கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 8 டிசம்பர், 2012

கண்ணப்பர்


நன்றி

கண்ணப்பர் செய்ததை நானும் செய்யலாமா...?

எனது நண்பன் ஒருவன் வேடிக்கையாக மட்டுமல்ல விதண்டா வாதமாகவும் பேசுவதில் வல்லவன் அவனது கருத்துக்களை பல நேரங்களில் வேடிக்கை என்று விட்டுவிடுவேன். ஒருமுறை அவன் கூறியதை மட்டும் என்னால் மறக்கமுடியவில்லை அதற்கு அவனுக்கு மறுமொழியும் என்னால் சொல்லமுடியவில்லை.

அவன் கூறியது இது தான் சுவாமிக்கு படைக்க வேண்டும் என்பதற்காக குளித்து முடித்து பாத்திரங்களை ஆச்சாரமாக கழுவி எந்தவித அசுத்தமும் தீண்டாதவாறு சமையல் செய்து படைக்கிறீர்கள் ஆனால் உங்கள் கடவுள் கடித்து பார்த்து சுவைத்து கொடுத்த பழங்களை சபரியிடம் இருந்து ஆசையோடு பெற்று கொள்கிறார். அவளது பக்திக்கு மெச்சி வாழ்த்துதலும் வரமும் கொடுக்கிறார்.

இன்னொருபுறம் கடித்து மென்று பார்த்த மாமிசத்தையும் ஏற்றுக்கொண்டு எச்சில் துப்பி செய்த அபிசேகத்தையும் பொறுத்து கொண்டு இவன் தான் எனக்கு சிறந்த பக்தன் இவனுக்கு இணையாக எவனும் இல்லை என்று கண்ணப்பனுடைய பக்தியை மெச்சி பாராட்டுகிறார்.

இப்படி எதை கொடுத்தாலும் வாங்கிகொள்ளும் கடவுளுக்கு எதையாவது படைத்து விட்டு போகவேண்டியது தானே அதற்காக ஆச்சாரம் அனுஷ்டானம் என்று ஊரை கூட்டி ஆர்பாட்டம் செய்வது ஏன்? என்பது அவன் கேள்வி

எனக்கு அதற்கு சரியான பதிலை சொல்ல தெரியவில்லை. தாங்கள் தக்க பதிலை எனக்கு சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்கிறேன். இறைவனுக்கு சுத்த பத்தமாக படைப்பது நல்லதா? அல்லது எப்படி வேண்டுமானாலும் படைக்கலாமா?

பெரியவர்களை குழந்தைகள் கால்களால் மிதிப்பது அடிப்பது கடிப்பது தவறு அவமரியாதை என்று நாம் சொல்வது பொதுவான ஒரு நியதி. அதே குழந்தை மிகவும் சிறியதாக இருக்கும் போது நமது நெஞ்சின் மீது ஏறி நின்று மிதித்தாலும் கூட அது நமக்கு தவறாக தோன்றாது. மாறாக குழந்தையின் பிஞ்சிகால்களுக்கு முத்தம் கொடுக்க விரும்புவோமே தவிர தண்டனை கொடுக்க விரும்ப மாட்டோம்.

இறைவனுக்கு நாம் அனைவருமே குழந்தைகள் அவன் நமது செயல்களை ரசிப்பானே தவிர ஒருபோதும் கோபத்தோடு பார்க்க மாட்டான். இங்கே வேறொன்றையும் நினைவில் வைக்க வேண்டும். குழந்தைகளின் அனைத்து குறும்புகளையும் நாம் ரசிக்கிறோம் என்பதற்காக அந்த குழந்தைகள் நம் முன்னால் சிகரெட் பிடித்தாலோ மது அருந்தினாலோ பாராட்டவா செய்கிறோம். அடித்து உதைத்து திருத்தவே நினைப்போம். அதே போல இறைவனும் நமது அனைத்து செயல்களையும் ரசித்தாலும் நாம் முறைதவரும் போது தண்டிக்கவே விரும்புவார்.

கடவுளுக்கு அசுத்தம் சுத்தம் இருட்டு வெளிச்சம் என்ற பாகுபாடு கிடையாது. அவர் நமது செயலுக்கு ஆதாரமாக இருக்கின்ற எண்ணங்களை பார்ப்பாரே தவிர செயலை பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார். நம் எண்ணம் நல்லதாக மாசு மருவற்று இருந்தால் அது எத்தகைய செயல் மூலம் வெளிப்படுத்த பட்டாலும் அவருக்கு அதில் விருப்பமே.

கண்ணப்பரும் சபரியும் இறைவனுக்கு படைத்தது அசுத்தமான பொருள்களாக இருக்கலாம். அந்த பொருள்களுக்குள் உள்ளியிடாக மறைந்திருக்கும் எண்ணங்களை பார்த்தே அவர்களுக்கு ஆறுதலையும் ஆசிர்வாதத்தையும் இறைவன் கொடுத்தார். நமது செயலும் பக்தி பூர்வமானதாக இருந்தால் அதை ஏற்று கொள்வதில் அவருக்கு எந்த தடையும் கிடையாது. ஆனால் அவர்கள் எல்லாம் அப்படி செய்தார்களே அதை போல் நாமும் செய்ய கூடாதா? என்று ஆணவத்தோடு செயல்பட்டோம் என்றால் அதற்கான தண்டனையில் இருந்து நாம் தப்ப இயலாது.

உங்கள் நண்பருக்கு இந்த பதிலை சொல்லுங்கள் சபரி தான் கடித்த கனியை ஸ்ரீ ராமனுக்கு கொடுத்த பிறகு ராமனுடைய நினைவாகவே தன்னுடைய உடலை விட்டு கடவுளோடு ஐக்கியமானார். கண்ணப்பரும் இறைவனுக்காக தனது கண்களையே பறித்து கொடுத்து தனது பக்தியால் உயர்ந்து நின்றார். அவர்களை போல கடித்த கனியும் மாமிசத்தையும் நாம் படைக்க வேண்டுமென்றால் அவர்களை போலவே உயிரை விடவும் கண்களை பறிகொடுக்கவும் சித்தமாக இருக்க வேண்டும். இது முடியும் என்றால் தாரளமாக அவர்களை போல நாமும் நடந்து கொள்ளலாம். என்று தெளிவாக சொல்லுங்கள் அவருக்கு சரியான கோணத்தில் புத்தி வேலை செய்தால் இது நன்றாக விளங்கும்.

கருத்துகள் இல்லை: