவமான பண்பாடு, கலாச்சார வாழ்வியல் விழுமியங்களைப் பாதுகாத்தலும், அபிவிருத்தி செய்தலும் கூட்டிணைத்தலுமாகும். இப்படியான ஒரு சபை பின்லாந்தில் 1973ல் இருந்து இயங்கி வருகின்றது. எனினும் சுவீடனில் 1993ல் இருந்தே இயங்கி வருகின்றது. இந்த மூன்று சாம பாராளுமன்றங்களும் ஒன்றிணைந்து நூடிக் சாம கூட்டமைப்பு ( Nordic Sama Convention) என்ற ஒரு பொது அமைப்பாக இயங்கிவருகின்றது.
.
நோர்வேயின் முதலாவது சாமப் பாராளுமன்றத்தை 1989 ஆம் ஆண்டு, அன்று நோர்வேயின் மன்னராக இருந்த 'ஊலா' ( Ola) 'கரசோ' ( karasjo) என்ற இடத்தில் தொடக்கி வைத்தார். 2000 ஆம் ஆண்டு அதே இடத்தில் புதிய சாம பாராளுமன்ற கட்டடம் இன்றைய மன்னர் 'கரால்ட்' ( Harald) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டடம் , அவர்களது வளமையான வாழ்விடமான, துருவ மான்களின் தோலினால் வேயப்பட்ட கூடாரங்கள் போன்று , புதிய கட்டடக்கலை வடியப்பிலே உருவாக்கப்பட்ட அழகான கட்டடமாகும். சுவீடனில் புதிதாக வடிவமைக்கப்பட்ட புதிய சாம பாராளுமன்ற கட்டடடம் 2009 ஆம் ஆண்டு 'கிருனா' ( Kiruna) என்ற இடத்தில் திறந்து வைக்கப்படட உள்ளது.
பின்லாந்திலும் சுவீடனிலும் சாமரின் சில உரிமைகள் அரசியல் சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நோவேயில் அவ்வாறு அவர்களின் உரிமைகள் அரசியல் சட்டரீதியாக உறுதி செய்யப்படவில்லை. நோர்வேயில் வாழுகின்ற சாமரில் பெருபான்மையானோர் ஒஸ்லோவிலேயே வசிக்கிறார்கள். 1959 ஆம் ஆண்டு வரை நோர்வேயில் பாடசாலைகளில் சாம மொழியைக் கற்பதற்குத் தடை இருந்தது. இன்று அவர்கள் சாம மொழிப் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் அமைத்து தங்களது மொழியையும் கல்வியையும் மேன்படுத்தி வருகின்றார்கள். இன்று சாம மொழியிலே நாளிதழ்கள் வெளிவருகின்றன. வானொலி,தொலைக் காட்சி, இணையத் தளம் என்பன இயங்குகின்றன.
முன்புஅவர்கள் தங்கள் போக்குவரத்துக்கு பனிச்சறுக்கல் மரத்தினாலான பனிச்சறுக்கல் பொருட்களையும் துருவ மான் வண்டிகளையும் நம்பியிருந்தார்கள். இன்றோ ' snow skooter' எனப்படும் பனிச்சறுக்கல் உந்துருளி மற்றும் உலங்கு வானூர்தி போன்றவற்றை போக்குவரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.
உலக மயமாதல் அவர்களின் வாழ்விலும் பல மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது. எனினும் அவர்கள் தாம் ஒரு சாம தேசியம் என்ற உணர்வோடு வாழ்கின்றார்கள்.
.
எழுத்து வடிவம்> தயா. சொக்கநாதன்.

பொது அறிவு

  • தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்.
  • யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.
  • யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது.
  • தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ்.
  • பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்.
  • 'விடுதலைப்புலிகள்' முதலாவது இதழ் ( குரல்- 1) 15.03.1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.
  • தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு.

செவ்வாய், 26 ஜூன், 2007

முத்தமிழ்

இன்தமிழ் மூன்று



  1. இயற்றமிழ்
  2. இசைத்தமிழ்
  3. நாடகத்தமிழ்

இயற்றமிழ்

இயல்பாகவுள்ளது இயற்றமிழ் எனப்படும்.

செந்தமிழ் - பைந்தமிழ் - அந்தமிழ் - வண்டமிழ் - தண்டமிழ் - ஒண்டமிழ் - தென்றமிழ் - இன்றமிழ் - மன்றமிழ் - நற்றமிழ் - பொற்றமிழ் - முத்தமிழ் - தேந்தமிழ் - தீந்தமிழ் - பூந்தமிழ் - பழந்தமிழ் - இளந்தமிழ் - பசுந்தமிழ் - அருந்தமிழ் - இருந்தமிழ் -நறுந்தமிழ் - மாத்தமிழ் - சீர்த்தமிழ் - தாய்த்தமிழ் - ஒளிர்த்தமிழ் - குளித்தமிழ் - உயத்தமிழ் - வளர்த்தமிழ் - மரத்தமிழ் - அறத்தமிழ் - திருத்தமிழ் - எழிற்றமிழ் - தனித்தமிழ் - கனித்தமிழ் - பொங்குதமிழ் - கொஞ்சுதமிழ் - விஞ்சுதமிழ் - விளங்குதமிழ் - பழகுதமிழ் - அழகுதமிழ் - தூயதமிழ் - ஆயதமிழ் - கன்னற்றமிழ் - வண்ணத்தமிழ் - இன்பத்தமிழ் - செல்வத்தமிழ் - வெல்கதமிழ் - கன்னித்தமிழ் - முத்தமிழ் - அன்னைத்தமிழ் - தெய்வத்தமிழ் - அருமந்தமிழ் - அமிழ்தினுமினிய தமிழ்
.
இசைத்தமிழ்

.
உலகத்திலேயே இசையால் வளர்த்த மொழிகளுள் தமிழ் மொழி முதல் மொழியாகும். இந்த கருத்துக்கு வலிமை சேர்க்க ஆங்கில அறிஞர் கூறியதையும் குறிப்பிடலாம். " சிவனும் தமிழும் நடமாடும் போது எம் முன்னோர் குகைகுள் இருந்தார்கள்" . அதாவது நாகரிகம் அடையாத மக்களாய் வாழ்ந்தார்கள் என்பதேயாகும். நம் முன்னோர் பொருளறிந்து இசையறிந்து இசைத்தமிழை வளர்த்தார்கள். அக்காலத்தில் தான் தமிழோடு இசையும் வளர்ந்தது. உலகத்திலேயே நிறைய இசைக்கருவிகள் மீட்டிப் பாடிய பெருங்குடி நம் குடியாகத்தான் இருந்திருக்கிறது. முதன்முதல் முத்தமிழ் இலக்கண நூல் தோன்றியதும் எம் இனத்தில் தான். அகத்தியர் படைத்த அகத்தியம் வழி நூலேயன்றி மூல நூலல்ல. முந்து நூல்கள் அதற்கும் முந்தியவை. அவ் ஓலைச்சுவடிகளில் தமிழையும் இசையையும் ஆய்ந்து அறிந்து நம் முன்னோரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.அவை பத்தாயிரம் ஆண்டு காலத்துக்குரியவையாக இருந்திருக்கலாம். இனி
.
கருவி : கல்>கரு>கருவி
.
தோற்கருவிகள்
.
அடக்கம் , அந்தரி , அமுதகுண்டலி , அரிப்பறை , ஆகுளி , ஆமந்திரிகை , ஆவஞ்சி , உடல் , உடுக்கை , உறுமி , எல்லரி , ஏறங்கோள் , ஒருவாய்க்கோதை , கஞ்சிரா , கண்விடு தூம்பு , கணப்பறை , கண்டிகை , கரண்டிகை , கல்லல் , கல்லலகு , கல்லவடத்திரள் , கிணை , கிரிக்கட்டி , குட முழா , குண்டலம் , கும்மடி , கைத்திரி , கொட்டு ,கோட்பறை , சகடை , சந்திரபிறை-சூரியபிறை , சந்திவளையம் , சல்லரி , சல்லிகை , சிறுபறை , சுத்தமத்தளம் , செண்டா , டமாரம் , தக்கை , தகுணித்தம் , தட்டை , தடாரி , தண்டோல் , தண்ணுமை , தபலா , தமருகம் , தமுக்கு , தவண்டை , தவில் , தாசரி , தப்பட்டை , திமில , துடி , துடுமை , துத்திரி , துந்துபி , தூரியம் , தொண்டகச்சிறுபறை , தோல்க் , நகரி , நிசாளம் , படவம் , படலிகை , பம்பை , பதலை , பறை , பாகம் , பூமாடு , பெரும்பறை , பெல்ஜியக் கண்ணாடிமத்தளம் , பேரி , மகுளி , மத்தளம் , மதங்கம்முரசு , முருடு , மேளம் , மொத்தை , விரலேறு , ஜமலிகா என்பன தோற்கருவிகளாகும்.
.
நரம்புக்கருவிகள்

யாழ் , வீணை



ஊது கருவிகள்

இசைக்குழல் ( நாகசுரம் ) , புல்லாங்குழல் , மகுடி

உணர்வுகள்

புலத்தில் வாழும் குழந்தைகளும் நானும்.எம் பெற்றோரில் பலர் நினைக்கிறார்கள் படிப்பு என்றால் சப்புவது தான் என்று அதிலும் தமிழ்க்கல்வியை பொறுத்தமட்டில் தேர்வுக்காகவே குழந்தைகள் கட்டப்படுகின்றனர். சுற்றுலாவும் பெற்றுக்கொண்ட அனுபவங்களையே எழுதுவதும் ஆசானிடம் அதை ஒப்படைத்தலுமே அதாவது ஒப்படை குழந்தைகளை தமது தாய்மொழிப் பற்றை ஊக்குவிக்கும்.
.
குழந்தைகள் உண்மைதான் பேசுவார்கள்.
.
நாளுலா சென்ற வளர்நிலை நான்கு ஈ மாணவர்களின் உணர்வுகள்>:
*
'பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம் பூச்சி'
.
என்பது போல எனது மனம் மிக மகிழ்ச்சியாக 3.4.07 ஆம் திகதி இருந்தது. இது வெறும் நாளுலா மட்டும் இல்லாமல் ஒரு நல்ல அறிவுள்ள சுற்றுலா போன்று எனது உணர்வு கூறியது.லக்சிகனுடம் மற்றும் எல்லா நண்பர்களுடனும் சேர்ந்து பழகும் வாய்ப்பும் ஆசானுடன் சுதந்திரமாக கதைக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் இதுவாகும்.
உணர்வுடன் சு. பவித்திரன்.
*
சென்ற செவ்வாய்க்கிழமை நானும் ஆசானும் சக நண்பர்களுடன் சென்ற சுற்றுலா மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. இது நல்ல அறிவுள்ள சுற்றுலா போன்ற எனது உணர்வு ஆகும். ஜெசிக்கா.
*
எனது நாளுலா உணர்வு, எனது இலைதுளிர் கால சுற்றுலா ஆசானும், தமிழ் பாடசாலை நண்பர்களுடனும் மிக மகிழ்ச்சியாகவும் அறிவுபூர்வமான ஒரு சுற்றுலாவாகவும் என் மனதில் உணர்ந்தேன்.
லக்சிகன்.
*
என்னுடைய நாளுலா உணர்வுகள், நான் மிகச்சந்தோசமாக எனது நாளுலாவை ஆசானுடனும் சக மாணவமாணவிகளுடன் பல இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்தது எனக்கு மிகப்பிரயோசனமாக இருந்தது. நான் பல புதிய விடையங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. நான் நான்காம் வகுப்பில் எனது ஆசானுடன் சென்ற நாளுலாவை என்றுமே மறக்கமாட்டேன்.
சிவராம்.
*
எனது நாளுலா உணர்வு, நானும் சக மாணவர்களும் எங்கள் ஆசானுடன் சென்ற சுற்றுலா மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு நாளுலா திரும்பவும் வராதா என்று நினைக்கக் கூடியதாக அமைந்தது.
வதூஷன்.
*
எனது உணர்வு, 3.4.07 அன்று ஒரு நாளுலா ஆசானும் சக மாணவர்களுடன் ஒரு நாளுலா சென்றோம் அது மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. அந்நாளுலாவில் நீர்வீழ்ச்சி பழைய பொருட்கள், காட்சிகள் பார்த்தோம்.11 மணித்தியாலங்கள் பார்த்து மகிழ்ந்தோம்
அனுசா.
*
எனது உணர்வு, 3.4.07 அன்று நானும் எனது தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசானுடன் நாளுலா போனோம். நாங்கள் இயற்கை காட்சிகளையும் பல அறிவு சம்பந்தமான இடங்களையும் பார்த்தோம். இந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்த நாளாகும். இதை என்றும் மறக்க முடியாது.
யொனாத்தன்.
*
உணர்வின் வரிகள், என் நண்பர்களுடனும் என் ஆசானுடனும் நான் நாளுலா சென்றேன். அந்த இனிய நாள் மீண்டும் வருமா என ஆசை படுகின்றேன். நாங்கள் உலகின் வளர்ச்சிக்கேற்ப முறையில் வளர ஆசைப்படுகின்றனர் பெற்றோர் அதை செயல் வடிவத்தில் உருவாக்க வழி நடத்தும் என் அன்பின் ஆசான் ஓயாமல் பணி தொடர கை கொடுப்பேன்.
என்றும் மழலைச்செல்லம் அஜந். சிவஞானம்.
*
எனது உணர்வு , 3.4.07 அன்று ஒரு நாளுலாவாக எனது தமிழ் ஆசிரியர் ஆசானும் சக மாணவர்களுடனும் நான் முதல் முறையாக சுற்றுலா சென்ற நாள் இதுவாகும் எனது படிப்பிற்கு மிகவும் உதவி கொடுக்க கூடியா ஒரு காட்சியாக இந்த சுற்றுலா சென்ற நாள் இதுவே முதல் நாள் உலா ஆகும்.

ஞாயிறு, 24 ஜூன், 2007

ஊர்மனை

*

எனது தாத்தா மண்ணைத் தோண்டினார்

தங்கம் கிடைத்தது

எனது அப்பா மண்ணைத் தோண்டினார்

தண்ணீர் கிடைத்தது

நான் மண்ணைத் தோண்டுகிறேன்

வெடிகுண்டுகள் கிடைக்கின்றன

எனது மகன் மண்ணைத் தோண்டும் போது

எலும்புக்கூடுகள் தான் கிடைக்கும்

*

  • அம்மானைக்கொண்டு ஆப்புவைக்கலாம் எண்டு பாருங்கோ சிங்களவர் நினைத்தவயள், ஆனால் இருட்டிலும் புலிக்கண் விழிப்பாய் இருக்கும் பாருங்கோ! அம்மானைப்போல ஆயிரம் பேரை கண்டவர் பாருங்கோ தலைவர் பிரபாகரன்; எல்லா இரண்டர்களும் கும்மாளம் கொட்டேக்கில, இவயளுகு !அ! எல்லாளன் தான் சரியான ஆள் சிங்களத்தாரின் தலையில ஆப்பிறக்கினார் ஆப்பு. புலிக்கே புல்லா?
  • சிரித்துக்கொண்டே தமிழர் மனுவை வாங்குகிறார்கள் பாருங்கோ (வெள்ளையர்கள்) சிந்திக்காமலே பணத்தைக்கொடுக்கிறார்கள் காணும் சிறிலங்காவுக்கு. இது தான் சொல்லுவார்கள் எங்கட படியாத சுருட்டுச்சுத்துகற கைநாட்டுகள் "சிரித்துக்கொண்டே கழுத்தறுப்பான் பார்த்துக்கொள்". அதிலும் நோர்வேகாரன் வலு கெட்டிக்காரன்.
  • நித்திரையில் நடக்கும் நோயில தமிழரை நாடு கடத்தினார்களாம் மகிந்தர் கூட்டணி.
  • செம்மணியில் மனிசரைப் புதைச்சுப்போட்டு பல்லியையும் பாம்பையும் தான் புதைச்சனாங்கள் எண்டேக்க நம்பின உலகம் தானே! நாசங்கெட்ட உலகம்
  • அந்தாள அதுதான் சிவராம கொண்டு போட்டு அந்தாளுண்ட மண்டைக்குள்ளேயும் கிளறிப்பாத்தாங்களாம் இந்தாள் இதுக்குள்ளேயும் ஏதும் மறைச்சு வைச்சிருக்கோ எண்டு.
  • புத்தனுக்கு எழுதின வரலாறு (மகாவம்சம்) ஒன்று எழுத்திப்போட்டு அதையிப்ப திரும்பவும் தமிழ்ரோட சண்டைய போட்டு புதுப்பிச்சுக்கொண்டெல்லே திரியினம் .
  • கறுப்பு யூலையில சூளை நெருப்புக்குள்ள போட்டு எரிச்சுப்போட்டு சேர்ந்து வாழ் சேர்ந்து வாழ் என்கிறான்களே எப்படி வாழுறது காணும்.
  • வெள்ளை நிற புத்தகோயிலில புத்தரின் இரத்தக்கண்ணீர் இது தான் சிறிங்காவோட நிலமை காணும்.
  • விறகு வெட்டத்தெரிஞ்சா, இளநீர் வெட்டத்தெரிஞ்சா நீங்க தான் ராசா சிறிலங்காவில.
  • ஆய்தம் எல்லாம் வேணாமாம் ' லாடர்' தந்தா காணுமாம்.
  • கீழால கொடுத்தது பத்தாது எண்டுகாணும் மேலால கொடுக்கப்போயினம்.
  • கொழுப்பில இருந்து அனுப்பின தமிழருக்கு புதுசா சத்துணவு திட்டமாமெல்ல கேள்விப்பட்டனீங்களோ?
  • சிங்கள இராணுவம் நிறைய சாகிறதுக்கு என்ன காரணம் தெரியுமே? பைல்லா தான்.
  • இனி நாய் வளர்க்கிற சனங்களெல்லாம் பொடியங்களோட கடுப்பா இருக்கப்போகுது. ஏனென்று சொன்னால் நாயையும் கவனமாய் பேணவேணுமாம். ஆள் சாப்பிடவே சட்டியில சாப்பாடில்ல. நாயெங்க சாப்பிடுறது.
  • இப்பவே உலகம் வெப்பமாகிக்கொண்டெல்லே போகுது காணும். வட துருவத்தில இருக்கிற பனி மலையெல்லாம் உருகிக்கொண்டெல்லே போகுது மகிழ்ச்சி கொள்ளாக் கூடாது கீழ்திசையில இருக்கிற சின்னச்சின்ன தீவெல்லாம் மெல்ல மெல்ல மூழ்கப்போகுது பாருங்கோ. இன்னுமொரு 2050 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகத்தில் பெரிய மாற்றம் வரப்போகுது. நாளைக்கு வரப்போற துன்பத்தைத் தெரியாமல் குதுமங்குத்துகினம் மக்களென்றால் பாருங்கவன்.
  • வறுமையைத் தாங்கலாம் வெறுமையைத் தாங்க முடியாது பாருங்கோ.
  • இப்பதான் சிறுவர் மேல் அக்கறை எடுக்கினம் பாருங்கோ உலகத்தார். அதுவும் கண் துடைப்பு தானோ பார்க்கலாம்.

புதன், 20 ஜூன், 2007

ஊர்களின்பெயர்

யாழ்ப்பாணம் (Jaffna) என்ற நாட்டின் பெயர் இலங்கையில் தமிழர் என்ற நூலில் செய்தித்தொகுப்புகளோடு கூறப்பட்டுள்ளது பக்கம்122 ஐ பார்க்கலாம்.

இஆழ்ப்பானாயந் பட்டினம் - (கி.பி 1435) , யாழ்ப்பாணம் - (கி.பி 1532 ), யாட்பாணம் - ( கி.பி 1603 ) , யாள்ப்பாணம் ( கி.பி 1604 ) , யாப்பாண பட்டனம் (கி.பி 1685 ) , கியல்பான தேசம் ( கி.பி 1715 ) , யாட்பாணதேசம் ( கி.பி 1734 ) ,

யாபா பட்டுன கி.பி 1450 ஆண்டளவில் எழுதப்பட்ட நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள்

  • பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி
  • திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை
  • பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை
  • நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு)
  • சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம்
  • திருநெல்வேலி - திண்ணைவேலி
  • சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை
  • சங்குவேலி
  • ஆல்வாய் - அல்வாய்
  • கருணைவாய் - கரணவாய்
  • பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை
  • புத்தூர்
  • கிளாலி ( பச்சிலைப்பள்ளி )
  • கரம்பன்
  • நாகர்கோயில்
  • பழை
  • தெல்லிப்பழை
  • கொட்டைக்காடு
  • அச்செழு
  • இடைக்காடு
  • வல்லிபுரம்
  • மன்னறத் - மன்னார்
  • யாவகர் சேரி - சாவகச்சேரி
  • கச்சாய்
  • சாவகக்கோடு

ஒல்லாந்து நாட்டு ஊர்களோடு ஒத்த எங்கள் ஊர்கள்.

  • காரைதீவு ( Amsterdam)
  • அனலைத்தீவு ( Rotterdam )
  • வேலணை ( Leyden )
  • நெடுந்தீவு ( Delft )
  • நயினாதீவு ( Haarlem )
  • புங்குடுதீவு ( Midelburg )
  • ஊராத்துறை ( Kayts )
  • ஊராத்துறைக்கோட்டை ( Halmenhiel)
  • காக்கைத்தீவு (Galienye )
  • பாலைதீவு ( Galue )
  • இரணைதீவு ( Twee Gebroeders )

சிங்களப் பெயரோடு ஒட்டும் எம் ஊர்கள்

  • இணுவில் [ ஹினிவில்/ஹினிவில - 'சின்னக்குளம்' 'சின்னவயல் வெளி', 'இனிவில்/இனிவில - பிரித்த வயல்வெளி ]
  • உடுவில் [ உடுவில - ' மேட்டுக்குளம்/மேட்டுவயல்வெளி ]
  • கொக்குவில் [கொக்காவில ( கொக்கா- கொக்கு) ]
  • கோண்டாவில் [ கொண்டவில/கொண்டாவில ]
  • மட்டுவில் [ மட்டிவில ]
  • சுருவில் [ சுருவில]
  • மத்துவில் [ மந்தவில - ' காய்வேளைக்குளம் ' ]
  • நுணாவில்
  • வேராவில் [ வேரவில ( வேர- கத்தரி,மஞ்சள்) ]
  • இத்தாவில் [ இத்தவில் ( இத்த' பூக்கொத்து' ' குலை' ]
  • மிரிசுவில் [ மிரிஸ்வில ( மிரிஸ் - மிளகாய் ) ]
  • வேவில் [ வேவில ( வே- பிரம்பு ) ]
  • கெருடாவில் [ கருடாவில - தேளுள்ளகுளம் ( கருட - தேள்)]
  • நந்தாவில் [ நந்தா -உடுப்பு துவைக்கும் பெண்]
  • நீவில் [ நீவில ( நீ - நீர்) ]
  • மல்வில் [ மல்வில ( மல் - மலர்,வேடர், மலை முதலிய பல பொருள் குறித்த ஒரு சொல்)]
  • முகாவில் [ முகவில ( முக- முதன்மை,விசேஷம்,சிறந்த)]
  • இருவில் [ ஹிருவில ( ஹிரு - எருக்கஞ்செடி)]
  • பண்டாவில் [ பண்டாவில ( பண்டர் - அரசகுமாரன்)]
  • சுளுவில் [ சுளுவில ( சுளு - சிறு) ]
  • தளுவில் [ தல - பனை,தாழ்வு ]
  • கூவில் [ குவில ( கு - அற்ப,சிறிய)]
  • யாவில் [ யாயவில ( யாய - பெருவெளி) ]

செவ்வாய், 19 ஜூன், 2007

தமிழரின் வாழ்வியல் சடங்குகள்

சட்ட+அம்+கு=சடங்கு

வாழ்வியல் சடங்குகளில் தமிழர் பேணவேண்டியவைகளை தொகுத்து தருகிறோம்.

*
*



திருமணம்
*
*
இரு மனம் இணைந்தால் திருமணம் என்பார். சில வேளைகளில் பெற்றோரின் கட்டாயத்தில் இருமனம் இணையாமலே திருமணம் நடந்தேறுகின்றது. ஆனாலும் திருமணம் என்ற சொல் தெய்வத் தன்மையோடு நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற சடங்கு பற்றி ' வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்' என்ற நூலில் அழகாக எடுத்துக்காட்டுகளோடு மு.பெ.சத்தியவேல்முருகனார் எழுதியுள்ளார் அதை தேவை கருதி அப்படியே தருகிறோம்.
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான திருப்பத்தை உண்டு பண்ணுவது. திருமணம் என்கின்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது. திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத்தன்மை என்ற பொருளை உடையது என்று பேராசிரியர் திருக்கோவையாருக்கு உரை செய்யும் போது கூறுகிறார்.
இன்னாருக்கு இன்னார் என்று தெய்வம் ஒரு திட்டம் போட்டு வைத்துள்ளது. அது நமக்குத் தெரிவதில்லை. அதனை இறைவனது மறைத்தல் தொழிலில் ஒன்றாகக்கொள்ளலாம். தெய்வத்தின் இந்தத் திட்டத்தை மீறி எந்தத் திருமணமும் கைகூடுவதில்லை என்பது கண்கூடு.
ஆக, இந்தப் பெண்ணுக்கு இந்த மணமகன் என்று திடீரென்று திருமண உறவு ஏற்படுதில்லை. அதாவது அது திடீரென ஏற்படும் ஒரு வாய்ப்பு அல்ல. எங்கேயோ ஒருவரை ஒருவர் அறியாமல் பிறக்கும் போதே தெய்வத்தின் திட்டம் அரும்பி விடுகிறது. ஆனால் அது நமக்குப் புலப்படுவதில்லை. எப்படியென்றால் ஒரு செடியில் தோன்றுகின்ற அரும்பு அதிகமாக நமக்கு புலப்படுவதில்லை. ஆனால் அந்த அரும்பே வளர்ந்து மொக்குளாகி முறுக்கிதழ் நீங்கி மலரும் போது மணம் வீசி மலரைக் காட்டிக்கொடுக்கிறது. அது போல புலப்படாமல் அரும்பாய் மறைந்து இருந்த தெய்வத்தின் பங்கு மலந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது தெய்வத்தின் மணம் அங்கே கமழ்கிறது.
அதனால் தான் அதனைத் திருமணம் என்று பெயரிட்டனர் பெரியோர். நம்மால் மீற முடியாத தெய்வத்தின் மணம் அங்கே வீசுவதால் அது திருமணம்.
இப்படி ஒரு பெரும் பொருளை வடமொழியில் கூறும் கல்யாணம் என்ற சொல்லில் காணமுடியாது. wedding என்ற ஆங்கிலச் சொல்லில் காணமுடியாது. திருமணம் என்று பெயர் வைத்த தமிழனின் கூர்த்த மதியே மதி.
*
*
தாலி
*
*
தாலி கட்டுதல் தமிழ் வழிவந்த திராவிட குடினருகே உரியது. இது வடவருக்கு உரிய பண்பாடு அல்ல. தாலி பற்றியும், ஏன் தாலி கட்டும் முறையை தமிழர் ஏற்படுத்தினார்கள்? என்பது பற்றியும் பார்ப்போம்.
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ள உரையில் (திரணதூமாக்கினியர்) தொல்காப்பியர் கூறுவதாவது
.
" பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப "
.
அரண் - அரணம் - கரணம்
அரண் ( காப்பு ). ஒ.நோ காப்பரண், முன்னரண், அரண்மனை
அரண் என்பதே கரணம் என்றே திரிந்தது.
.
ஐயா என்போர் பொறுப்பில் உள்ள சான்றோரே அன்றி பூசை செய்யும் பூசாரிகளல்ல.
அதனால் தான் பாரதியும் பாடினார் "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே"
இனி..
.
மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் ஆணும் பெண்ணும் தாங்கள் விரும்புவோரை தெரிவு செய்து கூடி வாழ்ந்தார்கள். கூடி வாழும் போது முன்னையவளை விட ஒருத்தியை மனதுக்கு பிடித்து விட்டால் அவளோடு சென்று விடுவான். தன் முதல் மனைவியை தனக்கு தெரியாது என்றும் வாய் கூசாமல் கூறிவிடுவான். இப்படியே போனால் குமுகம் சீரழிந்து விடுமே என்று தான் பொறுப்புள்ள சான்றோர் தாலி கட்டும் சடங்கை கொண்டு வந்தனர். அதாவது திருமணம் செய்யும் ஆண் தான் மணந்து கொள்ளும் பெண்ணிடம் உறுதி மொழி கொடுக்கவேண்டும். அதை ஓலையில் எழுதி மாழை குழையில் இட்டு மஞ்சள் கயிற்றில் கோர்த்து கட்டவேண்டும். பெண்ணுக்கு பாதுகாப்பானது அவள் கழுத்தே என்று கழுத்தில் ஆணால் கட்டப்பட்டது. அதுவே தான் தாலி எனப்பட்டது.
.
தாலி என்ற சொல் பற்றி ஆராய்வோம்.
தாலம் என்பது பனையையும் அதன் ஓலையையும் குறித்தது. தாலம் - தாலி எனப்பட்டது.
.
தாலி பெண்ணுக்கு மட்டுமல்ல நம் பண்பாட்டுக்கும் வேலி.
.
ஆண் என்ற சொல்லின் வேர் ஆள்( ஆள்பவன் ) என்பதே . பெண் என்ற சொல்லின் வேர் பெள்-விருப்பம் அதாவது பெண் என்பவள் ஆணால் விரும்பப்படுபவள் என்பதே.
.
ஆள்>ஆண்>ஆண்மை>ஆணவம்
பெள்>பெண்>பெண்மை
.
பெண்ணே காப்பாற்றப்பட வேண்டியவள். எந்த ஒரு ஆணும் பெண் தன்னை காப்பாற்றுவதை
விரும்பமாட்டான் என்பதை தொல்காப்பியரும் கூறியிருத்தல் காண்க.
'வினையே ஆடவர்க்கு உயிரே'
.
இதிலிருந்து கூறியவற்றால் இக்காலத்திலோ இனி வருங்காலத்திலோ எந்தப்பெண்ணும் தாலியை ஆடவர் கழுத்தில் கட்டும்படி கூறமாட்டாள். தான் கழுத்தில் கட்டிய தாலியை பேணிக்காக்கக் கூடியவளாக வளர்ந்துகொள்வாள்.

ஞாயிறு, 17 ஜூன், 2007

உலக உலா

*
குடும்பச்சுற்றுலா
*
கிரேக்கம்
*
நாடு - கிரேக்கம்
.
தலைநகரம் - ஏதென்ஸ்அமைவிடம் - ஐரோப்பா
நாணயம் - யூரோ
.
பரப்பளவு - 131,944 km2
.
மக்கள் தொகை - 9,750.000
.
எழுத்தறிவு - 75%
.
மொழி - கிரேக்கம்
.
மதம் - கிரேக்க ஒக்டோடொக்ஸ்
.
வாழ்க்கை - 75 [ அகவை]
*
ஐரோப்பாவில் தென்கிழக்காக அமைந்துள்ளது.ஒரு பெரு நிலப்பரப்பையும் பல தீவுக்கூட்டங்களையும் ஒருங்கே கொண்டு, சுமார் 97 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நாடு. 1830 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. துருக்கியின் ' ஒட்டோமான்' ஆட்சியில் தனது கட்டுப்பாட்டிற்குள் இருந்து இன்று கூட அதன் தடயங்களும் நினைவிடங்களும் உள்ளது. பல தத்துவ மேதைகளையும், அறிஞர்களையும் தந்ததோடு உலகின் நாகரீக வளர்ச்சிக்கும் வித்திட்ட நாடு.சுற்றுலாத் துறையைப் பொறுத்த வரை நூற்றுக்கணக்கான் இடங்கள் உள்ளன. எவ்வேளைகளிலும் உலகின் பல பாகங்களிலும் இருந்து உல்லாசப் பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பர். உலகில் முதன் முதலாக (ஒலிம்பிக்) நடந்த இடம் இந்த கிரேக்கமாகும். 'அக்ரோபொலிஸ்' என்னும் மலைக்கோவில் மற்றும் பல பிரசித்தி பெற்ற அருங்காட்சியகம் போன்ற பல இடங்கள் உள்ளது. இன்று கூட ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனெஸ்கோ' வின் சின்னமாக இந்த 'அக்ரோபொலிஸ்' கட்டிட அமைப்பின் முகப்பு விளங்குகின்ற. மேலும் உலகிலேயே மிக அதிகமாக கப்பல் கட்டும் இடமும், சிறந்த கப்பல் ஓட்டிகள் வாழும் நாடாகும். மிகச் சர்வசாதாரமாக கப்பலை ஓட்டுவதும், சிறிய இடங்களுக்குள் மிக இலாவகமாக அதைத்திருப்புவதும் கொள்ளையழகு. தீவுக்கூட்டங்களிடையே அதிவேக படகுகளில் பயணிக்கும் போது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அங்கு கட்டாயம் இருக்கைப்பட்டி அணிந்திருக்க வேண்டும் அந்தளவுக்கு பிரயாணம் அதி வேகமாக இருக்கும். இங்கு சீதோஷ்ண நிலை அண்ணளவாக எட்டு மாதத்திற்கு எங்கள் நாட்டு காலநிலை போன்றே இருக்கும். இங்கு இருக்கும் ' ஒலிவ் எண்ணை ' உலகப்பிரசித்தி பெற்ற தரமான எண்ணையாகும். இங்கு செவ்வரத்தம் பூ, வாழைமரம், மாதுளை மரம் போன்றவற்றை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். உல்லாசப்பிரயாணிகளுக்கு எற்ற நல்லதோர் தெரிவு கிரேக்கம்.
எழுத்து வடிவம் > சிவகுமரேஸ் நோர்வே.

சனி, 16 ஜூன், 2007

தமிழ் அறிஞர்கள்

தமிழிலக்கிய வாழ்வும் வளர்த்தவர்களும்
*
கருவிநூல்கள்< தமிழ் இலக்கிய வரலாறு , வெள்ளிப் பாதசரம்>
*
.
வரதபண்டிதர்
இப்பண்டிதர் சுன்னாகப்பகுதியிலே ஒல்லாந்தர் கால முக்கூற்றில் பிறந்தவர். அரங்கநாதன் என்பவர் இவருக்குத்தந்தை.சதுர்வேதம் ஆயுள்வேதங்களில் மிகுந்த அனுபவசாலியன்றி இலக்கண இலங்கியங்களை மிகவும் பயின்று திறகையுற்ற பாவாணருமாகச் சிவராத்திரிப்புராணம்,ஏகாதசிப்புராணம் என்னும் என்னும் இரு புராணங்களையும் பாடினார். சிவராத்திரிப்புராணத்தில் எழுநூற்றுப் பதினைந்து (715 ) விருத்தங்களும் மேற்குறிப்பிட்ட இரு புராணங்களைவிட அமுதாகரம் என்னும் பெரியமருத்துவ நூலையும் இவர் செய்தனன். அவற்றுள் முந்நூற்றுப்பத்து (310 ) விருத்தங்கள் உள்ளன.
"ஐயமின் முந்நூற்றையிரு விருத்தம்
செய்ய செந்தமிழாற் றெரிந்துரை செய்தனன்
கங்கை மாநதி சூழ் காசி மாநகரும்
பங்கமில் பங்கயப் பைந்துணர் மாலைலையும்
கோதகலோமதிக் கொடியுமிங் குடையோன்
கன்னியங்கமுகிற் கயவினங்குதிக்கும்
துன்னிய வளவயற் சுன்னைநன்னாடன்"
தாமோதரம் பிள்ளை
சி.வை. தாமோதரம் பிள்ளை ( கி.பி 1832 - 1901 ) பல பாட்டுகளையும் உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல்முதலில் பி.ஏ.பட்டம் பெற்றுச் சிறப்பாகத் தேறிய அவர், ஆங்கிலத்தில் பெற்றியருந்த புலமையையும் ஆராய்ச்சியறிவையும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு நல்ல முறையில் பயன்படுத்தினார். அவருடைய பாட்டுகளும் உரைநடையும் பழைய முறையில் சொற்செறிவும் பொருட்செறிவும் உடையன. இன்று அவர் இயற்றிய நூல்கள் மறைக்கப்பட்ட போதிலும், பனையோலையில் இருந்த பழைய தமிழ் ஏடுகள் சிலவற்றைப் பெருமுயற்சியுடன் படித்து முதல்முதலாக அச்சிட்டு வெளியிட்ட அவருடைய அரிய தொண்டு மறுக்கப்படவில்லை. நீதிபதி அளவிற்கு உயர்பதவி பெற்று விளங்கிய அவர், அக்காலத்தில் தமிழ்த் தொண்டைப் பெருமையாகக் கருதினார். உதய தாரகை என்ற தாளிகைக்கும் ( பத்திரைகைக்கும்) ஆசிரியராக இருந்து தொண்டு புரிந்தார். பனையோலை ஏடுகளைப் புறக்கணித்தால் பழைய நூல்கள் அழிந்துவிடுமே என்று பெருங்கவலை கொண்டு முதல் குரல் எழுப்பிப் பல தமிழ் நூல்களைக் காப்பாற்றியவர் அவர். தமிழ் மொழியைத் தாய் என்று வணங்கிப்போற்றும் அளவுக்கு முதல்முதலில் உணர்ச்சி ஊட்டியவர் அவர். " சங்கம் மரீஇய நூல்களுள் சில இப்போதுதானும் கிடைப்பது சமுசயம்... எத்தனையோ திவ்ய மதுர
கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!அயலான் அழியக் காண்கிலும் மனம் தளம்பிகின்றதே! தமிழ்மாது நும் தாய் அல்லவா? இவள் அழிய நமக்கு என் என்றுவாளா இருக்கின்றீர்களா?" என்று எழுதிய சொற்களில் தமிழ் மொழியிடத்திலும் இலக்கியங்களிடத்திலும் அவர் கொண்டிருந்த பத்தி உணர்ச்சி புலனாகிறது. (பரிதிமாற்கலைஞர்) வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் முதலான தமிழறிஞர் பலர் முன்னேற ஊக்கம் ஊட்டியவர் அவர்.
.
இலங்கையர்கோன்
மாணவப் பருவத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர் ' இலங்கையர்கோன்' இயற்பெயர் ந. சிவஞானசுந்தரம். பதினெட்டாவது வயதிலே இவரது முதற் கதையான ' மரிய மதலேனா' 1930 களில் ' கலைமகள்' இதழில் வெளியாகிற்று.
சமஸ்கிருதம், லத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஆழ்ந்தபயிற்சி இவரை விரிந்த தளத்தில் சிந்திக்கவும் எழுதவும் வைத்தது. ஷேக்ஸ்பியர் இவரைப் பெரிதும் கவர்ந்தவர். இதன் விளைவாக நிறைய ஒற்றையங்க, தொடர் நாடங்களை எழுதினார். அவற்றுட் பல இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்களை மகிழச்செய்தன ' பச்சோந்திகள்' 'லண்டன் கந்தையா', 'விதானையார் வீட்டில்' ' மிஸ்டர் குகதாஸன்' ஆகியன மேடை நாடகங்களாயும் வெற்றிபெற்றன.
ஈழகேசரி,கலைச்செல்வி,ஈழநாடு,தமிழின்பம்,வீரகேசரி,தினகரன் ஆகிய ஈழத்து இதழ்களிலும், கலைமள், சூறாவளி, மணிக்கொடி,பாரதத்தாய், ச்க்தி, சரஸ்வதி, ஆகிய தமிழக இதழ்களிலும் இவரது படைப்புக்க்கள் வெளியாகின.
எல்லாமாக இவர் முப்பது சிறுகதைகள் வரை எழுதியிருப்பார் இவரது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய ' வெள்ளிப்பாதசரம்' என்ற ஒரே ஒரு தொகுதி 1962 ஆம் ஆண்டு வெளியாகிற்று. பிறநாட்டுக் கதைகளையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலாக இவான் துர்க்கனேவின் ' முதற்காதல்' மட்டும் வெளிவந்துள்ளது.
' மாதவி மடந்தை' , ' மிஸ்டர் குகதாஸன்' என்ற நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன.
இவரது கதைகள் ' கதைக்கோவை' போன்ற திரட்டுகளில் அந்தக் காலத்திலேயே வெளியாகி உள்ளன.
தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்க ளில் ' இலங்கையர் கோன்' முன்னனியில் நின்ற ஒருவர் என்று அப்போதே பாரட்டுப்பெற்றவர். கு.ப.ரா,ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா,வல்லிக்கண்ணன் ஆகியோருடன் எழுதிக்கொண்டிருந்த இவரிடத்தில் கு.ப.ராவின் இலக்கியப்பார்வையும், நடையும் வசப்பட்டிருந்தன. எனினும் நாடக எழுத்தில் பல புதிய சிகரங்களை இவர் தொட்டிருக்கிறார். ஈழத்தமிழர் வாழ்வை மண்மணங்கமழ காவியநயத்துடன் உணர்ச்சி பொங்க சித்தரித்தவர் இவர்.
படைப்புத்துறையி மட்டுமன்றி சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய அழகுக்கலைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தவர் அருங்கலை விநோதர் ' இலங்கையர் கோன்'
சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார்.
காரியாதிகாரியாக பணியாற்றுகிற போது தனது அருமையான பழகு முறையால் சாதாரண மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவரென்று சிறப்பு ' இலங்கையர் கோனு' டைய மானிட நேயத்தை உணர்த்தி நிற்கிறது. இவருடைய படைப்பின் தளமும் எழுத்தின் வசீகரமான வெற்றியும் இதுதான்.
.
கனகசபைப் புலவர்
யாழ்பாணத்துக் கனகசபைப் புலவர் ( 1829 - 1873 ) கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர். விரைந்து கவிதை இயற்றுபவர். திருவாக்குப் புராணம், அழகிரிசாமி மடல் என்னும் நூல்களைப் பழைய மரபை ஒட்டி இயற்றியவர்.
.
வி.கனகசபைப்பிள்ளை
வி.கனகசபைப்பிள்ளை ( 1855 - 1906 ) என்ற அறிஞரும் யாழ்ப்பாணத்துக் குடும்பத்தைச் சார்ந்தவர். தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிந்தவர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த அவர், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், '1800 ஆண்டுகட்குமுன் தமிழர்' என்ற ஆராய்ச்சி நூல் எழுதியும் ஏடுகளை ஆய்ந்தும் தொண்டு செய்தார்.
.
தி.க.கனகசபைப்பிள்ளை
இலங்கை அளித்த வழக்கறிஞர்களுள் தி.க.கனகசபைப்பிள்ளை ( கி.பி. 1863 - 1922 ) என்பவரும் குறிப்பிடத்தக்க இலக்கியத் தொண்டு புரிந்தவர். வடமொழி வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தையும் சுந்தரகாண்டத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணத்தின் பாலகாண்டத்திற்கு உரை எழுதினார்.
.
நா. கதிரைவேற்பிள்ளை
நா.கதிரைவேற்பிள்ளை ( 1844 - 1907 ) மற்றொரு யாழ்ப்பாணப் புலவர். தமிழ்நாட்டில் பல சைவ நூல்களையும் நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். ஒரு நல்ல அகராதியும் தொகுத்தார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார்.
.
கு.கதிரைவேற்பிள்ளை
கு.கதிரைவேற்பிள்ளை ( 1829 - 1904 ) யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்து தொண்டு புரிந்தார்.
.
சிவசம்புப் புலவர்
ஏறக்குறைய அறுபது செய்யுள் நூல்களை இயற்றிய யாழ்ப்பாண அறிஞர் சிவசம்புப் புலவர் ( 1830 - 1909 ) அந்தாதிகள் பல பாடியுள்ளார். எல்லாம் இடைக்காலத் தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றிப் பழைய போக்கில் பாடப்பட்டவை. சில நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.
.
குமாரசாமிப் புலவர்
சுன்னாகம் குமாரசாமிப் புலவர் ( 1854 - 1922 ) வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார்; சாணக்கிய நீதி வெண்பா, மேகதூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை.சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு. சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த நல்ல வரலாற்று நூல். வேறு சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார்.
.
ஆறுமுக நாவலர்
.
யாழ்ப்பாணத்துத் தமிழறிஞருள் சிறப்பிடம் பெற்று வளங்கியவர் ஆறுமுக நாவலர் ( கி.பி. 1822 - 1889 ) . அவர் சிலகாலம் தமிழ்நாட்டுக்கு வந்த சென்னையில் தங்கி தமிழ்த்தொண்டு செய்ததும் உண்டு. சைவ சமயப் பற்று மிகுந்த அவர். பெரிய புராணம் முதலான நூல்கள் பரவுவதற்குப் பெரும் பணி புரிந்தார். சென்று நூற்றாண்டில் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்புக்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப்படுத்தியவர் என்பர். பலர் தமிழ் நூல்கள் படிக்குமாறு படசாலை ஏற்படுத்தியதோடு, அவர்களுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டுத் தருவதற்கு அச்சகமும் வைத்து நடத்தினார். அவற்றை நடத்துவதற்கு ஆகும் பணத்திற்கு வீடு வீடுடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்துத் தமிழ்த்தொண்டு செய்த சான்றோர் அவர். தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் நூல்களை அச்சிட்டுத் தரும் வகையில் சிறந்த வழிகாட்டிய விளங்கினார். மாணவர்களுக்கு உரிய தொடக்கப் பாடப் புத்தகங்களை எளிய தமிழில் இலக்கணப் பிழை அற்ற தமிழில் தாமே எழுதினார்.சைவ சமயத்தை விளக்கிக் கூறும் நூல்களை இயற்றினார். இலக்கணத்தை எளிதில் கற்பதற்கு உதவும் நூல்களும் எழுதினார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரைநடையில் எழுதிப் பலர்க்கும் பயன்படுமாறு செய்தார். வேறு சில செய்யுள் நூல்களுக்கும் நன்னூலுக்கும் உரை எழுதினார். சென்ற ஆண்டில் தமிழில் உரைநடை வளச்சிபெறத் தொடங்கிய சூழ்நிலையில், அதற்கு நல்ல வழிகாட்டிப் பிழையற்ற எளிய உரைநடைத் தமிழை வளர்த்தார். தமிழ் உரைநடையின் தந்தை என்று அவரைக் குறிப்பிட்டுப் போற்றுதல் தகும்.