வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினை
கையினாலுரை காலம் இரிந்திட
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள் தலை கொண்டு பணிகுவாம்
______
பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாநீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தந்றுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்;
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலைய ளமும்துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துவமே.
சதுர்மறையா ரியம்வருமுன் சாலுலகே நினதாயின்
முதுமொழிநீ முதலிலியா மொழிகுவதும் வியப்பாமே.
பத்துப்பாட் டெண்தொகையே பகுத்தறிந்து பற்றினவர்
எத்துணையும் பற்றுவரோ இலக்கணமில் பொய்க்கதையே.
வாள்ளுவர்செய் திருக்குறளை மறவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுமுதலா ஒருகுலத்துக் கொருநயனே.
-
மனோன்மணீயம் - சுந்தரம்பிள்ளை