கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

திருவாசகத்தின் ஆறு வரிகளில்..திருவாசகத்தின் ஆறு வரிகளில் அண்டம் விரிகிறது!
ம.செந்தமிழன்

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின்’ என்பது திருவாசகம்.

’அண்டமாகிய இந்தப் பிரபஞ்சத்தின் காட்சியை விளக்குவதென்றால், இங்கே உள்ள பொருட்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்து அழகுற திகழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையோ நூறு கோடிகளுக்கும் மேற்பட்டது. இந்த எண்ணிக்கையும் நிலையாக இருப்பதில்லை அவை விரிந்துகொண்டே செல்கின்றன. இது எப்படி இருக்கிறதென்றால், வீட்டுக் கூரையில் உள்ள சிறிய ஓட்டை வழியாக வெயில் நுழையும்போது, அந்த நீண்ட குழல் வடிவமான ஒளியில் பல கோடி தூசுத் துகள்கள் சுழலுமல்லவா! அதைப்போல அண்டம் முழுவதும் அணுத் துகள்களும் அவற்றாலான பெரும் பொருட்களும் எல்லை வகுக்கவே இயலாத வகையில் சுழல்கின்றன. இந்த அண்டத்தின் அணுக்களில் சிறியதாகத் தெரிபவன் யாரென்றால் யாவற்றுக்கும் பெரிதான இறைவன்’ – என்பது இப்பாடலின் கருத்து.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய இதே கருத்தைத்தான் நவீன அறிவியல் இப்போது செயற்கைக்கோள் உதவியுடனும் தொலைநோக்கிகள் துணையுடனும் முன்வைக்கிறது.

நவீன இயற்பியலின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. ஒன்று, பகுதிக் கோட்பாடு (quantum theory). மற்றொன்று, தொடர்புக் கோட்பாடு (relativity theory).

பகுதிக் கோட்பாட்டின் சாரம், ‘பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களில் ஒளி பயணித்துக் கொண்டுள்ளது. இந்த ஒளி இடைவிடாத அலைபோலப் பயணிப்பதில்லை.
ஏனெனில் ஒளி என்பது ஒரே கற்றையான பொருள் அல்ல. அது எண்ணற்ற துகள்களின் தொகுப்பு. ஒவ்வொரு ஒளித்துகளுக்கும் இடையில் இடைவெளி உள்ளது.

இவ்வாறு பகுதி பகுதியாக பயணிக்கும் ஒளிக் கற்றைகள் பொதுப் பார்வைக்கு ஒரே அலைபோலத் தெரிந்தாலும் உண்மையில் அவை தனித் தனித் துகள்கள்தான். எல்லாத் துகள்களுக்கும் இடையில் வெளி (space) உள்ளது. இந்த வெளி நிலையானது அல்ல, விரிந்துகொண்டே இருக்கிறது’

’இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின்’ எனும் இரு வரிகள் மிக அழகாக இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றன.

‘வீட்டினுள் நுழையும் ஒளிக் கற்றையைப் பாருங்கள். அது பொதுத் தோற்றத்தில் ஒரே ஒளிக் கற்றைபோல் இருக்கும். ஆனால், அக்கற்றையின் உள்ளே எண்ணற்ற நுண் அணுத்திரள்கள் இருக்கின்றன. இதேபோல் அண்டம் முழுவதும் ஒளிக் கற்றையின் பயணம் நிகழ்கிறது. வீட்டில் விழும் ஒளிக் குழலில் நுண் துகள்கள் இருப்பதைப் போல அண்டத்தில் பெரிய கோள்களும் பிற பொருட்களும் உள்ளன. இறைவன் பெரியவன். ஆனாலும் அவனைச் சிறியோனாகவும் காண இயலும். எப்படி என்றால், வீட்டுக் கூரையிலிருந்து கசியும் ஒளியில் துகள்கள் மிதப்பதும், அண்டத்தில் பெரும் பொருட்கள் மிதப்பதும் ஒரே விதமாக இருக்கிறதல்லவா. அதைப் போல இறைவன் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கிறான்’

தொடர்புக் கோட்பாடு என்பது, ’அண்டத்தில் உள்ள பொருட்களைத் தனித்தனியே புரிந்துகொள்வதும் மதிப்பிடுவதும் சாத்தியமற்றது. அதாவது, பூமி எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை, பூமியை மட்டுமே ஆய்வு செய்து கூறிவிட இயலாது.அவ்வாறு கூறினால் அது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கும். ஏனெனில் பூமியின் வேகம் சூரியக் குடும்பத்தில் உள்ள பிற கோள்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் இயக்கம் பால்வெளியின் இயக்கத்தைச் சார்ந்துள்ளது. பால்வெளியின் இயக்கமோ அண்டத்தின் கோடிக் கணக்கான பகுதிகளைச் சார்ந்துள்ளது. இவ்வாறு ஒன்றோடு ஒன்று சார்ந்தும் தனித்தும் உள்ளன. இவை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுள்ள வெளி (space) எப்போதும் விரிவடைந்துகொண்டே இருக்கிறது. அதாவது, எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமாக இருக்கும் வெளி, நிலையாக இல்லாமல் விரிந்துகொண்டே உள்ளது. ஆகவே, பிரபஞ்சத்தை மதிப்பிடுவது துல்லியமான (absolute) செயலாக ஒருபோதும் இருக்காது. மாறாக, ஒன்றுக்கு ஒன்று ஒப்பிட்டுக் கூறுவதே சாத்தியம். இவ்வாறு ஒன்றோடு மற்றொன்று கொண்டுள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதால், இதன் பெயர் தொடர்புக் கோட்பாடு’

” அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்ற வாசகங்களுக்கு வேறு எந்தப் பொருளும் இல்லை.

நேரடியாகவே பின்வரும் செய்திகளைத் தாங்கியுள்ளன இவ்வாசகங்கள்:
1. அண்டம் என்பது ஒன்றல்ல, பல்வேறு பகுதிகளை அடக்கியது. ஆகவே ’அண்டப் பகுதி’ எனப்பட்டது.

2. ’உண்டை’ எனும் சொல்லுக்கு ‘உருண்டை, கூட்டம்’ உள்ளிட்ட பொருட்கள் உண்டு. உருண்டை வடிவமான கூட்டம் என்பதை உண்டை எனலாம்.

3. ‘பிறக்கம்’ எனும் சொல்லுக்கு, ‘ஒளி, உயர்ச்சி, குவியல்’ ஆகிய அர்த்தங்கள் உள்ளன.

4. ஆக, ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என்றால், ”எண்ணற்ற அளவில் உள்ள அண்டத்தின் ஒரு பகுதி, உருண்டை வடிவத்தில் கூட்டம் கூட்டமாக, ஒளிக் குவியலாக உள்ளது” என்று அர்த்தம்.

5. இந்தக் காட்சியைக் காணும்போது, அது அளவிடுவதற்கே இயலாததாகவும் மேன்மை பொருந்திய காட்சியாகவும் (வளப்பரும் காட்சி) உள்ளது.

6. ’ ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என்றால், பின்வரும் பொருள் கொண்ட வாசகம், ’இந்த அண்டப் பகுதியின் பொருட்கள் யாவும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றுக்கு ஒன்று பொருந்துமாறு நின்றுகொண்டுள்ளன. இதன் அழகை விவரிப்பதானால்...அவை நிலையாக நில்லாமல் நூற்றுக் கணக்கான கோடிகள் எனும் எண்ணிக்கையில் விரிந்துகொண்டுள்ளன’

மேற்கண்ட விளக்கங்களில் ஒரே ஒரு சொல்லைக் கூட மிகைப்படுத்தி நான் எழுதவில்லை. திருவாசகத்தில் உள்ள பொருள் மாறாமல் நேரடியாக விளக்கியுள்ளேன்.

திருவாசகம் இயற்றப்பட்டு ஏறத்தாழ ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பாடல் உள்ள பதிகத்திற்கு ‘திருவண்டப் பகுதி’ எனப் பெயரிட்டுள்ளார் மாணிக்கவாசகர். அதாவது, பெருமைமிகுந்த அண்டத்தைப் பற்றிய பகுதி என்று பொருள். பிரபஞ்சத்தை ‘திரு’ எனும் அடைமொழியால் அழைக்கும் பணிவு திருவாசகத்தின் சிறப்புகளில் ஒன்று.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் திருவண்டப் பகுதி எனும் சொல்லை, ‘Nature and Development of the Universe’ என்று மொழி பெயர்த்துள்ளார். ‘பிரபஞ்சத்தின் இயல்பும் வளர்ச்சியும்’ என்று இதற்குப் பொருள். ஏனெனில், திருவண்டப்பகுதி இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய நுட்பமான விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது.

தமிழர்களின் அறிவியல் மரபிற்கும் இறையியல் மரபிற்குமான சிறந்த உறவை ஏற்படுத்திய பெருமை திருவாசகத்திற்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, இறையாற்றலை ஓர் உருவத்திற்குள் அடக்காமல் உணர்ந்த பெருஞ்சிறப்பும் மாணிக்கவாசகருக்கு உண்டு.

இறையை நோக்கி ‘ஆக்கம் அளவு இறுதி இல்லாய்’ என்றவர் அவர். ’உனக்கென ஒரு வடிவமும் அளவும் முடிவும் இல்லை’ என்பது இதன் கருத்து. ‘ஆணாகி பெண்ணாகி அலியாகி’ நின்றாய் என்றும் இறையைப் பாடியவர் மாணிக்கவாசகர்.
சமயங்களுக்கு அப்பாற்பட்ட பேருண்மைகளைத் தாங்கியுள்ள மந்திரத் தொகுப்பாக திருவாசகத்தைக் காண்கிறேன் நான்.

கருத்துகள் இல்லை: