கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 நவம்பர், 2007

தமிழிலக்கிய வரலாறு

பழங்காலம்
*
கழக ( சங்க ) இலக்கியம்: கி.மு 500 முதல் கி.பி 200 வரையில் அகம் புறம் பற்றிய பாட்டுகள்.
*
அற ( நீதி ) இலக்கியம்: கி.பி 100 முதல் கி.பி 500 வரையில் திருக்குறள் முதலிய நீதி நூல்கள். கார்நாற்பது முதலிய வெண்பா நூல்கள்.
*
பழைய வனப்புகள் ( காப்பியங்கள் ) : சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் முதலியன.
*
இடைக்காலம்
*
பத்தி ( பக்தி ) இலக்கியம்: கி.பி 600 முதல் 900 வரையில் நாயன்மார் ஆழ்வார் பாடல்கள். கலம்பகம் முதலிய பல வகை நூல்கள்.
*
வனப்பு ( காப்பிய ) இலக்கியம் : கி.பி 900 முதல் 1200 வரையில் சீவகசிந்தாமணி, பெருங்கதை, முதலிய சமணபௌத்த நூல்கள். இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள். சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், ஔவையார் முதலியவர்கள். உலா பரணி பிள்ளைத் தமிழ்.
*
உரைநூல்கள்: கி.பி 1200 முதல் 1500 வரையில் இலம்பூரணர், பேராசிரியர் முதலியவர்கள். வைணவ விளக்க நூல்கள், சைவசித்தாந்த அளவை( சாத்திர) நூல்கள், சிறு நூல்கள், தனிப்பாடல்கள்.
*
புராண இலக்கியம்: கி.பி 1500 முதல் 1800 வரையில் புராணங்கள், தலபுராணங்கள். இசுலாமிய இலக்கியம். கிறித்தவர் தொண்டு, வீரமாமுனிவர் முதலானவர்கள். உரைநடை வளர்ச்சி.
*
இக்காலம்
*
பத்தொன்பதாம் நூற்றாண்டு: கிறித்தவ இலக்கியம். இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள். நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி.
*
இருபதாம் நூற்றாண்டு: பாரதி, கல்கி, புதுமைப்பித்தன். சிறுகதை, நாவல், நாடகம், வாழ்கை வரலாறு, கட்டுரை, ஆராய்ச்சி .........
*
**
இலங்கை
.
பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்துவருகின்றது. இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் கிழக்குப் பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுக்கு முன்பே ஈழத்துப் பூதந்தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வள்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் கழக ( சங்க ) இலக்கியத்துள் சேர்ந்துள்ளன. ( ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் தமிழ்ச்சொல்) இலங்கையின் ஆட்சிமொழியாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழே இருந்து வந்தது. சிங்களவரும் தமிழ் கற்றுவந்தனர். சிங்களவரில் சிலர் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளார். ஆட்சி புரிந்து வந்த சிங்கள அரசர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பத்தம் செய்து கொண்ட காலத்திலும் தமிழிலேயே கையெழுத்து இட்டனர். ஆகையால் நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியம் இலங்கையிலும் வளர்ச்சி பெற்றுவந்ததில் வியப்பு இல்லை.
.
இலங்கைத்தமிழ் நூல்கள்
.
வடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பவரால் ( பதினாறாம் நூற்றாண்டில் ) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்துநானூறூ செய்யுள்கொண்ட காப்பியம் அது. தமிழ் நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையில் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை உலா கலம் பகம் சதகம் தூது அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம் , கோணாசல புராணம், புலியூர்ப்புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப்புராணம் என்பனவும் இலங்கையில் பிறந்தவைகளே. சூது புராணம் வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது தாசியின் வாழ்வு பற்றியது. கிறித்தவ சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன. நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறைய பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்குக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகை பக்திப்பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகின்றார்கள்.

கருத்துகள் இல்லை: