கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 19 ஜூன், 2007

தமிழரின் வாழ்வியல் சடங்குகள்

சட்ட+அம்+கு=சடங்கு

வாழ்வியல் சடங்குகளில் தமிழர் பேணவேண்டியவைகளை தொகுத்து தருகிறோம்.

*
*



திருமணம்
*
*
இரு மனம் இணைந்தால் திருமணம் என்பார். சில வேளைகளில் பெற்றோரின் கட்டாயத்தில் இருமனம் இணையாமலே திருமணம் நடந்தேறுகின்றது. ஆனாலும் திருமணம் என்ற சொல் தெய்வத் தன்மையோடு நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற சடங்கு பற்றி ' வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்' என்ற நூலில் அழகாக எடுத்துக்காட்டுகளோடு மு.பெ.சத்தியவேல்முருகனார் எழுதியுள்ளார் அதை தேவை கருதி அப்படியே தருகிறோம்.
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான திருப்பத்தை உண்டு பண்ணுவது. திருமணம் என்கின்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது. திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத்தன்மை என்ற பொருளை உடையது என்று பேராசிரியர் திருக்கோவையாருக்கு உரை செய்யும் போது கூறுகிறார்.
இன்னாருக்கு இன்னார் என்று தெய்வம் ஒரு திட்டம் போட்டு வைத்துள்ளது. அது நமக்குத் தெரிவதில்லை. அதனை இறைவனது மறைத்தல் தொழிலில் ஒன்றாகக்கொள்ளலாம். தெய்வத்தின் இந்தத் திட்டத்தை மீறி எந்தத் திருமணமும் கைகூடுவதில்லை என்பது கண்கூடு.
ஆக, இந்தப் பெண்ணுக்கு இந்த மணமகன் என்று திடீரென்று திருமண உறவு ஏற்படுதில்லை. அதாவது அது திடீரென ஏற்படும் ஒரு வாய்ப்பு அல்ல. எங்கேயோ ஒருவரை ஒருவர் அறியாமல் பிறக்கும் போதே தெய்வத்தின் திட்டம் அரும்பி விடுகிறது. ஆனால் அது நமக்குப் புலப்படுவதில்லை. எப்படியென்றால் ஒரு செடியில் தோன்றுகின்ற அரும்பு அதிகமாக நமக்கு புலப்படுவதில்லை. ஆனால் அந்த அரும்பே வளர்ந்து மொக்குளாகி முறுக்கிதழ் நீங்கி மலரும் போது மணம் வீசி மலரைக் காட்டிக்கொடுக்கிறது. அது போல புலப்படாமல் அரும்பாய் மறைந்து இருந்த தெய்வத்தின் பங்கு மலந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது தெய்வத்தின் மணம் அங்கே கமழ்கிறது.
அதனால் தான் அதனைத் திருமணம் என்று பெயரிட்டனர் பெரியோர். நம்மால் மீற முடியாத தெய்வத்தின் மணம் அங்கே வீசுவதால் அது திருமணம்.
இப்படி ஒரு பெரும் பொருளை வடமொழியில் கூறும் கல்யாணம் என்ற சொல்லில் காணமுடியாது. wedding என்ற ஆங்கிலச் சொல்லில் காணமுடியாது. திருமணம் என்று பெயர் வைத்த தமிழனின் கூர்த்த மதியே மதி.
*
*
தாலி
*
*
தாலி கட்டுதல் தமிழ் வழிவந்த திராவிட குடினருகே உரியது. இது வடவருக்கு உரிய பண்பாடு அல்ல. தாலி பற்றியும், ஏன் தாலி கட்டும் முறையை தமிழர் ஏற்படுத்தினார்கள்? என்பது பற்றியும் பார்ப்போம்.
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ள உரையில் (திரணதூமாக்கினியர்) தொல்காப்பியர் கூறுவதாவது
.
" பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப "
.
அரண் - அரணம் - கரணம்
அரண் ( காப்பு ). ஒ.நோ காப்பரண், முன்னரண், அரண்மனை
அரண் என்பதே கரணம் என்றே திரிந்தது.
.
ஐயா என்போர் பொறுப்பில் உள்ள சான்றோரே அன்றி பூசை செய்யும் பூசாரிகளல்ல.
அதனால் தான் பாரதியும் பாடினார் "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே"
இனி..
.
மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் ஆணும் பெண்ணும் தாங்கள் விரும்புவோரை தெரிவு செய்து கூடி வாழ்ந்தார்கள். கூடி வாழும் போது முன்னையவளை விட ஒருத்தியை மனதுக்கு பிடித்து விட்டால் அவளோடு சென்று விடுவான். தன் முதல் மனைவியை தனக்கு தெரியாது என்றும் வாய் கூசாமல் கூறிவிடுவான். இப்படியே போனால் குமுகம் சீரழிந்து விடுமே என்று தான் பொறுப்புள்ள சான்றோர் தாலி கட்டும் சடங்கை கொண்டு வந்தனர். அதாவது திருமணம் செய்யும் ஆண் தான் மணந்து கொள்ளும் பெண்ணிடம் உறுதி மொழி கொடுக்கவேண்டும். அதை ஓலையில் எழுதி மாழை குழையில் இட்டு மஞ்சள் கயிற்றில் கோர்த்து கட்டவேண்டும். பெண்ணுக்கு பாதுகாப்பானது அவள் கழுத்தே என்று கழுத்தில் ஆணால் கட்டப்பட்டது. அதுவே தான் தாலி எனப்பட்டது.
.
தாலி என்ற சொல் பற்றி ஆராய்வோம்.
தாலம் என்பது பனையையும் அதன் ஓலையையும் குறித்தது. தாலம் - தாலி எனப்பட்டது.
.
தாலி பெண்ணுக்கு மட்டுமல்ல நம் பண்பாட்டுக்கும் வேலி.
.
ஆண் என்ற சொல்லின் வேர் ஆள்( ஆள்பவன் ) என்பதே . பெண் என்ற சொல்லின் வேர் பெள்-விருப்பம் அதாவது பெண் என்பவள் ஆணால் விரும்பப்படுபவள் என்பதே.
.
ஆள்>ஆண்>ஆண்மை>ஆணவம்
பெள்>பெண்>பெண்மை
.
பெண்ணே காப்பாற்றப்பட வேண்டியவள். எந்த ஒரு ஆணும் பெண் தன்னை காப்பாற்றுவதை
விரும்பமாட்டான் என்பதை தொல்காப்பியரும் கூறியிருத்தல் காண்க.
'வினையே ஆடவர்க்கு உயிரே'
.
இதிலிருந்து கூறியவற்றால் இக்காலத்திலோ இனி வருங்காலத்திலோ எந்தப்பெண்ணும் தாலியை ஆடவர் கழுத்தில் கட்டும்படி கூறமாட்டாள். தான் கழுத்தில் கட்டிய தாலியை பேணிக்காக்கக் கூடியவளாக வளர்ந்துகொள்வாள்.

கருத்துகள் இல்லை: