கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 ஜூலை, 2010

சுற்றுலாப் பயணம் உயசக (2041)


ஓசுலோவிலிருந்து துரண்கெயிம் வரை, துரண்கெயிமிலிருந்து ஓசுலோ வரை(Oslo - Trondheim/ Trondheim - Oslo). நம் சுற்றுலாப் பயணம்.
நண்பகல் ஒரு மணியளவில் சிற்றூர்தியில் புறப்பட்டோம்.
மழை பெய்து கொண்டிருந்தது அதனால் வேகமாக ஓடாமல் அளவாகவே ஓடிக்கொண்டிருந்தோம். விண்ணூர்தி நிலைய தங்ககத்துக்கு அருகில் எரிபொருள் நிலையம் உள்ளது. அங்கே சற்று ஓய்வெடுத்துக் கொண்டோம்.

அதன் பின்,

அங்கிருந்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பயணித்து காமார்(Hamar) என்ற இடத்தை அடைந்தோம்.அங்கு பனிகால ஒலிம்பிக் நடந்த உள்ளரங்கம் உள்ளது.

அங்கு ஒலிம்பிக் நடைபெற்ற ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு.

நாம் அவ்விடத்தில் நின்று மீண்டும் ஓய்வெடுத்துக் கொண்டோம். அங்கே உணவரிந்தி விட்டு சின்னகாமாருக்குச் சென்றோம்.பல மணிநேரம் பயணித்து சின்னகாமாரை அடைந்தோம். அங்கே உள்ள பேரங்காடியில் சில பொருள்கள் வாங்கிக்கொண்டு குளிர்கூழும் உண்டுவிட்டு சிற்றூர்தியில் மீண்டும் பயணித்தோம்.
சிலமணி நேர ஓட்டம் இருமருங்கிலும் காட்டுமரங்கள் ஆற்றின் ஓட்டம் அழகான இயற்கைக் காட்சி
சின்னகாமாருக்கு(Lille Hammar) அடுத்ததாய் ஒய்யர் (øyer) என்ற இடத்தில் கம்பளியாடுகள் மேய்ந்துகொண்டு நின்றன.
அதன் அருகில் தற்கால தங்குமிடம் ( champing ). அங்கே பல இடங்களிலும் இருந்து நோர்வேநாட்டவர் வந்து தங்குவதுண்டு.அங்கு
பேர்கன் என்ற இடத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரரை சந்தித்தோம். அவர்கள் மகிழ்வான நண்பர்கள். அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.


பின், நெடுஞ்சேய்மையாகப் பயணித்துப் பல மாநிலங்களினூடாக இறிங்கபூ(Ringebu) அடைந்தோம். அதற்கிடையில் மலைத்தொடரினூடாக அருவிகளையும் ஆற்றின் ஓட்டத்தையும் கண்டுகளித்தோம்.அடுத்து வின்சுதிறா( Vinstra), வின்சுதிறா (Vinstra) ஒரு அழகிய ஊர். அங்கும் பல சிறப்புகள் உண்டு. மலையடிவாரத்தில் அமைந்துள்ள அவ்விடம் பார்ப்பதற்கு மிகமிக மகிழ்வானது.நிற்க, (முன்பு ஒரு முறை தொடர் வண்டியில் துரோணியம் செல்லும் போது இடையே இங்கிருந்து வின்சுதிறா (Vinstra) சில தொலைவில் ஆறு பெருகிவிட்டது அதனால் தொடர்வண்டி செல்லாது என்று ஏந்துகளாக பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர். அது எமக்கு தெரியாது.அவ்வண்டி மீண்டும் ஓசுலோ திரும்பியது. அதையறிந்து ஓடிக்கொண்டிருந்த போதே வண்டியில் பயணரோடு பேசினோம் உடனே அடுத்த தரிப்பிடத்தில் இறக்கிவிட்டார்கள்.


இதுவே வின்சுதிறா.




புரட்சியை வெளிப்படித்தும் இளைஞனின் கலைவடிவம்.




இது நோர்வே நாட்டு முன்னோடி ஒருவரின் சிலை




மீண்டும் நிற்க,
அவர்களின் உதவியோடு மகிழுந்தில் துரோணியம் சென்றோம். அதற்காக கொடுத்த பணம் பதினேழாயிரம் குரோணர். அப்பணத்தைப் பயணமுகவர்களே பொறுப்பேற்றனர்.அதனால் அன்று இறங்கிய இவ்விடத்தை எம்மால் மறக்க முடியாது).
வின்சுதிறா(Vinstra) தாண்டி ஒத்தா(Otta) ஊடாக சென்ருகொண்டிருந்தோம். ஒத்தாவில்(Otta) தங்குமிடங்கள் செய்திகொடுக்கும் பலகை அருகே ஓய்வெடுக்க ஏந்துகள் அமைக்கப்பட்டிடுந்தன.

இது செய்திபலகைக்கு எடுத்துக்காட்டு.



சென்ற வாட்டி பன்றி இறைச்சியும் இறைச்சிக் கலவை உணவும் சுட்டுச் சாப்பிட்டோம்.



இம்முறை தொவ்றே(Dovre) எரிபொருள் அருகே இறைச்சி சுடுவதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் அமைதியாக சாப்பிட்டும் ஓய்வெடுத்தும் கொண்டோம் .

நேரம் என்னவாக இருக்கும் என்று பார்தால் இரவு பத்துமணி.ஒசுலோவிலிருந்து(Oslo) தொவ்றே(Dovre) சிற்றூர்தி ஓட்டம் ஏ6 வழியாக கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் கழிந்துள்ளன. தொவ்றேவிலிருந்து கிட்டத்தட ஒருமணிநேரம் பயணித்து உடொம்பசு(Dombås) என்னும் இடத்தை அடைந்தோம்.

அங்கே உணவகங்கள் எரிபொருள் நிலையங்கள் தங்குமிடங்கள் உல்லாச பயணிக்கான செய்திப் பலகையென அனைத்து ஏந்துகளும் உள்ளன. நாங்கள் அங்கு நின்று ஓய்வெடுப்பதுண்டு.உடொம்பொசில்(Dombås) இருந்து இருகிளையாக பிரிகிறது ஒன்று ஓளசுண்டு (Ålesund)மோள்டே(Molde)மோள்டேயில் நம் தமிழரும் வாழ்கின்றனர்.அங்கு தமிழ்ப் பள்ளியும் உண்டு. மற்றையது துரண்கெயிம்.

நாம் துரண்கெயிம் பயணித்தோம். உடொம்பசிலிருந்து(Dombås) ஏ6 தொவ்றே மலைத்தொடர்(Dovre fjell) ஊடாக நீண்டவழிச் சேய்மை பயணிக்க வேண்டும் . உச்சிமலை, மக்கள் இருப்பிடங்கள் இருக்காது. அடிக்கடி ஓய்வெடுக்க இடங்கள் உள்ளன.ஒரு நாள் செல்லும்போது கடுமிடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது.சிற்றூர்தி அடிக்கடி ஆடியது. காற்றை அளப்பதற்கு காற்று அறிகருவியும் ஓரிரு இடத்தில் பொருத்தியுள்ளனர். பகலில் பார்த்தால் நாங்கள் துறக்கத்தில் நிற்பதாக தோற்றும் அவ்வளவு அழகு. சித்தப்பயிற்சி செய்வதற்கு ஏற்ற இடம்.நீண்டவழி பயணித்து ஒப்தாலை(Oppdal)அடைந்தோம் .சிறிய ஊரெனினும் அழகாக நகரம் போல் இருந்தது ஓடும் போது கவனம் வேண்டும் குடியிருப்புகள் பல உள்ளன. அங்கே ஓடும் அளவு மணிக்கு ஐம்பது கிலோமீற்றர்(50k/h).அங்கு விண்ணூர்தி நிலையமும் உண்டு.அங்கிருந்து பயணித்து சோறன்(Støren) இடத்தை அடைந்தோம். பண்ணைகள் நிறைந்த இடம். தங்குமிடங்களும் உண்டு. ஓய்வெடுக்காமல் நேரே துரண்கெயிம் சென்றோம். துரண்கெயிம் இருப்பிடத்தை அடைந்த பொழுது மணி விடியற் காலை இரண்டுமணி.ஒசுலோவில் (Oslo) இருந்து துரண்கெயிம் (Trondheim) வரை பன்னிரண்டு மணிநேரம்.



மீண்டும் தொடரும்......

வெள்ளி, 9 ஜூலை, 2010

எழுக தமிழினமே

எழுந்த பனிமலை மடிப்புப் போடவும்
எழுநூறு காதம் நாவலந் தேயவும்
கிழிந்த மண்டக் கீழை நிலத்துள்
எழுந்து நின்றன சிற்சில தீவுகள்
ஐயகோ வன்று அறுந்த புவியிலே
இயற்கைச் சூழலும் எரிதண லாயிற்றே
அவலஞ் சூழ்ந்து அமைதியை வேண்டியே
அலைந்து திரிந்தன அறுதிணை யுயிர்களும்
மிதந்த மரங்களில் ஏறிச் சென்றன
மீண்டும் மீண்டும் பயிற்சி பெற்றன
கைகளைச் சேர்த்தன கருவிக ளாக்கின
கருவிகள் கொண்டு வேட்டைகள் ஆடின
கள்ளை யுண்டன கறியைத் தின்றன
கொள்ளை இன்பத்தில் கூடல் கொண்டன
அஞ்சியும் அழுதன ஐம்பூதம் தொழுதன
விஞ்சிய அறிவிலும் வேள்விகள் செய்தன
இப்படித் தானொரு இனமொன்று தோன்றிற்று
இற்றைக்கு பத்தா யிரத்துக்கு முன்பு
பஃறொளி ஆற்றுடன் பழுத்த பேரினம்
படிப்படியாய் கூர்ப்பும் கூர்மையும் பெற்றது
கீறிப் பழகியே கலைகள் படைத்தது
கீற்றுடன் இணைந்தே பாடவும் கற்றது
ஓலைச் சுவடியில் புலமை யாத்தது
ஒன்றாய் இணைந்து வாழவும் வைத்தது
சாலச் சிறப்பாய் திணைகள் வகுத்தது
சேலையும் வேட்டியும் நெய்து போட்டது
கற்காலம் இரும்புக் கரிக்காலம் பொற்காலங்
கற்றறிந்து கல்வியால் நிலங்களைக் கழனியாக்கி
நெல்லுடைத்துச் சோறுண்ட இனமடா எம்மினம்
சொல்லிக் கொள்ள மொழியும் இருந்தது
செல்வம் கொழிக்கும் வளமும் இருந்தது
அள்ளிக் குடிக்க நீருமி ருந்தது
அவனியில் தமிழர்க்கு நாடு மிருந்தது.
என்ன குறைகள் எங்கள் நிலத்திலே
மன்றமி ருந்தது மாட மிருந்தது
கோயி லிருந்தது கோபுர மிருந்தது
கோலொச்சி மன்னர் மாளிகை யிருந்தது
மும்முடி வேந்தர் மண்டலம் போலவும்
நம்மீழ மண்டலம் நம்மோ டிருந்தது.

அப்பால் நிலத்தி லிருந்து வந்தார்
ஆரியர் அவரை யன்புடன் ஏற்றார்
முப்பால் வள்ளுவன் காலத்து முன்பால்
முத்தமி ழேற்றியும் போற்றியும் வைத்தார்
சித்தர் போலவே சித்தம் பெற்றார்
சினந்து தமிழரை இழிந்த்து வைத்தார்
நரிகளாய் மாறி நற்றமி ழழிக்க
பரிகளாய்த் தமிழரைப் பயன்படுத்தி ,னாரே
இருந்த நிலத்தில் பாதியும் போயிற்று
இந்திய மென்றே மாறியும் போயிற்று
எஞ்சிய நிலங்களில் எங்கள் தமிழினம்
வஞ்சமின்றி பஞ்சமின்றி வாழ்ந்தேதான் வந்தது
வணிகம் செய்ய் வந்த பறங்கிகள்
பணிய வைத்தே பறித்துக் கொண்டனர்
வரிகள் போட்டனர் அடிமை யாக்கினர்
உரிக்கும் வரையெமை உரித்தே விட்டனர்
பொன்னும் பெண்ணும் யானையும் பனையும்
என்னென் .னவோவனைத் தையுமேற் றினர்பார்
எஞ்சிக் கிடந்த நிலத்தை விடவே
எங்களர் உரித்தை சிங்களர் எடுத்தனர்
இருபதி .னாயிரத்து முந்நூற் றெண்பது
அருந்தமிழ் நிலத்தையும் இருபங்கு கடலையும்
நேருசே .னனாயக்கா கூட்டுச் சதிகள்
நீறா யாக்கு மென்றஞ்சித் தந்தையர்
நீரா நோன்புகள் நித்தம் செய்தார்
காடைய ரேவிக் கட்டையால் பொல்லால்
காடேறி யரசு கொலையும் செய்தது
பொறுமை இழந்து போரில் குதித்து
போரை மூட்டினர் முப்பதாண் டுகளாய்
இறைமைப் போரில் எழுப தாண்டுகள்
இடரைத் தாங்கிய தமிழீழப் போராட்டம்
இந்தியச் சூழ்ச்சியால் வல்லர சாட்சியால்
குந்தகம் செய்தழித் தனவே யறிவோம்

முன்னே யுளது யிந்திய மாக
பின்னே யுளது சிங்கள மாக
இடையே யுள்ள ஈழத் தாயமே
படைகள் நடந்த தமிழீழம் கண்டோம்
பாய்ந்து திரிந்த எங்கள் நிலத்தை
மொய்யா யெழுத நீவீர் யாரோ
மீண்டும் தமிழர் ஆழுங் காலம்
மிடுக்காய் வருமென்றல் திண்ணம் திண்ணம்
எமக்கே யுரிய சொந்த நிலமதில்
எவனுக்கும் சொந்த மல்லவே வெளியேறும்
நலமாய் வாழ நமக்கொரு நாடு
பொல்லார்ச் சிங்களப் படைஞரே வெளியேறும்
கைகள் கால்கள் கண்களி ழந்தோமன்றி
வையம் தன்னில் வேங்கை கொண்ட
வேட்கை மட்டுமே மேனுமி ழக்கோம்
விடுதலை வரும்நாள் விரைவி லுண்டு
உலகத் தமிழரே யொன்று படுவீர்
ஈழம் மலரு மென்றே கூவுவீர்
புறத்தே நின்று தட்டிய கைகளே
உறைந்து போனீரோ வீழ்ச்சி கண்டு
போர்க்களம் நின்ற புலிகள வர்களை
மறவர் என்றே பரணீ யாத்தோரே
உலாப் பாடி வெற்றிக்கு வாகைசூடி
விழாவெடுத் தோரே புலவோரே நிம்தூவல்
இன்னல் கண்டும் எழுந்து பாடட்டும்
செத்தவீட் டுக்குபின் செலவு கழித்து
திதியொன் றாவதற்குள் திக்கெட்டும் கலைந்தீர்
சொந்தங் களில்லாது சோகத்தில் வாட
வெந்த புண்ணிற் வேல்பாச் சாதீர்
வந்துநீர் வாரும்நம் குழந்தைகள் நலமாக
பந்தமாய்த் தாங்கி நாளையும் வேளையும்
தாங்குமிந்த தாயுமா .னவள்போல்
தாங்கி வாழ்வோம் நம்நிலம் நாமே!

கோடைகால விடுமுறையும் களிப்பும்



வள்ளுவராண்டு இரண்டாயிரத்து நாற்பத் தொன்று (2041).
இலத்தினாண்டு இரண்டாயிரத்துப் பத்து (2010).

இவ்வாண்டு கோடைகாலமும் கொழுத்தும் வெய்யிலும் ஓடை, ஆறு, அருவிகள் ஓடும் காட்சிகளும் அப்பப்பா பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் எவ்வகையான மகிழ்வைக் கொடுக்குமோ! அவ்வகையான மகிழ்வைத்தான் எமக்கும் கொடுக்கும் அத்தனையழகு.
பூம்பனிகாலம் முடிந்ததும் உறைபனிகாலம், அது முடிந்ததும் இலைதுளிர் காலம், பறவைகள் அடைகாத்து குஞ்சுபொரிக்கும் காலம், இக்காலத்தை நோர்வே நாட்டவர் மிகச்சிறபாக கொண்டாடுவார்கள். பின் பூ பூக்கும் காலம், காய்மரங்கள் காய்க்கும் காலம், கோடைகாலம் கனிகள் கிடைக்கும் காலம். ஊர்மாம்பழங்களை இக்காலத்திலேயே காணலாம். வீட்டுத்தோட்டத்தில் கனிகளை பறிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது.பள்ளி விடுமுறை குறிப்பாக அன்னைபூபதி விடுமுறை, விடுமுறைக்கு முன் இல்லவிளையாட்டுப் போட்டி பின்

தமிழர் விளையாட்டு விழா அதைத் தொடர்ந்து கோடைகால விடுமுறையும் தொடங்கி விடும். இவ்வாண்டு தமிழர் பலர் தாயகத்துக்குச் சென்றுள்ளனர். நாம் உள்நாட்டுக்குளேயே அதாவது (நோர்வே நாட்டுக்குளேயே) விடுமுறையை கழிப்பதற்கு முடிவு செய்தோம்.
நோர்வே மலையும் மலைசார்ந்த நிலமும் கொண்ட குளிர் நாடு. இந் நாடு வடதுருவத்தின் மேலே அமைந்துள்ளது. இது வள்ளுவர் காலத்தில் பனிமண்டலமாக இருந்துள்ளமை வரலாற்றின் ஊடாக அறிய முடிகிறது.நோர்வே என்பதன் பொருள் "வடக்கு நோக்கிய வழி என்பதாகும்". மக்கள் அமைதியாக வாழ்வதற்குரிய அருமையனான நாடு.மக்கள் சட்டத்தை மதிப்பதும் அரசியல் ஆளுமையுமே அதற்கு கரணியம்.

இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் முதலாளி தொழிலாளி என்ற ஏற்றத்தாழ்வுகள் இருந்தமையையும் கூறியாக வேண்டும். ஆனால் இன்று ஆண் பெண் நிகர் என்ற அடிப்படையில் வாழ்வதனால் ஆணோ பெணோ அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய தேவையில்லை. இன்று நோர்வேயில் ஒருவர் கிழமைக்கு நாற்பதெட்டு மணிநேரமே வேலை செய்தால் போதும். தலைவனும் தலைவியும் நிகராகவே இவற்றைச் செய்து வருகின்றனர். போதிய சம்பளமும் கிடைக்கின்றது.ஒருவரின் சாராசரி சம்பளம் இருபத்தைந்தாயிரம் குரோணர் (25,000.00).வாழ்வாதாரம் சீராகவே இயங்குகின்றது.எனவே இங்கு வாழ்க்கை அமைதியாகவே உள்ளது. கோகால விடுமுறையையும் இனிதே கழிக்கக் கூடியதாய் உள்ளது.





இன்னும் தொடரும்........