கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 1 டிசம்பர், 2007

திருவள்ளுவமாலை


குறளிங்கு கூறாத விடயமில்லை
குணம் காக்கும் நூலது போல் எதுவுமில்லை
அறம் நிறைந்த வாழ்வுதரும் பொய்யேயில்லை
அதை அறியாக் கல்வியெனில் பயனேயில்லை
ஆட்சிமுறை வாழ்க்கைநெறி அனைத்தும் கூறும்
அன்புவழி இன்பநிலை அதுவும் பேசும்
வீழ்ச்சியற்ற வாழ்வுபெற வழியைக் காட்டும்
விரும்பியதைக் கற்றுவிடு அறிவைத் தீட்டும்
தூவல்>பா.சிவபாலன்.(இலங்கை)

சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன் அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைகுத்தில்; - காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர்முப் பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு

- மருத்துவன் தாமோதரனார் -

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார் அன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்?

- சீத்தலைச் சாத்தனார் -

ஒன்றே பொருள் எனின் வேறுஎன்ப; வேறுஎனின்
அன்றுஎன்ப ஆறு சமயத்தார்; - நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

- கல்லாடர் -

அறம்பொருள் இன்பம்வீடு என்னும் அந்நான்கின்
திறம்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை; அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடை யார்.

- மாமூலனார் -

தானே முழுது உணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோருக்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்றும் மற்று!

- நக்கீரர் -

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாண் அடியால்
ஞாலம் முழுதும் நயந்துஅலந்தான் - வால் அறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாஅடியால் வையத்தார்
உள்ளுவஎல்லாம் அளந்தார் ஓர்த்து.

- பரணர் -

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனைஅளவு
வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

- கபிலர் -

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைத்து வள்ளுவனாய்த் தந்து உரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னி; வாய் வாழ்த்துக; நல்நெஞ்சம்
சிந்திக்க; கேட்க செவி.

- உக்கிரப் பெருவழுதியார் -

திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க
உருத்திர சன்மர் என உரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்.

- அசரீரி -

நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாற!பின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு.

- நாமள் -

என்றும் புலராது யாணர்நாட் செல்லுகினும்
நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்பேன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

- இறையனார் -

கருத்துகள் இல்லை: