கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

இசைத்தமிழ் வரலாறு


இசையமுதம் – தொடர் - 03


“இசை!”

“சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்....”

திருநாவுக்கரசரின் தாய்மொழி தமிழாதலின்
“தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்”
என்று பாடுகின்றார்.

முன்னோர்களின் பாக்கள் யாவும்,
இன்னிசை கலந்தபின்பே உயர்வான அர்த்தங்களை
மனதிற்குப் புலப்படுத்தி
எம்மை ஆனந்தப் படுத்துகின்றன.

நாகப்பாம்பு பாம்பாட்டியின் மகுடியின் இனிய நாதத்தைக்கேட்டுத் தன்னை மறந்து ஆனந்தத்தினால் படம்விரித்தாடுகின்றது.

கீதை நாயகனின் இனிய புல்லாங்குழல் ஓசை கேட்டு,
மாடுகள் பின் செல்லுகின்றன.

இனிய ஓசையுடைய பட்சிகள், அதிகாலையில் விழித்துப் பாடுகின்றன.

தாயின் தாலாட்டைக் கேட்டு, மடியில் தவழும் மழலை
தன்னை மறந்து துயில் கொள்ளுகின்றது.

நாரதர், அநுமார், இராவணன் முதலியவர்கள் இசையைக் கொண்டே இறைவனின் அருளைப் பெற்றார்கள்.

இசையானது மனதைச் சாந்தப்படுத்தி,
தெய்வத்தோடு ஒற்றுமைப்படச் செய்கின்றது.

சகல நற்குணங்களையும் வளர்த்துத் தெய்வபதம்
பெறச் செய்கின்றது.

இம்மேம்பாடுடைய இசையைப் பயிற்சிக்கும் எவரையும்
அது உயர்த்தி வைக்கும்.

சகல கலைகளிலும் செல்வத்திலும் தெய்வபக்தியிலும் விருத்தியடையச்செய்யும்.

இத்தகைய இசையை அற்பமாக நினைத்து
உலகியல் வழிகளில் உபயோகப்படுத்துகின்றவர்கள் புன்னெறியடைந்து மறைந்து போவார்கள்.

தெய்வத்தைத் துதிப்பதையே முதன்மையாகக்கொண்ட
நம் முன்னோர்கள் இசையின் நுட்பத்தைப்பற்றி மிக விரிவாக எழுதியிருக்கின்றார்கள்.

எழுதப்பட்டவைகள் இக்காலத்தில் பெரும்பாலும் அழிந்தும், தெளிவாக அறிந்து கொள்வதற்கு அரிதாகவும் இருக்கின்றது.

தொல்காப்பியம் என்பது அகத்தியருடைய மாணாக்கனான மதுரைத் தொல்காப்பியரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கணமாகும்.

80,000 சூத்திரங்களடங்கிய பேரகத்தியம் என்னும் அகத்தியருடைய இலக்கணத்தைச் சுருக்கி இவர் 8,000 சூத்திரங்களால் தமது இலக்கண நூலை எழுதினார்.

தொல்காப்பியம் முழு நூலும் எழுத்து சொல் யாப்பு என்னும் மூன்று பிரிவுகளையுடையதா யிருக்கவேண்டும்.

இவைகளில் கடைசிப்பிரிவு பூரணமாய்க் கிடைக்கவில்லை. நச்சினார்க்கினியர், இளம்பூரணர், சேனாவரையர் என்ற மூவர் தொல்காப்பியத்துக்கு உரை யெழுதியிருக்கிறார்கள்.
தற்காலத்தில் வழங்கும் 1612 சூத்திரங்கள் மிகச் சொற்பமென்றே சொல்லவேண்டும்.

மீதியான 6,388 சூத்திரங்கள் அழிந்துபோயினவென்றே நினைக்க இடமிருக்கின்றது.

இப்படி அழிந்துபோன தொல்காப்பியம், பூர்வ தமிழரின் வழக்க ஒழுக்கங்கள், அரசமுறைமைகள், நிலத்தின் பாகுபாடுகள் வீணையின் வகைகள் முதலியவைகளைப் பற்றி மிகத் தெளிவாகச் சொல்லுகின்றது.

தென்னிந்திய இசையின் நுட்பத்தையும்
அதன் பூர்வீகத்தையும் நாம் அறியவேண்டுமானால்
இசைத்தமிழையும் நாடகத் தமிழையும் தன் அங்கமாகக்கொண்டு முத்தமிழ் என்று பெயர் வழங்கும் தமிழ் மொழியைப் பற்றி நாம் சற்று விசாரிக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

தமிழ் மொழியினது தொன்மை

தமிழ்மொழியின் காலமே தென்னிந்திய இசையின் காலமும் ஆகும்.

தமிழ் மொழிக்குரிய இனிமையே தென்னிந்திய இசையின் இனிமையுமாகும்.

தமிழ்மொழி எவ்வாறு ஏனைய அன்னிய மொழிகளோடு கலவாத தனித்த மொழியாக விளங்குகின்றதோ
அவ்வாறே தென்னிந்திய இசையும் ஏனைய இசைகளோடு கலவாமல் தனித்த விதிகளைக் கொண்டு விளங்குகின்றது எனலாம்.

ஏனைய மொழிகளையும் ஏனைய இசைகளையும் தரம் குறைக்க வேண்டுமென்பது எமது நோக்கமல்ல.

உலகச் சரித்திரங்கள் எழுதப்படுவதற்கு முன்னும்
மற்றத் தேசத்தார் நாகரீகமுடையவர்களாகுவதற்கு முன்னும், அழிந்துபோன லெமூரியாக் கண்டத்திலுள்ளோர் நாகரீகமுடையவர்களாயிருந்திருக்க வேண்டுமென்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

அக்கண்டத்திலுள்ள தென்மதுரையும், அதில் அரசாண்டு வந்த பாண்டிய மன்னர்களும், சங்கப்புலவர்களும், அவர்கள் பேசிய மொழியாகிய தமிழும், மிகுந்த தொன்மையும் தனிச் சிறப்பும் வாய்ந்தவையாகும்.
“தமிழ்” என்னும் பதத்தின் முதல் இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த “தமி” என்னும் முதனிலையானது ஒப்பின்மை, தனிமை என்றும், “தமிழ்” என்னும் பதமானது இனிமை, என்றும் அர்த்தப்படுகின்றது.

"திராவிட மொழிகள், சமஸ்கிருத மொழிக்கு வெகு காலத்துக்கு முன்னுள்ளவை யென்பதில் சந்தேகமேயில்லை.

ஆரியர் இந்தியாவிற்குள் வருவதற்குமுன் இந்து தேசம் முழுவதிலும் பேசப்பட்ட மொழி தமிழ் என்றே அறிய முடிகின்றது.

எபிரேய மொழியின் எழுத்துக்களிலிருந்து
சில கிரேக்க எழுத்துக்களும்,
கிரேக்க மொழியின் எழுத்துக்களிலிருந்து
பாலி மொழியின் எழுத்துக்களும்,
பாலி மொழியின் எழுத்துக்களிலிருந்து
சமஸ்கிருத மொழியின் எழுத்துக்களும்,
அவைகளிலிருந்தே பிராகிருத மொழியின் எழுத்துக்களும் தோற்றம் பெற்றன என்றும்,

அம் மொழிகளின் வார்த்தைகள் ஒன்றிற்கொன்று தொடர்புடையனவாய் இருக்கின்றனவென்றும் மொழிவல்லுநர்கள் முடிவு செய்கின்றனர்.

தமிழ்மொழியின் தோற்றத்தையும் அதன் தொன்மையையும் அவர்களால் கணித்துவிட முடியவில்லை.

மிகப்பூர்வமாயுள்ள இத்தமிழ்மொழி, அதன் பின்வந்த வேறு எந்த மொழிகளாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சமஸ்கிருத மொழியானது தமிழ்மொழியில் எவ்வித மாறுதலையும் உண்டாக்கமுடியாமல், இன்றும் ஒரு அன்னிய மொழியாகவே இருந்துவருகிறது.

தமிழ்மொழியென்று சொல்லவுங்கூட வெறுத்த ஆரியர்,
திராவிட மொழியென்று பெயர் வைத்தார்.


இசையமுதம் – தொடர் - 04



முத்தமிழ்
**************
இயல் (இயற்தமிழ்)
இசை (இசைத்தமிழ்)
நாடகம் (நாடகத்தமிழ்)
ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் ஆகும்.

மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.

இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ்.
இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ்.
கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ்.

இயல் (இயற்தமிழ்)
****************************
இயல் என்னும் தமிழ், இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் என்று வகைப்படுத்தபடும்.

தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியத்தை மொழிப்புலம் என்று குறிப்பிடுகிறது.

மொழிப்புலத்தில் பேசப்படும் வழக்கும், எழுதப்படும் செய்யுளும் அடக்கம் என்கிறது.

இந்தப் புலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று படிநிலைகள் உள்ளன.

இவற்றைச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் என அது குறிப்பிடுகிறது. செந்தமிழ் இயற்கை என்பது இயல்.

இசை (இசைத்தமிழ்)
****************************
செவிவழிபுகுந்து மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் ஒலிதான் இசை என்பதாகும்.

இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்றும் பொருள் இருக்கிறது.

ஒழுங்கான கட்டுபடுத்தப்பட்ட இனிய ஒலியை இசையாகும்.

பிறப்புமுதல் இறப்புவரை இசை எம்முடன் பயணிக்கின்றது.

தாலாட்டாக ஆரம்பித்து இறப்பில் ஒப்பாரியாக இசை விரியும் பரிமாணங்கள் அடர்த்தியானவை.

அகம், புறம் இரண்டினையும் ஐக்கியப்படுத்தி ஒருமித்த தன்மையில் இவற்றில் ஊடுருவி உள்ளம், உடல் இரண்டினுக்கும் விவரிக்க இயலாத சுகமான அனுபவத்தை வழங்கக்கூடியதும் இசை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

நாடகம் (நாடகத்தமிழ்)
****************************
நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து என்று வழங்குகிறது.

கூத்து ஆடுவோர் கூத்தர் கூத்தர் எனப்பட்டனர்.
கூத்து அகக்கூத்து, புறக்கூத்து, என இரு வகைப்படும்.

அகக்கூத்து எனபது வீட்டுக்குள் ஆடப்படும் வரிக்கூத்து. புறக்கூத்து பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறுவது.

கூத்து தமிழர்களின் பாரம்பரிய நாட்டர் கலை வடிவங்களில் ஒன்று.

கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலையாகும்.

கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன.
முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது.

அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடியவை இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தக் கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக அமைந்துள்ளன.

தமிழர் இசை
*********************
பரதமுனிவர்,தமது நாட்டிய சாத்திரம் என்னும் நூலில் தென்னாட்டுமக்கள் பாட்டிலும் பல இசைக்கருவிகள் வாசிப்பதிலும், கூத்திலும் மிக்கதிறம் வாய்ந்தவர்கள் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

அவர்குறிப்பிட்டிருப்பது பண்டைய தமிழ் இசையே என்பதும் பண்டையதமிழிசையே இன்றைய கர்னாடக சங்கீதத்திற்கு தாயாகத் திகழ்ந்தது எனபதும் அனைத்து ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்தாகும்.

தொலகாப்பியத்தில் மக்கள்தம் தொழிலைச்செய்ய உதவும் கருவி இசை ஒன்றைப் “பறை” என்றும்,
பொழுதுபோக்கிற்கான கருவி இசையை “யாழ்” என்றும் குறிப்பிடுகின்றார்.

எட்டுத்தொகை சேர்ந்த பரிபாடல் பண்ணுடன் கூடிய,
70 இசைப்பாடல்களைக்கொண்ட ஒரு தொகுப்பாகும்
ஆனால் நமக்கு 20 பாடல்களே கிடைத்திருக்கின்றன.

மூவேந்தர்களின் அவையில் தமிழ் இசை பெரிதும் போற்றப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் யாழ் ஆசிரியன் மற்றும் குழல் ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்களை சிறப்பாக எடுதுரைக்கிறார்.
103 பண்களின் பெயர்கள் தமிழர் இசையில் விளங்கியதை சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன.

கிபி 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 6ஆ ம்நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றுக்கும் தமிழ் இசைக்கும் இருண்டகாலம் என்று கூறப்படுகிறது.
கிபி ஆறாம் நூற்றாண்டு சமணர்காலத்தில், சமணர் இசையை வெறுத்ததால் பல இசை நூல்கள் அழிந்து போய்விட்டன.

கிபி ஏழு, எட்டு, ஒன்பதாம்நூற்றாண்டுகளில், தேவார திவ்ய பிரபந்தங்கள் தமிழில் தோன்றின.

ஆழ்வார்களும், நாயன்மார்களும் பண்ணோடு பாடிய சிறந்த தமிழ்ப்பாடல்கள், தமிழுக்குக்கிடைத்த அரும் புதையல்களாகும்.

மணிமேகலை சீவகசிந்தாமணி பெரியபுராணம திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களில் பல இசைக்கருத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழர் இசை எனும்போது தமிழ்மொழி மட்டுமல்ல தமிழ்ப்பண்பாட்டினையும் சேர்த்துதான் நாம் காணவேண்டி உள்ளது.

மொழியிலிருந்து, இசையைப்பிரிக்கமுடியாது, அதனால்தான் இசைத்தமிழ் என்கிறோம்.

நான்குவகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தவர் தமிழர். நான்கிற்கும் கருப்பொருள், உரியபொருள் வகுத்தது
நம் தமிழ் மரபு.

நால்வகை நிலங்களுக்குமான நான்கு பெரும்பண்கள் உருவானது. பண்களே, காலப்போக்கில் ராகங்களாக வளர்ச்சியடைந்தன பண்ணென்பது பாடலின் இசைவடிவம் அதை “மெட்டு” என்றும் கூறலாம்.

நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்ணை “பாலை” என்றழைப்பர்.

தமிழர் இசையானது, அடிப்படையில் இன்னிசை( மெலொடி) யானது, அதுதான் நமக்கு அடிப்படையான சுவையாகும்.

சம்பந்தர் பல இடங்களில் ’இன்னிசை’ என்கிறார் சுந்தரர்,’ நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தன் ’என்கிறார்.

15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழ்பாடல்களில், பலவிதமான தாள எண்ணிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

18ஆம் நூற்றாண்டில் அருணாசலக்கவிராயர் “இராம நாடகம்” என்னும் இசைநாடகத்தை தமிழில் இயற்றினார்.

திரிகூடராசப்பகவிராயர் “குற்றாலக்குறவஞ்சி” என்னும் மிக அற்புதமான இசைநாடகத்தை இயற்றினார்.

19ஆம் நூற்றாண்டில் கவிகுஞ்சரபாதி, அண்ணாமலைரெட்டியார், (காவடிச்சிந்தின் தந்தை) ராமலிங்க அடிகளார், பாரதியார் பாரதிதாசன் போன்றவர்களின்பாடல்கள், தமிழரின் இசைஎனும் பாரம்பரியத்திற்கு வலிமையும் பெருமையும் சேர்த்த பாடல்கள் என்பதில் ஐயமில்லை.

ஆப்ரஹாம் பண்டிதர் சேக்கிழாருக்குப்பின் தமிழர் இசைக்கு ஆக்கம் தந்தவர் ஆவார்.

இவரது அரியமுயற்சியால் “கருணாமிர்தசாகரம்” என்னும் இசைத்தமிழ்நூல் நமக்குக்கிடக்கப்பெற்றது.

விபுலானந்த அடிகள் பல ஆண்டுகாலம் இடைவிடாது ஆராய்ந்து “யாழ்நூல்” என்ற அரிய நூலை இயற்றினார்.

பண்டைத்தமிழர் கண்டுணர்ந்த யாழினை மீண்டும் தமிழகத்துக்கு வழங்கிய பெருமை அடிகளாரையே சேரும்.

தமிழர் இசையானது, தமிழைப்போலவே இன்னும் இன்னும் சிறப்பாக இன்றும் திகழ்கிறது.

என்றும் திகழும் என்றாலும் அது மிகையன்று.

இசைத்தமிழ் வரலாறு
***********************
இசையமுதம் – தொடர் - 05
*******************

பழந்தமிழ் இசை - நூல்கள்
****************************
பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும்.

இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன.

இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது.

இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.

கி. பி. 16 ஆம் நூற்றாண்டளவில் சிறப்பு பெற்ற கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

இன்று தழைத்தோங்கி இருக்கும் கர்நாடக இசையே தமிழிசையின் மறுவடிவம் என்றும் கூறுவர்.

சங்க நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.

கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி 10 ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய இந்துசமய மறுமலர்ச்சிக் காலத்தில் அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி பழந்தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தனர்.

தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் கூறுவர்.

ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை.

அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.

முச்சங்க காலத்தில் இசைக்கு இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. கூத்துக்கும் இலக்கணம் எழுதப்பட்டது.

இசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம் என்பர்.
எனவே அகத்தியத்திற்கு முன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்கவேண்டும்.

அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற நூல்களும் காலத்தால் அழிந்தன.

எஞ்சிய நூல்கள் பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

1 – அகத்தியம் (அகத்திய முனிவர்)
***************************************
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும்
ஒரு பெரிய இலக்கண நூல்.

தென்மதுரையிலிருந்த தலைச்சங்கப் புலவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவரால் அருளிச் செய்யப்பட்டது.

இது நச்சினார்க்கினியார் காலத்திலேயே இறந்து போயிற்று.

ஆயினும் இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டும் பழையவுரைகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன.
இந்நூல் பன்னீராயிரம் நூற்பாக்களைக் கொண்டது என்பர்.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல் போன்ற பகுதிகளைக் கொண்டது.

இந்நூலின் சில நூற்பாக்களே கிடைத்துள்ளன.

2 – இசை நுணுக்கம் (சிகண்டி என்னும் முனிவர்)
**********************************************************
இது ஓர் இசைத் தமிழ்நூல் ஆகும்.
இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரனென்பவன் இசையறிதற்பொருட்டு, அகத்தி முனியவர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவராகிய சிகண்டியென்னும் அருந்தவ முனிவரால் வெண்பாவாலியற்றப் பட்ட இசைத் தமிழ்நூல் ஆகும்.

இந்நூல் இடைச்சங்கமிருந்த காலத்தில் எழுதப்பட்டதென்று அடியார்க்கு நல்லாருரையாலும், அச்சங்கப் புலவர்க்கு நூலாகவிருந்ததென்று இறையனாரகப் பொருளுரையாலும் அறியமுடிகிறது.

3 – இந்திர காளியம் (யாமளேந்திரர்)
***************************************
இது யாமளேந்திரரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட இசைத்தமிழ் நூலாகும்.

இந்நூல் இன்று கிடைக்கவில்லை.

அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட நூல்களில் ஒன்றாகும்.

4 – பஞ்சபாரதீயம் (தேவவிருடி நாரதன்)
***************************************
இது ஒரு இசைத் தமிழ்நூலாகும்.
தம்முடைய காலத்திலேயே இந் நூலிறந்து போயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.


************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
04/04/2014

கருத்துகள் இல்லை: