கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

சமர்க்கள நாயகிகள்


பிரிகேடியர் துர்க்கா,பிரிகேடியர் விதுசா

தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.

ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.

ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

ஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.

மீனாட்சி அம்மன்


மீனாட்சி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்

கோயில் அமைப்பு 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் 8 கோபுரங்களையும், 2 விமானங்களையும் கொண்டுள்ளது. இத்திருக் கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடி யும் உடையது. மேலும் ஒரு ஏக்கர் பரப் பளவில் கோயில் வளாகத்தில் பொற்றாமரைக்குளமும் அமையப்பெற்றுள்ளது. கோபுரங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 1559ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உயரமான கோபுரமாக திகழ்கிறது.

மேலும் கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுடன் கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது. கருவறை விமானம் இக்கோயிலின் கருவறை விமானமானது, இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிம்ம உருவங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. பொற்றாமரைக்குளம் மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள பொற்றாமரைக்குளம் செவ்வக வடிவில்,165 க்ஷ் 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது.

பொன் + தாமரை + குளம் என பொருள்படும் வகையில் பொற்றாமரைக்குளம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இதன் வடக்கு கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அதோடு தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.

பல நூறு வருடங்களுக்கு முன் இந்த பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது
கவின் கொஞ்சும் மண்டபங்கள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண் டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கவின் கொஞ்சும் மண்டபங்கள் கோயிலில் அமைந்துள்ளன. அதோடு கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபத்தில் தற்போது சிறு வணிகக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் உள்ளது. இவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் 985 தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் அழகுடனும், மிளிர்ச்சியுடனும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது
ஆயிரங்கால் மண்டபம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேராக இருப்பது போன்ற தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் 985 தூண்கள் அமைந்துள்ளன.

நடராஜர் சிலை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமான், சொக்க நாதர் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். மற்ற எல்லா சிவத்தலங்களிலும் இடது காலை தூக்கி தாண்டவமாடும் கோலத் தில் இருக்கும் நடராஜர் சிலை இங்கு வலதுகாலை தூக்கி ஆடும் தோற்றத்தில் காணப்படுகிறது. மீனாட்சி அம்மன் விக்ரகம் கருவறையில் மீனாட்சி அம்மன் இரண்டு திருக் கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார்.


இந்த விக்ரகம் மரகதக்கல்லால் ஆனது என்பதால் மரகதவல்லி என்ற பெயரிலும் மீனாட்சி அம்மன் அறியப்படுகிறார். மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களிலும் அம்மன் அழைக்கப்படுகிறார்.விஷ்ணு நடத்திவைத்த திருமணம்! விஷ்ணு பகவான் தன் தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு மணமுடித்து வைக்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. —  Raj Kumar

தமிழோவியம்வைகை அணை 300 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

நன்றி : மணிவண்ணன்

தளபதி தீபன்


தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் தீட்டிய சிங்களப்படை, 2009 ம் ஆண்டு சமர்க்களத்தில், ஆனந்தபுரம் பெட்டிச்சமர் தாக்குதலைத் தலைமை தாங்கிய தளபதி தீபனின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவரையும் அவரது படையணியையும் போரில் தடைசெய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களைக் கொண்டு அழித்தது. போரியல் விதிகளுக்கு எதிராக, மானுடதர்மத்திற்கு முரணாக அமைந்த சிங்களப்படையின் இச்செயற்பாடானது, அவர்களின் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது. தளபதி பிரிகேடியர் தீபன், ஈழப்போரின் பல இமாலய வெற்றிகளின் நாயகர்களாகப் பரிணமித்த தளபதிகளில் தனியிடம் பதித்த தளபதி.

ஆர்ப்பாட்டமில்லாத ஆளுமையின் வடிவமாக விளங்கிய அவரின் பன்முகப்பட்ட தலைமைத்துவம் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வகிபாகத்தைக் கொண்டிருந்தது. முக்கியமானதும், கடுமையானதுமான சமர்க்களங்களில் தனது ஆளுமையையும் சிறந்த திட்டமிடலையும் வெளிப்படுத்தி, சவாலான களமுனைகளில் தனிமுத்திரை பதித்து, அதனூடாக தன்னை வெளிப்படுத்தி சிறந்த நம்பிக்கையான தளபதியாக பரிணமித்தவர்.

தளபதி தீபன் அவர்களின் தாக்குதல்களையும் அவரின் செயற்பாடுகளையும் சொல்ல விளையும்போது, தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு போகமுடியும். ஏனெனில், சமர்க்களச் செயற்பாடுகளினூடாக தனக்கென ஒரு தனித்துவத்தை நிலைநிறுத்திய தளபதியாக மிளிர்ந்த தீபன், தளபதி பால்ராஜ் அவர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவரது பாசறையில் இருந்து வெளிவந்தவர். தளபதி தீபன் அவர்களின் ஆளுமை என்பது தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கிலிருந்தும் திட்டமிடும் தன்மையிலிருந்தும் சிறிது மாறுபட்டிருக்கும். ஆனால் இந்த தன்மைகளே இவர்களிருவரும் இணைந்து பல வெற்றிகளை பதிவு செய்வதற்கான தளத்தைக் கொடுத்திருந்தது. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தனித்துவமாக பல போரியல் வெற்றிகளைப் பெற்றதனூடாக தனது தனித்துவத்தை பல இடங்களில் பதிவுசெய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையைப் பிறப்பிடமாக கொண்ட தீபன் அவர்களின் பூர்வீகம் யாழ்மாவட்டம், தென்மராட்சியின் வரணியாகும். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், விடுதலைக்காக கல்வியை இடைநிறுத்திவிட்டு, 1985 வருடம் மேஜர் கேடில்ஸ் அவர்களிடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தனது விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்தார்.

கிளிநொச்சியில் தனது ஆரம்பகாலப் பணிகளை தொடங்கினார். இலங்கை இராணுவத்திற்கெதிராக கிளிநொச்சியில் நடைபெற்ற தாக்குதல்களில் பங்குகொண்டதுடன் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தளபதி தீபன் அவர்கள் காட்டிய தீவிரத்தன்மையும் செயற்பாடும் அவரை வன்னி மாவட்ட துணைத் தளபதியாக்கியது.

1990 ம் ஆண்டு, தீவிரமடைந்த ஈழப்போர் இரண்டு காலப்பகுதியில், மிகவும் காத்திரமான போரியல் பங்கை வகித்து, முன்னுதாரணமாக விளங்கிய வன்னிக் களமுனையில், மைல் கற்களாக விளங்கிய பல சண்டைகளில் தளபதி பால்ராஜ் அவர்களிற்கு உறுதுணையாக தலைமைதாங்கிய பெருமை தளபதி தீபன் அவர்களையே சாரும். குறிப்பாக, தாக்குதல்கள் நடைபெறும் சமயங்களில் சில முனைகளில் சண்டை நிலைமை இறுக்கமடையும். அப்போது, தளபதி பால்ராஜ் களமுனைக்கு சென்று நிலைமையை சீர்செய்வார். அச்சமயங்களில், தலைமைக் கட்டளைப் பொறுப்பை தளபதி தீபன் அவர்களிடமே கொடுத்துவிட்டு செல்வார். அந்தளவிற்கு தளபதி தீபன் அவர்களின் தலைமைத்துவத்தில், ஒழுங்குபடுத்தலில் நம்பிக்கையுடையவராகவும், பால்ராஜ் அவர்கள் வழிநடாத்திய தாக்குதல்களில் பலவற்றில் முதுகெலும்பாகவும் செயற்பட்டவர்.

1990ம் ஆண்டு, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலை களத்தில் நேரடியாக நின்று வழிநடாத்தினார். இந்த தாக்குதலில், பெரல்களில் மண்ணை நிரப்பி அதனை உருட்டிக்கொண்டு காப்பாகப் பயன்படுத்தி முன்நகர்ந்தே சண்டைசெய்யப்பட்டது. இதன்போது தீபன் அவர்கள் களத்திற்கான தலைமைக்கட்டளையை வழங்கியது மட்டுமல்லாமல், தானும் ஒரு பெரலை உருட்டிக் கொண்டு முன்னேறி சண்டையிட்டார். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதே கையில் காயமடைந்தார். உடனேயே களத்திற்கு விரைந்த தளபதி பால்ராஜ் அவர்கள் சண்டையை தொடர்ந்து நடாத்தி கொக்காவில் முகாமை வெற்றி கொண்டார். பின்னர் மாங்குளம் முகாம் தாக்குதல், வன்னிவிக்கிரம தடுப்புச்சமர் போன்றவற்றிலும் தனது தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கியவர் தளபதி தீபன் அவர்கள். 1991 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்புத்தளபதியாக பால்ராஜ் அவர்கள் பொறுப்பை எடுக்கும் போது, வன்னி மாவட்டத் தளபதியாக தீபன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

வன்னி பெருநிலப்பரப்பின் சிறப்புத் தளபதியாக செயற்பாடுகளைத் தொடங்கிய தீபன் அவர்கள், வண்ணாக்குளம், கெப்பிட்டிக்கொல்லாவையில் எல்.3 எடுத்த சமர், முல்லைத்தீவு முகாமின் காவலரண்களைத் தகர்த்து 50 கலிபர் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைக் கைப்பற்றியது போன்ற பல தாக்குதல்களை தனித்துச் செய்தார். மேலும் மின்னல், ஆ.க.வே தாக்குதல், இதயபூமி ஒன்று, தவளைப்பாய்ச்சல், யாழ்தேவி என பல பாரிய சமர்களில் வன்னி மாவட்ட படையணிகளுக்குத் தலைமை தாங்கினார்.

இவற்றில், நான்குமணி நேரத்தில் நடத்தி முடித்த மாபெரும் சமரான யாழ்தேவிச் சமரானது எமது போராட்ட வரலாற்றில், மரபுவழிச் சண்டை முறையில் முக்கியத்துவமானதாக அமைந்த தாக்குதல். இதில் தளபதி தீபன் அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ் குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்திய இந்த வரலாற்றுச் சமரில் தளபதி பால்ராஜ் அவர்கள் காயப்பட்ட வேளையிலும், அவரது களமுனையை வழிநடாத்தி வெற்றியை எமதாக்கிய பெருமையில் தீபன் அவர்களிற்கு பெரும் பங்குண்டு.

இத்தாக்குதல் பற்றி தீபன் அவர்கள் தெரிவிக்கையில் ‘ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்து கொண்டிருந்தது. எனவே, வரப்போரங்களிலும் பற்றைக் கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும் உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி, எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்து சண்டையிட்டோம்’ என்றார். பாரிய இழப்புகளுடன் சிங்களப்படைகள் பின்வாங்கிய இச்சமரில் ராங்கிகள், கவசவாகனங்கள் அழிக்கப்பட்டதுடன் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பூநகரி தவளை நடவடிக்கையில் பிரதான கட்டளை முகாம் தாக்குதலுக்கான தலைமையைப் பொறுப்பெடுத்து தாக்குதலை வழிநடாத்தினார். பல அடுக்குப் பாதுகாப்பு வியூகத்தைக் கொண்டமைந்த பிரதான முகாமைக் கைப்பற்றும் தாக்குதல் மிகவும் சவாலாக இருந்தது. எதிரி கட்டளை மையத்தை தக்கவைக்க கடுமையாகப் போராடினான். முகாமின் பலபகுதி கைப்பற்றப்பட்டபோதும், இறுதியாக ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்த கடும் சண்டை மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது. பகல்வேளையில் அங்கு சிதறியிருந்த இராணுவத்தினரும் ஒன்றுசேர, முகாமின் எதிர்ப்பும் மிகவும் வலுப்பெற்றது. என்றாலும் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி தாக்குதலை தீவிரப்படுத்தினார். இறுதியில் முகாமிலிருந்து மோட்டார்களை கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நவநீதன் தலைமையில் அணிகளை ஒழுங்கமைத்து மோட்டார்களை கைப்பற்றினார். இச்சம்பவத்தில் லெப் கேணல் நவநீதன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். 1993 ம் ஆண்டு தவளைப்பாய்ச்சல் நடவடிக்கை முடிந்த பின்னர், சிறப்பு வேவுப்பிரிவு தளபதியாக பொறுப்பேற்று யாழ் தீவுப்பகுதித் தாக்குதலுக்கான முழு வேவுப்பணியையும் நிறைவு செய்தார். ஆயினும் அத்தாக்குதல் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் கொக்குத்தொடுவாய்ப் பகுதி முகாம் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, 1995 ம் ஆண்டு சூரியகதிர் பாதுகாப்புச் சமரில் பல களமுனைகளைத் தலைமை தாங்கினார். இதன்போது தனது கையில் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து களமுனைத் தளபதியாக தனது பங்கை வழங்கினார்.

வலிகாமத்திலிருந்து பின்நகர்ந்ததைத் தொடர்ந்து தளபதி தீபன் அவர்கள் முல்லைத்தீவு முகாம் தாக்குதலுக்கான வேவுப்பணியை செய்வதற்காக தலைவரால் பணிக்கப்பட்டார்;. முல்லைத்தீவு முகாம் வேவு சவாலான விடயமாகவே இருந்தது.

இங்கு சிங்களப்படையினர் முகாமின் காவல்நிலைகளை மிகவும் நெருக்கமாக அமைத்து உச்ச அவதானிப்பில் வைத்திருந்தனர். தாக்குதலுக்கான வெளிப்பகுதி வேவுகள் முடிந்திருந்தாலும், சண்டையைத் தீர்மானிக்க முகாமிற்குள் நுழைந்து வேவு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேவுப்பிரிவினர் கடுமையாக முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இதற்கு மாற்றுவழி ஒன்றைச் சொன்னார் தளபதி தீபன் அவர்கள். எதிரியின் ‘டம்மிக் காவலரணை’ இனம் கண்டு, எதிரியின் ரோந்து செல்லும் நேரத்தைக் கணிப்பிட்டு, அந்த நேர இடைவெளிக்குள் காவரணின் சுடும் ஓட்டைக்குள்ளால் காவலரணுக்குள் உட்புகுந்து, இராணுவத்தின் ரோந்தை அவதானித்துவிட்டு முகாமிற்குள் செல்லுமாறு திட்டம் வகுத்தார். அவ்வாறே உள்முகாம் வேவுகளை துல்லியமாகச் செய்து முடித்தனர்.

முல்லைத்தீவுத் தாக்குதல் நடவடிக்கையின் போது, முகாமின் மேற்குப்பகுதியைக் கைப்பற்றி, முகாமின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பு தளபதி தீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லெப் கேணல் தனம், லெப் கேணல் பாக்கியராஜ், லெப்கேணல் ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி படையணியுடன் களமிறங்கினார் தீபன். தாக்குதல் ஆரம்பித்து முன்னணிக் காவலரண் கைப்பற்றப்பட்டவுடன், உட்தாக்குதல் அணியுடன் சென்று மிகவேகமாக முகாமின் மையப்பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தார். ஏனெனில் எதிரியின் இரண்டாவது காவலரண் தொகுதியானது நீரேரியின் கரையில் அமைந்திருந்தது. கடற்கரைப்பக்கத்தால் உள்ள சிறிய தரைப்பாதையாலேயே படையணிகள் உள்நுழைய வேண்டும். அதில் பலமான காவலரண்களை எதிரி அமைந்திருந்தான்.

அந்தப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட கரும்புலிப்படகால் வேகமாக வந்து பாய்ந்து வெடிக்கவைப்பதனூடாக எதிரியை அழித்து படையணியை நகர்த்துவதாக திட்டமிருந்தாலும், அந்த நடவடிக்கை சாத்தியமில்லாமல் போகும் நிலையேற்பட்டால் மாற்று வழி படையணிகளிடமே கொடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான களத்தில் தான் நிற்கவேண்டும் என்பதை கருத்தில் வைத்து, முன்னணிக் காவலரண்கள் சரியாக பிடிபடாத நிலையிலும், 2 கிலோ மீற்றர் பின்னால் உள்ள தாக்குதல் முனைக்கு படையணிகளுடன் வேகமாக நகர்ந்து தாக்குதலில ஈடுபட்டார். மையப்பகுதி தாக்கப்பட்டதால் நிலைகுலைந்த சிங்களப்படை, ஆட்லறிகளையும் மையப்பகுதியையும் பாதுகாக்க முடியாமல் விட்டுவிட்டுப் பின்நகர்ந்தது. இராணுத்தினரின் மையக் கட்டளைப்பகுதி ஆட்டங்காணத் தொடங்கியதுடன் இராணுவத்தின் ஒழுங்கமைப்புத்திறன் பாதிக்கப்பட்டது. இதுவே முல்லைத்தீவு முகாமின் தாக்குதல் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது.

சத்ஜெய – 03 நடவடிக்கையில் பாதுகாப்புச் சண்டையை வழிநடாத்திய போது, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான சண்டையாக உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் எள்ளுக்காட்டுப் பகுதியைக் கைப்பற்றி நிலைகொண்ட சிறப்புப் படையணி மீது நடாத்தப்பட்ட உடனடி ஊடறுப்புத் தாக்குதல் அமைந்தது. உருத்திரபுரம் பகுதியை சிறிலங்கா சிறப்புப்படைகள் கைப்பற்றியபோது அதனால் ஏற்படக்கூடிய பாதக நிலையை உணர்ந்து, உடனடி ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டார்.

சிறிலங்காவின் சிறப்புப்படைகள் வாய்க்கால் வரம்பை தமக்கு சாதமாக்கி நிலையெடுத்திருந்தது. எதிரியின் முன்பகுதி வயல் வெட்டை என்பதுடன் அக்காலப்பகுதி நிலவுகாலம். நிலவு கிட்டத்தட்ட அதிகாலை 4.30 மணிக்கு மறையும். 6 மணிக்கு விடிந்துவிடும். அந்த இடையில் கிடைக்கும் 1.30 மணிநேர இடைவெளிக்குள் நகர்ந்து தாக்குதலை நடாத்த வேண்டிய நிலைமை. என்றாலும் தளபதி லெப் கேணல் தனம் தலைமையில் அணிகளை ஒழுங்குபடுத்தி, நிலவிற்குள் நகரக்கூடியளவிற்கு படையணிகளை நகர்த்தி, காப்புச் சூடுகளை ஒழுங்குபடுத்தி, நிலவு மறையும் அத்தருணத்திற்குள் திடீர் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடாத்தினார். வேகமான இத்தாக்குதலில் 150 இராணுவத்திற்கு மேல் கொல்லப்பட்டதுடன் இராணுவத்தின் நகர்வு சில காலம் முடக்கப்பட்டது.

தளபதி தீபன் அவர்களின் தொடர்ச்சியான தாக்குதல் பங்கேற்புகளும் அவருடைய தலைமைத்துவமும், ஒருங்கிணைக்கும் தன்மையும், தாக்குதல்களை திட்டமிடும் இலாவகமும் இன்னுமொரு பரிணாமத்தையடைந்தது. களமுனைகளில் நிலைமைக்கேற்றவாறு தாக்குதல் வியூகங்களை வகுப்பது, களங்களில் நேரடியாகச் சென்று வழிநடாத்தும் தன்மை, தனது பொறுப்பை நிறைவேற்றும் பாங்கு, ஒருங்கிணைத்து வழிநடாத்தும் பாங்கு என தளபதியின் ஆளுமை போராளிகளிடத்தில் நல்ல அபிப்பிராயத்தைக் கொடுத்ததுடன் அவருடைய தலைமைத்துவத்தையும் வலுப்படுத்தியது.

1997 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியாக தீபன் அவர்கள் பொறுப்பேற்றார். சாள்ஸ் அன்ரனி படையணியுடன் தீபன் அவர்களின் போர் நடவடிக்கைகள் இன்னுமொரு கட்டத்திற்குள் நகர்ந்தது. இந்தநேரத்தில்தான் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது. இந்த இராணுவ நடவடிக்கையைத் தடுக்கும், வவுனியா களமுனையை வழிநடாத்தும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையின் பிரதான போர்முனையான ஏ-09 பாதையால் முன்னேறும் எதிரியைத் தடுக்கும் சண்டையென்பது அந்த எதிர்ச்சமரின் பிரதான பகுதியாக இருந்தது. ஓமந்தையில் தொடங்கிய மறிப்புத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்ட பெருமை நிச்சயமாக தீபன் அவர்களையே சாரும். இப்பாரிய படைநகர்வை எதிர்கொண்டபோது ஓமந்தை, இரம்பைக்குளம், பன்றிக்கெய்தகுளம், பனிக்கநீராவி போன்ற இடங்களில் பல ராங்கிகளை அழித்து சிங்களப்படைக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார்.

இதில் புளியங்குளம் சண்டை என்பது ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு பலத்த இழப்பைக் கொடுத்த சண்டையாகும். புளியங்குளம் சந்தியை மையப்படுத்தி முகாம் ஒன்றை அமைத்து எல்லாத் திசைகளிலும் இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடியவாறு படையணிகள் தயார்படுத்தப்பட்டன.

இராணுவம் பல திசைகளிலும் மாறிமாறி புளியங்குளத்தில் விடுதலைப்புலிகளின் படையணியைப் பின் நகர்த்த கடும்பிரயத்தனப்பட்டது. இலகுவில் வன்னியை ஊடறுக்கலாம் என கங்கணம் கட்டிய சிங்களப்படைக்கு புளியங்குளத்தில் தளபதி தீபன் தலைமையில் வீழ்ந்த அடியானது, ஒட்டுமொத்த ஜெயசிக்குறு இராணுவத் தலைமையினதும் சிங்களச் சிப்பாய்களினதும் மனோதிடத்தை பலவீனமாக்கியது. மிகவும் கடுமையான சண்டையாக வர்ணிக்கப்பட்ட இச்சண்டை ஜெயசிக்குறுவின் தலைவிதியை மாற்றியமைத்தது. இந்த கடுமையான போர்க்களத்தை கடும் உறுதியுடன் புலிகள் எதிர்கொண்டனர்.

தளபதி தீபன் அவர்கள் புளியங்குளம் ‘பொக்ஸ்’ பகுதிக்குள் தனது கட்டளை மையத்தை நிறுவி அங்கிருந்தே தடுப்புத்தாக்குதலை ஒழுங்கமைத்து தெளிவான, நிதானமான, உறுதியான கட்டளையை வழங்கினார். ஒரு பாரிய படைவலுவைக் கொண்ட சிங்களப்படையை நிர்மூலமாக்கியதுடன் மூன்று மாதங்களிற்கு மேல் எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி பாரிய பின்னடைவுக்குள்ளாக்கினார். ஒருதடவை விடுதலைப்புலிகளின் நிலையை ஊடறுத்துவந்த துருப்புக்காவியையும் கைப்பற்றினர். இது சராசரி 60 பேருக்கு மேல் தினசரி காயமடையும் களமுனையாக இருந்தது. அங்கு 3 அல்லது 4 தடவைகளிற்கு மேல் மாறிமாறி காயப்பட்டாலும் தொடர்ந்து ‘புளியங்குளத்திற்கு தீபண்ணையிட்ட போகப் போறம், எங்களுக்கு மருத்துவ ஓய்வு தேவையில்லை’ என தீவிரமாக போராளிகள் செயற்பட்டு புளியங்குளத்தை புலிகளின் குளமாக மாற்றினர். இதன் நாயகனாக விளங்கியவர் தளபதி தீபன் அவர்களே! ஒரு வருடங்களுக்கு மேல் நடந்த ஜெயசிக்குறுச் சமரில் புளியங்குள மறிப்பு என்பது விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதலாவது வெற்றிகரமான தடுப்புச் சமர் என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் மனோதிடத்தை பாரியளவில் பலவீனப்படுத்திய, எதிரிகளாலும் வியந்து பார்க்கப்பட்ட சமராகும்.

பின்னர், கிளிநொச்சியை மீளக்கைப்பற்ற நடாந்த சமரில் டிப்போச் சந்திவரை கைப்பற்றிய தாக்குதலை தலைமை தாங்கியதுடன், அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-02 எனப் பெயரிடப்பட்ட தாக்குதலில் எதிரியை ஓடவிடாமல் தடுத்து, வரவிடாமலும் மறிக்கும் பொறுப்பை தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடாத்த, முற்றுகைக்குள் வைக்கப்பட்ட கிளிநொச்சி முகாம்களைத் தகர்த்தழிக்கும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் வழிநடாத்தினார். கிளிநொச்சி நகரப்பகுதியை மையப்படுத்தி பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை கொண்டமைந்த பாதுகாப்பு அரண்களை உடைத்து தாக்குதல் நடைபெற்றது. சில இடங்களில் காவலரண்களைக் கைப்பற்றுவதும் பின்னர் சிங்களப்படைகள் அதை மீளக் கைப்பற்றுவதும் என கடுமையான சண்டைகள் நடைபெற்றன.

தளபதி தீபன் அவர்கள் பூநகரி, முல்லைத்தீவு முகாம் தாக்குதல்களில் ஏற்பட்ட சிரமங்கள், சாதகங்கள் போன்றவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை வழிநடாத்தினார். இறுதியாக பிரதான மைய பாதுகாப்பு காவலரண் பகுதியில் கடுமையான எதிர்பை எதிர் கொண்டார். ஏற்கனவே பூநகரி சண்டையில் பிரதான முகாமை கைவிட வேண்டி புலியணிகளுக்கு ஏற்பட்டதன் காரணங்களைப் புரிந்த அவர், இதுபோன்ற ஒரு தோல்வி மீள ஏற்படக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இறுதியான ஒரு முயற்சியை செய்யத் தீர்மானித்தார். தளபதி லெப் கேணல் சேகர் தலைமையில், தளபதி லெப் கேணல் வீரமணியின் நேரடி வழிகாட்டலில் எதிரி எதிர்பார்க்காத வண்ணம் பகல் நேர உடைப்புத் தாக்குதல் ஒன்றை ஒழுங்குபடுத்தினார். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை இருந்தும் கூட, பகல் நேர உடைப்பை வெற்றிகரமாக செய்யலாம் என திடமாக நம்பி, சாள்ஸ் அன்ரனி படையணியை களமிறக்கி அதில் வெற்றியடைந்தார். ஆனையிறவிலிருந்து உதவியணியும் வரவில்லை என்பதுடன் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணும் உடைக்கப்பட்டதை உணர்ந்த இராணுவம் பின்வாங்கலைச் செய்தது. இதில் பெறப்பட்ட வெற்றியானது அவரது தலைமையின் காத்திரத்தன்மையை வெளிப்படுத்தியது.

சமநேரத்தில் கிளிநொச்சியின் வெற்றியை கொண்டாட முடியாத வகையில் சிங்களப்படைகள் கருப்பட்டமுறிப்பு, மாங்குளம் பகுதியைக் கைப்பற்றியது. தலைவரின் திட்டத்திற்கமைவாக, தளபதி பிரிகேடியர் சொர்ணம் தலைமையில் ஓயாத அலைகள் -03 தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதிக் களமுனை ஒட்டிசுட்டானில் திறக்கப்பட்டது. அதன் இன்னுமொரு முனை, தளபதி தீபன் தலைமையில் மாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டது. பல மாதங்களாக முன்னேறிய ஜெயசிக்குறு படையணி சில நாட்களுக்குள் மீள வவுனியாவிற்கே பின்நகர்த்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-03 இன் தாக்குதல் முனைகள் பரந்தனிலும் சுண்டிக்குளப் பகுதியிலும் தனங்கிளப்புப் பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பரந்தன் பகுதியிலிருந்து ஆனையிறவை நோக்கிய படைநகர்வு தளபதி தீபன் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது. பரந்தனில் பகல் பொழுதில் தாக்குதலைத் தொடங்கி, பரந்தன் காவலரண்களைத் தகர்த்து முன்னேறி புலியணிகள் நிலைகொண்டனர். மறுநாள் தாக்குதலுக்கான நகர்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தவேளை, எதிரி பின்னால் உள்ள வீதியில் புதிய அரண்களை அமைத்து நிலையெடுத்தான். தன் பலத்தில் அதிக நம்பிக்கை கொண்டு, தளபதி தீபன் அவர்கள் வோக்கியில் குறுக்கிட்டு ‘உன்ர தளபதி 5.2ஜ (லெப் கேணல் ராகவனின் சங்கேதப்பெயர்) ஒட்டிசுட்டானில் போட்டிட்டம், இனி என்ன செய்யப் போகிறாய்’ என்று கேட்டான். ‘அதுக்குத்தான் இப்ப உன்னட்ட வந்திருக்கிறம், எங்களையென்ன ஒட்டிசுட்டான் ஆமியெண்டு நினைச்சியே, நடக்கப்போறத பொறுத்திருந்து பார், என்று நிதானமாகவும் சவாலாகவும் சொன்ன தளபதி தீபன், மறுநாள் அதை செய்தும் காட்டினார்.

அதைத்தொடர்ந்து ஓயாத அலைகள்-04 நடவடிக்கையில் குடாரப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் தரையிறங்கி எதிரியை ஊடறுத்து நிலையமைத்து நிற்கும் மூலோபாய நகர்வின் வெற்றியானது, அச்சமருக்காக தரைவழியாக ஏற்படுத்தப்போகும் விநியோகப் பாதையில் தங்கியிருந்தது. அதற்கான உடனடி வெற்றியை பெறவேண்டிய முக்கியமான களமுனையை தளபதி தீபன் வழிநடத்தினார். ஆனையிறவு வீழ்ச்சியின் அடிப்படைக்கு மிகவும் முக்கியமான களத்தை செயற்படுத்துவது சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆரம்பத் தாக்குதலில் சில பிரதேசங்களை கைப்பற்றி தக்கவைக்க முடிந்தது. மறுநாள் தாக்குதலுக்கான உத்திகளை வகுத்து தீர்க்கமான முடிவுடன் இருந்த தளபதி தீபன் அவர்கள், தளபதி பால்ராஜ் அவர்களிடம் ‘நாளைக்கு விடிய பாதையை திறந்து உங்களுக்கு விநியோகம் அனுப்பி வைப்போம்’ என உறுதியுடன் தெரிவித்து அதை செய்து முடித்தார்.

பின்னர் ஆனையிறவுத் தளத்தை தடுக்கும் நோக்குடன் செய்யப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல் முயற்சிகள் பல செய்தாலும் அவை வெற்றியைத் தரவில்லை. இறுதியில் மருதங்கேணிப் பாலத்தை அண்மித்த பகுதியில் தளபதி தீபன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் ஒழுங்குபடுத்திய ஒரு ஊடறுப்பு முயற்சி வெற்றியைக் கொடுக்க, நகர்ந்த புலியணிகள் புதுக்காட்டுச் சந்தியை சென்றடைந்தன. தாம் சுற்றிவளைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்த படையினர் ஆனையிறவுத் தளத்தை விட்டுப் பின்வாங்கினர். இச்சமரின் வெற்றிக்கு கணிசமான பங்கை தளபதி தீபன் அவர்கள் வழங்கியிருந்தார். விடுதலைப்புலிகளினால் ஓயாத அலைகள் என்று பெயரிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் அனைத்திலும் பங்கு கொண்டவர் என்ற பெருமை பெற்ற ஒரே தளபதி தீபன் அவர்கள் மட்டுந்தான்

இசைத்தமிழ் வரலாறு


இசையமுதம் – தொடர் - 03


“இசை!”

“சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்....”

திருநாவுக்கரசரின் தாய்மொழி தமிழாதலின்
“தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்”
என்று பாடுகின்றார்.

முன்னோர்களின் பாக்கள் யாவும்,
இன்னிசை கலந்தபின்பே உயர்வான அர்த்தங்களை
மனதிற்குப் புலப்படுத்தி
எம்மை ஆனந்தப் படுத்துகின்றன.

நாகப்பாம்பு பாம்பாட்டியின் மகுடியின் இனிய நாதத்தைக்கேட்டுத் தன்னை மறந்து ஆனந்தத்தினால் படம்விரித்தாடுகின்றது.

கீதை நாயகனின் இனிய புல்லாங்குழல் ஓசை கேட்டு,
மாடுகள் பின் செல்லுகின்றன.

இனிய ஓசையுடைய பட்சிகள், அதிகாலையில் விழித்துப் பாடுகின்றன.

தாயின் தாலாட்டைக் கேட்டு, மடியில் தவழும் மழலை
தன்னை மறந்து துயில் கொள்ளுகின்றது.

நாரதர், அநுமார், இராவணன் முதலியவர்கள் இசையைக் கொண்டே இறைவனின் அருளைப் பெற்றார்கள்.

இசையானது மனதைச் சாந்தப்படுத்தி,
தெய்வத்தோடு ஒற்றுமைப்படச் செய்கின்றது.

சகல நற்குணங்களையும் வளர்த்துத் தெய்வபதம்
பெறச் செய்கின்றது.

இம்மேம்பாடுடைய இசையைப் பயிற்சிக்கும் எவரையும்
அது உயர்த்தி வைக்கும்.

சகல கலைகளிலும் செல்வத்திலும் தெய்வபக்தியிலும் விருத்தியடையச்செய்யும்.

இத்தகைய இசையை அற்பமாக நினைத்து
உலகியல் வழிகளில் உபயோகப்படுத்துகின்றவர்கள் புன்னெறியடைந்து மறைந்து போவார்கள்.

தெய்வத்தைத் துதிப்பதையே முதன்மையாகக்கொண்ட
நம் முன்னோர்கள் இசையின் நுட்பத்தைப்பற்றி மிக விரிவாக எழுதியிருக்கின்றார்கள்.

எழுதப்பட்டவைகள் இக்காலத்தில் பெரும்பாலும் அழிந்தும், தெளிவாக அறிந்து கொள்வதற்கு அரிதாகவும் இருக்கின்றது.

தொல்காப்பியம் என்பது அகத்தியருடைய மாணாக்கனான மதுரைத் தொல்காப்பியரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கணமாகும்.

80,000 சூத்திரங்களடங்கிய பேரகத்தியம் என்னும் அகத்தியருடைய இலக்கணத்தைச் சுருக்கி இவர் 8,000 சூத்திரங்களால் தமது இலக்கண நூலை எழுதினார்.

தொல்காப்பியம் முழு நூலும் எழுத்து சொல் யாப்பு என்னும் மூன்று பிரிவுகளையுடையதா யிருக்கவேண்டும்.

இவைகளில் கடைசிப்பிரிவு பூரணமாய்க் கிடைக்கவில்லை. நச்சினார்க்கினியர், இளம்பூரணர், சேனாவரையர் என்ற மூவர் தொல்காப்பியத்துக்கு உரை யெழுதியிருக்கிறார்கள்.
தற்காலத்தில் வழங்கும் 1612 சூத்திரங்கள் மிகச் சொற்பமென்றே சொல்லவேண்டும்.

மீதியான 6,388 சூத்திரங்கள் அழிந்துபோயினவென்றே நினைக்க இடமிருக்கின்றது.

இப்படி அழிந்துபோன தொல்காப்பியம், பூர்வ தமிழரின் வழக்க ஒழுக்கங்கள், அரசமுறைமைகள், நிலத்தின் பாகுபாடுகள் வீணையின் வகைகள் முதலியவைகளைப் பற்றி மிகத் தெளிவாகச் சொல்லுகின்றது.

தென்னிந்திய இசையின் நுட்பத்தையும்
அதன் பூர்வீகத்தையும் நாம் அறியவேண்டுமானால்
இசைத்தமிழையும் நாடகத் தமிழையும் தன் அங்கமாகக்கொண்டு முத்தமிழ் என்று பெயர் வழங்கும் தமிழ் மொழியைப் பற்றி நாம் சற்று விசாரிக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

தமிழ் மொழியினது தொன்மை

தமிழ்மொழியின் காலமே தென்னிந்திய இசையின் காலமும் ஆகும்.

தமிழ் மொழிக்குரிய இனிமையே தென்னிந்திய இசையின் இனிமையுமாகும்.

தமிழ்மொழி எவ்வாறு ஏனைய அன்னிய மொழிகளோடு கலவாத தனித்த மொழியாக விளங்குகின்றதோ
அவ்வாறே தென்னிந்திய இசையும் ஏனைய இசைகளோடு கலவாமல் தனித்த விதிகளைக் கொண்டு விளங்குகின்றது எனலாம்.

ஏனைய மொழிகளையும் ஏனைய இசைகளையும் தரம் குறைக்க வேண்டுமென்பது எமது நோக்கமல்ல.

உலகச் சரித்திரங்கள் எழுதப்படுவதற்கு முன்னும்
மற்றத் தேசத்தார் நாகரீகமுடையவர்களாகுவதற்கு முன்னும், அழிந்துபோன லெமூரியாக் கண்டத்திலுள்ளோர் நாகரீகமுடையவர்களாயிருந்திருக்க வேண்டுமென்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

அக்கண்டத்திலுள்ள தென்மதுரையும், அதில் அரசாண்டு வந்த பாண்டிய மன்னர்களும், சங்கப்புலவர்களும், அவர்கள் பேசிய மொழியாகிய தமிழும், மிகுந்த தொன்மையும் தனிச் சிறப்பும் வாய்ந்தவையாகும்.
“தமிழ்” என்னும் பதத்தின் முதல் இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த “தமி” என்னும் முதனிலையானது ஒப்பின்மை, தனிமை என்றும், “தமிழ்” என்னும் பதமானது இனிமை, என்றும் அர்த்தப்படுகின்றது.

"திராவிட மொழிகள், சமஸ்கிருத மொழிக்கு வெகு காலத்துக்கு முன்னுள்ளவை யென்பதில் சந்தேகமேயில்லை.

ஆரியர் இந்தியாவிற்குள் வருவதற்குமுன் இந்து தேசம் முழுவதிலும் பேசப்பட்ட மொழி தமிழ் என்றே அறிய முடிகின்றது.

எபிரேய மொழியின் எழுத்துக்களிலிருந்து
சில கிரேக்க எழுத்துக்களும்,
கிரேக்க மொழியின் எழுத்துக்களிலிருந்து
பாலி மொழியின் எழுத்துக்களும்,
பாலி மொழியின் எழுத்துக்களிலிருந்து
சமஸ்கிருத மொழியின் எழுத்துக்களும்,
அவைகளிலிருந்தே பிராகிருத மொழியின் எழுத்துக்களும் தோற்றம் பெற்றன என்றும்,

அம் மொழிகளின் வார்த்தைகள் ஒன்றிற்கொன்று தொடர்புடையனவாய் இருக்கின்றனவென்றும் மொழிவல்லுநர்கள் முடிவு செய்கின்றனர்.

தமிழ்மொழியின் தோற்றத்தையும் அதன் தொன்மையையும் அவர்களால் கணித்துவிட முடியவில்லை.

மிகப்பூர்வமாயுள்ள இத்தமிழ்மொழி, அதன் பின்வந்த வேறு எந்த மொழிகளாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சமஸ்கிருத மொழியானது தமிழ்மொழியில் எவ்வித மாறுதலையும் உண்டாக்கமுடியாமல், இன்றும் ஒரு அன்னிய மொழியாகவே இருந்துவருகிறது.

தமிழ்மொழியென்று சொல்லவுங்கூட வெறுத்த ஆரியர்,
திராவிட மொழியென்று பெயர் வைத்தார்.


இசையமுதம் – தொடர் - 04முத்தமிழ்
**************
இயல் (இயற்தமிழ்)
இசை (இசைத்தமிழ்)
நாடகம் (நாடகத்தமிழ்)
ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் ஆகும்.

மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.

இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ்.
இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ்.
கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ்.

இயல் (இயற்தமிழ்)
****************************
இயல் என்னும் தமிழ், இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் என்று வகைப்படுத்தபடும்.

தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியத்தை மொழிப்புலம் என்று குறிப்பிடுகிறது.

மொழிப்புலத்தில் பேசப்படும் வழக்கும், எழுதப்படும் செய்யுளும் அடக்கம் என்கிறது.

இந்தப் புலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று படிநிலைகள் உள்ளன.

இவற்றைச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் என அது குறிப்பிடுகிறது. செந்தமிழ் இயற்கை என்பது இயல்.

இசை (இசைத்தமிழ்)
****************************
செவிவழிபுகுந்து மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் ஒலிதான் இசை என்பதாகும்.

இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்றும் பொருள் இருக்கிறது.

ஒழுங்கான கட்டுபடுத்தப்பட்ட இனிய ஒலியை இசையாகும்.

பிறப்புமுதல் இறப்புவரை இசை எம்முடன் பயணிக்கின்றது.

தாலாட்டாக ஆரம்பித்து இறப்பில் ஒப்பாரியாக இசை விரியும் பரிமாணங்கள் அடர்த்தியானவை.

அகம், புறம் இரண்டினையும் ஐக்கியப்படுத்தி ஒருமித்த தன்மையில் இவற்றில் ஊடுருவி உள்ளம், உடல் இரண்டினுக்கும் விவரிக்க இயலாத சுகமான அனுபவத்தை வழங்கக்கூடியதும் இசை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

நாடகம் (நாடகத்தமிழ்)
****************************
நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து என்று வழங்குகிறது.

கூத்து ஆடுவோர் கூத்தர் கூத்தர் எனப்பட்டனர்.
கூத்து அகக்கூத்து, புறக்கூத்து, என இரு வகைப்படும்.

அகக்கூத்து எனபது வீட்டுக்குள் ஆடப்படும் வரிக்கூத்து. புறக்கூத்து பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறுவது.

கூத்து தமிழர்களின் பாரம்பரிய நாட்டர் கலை வடிவங்களில் ஒன்று.

கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலையாகும்.

கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன.
முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது.

அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடியவை இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தக் கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக அமைந்துள்ளன.

தமிழர் இசை
*********************
பரதமுனிவர்,தமது நாட்டிய சாத்திரம் என்னும் நூலில் தென்னாட்டுமக்கள் பாட்டிலும் பல இசைக்கருவிகள் வாசிப்பதிலும், கூத்திலும் மிக்கதிறம் வாய்ந்தவர்கள் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

அவர்குறிப்பிட்டிருப்பது பண்டைய தமிழ் இசையே என்பதும் பண்டையதமிழிசையே இன்றைய கர்னாடக சங்கீதத்திற்கு தாயாகத் திகழ்ந்தது எனபதும் அனைத்து ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்தாகும்.

தொலகாப்பியத்தில் மக்கள்தம் தொழிலைச்செய்ய உதவும் கருவி இசை ஒன்றைப் “பறை” என்றும்,
பொழுதுபோக்கிற்கான கருவி இசையை “யாழ்” என்றும் குறிப்பிடுகின்றார்.

எட்டுத்தொகை சேர்ந்த பரிபாடல் பண்ணுடன் கூடிய,
70 இசைப்பாடல்களைக்கொண்ட ஒரு தொகுப்பாகும்
ஆனால் நமக்கு 20 பாடல்களே கிடைத்திருக்கின்றன.

மூவேந்தர்களின் அவையில் தமிழ் இசை பெரிதும் போற்றப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் யாழ் ஆசிரியன் மற்றும் குழல் ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்களை சிறப்பாக எடுதுரைக்கிறார்.
103 பண்களின் பெயர்கள் தமிழர் இசையில் விளங்கியதை சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன.

கிபி 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 6ஆ ம்நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றுக்கும் தமிழ் இசைக்கும் இருண்டகாலம் என்று கூறப்படுகிறது.
கிபி ஆறாம் நூற்றாண்டு சமணர்காலத்தில், சமணர் இசையை வெறுத்ததால் பல இசை நூல்கள் அழிந்து போய்விட்டன.

கிபி ஏழு, எட்டு, ஒன்பதாம்நூற்றாண்டுகளில், தேவார திவ்ய பிரபந்தங்கள் தமிழில் தோன்றின.

ஆழ்வார்களும், நாயன்மார்களும் பண்ணோடு பாடிய சிறந்த தமிழ்ப்பாடல்கள், தமிழுக்குக்கிடைத்த அரும் புதையல்களாகும்.

மணிமேகலை சீவகசிந்தாமணி பெரியபுராணம திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களில் பல இசைக்கருத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழர் இசை எனும்போது தமிழ்மொழி மட்டுமல்ல தமிழ்ப்பண்பாட்டினையும் சேர்த்துதான் நாம் காணவேண்டி உள்ளது.

மொழியிலிருந்து, இசையைப்பிரிக்கமுடியாது, அதனால்தான் இசைத்தமிழ் என்கிறோம்.

நான்குவகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தவர் தமிழர். நான்கிற்கும் கருப்பொருள், உரியபொருள் வகுத்தது
நம் தமிழ் மரபு.

நால்வகை நிலங்களுக்குமான நான்கு பெரும்பண்கள் உருவானது. பண்களே, காலப்போக்கில் ராகங்களாக வளர்ச்சியடைந்தன பண்ணென்பது பாடலின் இசைவடிவம் அதை “மெட்டு” என்றும் கூறலாம்.

நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்ணை “பாலை” என்றழைப்பர்.

தமிழர் இசையானது, அடிப்படையில் இன்னிசை( மெலொடி) யானது, அதுதான் நமக்கு அடிப்படையான சுவையாகும்.

சம்பந்தர் பல இடங்களில் ’இன்னிசை’ என்கிறார் சுந்தரர்,’ நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தன் ’என்கிறார்.

15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழ்பாடல்களில், பலவிதமான தாள எண்ணிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

18ஆம் நூற்றாண்டில் அருணாசலக்கவிராயர் “இராம நாடகம்” என்னும் இசைநாடகத்தை தமிழில் இயற்றினார்.

திரிகூடராசப்பகவிராயர் “குற்றாலக்குறவஞ்சி” என்னும் மிக அற்புதமான இசைநாடகத்தை இயற்றினார்.

19ஆம் நூற்றாண்டில் கவிகுஞ்சரபாதி, அண்ணாமலைரெட்டியார், (காவடிச்சிந்தின் தந்தை) ராமலிங்க அடிகளார், பாரதியார் பாரதிதாசன் போன்றவர்களின்பாடல்கள், தமிழரின் இசைஎனும் பாரம்பரியத்திற்கு வலிமையும் பெருமையும் சேர்த்த பாடல்கள் என்பதில் ஐயமில்லை.

ஆப்ரஹாம் பண்டிதர் சேக்கிழாருக்குப்பின் தமிழர் இசைக்கு ஆக்கம் தந்தவர் ஆவார்.

இவரது அரியமுயற்சியால் “கருணாமிர்தசாகரம்” என்னும் இசைத்தமிழ்நூல் நமக்குக்கிடக்கப்பெற்றது.

விபுலானந்த அடிகள் பல ஆண்டுகாலம் இடைவிடாது ஆராய்ந்து “யாழ்நூல்” என்ற அரிய நூலை இயற்றினார்.

பண்டைத்தமிழர் கண்டுணர்ந்த யாழினை மீண்டும் தமிழகத்துக்கு வழங்கிய பெருமை அடிகளாரையே சேரும்.

தமிழர் இசையானது, தமிழைப்போலவே இன்னும் இன்னும் சிறப்பாக இன்றும் திகழ்கிறது.

என்றும் திகழும் என்றாலும் அது மிகையன்று.

இசைத்தமிழ் வரலாறு
***********************
இசையமுதம் – தொடர் - 05
*******************

பழந்தமிழ் இசை - நூல்கள்
****************************
பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும்.

இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன.

இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது.

இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.

கி. பி. 16 ஆம் நூற்றாண்டளவில் சிறப்பு பெற்ற கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

இன்று தழைத்தோங்கி இருக்கும் கர்நாடக இசையே தமிழிசையின் மறுவடிவம் என்றும் கூறுவர்.

சங்க நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.

கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி 10 ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய இந்துசமய மறுமலர்ச்சிக் காலத்தில் அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி பழந்தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தனர்.

தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் கூறுவர்.

ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை.

அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.

முச்சங்க காலத்தில் இசைக்கு இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. கூத்துக்கும் இலக்கணம் எழுதப்பட்டது.

இசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம் என்பர்.
எனவே அகத்தியத்திற்கு முன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்கவேண்டும்.

அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற நூல்களும் காலத்தால் அழிந்தன.

எஞ்சிய நூல்கள் பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

1 – அகத்தியம் (அகத்திய முனிவர்)
***************************************
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும்
ஒரு பெரிய இலக்கண நூல்.

தென்மதுரையிலிருந்த தலைச்சங்கப் புலவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவரால் அருளிச் செய்யப்பட்டது.

இது நச்சினார்க்கினியார் காலத்திலேயே இறந்து போயிற்று.

ஆயினும் இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டும் பழையவுரைகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன.
இந்நூல் பன்னீராயிரம் நூற்பாக்களைக் கொண்டது என்பர்.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல் போன்ற பகுதிகளைக் கொண்டது.

இந்நூலின் சில நூற்பாக்களே கிடைத்துள்ளன.

2 – இசை நுணுக்கம் (சிகண்டி என்னும் முனிவர்)
**********************************************************
இது ஓர் இசைத் தமிழ்நூல் ஆகும்.
இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரனென்பவன் இசையறிதற்பொருட்டு, அகத்தி முனியவர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவராகிய சிகண்டியென்னும் அருந்தவ முனிவரால் வெண்பாவாலியற்றப் பட்ட இசைத் தமிழ்நூல் ஆகும்.

இந்நூல் இடைச்சங்கமிருந்த காலத்தில் எழுதப்பட்டதென்று அடியார்க்கு நல்லாருரையாலும், அச்சங்கப் புலவர்க்கு நூலாகவிருந்ததென்று இறையனாரகப் பொருளுரையாலும் அறியமுடிகிறது.

3 – இந்திர காளியம் (யாமளேந்திரர்)
***************************************
இது யாமளேந்திரரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட இசைத்தமிழ் நூலாகும்.

இந்நூல் இன்று கிடைக்கவில்லை.

அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட நூல்களில் ஒன்றாகும்.

4 – பஞ்சபாரதீயம் (தேவவிருடி நாரதன்)
***************************************
இது ஒரு இசைத் தமிழ்நூலாகும்.
தம்முடைய காலத்திலேயே இந் நூலிறந்து போயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.


************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
04/04/2014