கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 28 மார்ச், 2009

வேர்ச்சொற் சுவடி

1. அர்
அர் = ஒலிக்குறிப்பு

அரவம் = ஒலி
அரா, அரவு, அரவம் = இரைவது, ஒலியறிவது, பாம்பு
(௨)
அரி = அர் என்னும் ஒலி தோன்றச் சிறிது சிறிதாய்க் கடி அல்லது தின்.
அராவு = தேய். அரம் = அராவுவது. அரம்பம் = அராவுவது, அறுப்பது.
அரி = அறு. கோடு ( கிளை ) + அரி = கோடரி - கோடாரி - கோடாலி.
அரிவாள் = அரிக்கின்ற வாள். அரிவாள்மணை.
அரி = அழி. அரி = அழிப்பது, பகைவன், சிங்கம்(வ.)
கோள் + அரி = கோளரி.
அரங்கு = அறுத்த அரை, இசை நாடக மேடை.
அரங்கம் = ஆற்றிடை அறுக்கப்பட்ட நிலம்.
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்.
அரக்கு = தேய், அழி.
அரக்கன் = (இராட்சதன்.)
அரன் = அழிப்பவன், தேவன் , சிவன்
அரசு = பகைவரை அழிப்பவன் , வேந்தன். அரசு + அன் = அரசன்.
அரசு = தலைமையான அல்லது தெய்வம் தங்கும் மரம்.
அரசன் - அரைசன் - அரையன் - ராயன் - Roy

(2).
அறு

அர் - அறு
அறு = வெட்டு, பிள, பிரி, நீங்கு, நீக்கு.
அறுவாள் = அற்க்கின்ற வாள்.
அறவு = நீக்கம், வரையறு - வரையறவு
அறுதி = முடிவு.
அறை = அடி, அறுக்கப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட இடம்.
உறுப்பறை = உறுப்பறுக்கப்பட்டது. வரையறு - வரையறை.
அறுகு = அறுத்தறுத் தோடிப் படரும் புல்.
அறுவை = அறுக்கும் துணி.
அறுப்பு = பயிரை அல்லது தாலியை அறுத்தல்
அறுவடை = அறுப்பு.
அற்றம் = பிறர் இல்லாத சமையம்.

3.அர்
அர் - அரு = அழி, குறை, நெருங்கு
அருகு = குறைவாகு, நெருங்கு, பக்கம்.
அருகண்மை - அருகாமை
அருகன் = நெருங்கினவன், உரிமையுடையவன்.
அருகதை = உரிமை
அருமை = குறைவு,கூடாமை, சிறப்பு, விருப்பம்.
அருமைவந்த - அருமந்த.
அருந்தல் = குறைவு, விலையுயர்வு.
அரிது = கூடாதது, வருத்தமானது.

4.அள்
அர் - அள் - அண் - அடு.
( a ) அள் = நெருங்கு, நெருங்கச் சேர்த்தெடு.
அண், அண்ணு = நெருங்கு.
அண்மு = நெருங்கு.
அண்டை =பக்கம். 7ஆம் வேற்றுமை உருபு
அடு = நெருங்கு, அடர் = நெருங்கு, அடவி = நெருங்கின காடு.
அடுக்கு = நெருங்கவை.
அடுத்த = நெருங்கின, பக்கமான. இன்னொரு.

( b ) அடை = அடுத்தது, அப்பம். அடை – ஆடை
பாலாடை = பாலாடை, சங்கு.
அடுக்கும் = நெருங்கும், தகும். ஊனக்கிது அடுக்குமா?
அடங்கு = நெருங்கு, உள்ளமை.
அடக்கு (பிற வினை)
அடக்கம் = ஒடுக்கம், உள்ளீடு, புதைப்பு.
அடை = நெருங்கு, சேர், பெறு.
(ட = ய) அயல் - அசல் = பக்கம், அன்னியம்

5.அர்
அர் = சிவப்பு அ - இ. ர் - ல்
அரத்தம் = செந்நீர், அலத்தகம் ® செம்பஞ்சுக் குழம்பு
அரக்கு = சிவந்த மெழுகு.
அருணன் = சிவப்பு
அருணம் = காலைச்சூரியன்
அரிணம் = சிவப்பு, மான்.
இரத்தம் = செந்நீர்.
இரத்தி, இலந்தை = சிவந்த பழத்தையுடைய முட்செடி.
இராகி = கேழ்வரகு.

6.
இ - கீழுறற் குறிப்பு
இறங்கு ® கீழே வா.
இரு = கீழ் உட்கார், தங்கு, வாசஞ்செய்.
இருப்பு = தங்கள், ரொக்கம்
இருக்கை = ஆசனம்
இழி = இறங்கு, கீழாகு.
இளி = இழிவு.

7.கில்
இ - கில்
( a ) கில் - கல் = தோண்டு, தோண்டுங் கருவி.
கில் - கிள் - கீள் - கீழ்
( b ) கிள், கிள்ளு = நகத்தைக் கீழே பாதி. கிள்ளுக்கீரை.
கிள்ளை, கிள்ளி – கிளி = கனிகளைக்கிள்ளுவது.
( c ) கிழி = கீறு, துணியைக் கிழி.
கிழி = முடிச்சு, துணி, படம்.
கீள் கிழி. கீளார் கோவணம்.
( d ) கீழ், கீழ்க்கு – கிழக்கு = கீழிடம், ஒரு திசை.
( e ) கீறு = கோடு கிழி. கீற்று = கீறி அறுத்த துண்டு, துண்டு.
கிறுக்கு = கோடு கீறு, பைத்தியம்.
கீறல் = கோடிழைத்தல், எழுத்தறியாமை உணத்துஞ் சொல்.
கீச்சு = கீறு.
8.
இ = பின்னிடற் குறிப்பு.
( a )இடறு = பின்விழத் தடுக்கு.
இடை = பின்னிடுயு, தோற்றோடு. இடக்கை = தோற்றக்கை.
இடம் = தோல்வி, இடர் = துன்பம்.
ஒ.நோ : வலக்கை வெற்றி பெற்ற அல்லது வலிய கை.
இடைஞ்சல் = பிற் செலுத்தும் தடை.
( b )இட = இழுத்துப்பறி.
இணுகு இணுங்கு = இழுத்துப்பறி.
இழு = பின்னுக்குக்கொண்டு வா.
இறை = தண்ணீரை இழு, பின்னுக்குத் தெறி, தெறி.

9.இழு
இ - இள் - இழு = பின்னுக்குக் கொண்டுவா.
இழு - இழுகு = பின்னோக்கித் தடவு.
( a )இழுப்பு = இழுத்தல். இழுவை = இழுத்துக் கடத்தல்.
இழுது = இழுக்கும் மை.
இழுது - எழுது = இழுத்து வரை.
இலக்கு, இலக்கி = எழுது. இலக்கு = எழுத்து
இலக்கு - இயம் = இலக்கியம் = நூற்றொகுதி.
இலக்கு - அணம் = இலக்கணம் = மொழியொழுங்கு.
இலக்கம் = எழுத்து, எண்குறி, எண்.
( b )இழு - ஈர் - இழு, இழுத்தறு.
இழு - இசு - இசி. இழுப்பு = இசிவு = ஜன்னி.
இழுக்கு = இழுகுவது, வழுக்கல், வழு.
இளை = மூச்சிழு.

10.இ - இள்
( a ) இளை = மூச்சிழு, மெலி
இளைப்பு = மூச்சிழுப்பு, மெலிவு, தளர்ச்சி.
இளைப்பு ñ ஆறு இளைப்பாறு.
ஈளை = கோழை, இளைப்பு.
இழை = இழுத்துச் செதுக்கு, நூலிழு.
இழைப்பு - உளி = இழைப்புளி.
இழை = இழைத்துச் செய்த நகை. இழுத்த நூல்.
இழைப்பு = காச நோய்.
இளைத்தவன் = மெலிந்தவன், சிறியவன்.
``ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி``
( b )இளம், இளமை = சிறு பருவம்.
இளவல் = தம்பி. இளைஞன் = வாலிபன், வீரன்.
இளையவன் = ஆண்டிற் சிறியவன்.
( c )இளைப்பம் = தாழ்வு, இளக்காரம் = மென்மைபற்றி மேற்செல்லல்.
இளகு = மெல்லிதாகு, இளக்கம் மென்மை.
இணங்கு = மென்மையாகு, உடன்படு.
இலகு = எளிது, கனமின்மை, இலேசு = எளிது, கனமின்மை.
இகழ் = எளிமையா யெண்ணு.

11.எள்இள் - எள்
எண்மை, எளிமை = வறிய நிலை
எளிது = இலேசானது.
எள் சிறிய கூலம் ( தானியம் ). எள்ளு = இகழ்
எள்கு எஃகு இளகிய இரும்பு.
ஒ.நோ : உருகியது உருக்கு.
எய் = இளை, சோம்பு
எ = ஏ
ஏளனம் = இகழ்ச்சி. ஏழை = எளியவன், அறிவிலி.
ஏசு = இகழ்.

12.பின்
இ - பின்
( a )பின், பின்னே, பின்னை, பின்னர், பின்பு, பின் + கு = பிற்கு.
பின்காலே = பின்னுக்கு.
பின்று = பின்.
பிந்து = பிற்படு.
( b )பின் - பிற, பிறம், பிறம்பு, பிறகு, பிறக்கு, பிறக்கிடு.
பிறகு பிறக்கு = பின்பு, முதுகு.
பிறக்கிடு = பின்னுக்கிடு.
பிறம்பத்தங்கால் = பின்னங்கால்
பிற = மற்ற. பிறன் = மற்றவன், அயலான், பிறத்தியான் = அயலான்.

13.புற
பிற – புற – புறம் - புறன்.
புறம் = பின், முதுகு, வெளி, வெளிப்புறம், மேற்பக்கம், பக்கம்.
புறம் = வெளிநிலம், முல்லை நிலம், நிலம். அறப்புறம் = அறநிறம்.
புறம்போக்கு = எல்லாரும் செல்லும் வெளிநிலம்.
புறம் = புறா = புறவு = புறவம்.
புறா = முல்லை நிலத்திலள்ள பறவை.
புறப்படு = வீட்டைவிட்டு வெளிப்படு, பயணந் தொடங்கு.
புறப்பாடு = வெளிக்கிளம்பிய கொப்புளம், புறப்படுதல்.
புறம்பு = வெளி, அயல்.
புறணி = மேற்பட்டை, புறங்கூற்று.
புறங்கூறு = பின்னாற்சொல், பின்னாற் பழி
புறக்காடு = ஊருக்கு வெளியுள்ள சுடுகாடு
புறங்காட்டு, புறங்கொடு = முதுகு காட்டு, தோற்றோடு.
புறம் = புறப்பொருள், புறம்.
புறன் = புறங்கூற்று.

14.இடு
இள் - இடு.
இடுகு = சிறுத்துப்போ.
இடுக்கு = நெருக்கு, நெருக்கமான இடம்
இடுக்கி = நெருக்கிப் பிடிக்கும் குறடு.
இடுக்கம் = நெருக்கம்.
இடுப்பு, இடை = சிறுத்த அரை.
இட்டிது = சிறியது.
இட்டிகை = இடுக்கமான வழி.
இண்டு = சிறுய துவாரம்.
இடுகு = இறுகு
இறுக்கம் = நெருக்கம், திணிவு, உறுதி.

15.ஆள்
( a )ஆள் = ஆட்சி செய், பயன்படுத்து, வழங்கு.
ஆள் + சி = ஆட்சி
ஆள் = பிறவற்றை யாளும் மனிதப் பிறவி.
( b )ஆள் - ஆண் = ஆட்சியிற் சிறந்தவன்
ஆண்மை = ஆண்டன்மை, வீரம்.
ஆண் - ஆடு - ஆடுஉ, ஆடவன்.
ஆள் - ஆணை, ஆண் - ஆணவம் = ஆண்டன்மை, வீரம், அகங்காரம்.

16.
இற
இற = வளை
இறவு, இறப்பு, இறவாணம், இறை = வளைந்த தாழ்வாரம்.
இறா, இறால், இறாட்டு = பெருங்கூனி.
ஒ.நோ கூன் - கூனி
இறால் = வட்டமான தேன் கூடு.
இறாட்டி = வட்டமான எரு.
இறை = வளைந்த முன்கை.
இறைஞ்சு = வளை, வணங்கு.

17.இறு
இற - இறு
பயிர், மனித வுடம்பு, சூரியன் என்பவைவ வளைந்தபின் இறத்தலை அல்லது மறைத்தலை நோக்குக.
இற = சா
இறு = முடி. இறுதி முடிவு. ஈறு = விகுதி.
இறு = பயணத்தை முடி, தங்கு.
இறை, இறைவன் ® எங்கும் தங்கியிருப்பவன், கடவுள், அரசன்.
இறு = கடனைத் தீர், செலுத்து.
இறை = வரி.
இறு = ஒருவன் சொன்னபின் பதில் கூறு.
இறை = விடை

18.
இர்.
இர் - கருமைக் குறிப்பு.
இரா, இராத்திரி, இரவு = கரிய இருட்டு வேளை.
இறடி = கருந்தினை.
இருமை = கருமை.
இரும்பு = கரிய உலோகம்.
இருந்தை = கரி
இருள் = ஒளியின்மை
இ - அ. அறல் = கருமணல்.
இ - எ. எருமை = கரிய மாட்டு வகை.
எருது = கருங்காளை, காளை.
எ - ஏ. ஏனம் = பன்றி
(ஏனை) – யானை = கரிய விலங்கு.
ஏனல் = கருந்தினை, ஏனம் = கரும்பாத்திரம்.

19.
ஊ.
ஊ = முற்செலற் குறிப்பு.
ஊங்கு = முன்பு
ஊக்கு = முற்செலுத்து, உற்சாகப்படுத்து.

20.
முள்.
ஊ – உ – முள்
முள் = முன்சென்று பதி, நகத்தைப் பதி, பதியும் கூரான உறுப்பு.
முளவு = முள்ளம் பன்றி.
முட்டு = முற்சென்று தாக்கு.
முட்டை = முட்டி வருவது.
முட்டு, முட்டுப்பாடு = முட்டித் திண்டாடல்
முடை = முட்டுப்பாடு.
முண்டு முட்டிக் கிளம்பு.
முட்டி = கை கால் எலும்புப்பொருத்து.
முழம் = கை கால் எரும்புப் பொருத்து. முன்கை யளவு.
ஊ – ஊ. மூட்டு =பொருத்து, கரும்புக் கணு.
ஊ – ஒ. மொழி = கை கால் பொருத்து, கரும்புக் கணு.
மொட்டு = முட்டிவரும் அரும்பு.

21.
முன்.
முள் - முன்.
( a ) முன் = முன் பக்கம், முன்பு, முன்னர், முன்னம், முன்னே, முன்னை.
முன்னு = எதிர்காலம்க் காரியத்தை நினை, நினை.
முன்னம் - முனம் - மனம்.
முன்னம் = முன்நினைவு, நினைவு, குறிப்பு, மனம் = நினைவுப்பொறி.
முன்னு – உன்னு நினை.
முன்னிடு = ஒரு கருமத்தை முன்வை. – ஒரு காரியத்தை முன்னிட்டு|
என்பது வழக்கு.
முனி = முன்பக்கம், முனி – நுனி.
முனை = போரில் முன்னணி, நுனி.
முனை – நுனை = கொனை.
முன்று = முன்பு.
( b ) முந்து = முற்படு. முந்தல் முதல் முன்னிடம், முன்தொகை.
முதல் - இ முதலி. முதலி - ஆர் முதலியார்.
முதல் - ஆளி = முதலாளி.
( c ) முந்து – முது. முதுமை = பழமை, மூப்பு.
முதுக்கு = உறை முதுக்குறை.
முதுமை = பழமை, பிற்காலம்,
முதுகு = பின்புறம், மூத்தோர் ஆண்டில் மிகுந்தோர், பெரியோர்.
முது – முதிர் மூ, விளை, முற்று.
முதியோர் = கிழவர், மூத்தோர். முதுமகன் = கிழவன்
முதுகண் = அறிவு முதிர்ந்தோர் அறிவுரை.
மூதில் = பழங்குடி. மூதூர் = பழவூர்.
மூரி = கிழ எருது. முது - மூ. மூ ñ பு = மூப்பு
மூப்பன் ® மூத்தவன், ஒரு பதவி, ஒரு குலம்.

22.
முகு
முகம் = தலையின் முன்பக்கம், முன்பக்கம்.
முகர் = முகம், முக வுருவமுள்ள முத்திரை.
முகரா = ஒரு நாணயம்
முகரை = முகம்.
திருமுகம் = முத்திரையுள்ள கடிதம்.
முகத்திரை = முத்திரை. முகத்திரம் மோதிரம்
முகம் - முகன் - முகனை – மோனை சீரின் முன்னெழுத்து.
முகப்பு = முன்பக்கம். துறைமுகம் நிலத்தின் முன்பக்கமான நெய்தல் நகர்.
முகம் - நுகம்.
முகம் = முன்புறம், பக்கம்.
முகிழ் = முன்தோன்றும் அரும்பு, குவி, தோன்று.
முகை = அரும்பு.
ஊ – ஒ. மொக்குள் ® அரும்பு.

23.
முகு
முகம் = முன்னால் நீண்டிருக்கும் மூக்கு.
முகடு = மூக்குப் போன்ற கூரை.
முகட்டுப் பூச்சி - மூட்டைப் பூச்சி - மூட்டை.
முகடி = முகட்டுத்தரத்தில் இருப்பதாகக் கருதப்படும் பேய், மூதேவி.
முகடி = முகரி.
முகடு = மலை முதுகு.
முக்கு = தெரு மூலை, மூக்குப் போன்ற சந்து.
முக்கை = ஆறு திரும்பும் மூலை.
மூக்கு = முன்னால் நீண்டிருக்கும் உறுப்பு, மூக்குப்போல் நீண்டு கூரியது.

24.
முகு.
முகர் = மூக்கால் மணத்தை அறி.
முகர் - நுகர் மணத்தையறி, இன்புறு.
முக = மணத்தையறி, விரும்பு.
முக – மோ விரும்பு, காதல்கொள். மோ ñ கம் மோகம்.
மோகம் - மோகி. மோகினி = காதலூட்டிக் கொல்லும் பெண்பேய்.

25.
முகு.
முகம் = முதல்
முகமை முகாமை = தலைமை
முக்கியம் = தலைமையானது, சிறந்தது.
முகம் - மகம், மகமை = தலைமை, ஊர்த்தலைவனுக்குக் கொடுக்கும் வரி.
மகன் = படையில் பெரியவன், மனிதன்.
முக – மா பெரிய, மக – மகி. முகமை மகிமை = பெருமை.

26.நுள்.
முள் - நுள்
நுழைவு = நுணுக்கம்.
நுழை = இடுக்கமான வாயிலிற் புகு.
நுண்மை = மிகச் சிறுமை. நுண் + பு = நுட்பு. நுட்பு + அம் = நுட்பம்
நுணங்கு = நுட்பமாகு.
நுணி = கூரிதாகு.
'நுழைவும் நொசிவும் நுணங்கும் நுண்மை" ( தொல். ஊரி.78 )
நுணுகு = சிறிதாகு. நுணுக்கம் = நுட்பம்.
நொய் = நுட்பமானது, நொய்ந்து கெடு.
குறுநொய் = உடைந்த அரிசி, நொய்ம்மை நுட்பம்.
நோசி = நுட்பமாகு.
நோசநொச = நொய்ந்துபோதற் குறிப்பு.

27.உள்.
உள் = உட்பக்கம்.
( a ) உள், உள்ளம், உளம் = மனம்.
உள், உள்ளு = நினை.
உளப்பாடு = உட்படுத்தல்.
உள்ளீடு = பொருளடக்கம். உட்படு = அடங்கு, இணங்கு.
உள்கோள் = கருத்து.
உள்ளான் = நீருக்குள் மூழ்கும் பறவை.
உள்ளல் = நீருக்குள் மூழ்கும் பறவை.
உள்ளி = நிலத்திற்குள்ளிருக்கும் வெங்காயம்.
ஈர + உள்ளி = ஈருள்ளி.
உளவு = உள்ளிருந்தாராய்தல், துப்பு.
( b ) உண் = உட் செலுத்து, சாப்பிடு. உடகொள் = சாப்பிடு.
உறிஞ்சு = உள்ளிழு.
( c ) உள்கு – உட்கு = அச்சத்தால் உள்ளொடுங்கு, அச்சம்.
உட்கு + ஆர் = உட்கார். அச்சத்தாற் குந்து, குந்து, இரு.
ஊட்கி – உக்கி = அச்சத்தாற் குந்திச் செய்யும் கரணம்.
( d ) உண்மை = உள்ளிருத்தல், இருத்தல், மெய்.
ஊள் + து = உண்டு. உள் + அது = உள்ளது. உண்டு + ஆகு = உண்டாகு.
( e ) உ ஒ - ஒல்கு = ஒடுங்கு, தளர். ஒற்கு + அம் = ஒற்கம் = தளர்ச்சி.
ஒல்லி = ஒடுங்கிய, மெல்லிய
ஒடுங்கு = நெருக்கமாகு, ஒல்லியாகு.

28.உர்
உர் = பொருந்து.
உரசு = தேய், பொருந்து,
உராய் = தேய், பொருந்து,
உரிஞ், உரிஞ்சு = உரசு.
ஊரை = தேய், உரசு.
உரம் = புல்லும் மார்பு, வலிமை, உறுதி, எரு.
உரகம் = மார்பால் ஊரும் பாம்பு. உரவு = வலிமை.

29.உறு.
உர் - உறு = பொருந்து.
உறுத்து = அழுத்து, வலி, உறு = வலிய
உறுப்பு = பொருந்தும் பாகம்
உறவு = பொருந்தல், கலந்து வாழ்தல்.
உறவு + ஆடு உறவாடு.
உற்றார் = பொருந்தினவர், இனத்தார்
உறழ் = பொருந்து, மாறுபடு.
உறழ்ச்சி = ஒப்பு, மாறுபாடு, விகற்பம்.
உறை = பொருந்து, மேற்படு, தங்கு, தாக்கு, தங்கும் கூடு.
உறையுள் = இருப்பிடம்.

30.ஏ.
ஏ = உயர்வுக் குறிப்பு.
ஏண் = உயரம், பெருமை, ~ஏ பெற்றாகும்| ( தொல். உரி. 8 ).
ஏண் = உயரம், ஏணி = உயரப் போக்குவது.
ஏணை = ஏந்துவது, தொட்டில்
ஏண் - சேண்ஸ்ரீ உயரம். சேணுலகம் = இந்திரனுலகு.
சேணோன் = இந்திரன்.
ஏத்து = உயர்த்திப் பேசு, புகழ்.
ஏந்து = கையுயர்த்தித் தாங்கு.
ஏங்கு = அடிவயிற்றினின்று காற்றையெழுப்பி மூச்சிவிடு,
பெருங்கவலை கொள்.
ஏக்கம் = பெருங்கவலை, பேராத்திரம்.
ஏய் = ஏறு, பொருந்து, ஒத்திரு, ஏமாற்று.
ஏர் = எழுச்சி, அழகு, பயிரை எழச்செய்தல், உழவு, உழுகருவி.
ஏல் = மேலாகக் கொள், ஏற்றுக்கொள்.
ஏழ் = எழு, ஒலி, ஓரெண்.
ஏறு = ஏறுவது, சிலவிலங்கின் ஆண். ஏறு – ஏற்றை
ஏற்றம் ஸ்ரீ நீரை ஏற்றுவது, ஏற்றிக் குத்துவது.

31.ஏ
ஏ = மேற்செலற் குறிப்பு.
(a)ஏ = ஏவு, அம்பு.
ஏவு = எய், முற்செல், முற்செலுத்து, செய்வி, கட்டளையிடு.
ஏகு = மேற்செல், செல்.
(b) ஏ – எ. எய் = மேற்செலுத்து, அம்புவிடு.
எண், எண்ணு = மேற்காரியத்தை நினை, மேன்மேல், நினை, நினை.
எண்ணம் = நினைவு, ஆராய்ச்சி.
எண் மேன்மே லளத்தல், இலக்கம், மதிப்பு.

32.இய்
ஏய் - இய்.
இயை = பொருந்து, இயை - இசை - இணை.
இணை – பிணை = இசை, இசைந்து பொறுப்பேற்றல்.

33.இய
ஏ - இய = நட
இயல் = நட. கூடு. நடப்பு, தன்மை, இலக்கணம், நூற்பகுதி.
இயவு = நடப்பு, வழி.
இயல் - ஏல், ஏல் + படு = ஏற்படு.
ஏற்பாடு = நடப்பு, ஒழுங்கு.
இயவுள் = உயர்ந்தவன், தலைவன்.
இயங்கு = அசை, செல்.
இயக்கம் = அசைவு, நடப்பு, கிளர்ச்சி.
இயங்கி = மோட்டார் வண்டி.

34.ஏ
ஏ - எ மேலெழற் குறிப்பு.
ஏழ் - எழு – எழும்பு.
எக்கு = வயிற்றுப் பக்கத்தை மேலுயர்த்து.
எக்கர் = நீரலை கரைமேல் தள்ளும் மணல்.
எடு = வளர், மேல் தூக்கு, நீக்கு. எடுப்பு ஸ்ரீ உயர்வு.
எடுத்தல் = எடுத்து நிறுத்தல், எடை = நிறை, கனம், ஓர் அளவு.
எம்பு = எழும்பு.
எவ்வு = எழும்பிக்குதி, குதி.

35.எழு
ஏழ் - எழு.
எழு = எழுந்த தூண், தூண் போன்ற குறுக்குச் சட்டம்.
எழுவு = ஓசையெழுப்பு.
எழில் = எழுச்சி, ஒரு பறவை.
ஏழிலி = மேலெழும் மேகம்.
ஏழினி = மேலெழும் திரை.

36.எல்
ஏழ் - எல்.
( a ) எல் = எழும் சூரியன், ஒளி, எல்லோன் = சூரியன்
எல் + து = என்று = சூரியன்.
என்று + ஊழ் = என்றூழ் = சூரியன்.
( b ) எ - இ.
இலகு = விளங்கு. இலக்கம் = ஒளி.
இலகு - இலங்கு = ஒளியிடு, விளங்கு.

37.ஏ.
ஏ = வினாவெழுத்து.
ஒரு பொருளை எது வென்று வினவும்போது. பல பொருள்களில் ஒன்றை மேலெடுப்பது போன்ற உணர்ச்சியிருத்தலால் உயர்ச்சியைக் குறிக்கும் ஏகாரம் வினாப் பொருளைத் தந்தது. ஏது? ஏவன்?

38.யா.
ஏ – யா. = வினாவெழுத்து.
யா = யாவை, யாவன்? யாங்கு? யாண்டு.
யார் - ஆர்?
ஒ.நோ ஏனை – யானை. ஏழ் - யாழ்.

39.எ.
ஏ – எ = வினாவெழுத்து.
எது? எங்கு? என்று?.

40.மே.
ஏ – மே = மேல்.
( a ) மேல் = மேற்பக்கம், உயர்வு, உடம்பு, ஒருதிசை, 7ஆம் வேற்றுமை உருவு.
மேல் + கு மேற்கு – மேக்கு = மேடான திசை.
மேலும் = மேற்கொண்டும், ஓர் இடைச்சொல்.
மேலுக்கு = மேற்பார்வைக்கு, வெளிக்கு.
மேனி = மேற்புறம், உடம்பு.
மேடு = உயரமான இடம்.
மேடு – மேடு. மேடை = மேடான இடம்.
( b ) மிகு = மேலாகு, மிஞ்சு.
மிசை = மேல்.
மிஞ்சு = மிகுதியாகு, அளவு கட. மிஞ்சு – விஞ்சு = மிகு.
மிச்சம் = மீதி.
( c )மீ = மேல், மீதியாகு.
மீமிசை = மிக மேல், ஓர் இலக்கணம்.
மீதி = மிகுதி. மீத்தம் = மீத்து வைத்த பொருள். மீதம் = மீதி.
மீது = மேல், 7ஆம் வேற்றுமை உருபு.
( d ) மீறு = வரம்பு கட.
மீறு – வீறு = பெருமை, பெருமை கொள்.
வீற்று + இரு வீற்றிரு = பெருமையுடனிரு.
( ந ) மெத்து மேற்கொள், தோற்கடி. மெத்தை மேல்வீடு.
மெச்சு = உயர்த்திப் பேசு.

41.ஐ.
ஐ = வியப்பு, பெருமை.
~ஐ வியப்பாகும்| ( தொல். உரி. 89 )
ஐயன் = பெரியோன், தலைவன், தந்தை, அரசன், கடவுள், ஆசிரியன், முனிவன், சிவன்.
ஐயனார் = சாத்தனார்.
தம் + ஐயன் = தமையன் = அண்ணன்.
ஐயை = அம்மை, பார்வதி.
ஐயா = ஐயன் என்பதன் விளி.
ஐயோ = ( ஐயன் என்பதன் விளி ) இரக்கக்குறிப்பு.

42.ஓ.
ஓ = ஒலிக்குறிப்பு.
(a) ஓசை – ஓதை.
ஓது = ஒலி செய், படி.
ஓல் = ஒலி, தாலாட்டு.
ஓலம் = ஒலி, முறையீடு.
(b) ஒல் = ஒலிக்குறிப்பு. ஒல் - கொல் ஒலிக்குறிப்பு.
ஒல் - ஒலி. ஓல்லென = விரைவாக.

43. ஓ.
ஓ = உயரக் குறிப்பு.
(a) ஓங்கு = உயர்
ஓங்கல் = யானை. ( உயரமான விலங்கு )
ஓக்கம் = உயர்வு
ஓச்சு = உயர்த்து.
(b) ஓ – ஓம் - ஓம்பு = உயரமாக்கு, வளர், பாதுகா.
ஓம்படை = பாதுகாப்பு.
ஓ – ஒ
ஒய்யாரம் = உயரம், உயர்வு.
ஒயில் = உயர்வு, உயரக் குதித்தடிக்கும் கும்மி.

44.உ.
ஓ – உ உயரக்குறிப்பு.
உக = உயர்
உச்சம் = உயர்நிலை.
உச்சி = உயர்ந்த வுறுப்பு, மயிர் வகிர்வு.
உச்சிப் பொழுது = சூரியன் உயர்ந்த வேளை.
உத்தரம் = உயர்நிலை, உயர்ந்த வடதிசை, மேல்மரம்.
உதி = மேலெழு.
உம்பர் = மேல், மேலிடம், தேவர்.
உம்பல் = யானை.
உயர், உயரம், உயர்வு,
உவா = யானை.
உன்னதம் = உயரம், வானகம்.
உன்னு = குதித்தெழு, மூச்சுப்பிடித்தெழு.

45. ஓ.
ஓ = பொருந்து.
( a ) ஓ + இயம் = ஓவியம் = ஒப்பனை, சித்திரம்.
ஓ – ஒ. ஒ = பொருந்து.
ஒட்டு = பொருந்து, ஒரு துணைவினை.
செய்ய + ஒட்டார் செய்ய வொட்டார் = செய்யவிடார்.
ஒட்டுமா = பொருத்து மாமரம்.
ஒட்டு = பிசின், சூள்.
ஒட்டு = ஒரு பொருளோடு பொருந்தி நில்.
ஒண்ணு = பொருந்து, ஒரு துணைவினை.
செய்ய + ஒண்ணாத = செய்ய வொண்ணாத – செய்யொத.
ஒத்து = மேல் வைத்தெடு, தட்டு.
ஒத்தடம் = ஒரு மருத்துவ முறை.
ஒத்தி = ஒத்து, ஊதும் சூழல், அடைமானம், ஒத்துப்பார்க்கும் பயிற்சி.
ஒப்பு = ஒத்துக்கொள், சமம்.
ஒப்பனை = ஒப்பு, அலங்காரம்.
ஒப்புவி – ஒப்பி
ஒம்பு = மனம் ஒத்துக்கொள்.
ஓல் = பொருந்து, ஒன்று = பொருந்து, முதலெண்.
ஒன்றி = தனி.
ஒவ்வு = பொருந்து, ஒப்பாக்கு.
ஒற்று = பொருந்து, பொருந்தி ஆராய்,
ஒற்றர் = ஒற்றுபவர்.

46.உ.
ஒ – உ = பொருந்து.
உத்தி = பொருத்தம், பொருத்ததமாகச்செய்யும் திறமை.
உத்தி கட்டல் = இவ்விருவராய்ப் பொருந்திவரல்.
உகம் - நுகம்
நுகக்கோல் = மாடுகளைப் பூட்டுங் கோல்.

47.உ.
உ = பின்பக்கம்.
உப்பக்கம் = பின்பக்கம்.
உத்தரம், உத்தாரம், உத்தரவு = மறுமொழி.
உத்தரகாண்டம் = பிற்காண்டம்.
உம்மை பிற்காலம், எதிர்காலம்.

48.கள்
கள் = கருப்பு
( a ) கள்ளம் = கருப்பு, மறைவு.
கள்ளன், கள்வன் = மறைவாய்க் கொள்பவன்.
களவு = மறைவு, திருடு.
களா, களவு = ஒரு கருப்புப்பழம், பழுக்கும் மரம்.
களி = கருப்பு மண், களி போன்ற உணவு.
கள் = புலனை மறைக்கும் மது. குளி = கட்குடியன், மகிழ்
கள்ளன் - கண்ணன் = கருப்பன்.
( b ) காளம் = கருப்பு.
காளி = கருப்பான பேய்த் தலைவி.
அம் + காளம் (காளி) + அம்மை = அங்காளம்மை.
காளான = கருங்காளான்.
காளை = கரிய எருது, எருது.
( உ ) கள் - கர = மறை
கரவு = கபடம், களவு.

49.கண்.
கள் - கண். = கருப்பான விழி.
( a ) கண் = விழி. குண் போன்றது, 7ஆம் வேற்றுமை உருபு.
கண்ணு = மனத்தால் பார், கருது.
கண்ணியம் = மதிப்பு.
கண்வாய் = சிறுவாய்க்கால்.
கண்ணாளன், கண்ணவன், கணவன் = மனைவிக்குக் கண் போன்றவன்.
கண்ணி = கண் கண்ணாய்க் கட்டிய மாலை.
கணு = கண் போன்ற வரையிடம்.
( b ) கணி = அளவிடு. கணியன் = கணிப்பவன், சோதிடன்.
கணிதம் = கணக்கு. கணக்கு + அன் = கணக்கன், கணக்கப்பிள்ளை.
கணக்கு = வரவு செலவுக் குறிப்பு.
கணி – குணி = அளவிடு.
( c ) கண் - காண் = பார். காட்சி = அறிவு.
காணி = மேற்பார், மேற்பார்க்கும் நிலம், பிரிவு.
காணம் = மேற்பார்வை, மேற்பார்வை நிலம், பிரிவு.
கண்காணம் = மேற்பார்வை. கண்காணி = மேற்பாற்பவன்
கண்காணியார் = அத்தியட்சர்.
மா + காணி = மாகாணி, மா + காணம் = மாகாணம்.

50. கரு.
கள் - கரு = கருப்பாகு.
( a ) கருப்பு = கருமை, பஞ்சம், பேய்.
கருகு = கருப்பாகு, தீந்துபோ.
கருக்கு = காயம், பனைமட்டையின் கரிய ஓரம், கூர்.
கருகல் = பொருள் விளங்காமை.
கரும்பு = கரிய தண்டுள்ள தட்டை.
கருநாடகம் - கருநடம் - கன்னடம் = ஒரு நாடு, ஒரு மொழி.
( b ) கரம்பு = கருமண். கரம்பை = காய்ந்த களிமண், ஒரு பயறு.
( c ) கரி = அடுப்புக் கரி, யானை.
கரிசல் = கரிய நிலம்,
கரிச்சான் = கரிக்குருவி. காரி = கரியது.
கரியன் = திருமால், கண்ணன்.
( d ) கரு – கறு.
கறு = கருப்பாகு, முகங்கரு, கோபி.
கறுவு = கோபம், வர்மம், கறம் = வர்மம்.

51.கல.
கல = கூடு
( a ) கலப்பு = சேர்ப்பு, கலப்படம் = இழிகலவை.
கலவை = கலப்பு, கலம்பகம் = பலவுறுப்புகள் கலந்த பனுவல்.
கலம்பகம் - கலம்பகம் = கலவை.
கலவி = புணர்ச்சி
( b ) கலகம் = சண்டை. கலாபம் = கலகம், சண்டை.
கலாம் = சண்டை.
( c ) கலங்கு = பல பொருள் கூடு, மயங்கு.
கலக்கம் = மயக்கம்.

52.குள்.
குள்ளம், குள்ளல், குள்ளை = குறுமை.
குஞ்சு, குஞ்சி = பறவைப் பிள்ளை.
குச்சு, குச்சி = சிறு கம்பு.
குட்டி = சிறியது, பிள்ளை. குருளை = குட்டி.
குட்டை, குண்டு = சிறு குளம்- குழி = சிறு வளை.
குட்டை – கட்டை = குறிகியது.
குக்கல் = குள்ளநாய்.
குன்று = குறை, சிறுமலை. குன்றி = சிறு முத்து.
குன்று + அம் = குன்றம்.
குறு – குறள் = குறு மானுடம், குறு வெண்பா.
குறளி = குறும் பேய்.
குறுகு = சிறு, குட்டையாகு.
குறுக்கு = குறுகிய வழி, ஊடு, நடுமுதுகு.
குறை = தன்மை குறைந்தது. குற்றம் = குணக் குறைவு.
குற்றி – குச்சி = துரும்பு. குறு + இல் = குற்றில் - குச்சில்
குறும்பு = குறுமலை, குறுமலையரசன், அவன்செய்யும் சேட்டை, சேட்டை.
குறுமகன் - குறுமான் = சிறுவன்.
கூழல் = குறுகியது.
கூழி = குறும்பக.
கூழை = குறுகிய முடி.

53.கும்
கும் = குவி, திரள்
கும் + அல் = கும்மல். கும்மி = கை குவித்தாடும் ஆட்டம்
கும் + அர் = குமர். குமர் + இ = குமரி.
குமர் + அன் = குமரன். குமரன் - குமாரன்.
குமிழ் - சிமிழ் - திமில்.
குமி + அல் = குமியல், குமி – குவி.
குவி – குவியல், குவால், குவவு.
குவை = குவியல், திரட்சி. குவை – குகை.
குப்பு – குப்பல் = குவியல்.
குப்புறு = குவி, தலைகீழாகு.
குப்பி = குவிந்த மூடி. குப்பை = குவியல், தூசிக்குவியல்.
குப்பம் = குப்பைக்காட்டு ஊர்.
குப்பன் = பட்டிக் காட்டான்.
கும்பு = குவி, கூடு, குவிய வேகு. கும்பல் = கூட்டம்.
கும்பி = குவிந்த வயிறு.
கும்பிடு = கைகுவி.
கும்பம் = குவிந்த குடம். கும்பா = குவிந்த பாத்திரம்.
கூம்பு = குவி, பாய்மரம். கூப்பு = கை குவி.
கொம்மை = திரட்சி.

54.கொள்.
கொள் = வாங்கு, பெறு, பிடி, மிகுதியாயெடு.
கொள்வனை = பெண் கொள்ளல்.
கொள்ளை = சூறை, விலை.
கொண்டி = கொள்ளை, மாட்டும் கொடுக்கு.
கொள்ளி = நெருப்புப் பிடித்த கட்டை, நெருப்பு.
கொளு = பொருட் குறிப்பு.
கொளுவு = பொருத்து, மாட்டு.
கொளுத்து = பற்றவை, பொருத்து, புகட்டு
கொளை = பண்ணமைத்தல்
கொள் - கோள் = கொள்ளுதல், கொல்லுதல், பிடித்தல், பொறுதல், கருத்து, கொள்கை, தீது சொல்லல்.
கோளாறு = கொள்ளும் வழி, செப்பஞ் செய்யும்நிலை, பழுது.
கோளி = கொல்லும் பேயுள்ள மரம், கொள்வோன்.

55.சிவ
சிவல் = செந்நிலம். சுpவலை = செங்காளை.
( a ) சிவம் = சிவப்பு, தீக்கடவுள், சிவன்.
சிவப்பு = சிவப்புக்கல், கோபம்.
சிவம் - சிவன், சிவை = உமை
சிவ – துவ – துவர் = சிவப்பு, காசுக்கட்டி, அதன் சுவை
துவரை = சிவந்த பயறு.
( b ) சிவ – செம்.
செம்மை = செந்நிறம், ஒழுங்கு, நேர்மை.
செக்கர் = செவ்வானம். செம்மான் = சங்கிலியன்.
செம்பு = சிவந்த உலோகம், அதனாற் செய்யப்பட்ட நீர்ப்பாத்திரம்.
செம்மல் = நேர்மையுள்ளவன், தலைவன்.
செப்பம் = சீரான நிலை.
செவ்வை = செப்பம், சீர், செவ்வி = தகுந்த சமையம்.
செவ்வன் = செவ்வை.
( c ) சிவ – சே.
சேந்தன் = சிவந்தவன், முருகன்.
சேய் = சிவந்வன், குழந்தை, முருகன்.
சேய் = சிவந்தவன், குழந்தை, முருகன்
சேயோன் = முருகன்.

56.சுள்
சுர் - சுள் = சுடற் குறிப்பு.
சுள்ளை = செங்கல் சுடுமிடம்.
சுள்ளை - சூளை.
சுள்ளி = காய்ந்த குச்சு.
சுண்டு = வெந்து சுருங்கு, சுருங்கியது, சிறிய மாகாணிப் படி
சுண்டுவிரல் = சிறிய விரல், சுண்டெலி = சிறிய எலி.
சுண்டை = சிறிய காய்.

57.சுர்
சுர் = நெருப்புக் குறிப்பு.
சுரீர், சுறீர் = நெருப்புக் குறிப்புகள்.
சுருசுருப்பு, சுறுசுறுப்பு = நெருப்புப்போல் வேகமாயிருத்தல்.
சுருக்கு, சுறுக்கு = திடுமெனச் சுடற் குறிப்பு.
சுருத்து, கறுத்து = உணர்ச்சி.
சுரம் = காய்ச்சல், காய்ந்த பாலை நிலம்.
சுரன் = சூரியன், தேவன்.
சூரன் = சூரியன்
சுரை = சுட்டு இடும் துளை, சிறுகுழல்.
சுரம் = துளையிற் பிறக்கும் ஒலி.
சூர் = அச்சம். சூரன் = வீரன்.

58.சுரி
சுர் - சுரி = எரி, நீறாக்கு, சூட்டால் சுருங்கு அல்லது வளை
சுரி + அணம் = சுரணம் - சுண்ணம் = நீறு.
சுண்ணம் - சுண்ணாம்பு.
சுரணம் - சூரணம்.
சுரி = சுருங்கு, வளை.
சூறை = வளைந்து வீசும் காற்று, (சூறாவளி) கொள்ளை.

59.சுல்
சுர் - சுல் = சூட்டால் வளை
சுலவு – சுலாவு = வளை
சுலவு – குலவு. சுலாவு – குலாவு.
சுன்னம் = வட்டம்.
குலாலம் = வளைவு- குலாலன் = வளைத்து வனையும் குயவன்,
கொள்பு – கொட்பு = சுற்று.

60.சுரு
சுர் = சுரு.
சுருங்கு = சூட்டால் ஒடுங்கு.
சுருங்கை = இடுக்கமான கீழ் நில வழி.
சுரங்கம் = சுருங்கை போன்ற குழி.
சுருக்கை = குறுக்கும் முடிச்சு.

61.சுளி.
சுள் - சுளி = சூட்டால் முகம் வளை.
சுழி = வட்டமான மயிரொழுங்கு அல்லது நீரோட்டம்
சுழி = மயிர்ச் சுழியுள்ளவன் செய்யும் குறும்பு.
சுட்டி = சுழியன், குறும்பு.
சுழல் = சுற்று, சுழல் - உழல் = வருந்து.

62.சுருள்
சுரி – சுரள் = வளை
சுருள் = ஓலைச் சுருள். சுருட்டை = வளைந்த முடி.
சுருணை = சுருள்.
சுருள் - உருள். உருளி = சக்கரம்.
உருளை = ரோதை, உருண்ட கிழங்கு
உருடை = ரோதை. உருண்டை – உண்டை.

63.சுடு
சுள் - சுடு.
சுடலை = சுடுகாடு. சூடு = கடல். சூட்டிக்கை = சுறுசுறுப்பு
சுடலையாடி ஸ்ரீ சிவன்

64.தென்
தெள் - தெள்ளு = மாவைத் தெளிவாக்கு, தூய்மையாக்கு.
தெளி = தெளிவாகு, ஐயந்தீர், உருத்தேறு. தெளிவு = பதநீர்.
தெரி = தெளிவாக அறி, தெரிந்துகொள்.
தேர் = தெளிவுபெறு, திறம்பெறு, ஆராய்.
தேறு = தெளி, உருப்படு, தேர்வில் வெற்றிபெறு.
தேறல் = தெளிவு, தேன்.
தேற்றம் = தெளிவு, உறுதி.
தேற்றாங் கொட்டை = நீரைத் தெளிவாக்கும் ஒரு கொட்டை.
தேன் = தெளிந்தது.
தேன் - தீ – தீவு, தித்தி, தெவிட்டு

65.தேய்.
( a ) தேய் - தேயு = தேய்ந்துண்டாகும் நெருப்பு.
தேய்வு – தேவு, தேவன், தேவதை = நெருப்புத் தன்மையுள்ள தெய்வம், கடவுள்.
தேய் - தெய்வு – தெய்வம்.
தேவு – தே.
( b ) தேய் - தீ = நெருப்பு. தீ – தீமை, தீங்கு.
தீம்பு = தீயின் தன்மை, பொல்லாங்கு.
தீவம் - தீபம் = விளக்கு.
தீ – தீய் = சுண்டு, காய், வாடு.

66.பகு
பகு = வகு
( a ) பகு + அல் = பகல் = நடு, நடுப்பகல், பகல்வேளை, பிரிவு.
பகலோன் = சூரியன். பகல் - பால் = பிரிவு.
பகு + ஐ = பகை = பிளவு, பிரிவினை.
பகு + அம் = பக்கம் - பக்கல். பக்கம் = பகுதி, திதி.
பகு + தி = பகுதி – பாதி. பகு + பு = பகுப்பு.
பாகு – பாகம். பாக்கம் = பக்கம், ஊர்ப்பகுதி.
பாகு – பாங்கு – பாங்கர். பாங்கு = பக்கம், தன்மை.
பாங்கு + அன் = பாங்கன்.
( b ) பகு – பா. பாத்தி = பகுக்கப்பட்ட செய்ப் பாகம். பாதீடு = பகுத்தல்.
( c ) பகு – வகு. வகு + ஐ = வகை. வகு + பு = வகுப்பு.
( d ) பகிர் - வகிர்.

67.பௌ;
பெள் = விரும்பு, காதலி
பெட்பு = விருப்பம்.
பெள்- பெண் = விரும்பப்படும் பால்.
பேள் + தை = பெட்டை – பெடை – பேடை – பேடு
பேடு + அன் = பேடன் = ஆண்டன்மையுள்ள பெண்.
பேடு + இ = பேடி = பெண்டன்மையுள்ள ஆண்.
பெண் - பிணா – பிணவு – பிணவல். பிணா – பிணை.
பெண் - பேண் = விரும்பு, விரும்பிப் பாதுகா.

68.பொள்
பொள் = துளையிடு.
போண்டான் = எலி பொத்துக் கிளப்பும் வளை.
(a ) பொளி = வெட்டு, வரம்பு.
பொள் - பொல்.
பொல் + அம் = பொல்லம் = ஒட்டை.
பொள்ளப் பிள்ளையார் = பொல்லாப் பிள்ளையார்.
பொக்கு = துளையுள்ளது, உள்ளீடற்ற தானியம், பொய்
பொக்குவாய் = பல்லற்ற வாய்
பொக்கு + அணம் = பொக்கணம் = பை.
போய் = உள்ளீடற்றது, மெய்யல்லாதது.
பொ = துளையிடு. பொத்தல் = துளை.
பொள் - போழ் = பிள, வெட்டு.
பொழில் = வெட்டப்படுவது, சோலை.
( b) போழ் = வெட்டு, துண்டு. போழ்து = இருளைப் பிளக்கும் சூரியன்.
போழ்து – பொழுது – போது = வேளை.

69.போ
( a ) போ = செல். போது = போ. போகு = போ.
போக்கு = செல்லல், ஆதரவு.
போக்கு – போங்கு = போகும் முறை, மாதிரி.
( b ) போதும் = செல்லும், வேண்டிய அளவாலகும்.
போதிய, போந்த = அளவான, போதுமான.
போகு = நீள்.
போது = விரிந்த அரும்பு.
போந்தை = விரிந்த பனை ஓலை.
போந்தை – பொத்தகம் - புத்தகம்.

70.வள்
வள் = வளை.
வள்ளம் = வட்டக்கலம்.
வளாகம் = சூழ்ந்த இடம், வளார் = வளைந்த பிரம்பு.
வளை = வளையல், வளைந்த சங்கு, வளைந்த உத்தரம், வட்டத் துவாரம்.
வளை + அல் = வளையல், வளை + வி = வளைவி.
வளை + அம் = வளையம்
வட்டம் = வளையம், வட்டக்காசு, வட்டி, பகுதி.
வட்டி = வட்டக்காசு, கடனுக்குச் செலுத்தும் காசு, வளைந்த பெட்டி.
வட்டில் = வட்டக் கலம்.
வட்டு = வட்டமான சில்.
வட்டகை, வட்டாரம் = இடப்பகுதி.
வணங்கு = உடம்புவளை.
வழங்கு = வளைந்து கொடு.
வணர் = வளைந்த யாழுறுப்பு.
வணங்கு – வாங்கு – வங்கு. வங்கி = வளைந்தது.
வண்டி = வட்டச்சக்கரம், சக்கரத்தையுடைய சகடம்.
வண்டு = வளையல், வட்டமான வண்டு.
வண்டி – பண்டி – பாண்டில்.
பாண்டி = வட்டாடல். பாண்டில் = வட்டக் கிண்ணம், உருட்சியான எருது.
பாண்டில் = வீரன்.
பாண்டியன் = வீரன்.
வளி = வளைந்து வீசும் காற்று.
வாளி = வளையம், வளைந்த பிடி, வளைந்துவிழும் அம்பு.
வாணம் = வளையும் வெடிவகை. வாணம் - பாணம் = அம்பு.

71.வெள்
வெள் = வெள்ளையாகு.
வெளி = வெள்ளையான இடம். வெட்ட = வெள்ளையான.
வெள்ளாளன் = வெண்களமன்.
வெள்ளாட்டி = வெள்ளாளப்பெண், வேலைக்காரி.
வெள்ளரி = வெண்கோடுள்ள காய்.
வெள்ளை = வெள்ளைத்துணி, சுண்ணாம்பு, கள்ளமற்றவன்.
வெள்ளந்தி = கள்ளமின்மை.
வெள்ளம் = வெள்ளையான புது நீர்.
வெள்ளி = வெள்ளையான உலோகம், நட்சத்திரம்.
வெள்ளிலை – வெற்றிலை.
வெள்ளில் - விள – விளா – விளவு = வெள்ளோடுள்ள பழமரம்.
வெளில் - வெளிறு = வெள்ளைமரம்.
வெளு = வெள்ளையாக்கு, துவை, அடி.
வெள்கு – வெட்கு = நாணத்தால் முகம் வெளு.
விளக்கு = ஒளிவிடு, புலனாகு.
விளக்கு = விளங்கச் செய்வது.


72.வேகு.
வே = வேகு, எரி.
வேகம் = விரைவு, கடுமை.
வெந்தை = வெந்த கீரை.
வேம்பு = சூடான பழம் பழுப்பது. அல்லது வேனிலில் தழைப்பது.
வேனல் = வெப்பம், வேனில் = கோடை.
வேக்கை = வேனல், வெப்பு = சூடு, வெப்பு – வெப்பம்.
வெம்பு = வெயிலிற் காய். வெம்பல் = காய்ந்தபழம்.
வேது = சூடு, ஒத்தடம், வெதுவெதுப்பு = சூடு.
வெதும்பு = சுடு, வேதனை = நோவு.
வெம்மை = சூடு, கடுமை, விருப்பம்.
வெய்யில் - வெயில் = வெப்பமான ஒளி


73.வேள்
வேள் = விரும்பு.
வேள் - வேண்டு = விரும்பு, கெஞ்சிக் கேள்.
வேள் - வேண் + அவா = வேணவா.
வேட்கை = விருப்பம், தாகம், விடாய் = விருப்பம், தாகம்.
வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம்.
வேளாண்மை = விரும்பிச் செய்யும் உபசாரம்.
வேளாளன் = உழவன், வேளிர் = ஒரு குலத் தலைவன், குறுநில மன்னன்.
வேளாண் = உழவன் குடி, வேளான் = ஒரு பட்டம்
வேளாட்டி = வேளாளப் பெண். வேளம் = வேளாளப் பெண்டிர் சிறைக்களம்.
வேண்மகன் - வேண்மான் = குறுநில மன்னன்.
வேட்டம், வேட்டை = விரும்பி விலங்கைப் பிடித்தல்.
வேட்டுவன், வேடுவன், வேடன் = வேட்டையாடுபவன்.

சனி, 7 மார்ச், 2009

கேள்விச்செல்வம்

கேள்வி: செ.பாண்டியன், கோவை - ௨ (2).

தமிழ் ஒலிக் குறியீடுகளில் தேவைப்படுங்கால் வடமொழியெழுத்துகளான ஜ்,ஹ்,ஸ்,ஷ் முதலியவற்றையும்; ஆங்கில எழுத்துகளான J,F,H,G முதலியவற்றையும்,எழுதிக்காட்ட என்ன முறையைக் கையாள வேண்டும்? நம் எழுத் தமைப்பில் ஏதாவது
மாற்றம் செய்து கொள்ளலாமா? அவ்வாறாயின்,அம் முறையைத் தென்மொழியில் எழுதுவீர்களா?

பதில்: ஞா . தேவநேயப் பாவாணர்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் ஒலித்தொகுதியுண்டு.எல்லா மொழிகட்கும் பொதுவான ஒலிகள் ஏறத்தாழ இருபத்தைந்தே. பெருமொழிகளுள் மிகக்குறைந்த ஒலிகளுள்ளவை தமிழும், மிக நிறைந்த ஒலிகளுள்ளது வடமொழியுமாகும்.தமிழின் அடிப்படை யொலிகள் முப்பது. வடமொழி யொலிகள் நாற்பதெட்டு முதல் ஐம்பத்து மூன்றுவரை பலவாறு சொல்லப்பெறும்.
ஒவ்வொரு பெருமொழிக்கும் சில சிறப்பொலிகளுள. மொழிகளெல்லாம் வல்லியல்,மெல்லியல் என இருதிறப்படும். அவற்றுள், வல்லியன் மொழிகள் ஏனைமொழிச் சிறப்பொலிகளுட் பெரும்பாலானவற்றை ஏற்கும் திறத்தன. மெல்லியன் மொழியோ அத் திறத்ததன்று. தமிழ், மெல்லியன்மொழிகளுள் தலை சிறந்தது. ஆதலால், பிறமொழி வல்லொலிகளை ஏற்காது. மெல்லொலியுடன் வல்லொலியை இணைப்பது. மெல்லிய மல்லாடையுடன் வல்லிய கம்பளியை இணைப்பது போன்றதே. ஆடவர் பெண்டிர் மேனிகள்போல், வல்லியன் மொழிகளும் மெல்லியன் மொழிகளும் என்றும் வேறுபட்டேயிருக்கும். தமிழில் வல்லொலிகள் கலப்பின் அதன் தன்மை முற்றும் மாறிவிடும்.அதன்பின் அது தமிழாகாது.
தமிழின் மென்மையை யுணர்ந்தே, கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர் தமிழ்ச் செய்யுட்கு வடசொல்லை வேண்டாது வகுத்த விடத்தும்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்று வடவெழுத்தை விலக்குவாராயினர். இனி, 12 ஆம் நூற்றாண்டில்,

"இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும்
அல்லா அச்சை வருக்க முதலீறு
யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம்
பொதுவெழுத் தொழிந்த நாலேழும் திரியும்"

என்று வட சொற்கள் பெருவாரியாய்த் தமிழில் வந்து வழங்குவதற்கு வழி வகுத்த பவணந்தியாரும்.

"ஏழாமுயி ரிய்யும் இருவும்ஐ வருக்கத்து
இடையில் மூன்றும் அவ்வம் முதலும்
எட்டே யவ்வும் முப்பது சயவும்
மேலொன்று சடவும் இரண்டு சதவும்
மூன்றே யகவும் ஐந்திரு கவ்வும்
ஆவீ றையும் ஈயீ றிகரமும்"

"ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்கு
இய்யும் மொழிமுத லாகிமுன் வருமே"

"இணைந்தியல் காலை யரலக் கிரகமும்
மவ்வக் குகரமும் நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி உவ்வும் ஆம்பிற."

எனத் தமிழியற் கொத்தவாறே வடவொலிகளைத் திரிக்க உடன்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டில் தக்க புலவரும், இன்மையால்,தமிழ் உரைநடையிலும் செய்யுளிலும் வடசொற்களுடன் வடனெழுத்துகளும் தாராளமாய் வந்து கலந்துவிட்டன. அவர்ரையெல்லாம் நிறை தமிழ் வாணரான மறைமலையடிகள் களைந்தெறிந்தார்.

ஒரு தமிழ்ப் பேரறிஞர் ஆய்த வெழுத்தினியல்பைப் பிறழவுணர்ந்து,அதனைக்கொண்டு ஆரிய வொலிகலையெல்லாம் தமிழிற் குறிக்க வொண்ணுமென்றும், அதற்காகவே அது தமிழ் நெடுங்கணக்கில் வகுக்கப்பட்டதென்றும் கருதினார். அஃதாயின் தமிழ் ஒரு வல்லியன் மொழியாயும் அதன் நெடுங்கணக்கு ஆரிய மொழிகளெல்லாம் தோன்றியபின் ஏற்பட்டதாயுமிருத்தல் வேண்டும். தமிழின் தொன்மையும் முன்மையும் மென்மையும் அக் கொள்கைக்கு முற்றும் மாறாயுள்ளமை காண்க.

ஆய்தம் என்பது ஒரு வகை நுண்ணியககரவொலியே யன்றி வேறன்று.
ஆய்தல் - நுண்ணியதாதல்.
" ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் "

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.

ஆய்த வொலியைப் பிறழ வுணர்ந்தும்,ஒலி வடிவிற்கும் வரிவடிவிற்கும் இயைபின்மையை அறியாதும்,ஆய்த வரிவடிவைத் துணகொண்டு F,Z,போன்ற ஆங்கில வொலிகளைச் சிலர் தமிழிற் குறித்து வருகின்றனர். எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரியன்று. தமிழ் வரிவடிவால் ஓர் அயலொலியை இடர்பட்டுக் குறிக்க முயல்வதினும், அவ் வொலிக்குரிய அயன்மொழி வரிவடிவையே தழுவுவது நன்றாயிருக்குமே! ஓர் ஒலியைத் தழுவும்போது ஏன் அதன் வரியைத் தழுவுதல் கூடாது? ஆங்கிலம் உலக மொழிகளெல்லாவற்றினின்றும் சொற்களைக் கடன் கொண்டிருந்தும் அவற்றையெல்லாம் தன்னொலியாலும் தன் வரியாலுமன்றோ இன்றும் குறித்துவருகின்றது.

மொழியென்பது ஒலித்தொகுதியேயன்றி வரித்தொகுதியன்று. வரி மாறலாம், ஒலி மாறாது. ஒலி மாறின் மொழி மாறிவிடும். செவிப்புலனாய வொலியைக் கட்புலனாக்குங் குறியே வரியாம்.

முதலில் வடசொற்களையும் பின்பு வட வெழுத்துகளையும் ஒவ்வொன்றாகப் புகுத்துவதையே, கொடுந்தமிழ் மொழிகளை ஆரிய வண்ணமான திரவிடமாக்கும் வழியாக, தொன்றுதொட்டு வட மொழியாளர் கையாண்டு வந்திருகின்றனர். சேர நாட்டுச் செந்தமிழ் சோழ பாண்டி நாட்டொடு தொடர்பற்றுக் கொடுந் தமிழாகிப் பின்பு, ஆரியச் சேர்க்கையால் மலையாளம் அல்லது கேரளம் என்னும் திரவிட மொழியாகத் திரிந்துள்ளமை காண்க. கொடுந்தமிழ்களை முன்னர் ஆரிய வண்ணமாக்கியது போன்றே, இன்று செந்தமிழையும் ஆக்க முயன்று வருகின்றனர். அதனொடு ஆங்கில எழுத்துகளும் சொற்களும் சேரின், தமிழ் விரைந்து அழிந்து போவது திண்ணம். அரசன், நகைச்சுவை, பொத்தகம் அல்லது சுவடி, பூ, பறவை என்னும் தென் சொற்களிருக்க, அவற்றிற்கு மாறாக ஏன் ராஜன், ஹாஸ்ய ரசம், புஸ்தகம், புஷ்பம், பக்ஷி என்னும் வட சொற்களையும் வட சொல் வடிவங்களையும் தழுவ வேண்டும்?

இயற்கை யொலிகளும் செயற்கை யொலிகளும் மிகுந்து நெடுங்கணக்கு நீண்ட வடமொழியுள்ளும், எ, ஒ என்ற உயிர்க் குறில்களும், ள, ழ, ற அன் என்னும் மெய்யெழுத்துகளும் ஆகிய தமிழொலிகளும், F, Z என்னும் ஆங்கிலவொலிகளும், சில அரபியொலிகளுமில்லை. ஆகவே, ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பொலிகளுள. அவற்றையெல்லாம் தழுவுவது ஆங்கிலமாகிய உலக மொழி ஒன்றற்கே தகும். எல்லா மொழிகளும் தழுவ வேண்டியதில்லை; தழுவின், எல்லாம் தத்தம் தனித் தன்மையிழந்து ஒன்றாகிவிடும்.

ஒரு மொழியின் வளம் அல்லது வலிமை அதன் சொற்களாலாயது. பொருள்தரும் சொல்லிற்கு உறுப்பாகும் ஒலியே எழுத்தாம். அது தன்னளவிற் பொருள் தராது. அதனாலாகும் சொல்லே பொருள் தருவது. குமரிக் கண்டத் தமிழர், முப்பதொலிகளைக் கொண்டே, அக் காலத்து மாந்தருள்ளத்திலெழுந்த கருத்துகளைக் குறிக்குஞ் சொற்களையும், பிற்காலத்திலெழுங் கருத்துகளை குறித்தற்கேற்ற சொற்கருவிகளையும்,அமைத்துச் சென்றனர். ஆதலால், ஒலிக் குறைவினால் தமிழிற்கு ஏதும் மொழிக்குறைவில்லை. ஆயிரங் காய்ச்சியான தென்னைக்கு ஓலைக் குறைவுமில்லை அழகிய சொல்வளமிக்க தமிழுக்கு ஒலிக் குறைவினால் ஒரு குறைவுமில்லை.ஒவ்வொன்றும் அதனதன் இயல்பில் நின்றே வளர்தல் வேண்டும். ஆதலால், தமிழுக்கு எவ்வகையிலும் எழுத்து மாற்றம் தேவையின்றென அறைக. அது தமிழுக்கு இறுதி விளைக்குமென்றே மறைமலையடிகளும் விடுத்தனர். அதுவே உறுதியென்று கடைப்பிடிக்க.



நூல் : தமிழ்வளம் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர்