கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

சுறவத் திங்கள் ௰௪

திருக்குறள்

மனத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை._திருவள்ளுவர்.
இல்லறத்துக்குத் தக்க குணம் உடையவளாகி தன் கணவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே சிறந்த மனைவி ஆவாள்

நறுக்கு

பெண்
ஏடுகளில்
முன்பக்கத்தில்
அட்டையில்
வீடுகளில்
பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்

பொன்னாடை
பசியால் அழுத
மனைவியின் கண்ணீரை
பொன்னாடையால்
துடைத்தார் புலவர்
புறப்பட்டார்
அடுத்த விழாவுக்கு
_காசி ஆனந்தன்

ங போல் வளை_ஒளவையார்.

'ங' என்ற எழுத்து முன்னும் நில்லாது பின்னும் நில்லாது இடையில் நின்று எழுத்துகளை இணைப்பது போல் நடுநிலையோடு சிந்தித்து உறவுகளை இணைத்து வாழ்வது நன்று.

Wife - என்பதைத் தமிழில் எழுதினால்
மனையாள்,இல்லாள்,கிழத்தி,ஆட்டி,மாற்றுப்பெண்,
நகைமுகயாள்

திணை இலக்கியம்: குறுந்தொகை
திணை - முல்லை
துறை
கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தாந்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!

காந்தள் மலர் போன்ற கையால் கட்டித்தயிரை பிசைந்தவள் கையை ஆடையில் துடைத்துக் கொண்டு விறுவிறுவென்று அடுப்பை முட்டும் போழ்து புகையால் குவளை போலும் அவள் விழிகள் சிவந்திருந்தன ஆனாலும் அவற்றைப் பொருட்படுத்தாது கணவனுக்காக புளிச்சோற்றை ஆக்கினாள். அதை இனிதென்று கூறிக்கூறி கணவன் உண்ணும் போது அவள் முகம் மகிழ்வதைக் கண்டேனடி தோழி

திணை இலக்கியம் : கலித்தொகை

பிரியாத வாழ்வே வாழ்க்கை

அரும்பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப
பிரிந்துறை சூழாதி ஐய! விரும்பிநீ
என்.தோள் எழுதிய தொய்யிலும், யாழநின்
மைந்துடை மார்பில் சுணங்கும் நினைத்துக்காண்
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்
இளமையும் காமமும் ஓராங்குப் பெறார்
வளமை விழைதக்கது உண்டோ! உளநாள்
ஓரோஒ கைதம்முள் தழீஇ, ஓரோஒகை
ஒன்றன் கூறுஆலை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதுஅரோ
சென்ற இளமை தரற்கு

ஐயனே! அரிய பொருளிடத்து உண்டாகும் ஆசையால் உள்ளம் ஊக்குவிப்பதால் தலைவியைப் பிரிந்து போயிருத்தலை எண்ணவேண்டா! நீ விரும்பித் தலைவியின் தோளில் எழுதிய வரிக்கோலம் தரும் அழகையும் கைவிடமுடியுமென்றால் நினைத்துப் பார்! நீ மிகவும் மதிக்கும் பொருளும் அதைத் தேடச் சென்றவர்கள் தத்தம் நிலைமைக்கேற்பக் காலம் நீட்டிப்ப நின்று தேடப்படுவதே அல்லாது இப்போதே எடுத்துக் கொள்ளத் தக்கதாய் ஓரிடத்தே கிடப்பது அன்று. பொருளைத் தேடப் போகாதிருந்தவர்கள் எல்லாரும் ஒருவகையால் உண்ணாமலும் இருக்கமாட்டார். இளமையும் இருதலையும் ஒத்த காமத்தையும் ஒரு சேரப்பெற்றவர்கள் விரும்பத்தக்க ஒரு நன்மை அந்த செல்வத்துக்கு இல்லை. இல் வாழ்க்கை என்பது தமக்கு உண்டான நாள் எல்லாம் இல்லத்தே இருந்து ஓரோவொரு கைகளால் தங்களுக்குள் தழுவிக்கொண்டு புறத்தே ஓரோவொரு கைகளால் ஒரே ஆடையை உடுத்திக் கொண்டிருப்பினும் பிரியாதிருப்பவரின் வாழ்க்கையே வாழ்க்கை! கழிந்து போகும் இளமை மீள் வருவது இல்லை!