தமிழிலக்கியத்தில் சிவராமின் ஆளுமையும் தேடலும்11.08.1959 – 28.04.2005தென் தமிழீழத்தின் மட்டக்களப்பில் 1959 ஓகஸ்ட் 11ஆம் நாள் அன்று மகேஸ்வரி அம்மாளுக்கும் புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.
சிவராம் குடும்பத்தினர் அக்கரைப்பற்றில் நிலபுலன் மிகக் கொண்டிருந்தவர்கள். தர்மரட்ணம் வன்னியனார் அங்கு மிகச் செல்வாக்காக வாழ்ந்தவர்.
சிவராமுடனான இக்கட்டுரையாளரின் முதல் சந்திப்பு, கொழும்பு Fred E de Silva நாடக அரங்கில், நடைபெற்ற நாடக விழா ஒன்றின் போது, 1989ஆம் டிசம்பர் மாதம் பத்தி எழுத்தாளர் கே.எஸ் சிவகுமாரன் முகதாவில் நிகழ்ந்தது.
சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம் (வன்னியனார்) 1938ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். சிவராம் அவர்கள் தராகி என்ற புனை பெயரில் ஆங்கிலத்தில் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989இல் எழுதினார்.
அவரின் கட்டுரைகள் வெளிவந்த காலத்தில் நீலன் திருச்செல்வம் அவர்கள், இவரால் எப்படி தேர்ந்த ஆங்கிலத்தில் எழுத முடியும். யாரோ எழுதிக் கொடுக்கிறார்கள் போலும் எனக் கூறினாராம். ஆனால் சிவராம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு கற்றுக் கொண்டிருந்த போதுதான் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டு பல்கலைக் கழகத்திலிருந்து விலகியவர் என்பதும், தந்தையார் அந்தக் காலத்திலேயே கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதும், அவரின் வீட்டு நூலகத்தில் இருந்த அளப்பரிய நூல்களை இளமைக் காலத்திலேயே வாசித்து முடித்தவர் என்பதும் இவருக்குத் (நீலன் திருச்செல்வம்) தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிவராமின் அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான அறிவார்ந்த பார்வை, கட்டுரைகள் பற்றி யாவரும் அறிவர். உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தமை பலரும் அறிந்தவை. ஆனால் அவரது தமிழ் இலக்கிய அறிவு, முயற்சிகள், தேடல்கள் பற்றி சிலரே அறிவர். இக்கட்டுரையின் நோக்கமும் அது பற்றிப் பேசுவதே.
மட்டக்களப்பு வாசகர் வட்டமும், ஆனந்தனும் அந்த நாட்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தன. அவற்றிலும் பிரபலம் வாய்ந்தவை மகாவித்துவான் F.X.C நடராஜாவும் சிவசுப்ரமணியமும். அவர்களை மட்டக்களப்பில் ”படிச்சாக்கள்” என்பர்.
நடராஜா அவர்கள் ”மட்டக்களப்பு மாண்மியம்” வரலாற்று நூலின் மீள் தொகுப்புக் காரணகர்த்தா (அதன் முக்கிய பாகங்கள் 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரரின் நெருக்குவாரத்தில் முன்னர் தொகுக்கப்பட்டது)
இக்கால கட்டத்தில் பட்டதாரியும் மட்டக்களப்பு புள்ளி விபரத் திணைக்களத்தில் பதவியிலிருந்தவருமான மகாதேவாவுடன் மேற்கூறிய இருவரும் நடாத்திய தமிழ் மொழி வகுப்புகளுக்கு சிவராம் செல்லத் தொடங்கினார்.
சம்மாந்துறையில் பிறந்த ஆனந்தன், பொதுக் கல்விப் பத்திர உயர்தரத்தில் (Advanced Level) கிருத்தவமும் இஸ்லாமும் படித்த இந்து ஆவார். தமிழ் இலக்கிய இலக்கணத்தில் பாடம் கேட்ட சிவராம், தனது வலராற்று ஆசிரியருக்குக் கொடுத்த பேட்டியில், ”தொன்மத் தமிழில் எனது ஈடுபாடு அதிகமாக அதிகமாக என்னையறியாமல் அது என்னை ஒரு தமிழ்த் தேசியவாதி ஆக்கியது. இங்கே ஒரு அருமையான மொழி எம் வசம் இருக்கிறது என எண்ணினேன். அரசு அதனை பலாத்;காரமாக அழிக்க ஏன் இடம் கொடுப்பான்? ஆழமாக ஆழமாகத் தமிழைக் கற்க விழைந்த போது, மேலும் மேலும் தமிழ்த் தேசியவாதியானேன்.
எப்படியெனில், தமிழ் மொழியின் செழிப்பைக் கண்டு, தமிழ்க் கவிதைகளின் அழகைக் காதலிக்கத் தொடங்கினேன். இலக்கியத் தமிழின் மாணாக்கனான நான், தொன்மைத் தமிழ்ப் பண்பாட்டின் சுவைஞனானேன்.
1980ஆம் ஆண்டளவில் சிவராமும் இலக்கிய நண்பர்களும் பரிசுத்த மைக்கல் பாடசாலையில் தங்கள் பழைய ஆசிரியர்களான வித்துவான் கமலநாதன், எஸ்.பொன்னுத்துரை(எஸ்.பொ), மகாவித்துவான் F.X.C நடராஜா, சிவசுப்ரமணியம் ஆகியோரிடம், அவர்களின் தமிழறிவைத் தங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டி நின்றனர்.
வித்துவான் நடராஜா சென்னையில் அப்பொழுது இருந்த வாசகர் வட்டம் பற்றிப் பிரஸ்தாபித்தரர். அப்பொழுது மட்டக்களப்பு வாசகர் வட்டம் பிறந்தது. அதில் சிவராம், பி.மகாதேவா யாழ் பல்கலைக் கழக பட்டதாரியான தேவகுகன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.
பின்னர் அது 40 உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்தது. அதில் பாலு மகேந்திரா கூட இருந்திருக்கலாம். ஆனந்தன் இணைந்த பின்பே யாப்பு, நிர்வாகக் குழு போன்றவை தோன்றின. சுப்வராமை மட்டக்களப்பு வாசகர் வட்ட தோற்றத்தின் கர்த்தாவாகக் கருதலாம். ஆனந்தன் இக்காலகட்டத்தில் மலையாள மொழியைக் கற்று, அதன் மூலம் பல சிறந்த கதைகள் கட்டுரைகளைப் படித்து, அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பினை வாசக வட்டத்திற்கு வாசிக்கத் தொடங்கினார். கமுன் (Gamon), சார்த்தே (Sarthe), மோப்பசான் (Maupassant) மற்றும் கோர்க்கி (Gorky) ஆகியோரின் ஆக்கங்களின் பரீட்சயம் வாசக வட்டத்தினருக்குக் கிடைத்தது.
இந்தக் காலகட்டங்களில் வாசக வட்டத்தினர் பல நற்காரியங்களை முன்னெடுத்தனர். உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய வகுப்புகளை நடாத்தினர். புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேச்சாளர்களை அழைத்து பேசச் செய்தனர். நாட்டாரியல், நவீன தெற்காசிய திரைப்படங்கள், மலையாள இலக்கியங்கள் பற்றிய கருத்தரங்குகளை நடாத்தினர். இந்தக் கால கட்டத்தில், பரீட்சைக்குத் தோன்றிய சிவராமும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினால் விலகினார்.
உயர் தரப் பரீட்சைக்குப் பின்னர் பல்கலைக் கழகத்திற்கு புகக் காத்திருந்த வேளையில் சிவராம் தமிழ் பற்றிய ஒரு நுட்பமான கட்டுரையை எழுதி, தனது அறிவுலக ஆதர்ச நாயகனாகத் திகழ்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
அக்கட்டுரை பின்வருமாறு அமைந்திருந்தது:
பழந்தழிலில் உள்ள பெயரெச்சங்களில் காணப்படுகின்ற சொற்புணர்ச்சி முறைத் தொழிற்பாடுகளும், சொற்பொருளியல் கூறுகள் சிலவும் என்று தலைப்பிட்டு, பெயரெச்சங்களின் சொற்பொருள் தனித்தன்மைகள், சங்கத் தமிழ்க் கவிதைகளில் சொல்லிணக்கக் கூறுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதோடு, தொன்மைத் தமிழைக் கற்கும் போது, எழக்கூடிய மொழியியற் புதிர்கள் பற்றி ஆராய்வதற்கு எத்தகைய ஆராய்ச்சி முறைமைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த பிரச்சினைகள் குறித்தும் சிவராம் குறிப்பிட்டுள்ளார்.
இதனை வாசித்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், தமிழ் மொழிப் பேராசிரியர்களே அப்போதுதான் இது குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ள ஒரு விடயத்தைப் பற்றித் தான் முன்பின் தெரியாத இளைஞர் ஒருவர் கட்டுரை எழுதியுள்ளமையை வியந்துள்ளார். தன்னுடன் படியினில் நின்றபடி அக்கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்த பேராசிரியர் கைலாசபதியிடம் அவர் யாரெனக் கேட்டபோது, தம் முன்னைநாள் தமிழ்ப் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் மருகர் என்றிருக்கிறார் அவர். பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது போல தமிழ் இனத்தின் வரலாற்றில் அதீத அக்கறை கொண்டவராக சிவராம் திகழ்ந்தார். அவரின் வாசிப்பும் தேடல் வீச்சும் ஆழமும் அகலமும் மிக்கது.
புறநானூற்றில் தொடங்கி சங்க கால இலக்கியங்கள், தென்னிந்திய சமூக குழுமங்களின் வரலாற்றில் இதுவரை பார்க்கப்படாத வீர, போரியல் மரபினையிட்டு அவர் கவனம் செலுத்தினார். அது பற்றிய ஆய்வில் அவரின் வாழ்க்கை கொடூரமான முறையில் 28.04.2005இல் முடிவுக்கு வரும் வரை ஈடுபட்டிருந்தார்.
சிவத்தம்பி குறிப்பிடுவது போல புதுமைப்பித்தன் வேறொரு தருணத்தில் கூறியவாறு, அவர் ஒரு அழிவற்ற வானத்துத் தாரகை போல இப்பூமியில் வந்துதித்து அதே போலவே மறைந்தார்.
-காசிநாதர் சிவபாலன்