கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 27 நவம்பர், 2010

மாவீரர் நாளும் நடுகல் வழிபாடும்

தமிழ் மாவீரர்களுக்கு எம் வீரவணக்கம்.
'மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றவர்கள்' ஆம் நம் மாவீரர்கள் மரணத்தை வென்றவர்கள். தாய்மண் விடிவுக்காய் மட்டுமல்ல அயலவர்களின் பகையெடுப்பை தடுக்கவும் தாம் போராடி வீழ்ந்தவர்கள். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு ஆ கவர்தலைத் தடுக்கவும் வேற்று நிலங்களில் இருந்து வந்து பொருமியங்களைக் கவர்வதைத் தடுக்கவும் வீரர்களாய் போரிட்டு மரித்தவர்கள் தாம் மாவீரர். மாவீரம் கொண்ட மாவீரர் பற்பலருக்காய் எழுச்சி விழா எடுப்பதுண்டு. அவ்வகை விழாவை இன்றும் நினைவுகூற கோயில்களில் தேர்திருவிழா நடைபெறுகின்றது. இக்காலத்தில் கார்27 மாவீரர் நாளாக கொண்டாடப்படுகின்றது.அம்மாவீரருக்கு எடுக்கப்படும் அவ்விழாவுக்கு முன்
"காட்சி கல்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு மரபில் கல்லோடு புணரச் சொல்லப்படல்" என்று
உலக முதல் இலக்கண நூலான தொல்காப்பியம்மே தெளிவுறக் கூறுக் காண்கின்றோம்.

காட்சி

மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து
கூட்டிய எஃகங் குடர்மாலை - சூட்டியபின்
மாறுஇரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல்திரிய விம்முந் துடி. (புறம்.கரந்தை9)

கல்கோள்
மிகையணங்கு மெய்ந்நிறீஇ மிளி மறவர்
புகையணங்கப் பூமாரி சிந்திப் - பகையணப்fகும்
வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த
காலைக்குக் கண்டமைத்தார் கல். (புறம்.பொது8)

நீர்படை
பூவோடு நீர்தூவிப் பொங்க விரைபுகைத்து
நாவுடை நன்மணி நகியம்ப - மேவார்
அழன்மறம் காற்றி அவிந்தாற்கென் றேத்திக்
கழன்மறவர் கைக்கொண்டார் கல். (புறம்.பொது9)

நடுதல்
காடு கனற்றக் கதிரோன் சினஞ்சொரிய
கூடிய வெம்மை குளிர்கொள்ளப் - பாடி
நயத்தக மண்ணி நறுவிரைகொண் டாடிக்
கயத்தகத்து உய்த்திட்டார் கல். (புறம்.பொது10)

சீர்த்தகு மரபு (கோட்டஞ் செய்தல்/கோயிலமைத்தல்)
மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி அணிந்து பெயர்பொறித்து - வேலமருள்
ஆண்டக நின்ற அமர்வெய்யோற்கு இஃதென்று
காண்டக நாட்டினார் கல். (புறம்.பொது12)

வாழ்த்து
வாட்புகா ஊட்டி வடிமணி நின்றியம்பக்
கோட்புலி அன்ன குரிடில்கல் - ஆட்கடித்து
விற்கொண்ட வென்றி வியன்மறவர் எல்லாரும்
இற்கொண்டு புக்கார் இயைந்து

அடும்புகழ் பாடி அழுதழுது ஆற்றாது
இடும்பையுள் வைகி இருந்த - கடும்பொடு
கைவண் குரிசில்கல் கைதொழுது செல்பாண
தெய்வமாய் நின்றான் திசைக்கு. (புறம்.பொது13)

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தி.த.கனகசுந்தரம்பிள்ளை

திருகோணமலை தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் 1863 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 24 ஆம் நாள் பிறந்தார்.இன்று அவரது பிறந்த தினம். யாழ்பாணத்துக்கு ஆறுமுகநாவலர், மட்டக்களப்புக்கு விபுலானந்தர், திருகோணமலைக்கு யார் எனக்கேட்டால் கனகசுந்தரம்பிள்ளை என்பதே பதிலாயமையும். தமிழ் நாட்டுக்கு தமது பதினேழாவது வயதில் சென்று அங்கு அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்விமானாக அவர் திகழ்ந்தார். திருகோணமலை அரச உத்தியோகத்தரான தம்பிமுத்துப்பிள்ளை அவர்களின் மகனான அவர் திருமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். பதினான்கு வயதுக்குள்ளாகவே மும்மொழிகளிலும் செறிந்த அறிவினைப் பெற்றார். மறைசை அந்தாதி, திருவாதவூரடிகள் புராணம் முதலிய நூற்களுக்கு பொருள் விளக்கத்தக்க அறிவையும் பெற்ற அவர் நிகண்டு, நன்னூல் ஆதியனவற்றிலும் சிறந்த அறிவுடன் திகழ்ந்தார்.

நல்லோன்;;;;;; கனகசுந்தரன்

என்றும் எழிலுடன் எங்கள் தமிழன்னை
நின்று நிலவ நிறைதமிழில் - ஒன்றுதிருக்
கோணா மலைக்கான சுந்தரன் மாண்பணியை
ஏணாகக் கொள்வோம் எடுத்து.

கற்றுமிக வாய்ந்து கனகசுந்த ரன்திறனில்
உற்ற தமிழ்ச்செய்திப் பெற்றிதனை - நற்றமிழர்
பற்பலர் கொண்டனர்காண் பைந்தமிழ்ச் சீரினுக்கே
பொற்பாய் மிளிர்ந்த தமிழ்.

ஏடுகளிற் ஏறி எழிலாக வீற்றிருந்த
பீடுதமிழ்த் தெய்வத்தைப் புத்தகமாய் - நாடுகளில்
பல்லோர் பகர்ந்தேத்தப் பாங்காய்ப் பரிந்துழைத்தான்
நல்லோன் கனகசுந்தரன்.

எழுத்தியலும் சொல்லியலும் ஏடுகளில் தேர்ந்து
வழுக்களைந்து வான்தமிழை வாரி - வழங்கியதால்
கற்றார்உள் ளத்தில் கனகசுந்தரன் நின்றான்
கொற்றத் தமிழனவன் காண்.

அன்னை தமிழுக்கே ஆய்ந்தழகு தான்செய்தான்
உன்னுந் திருக்கனக சுந்தரன் - முன்னாள்
இவர்போல் தமிழ்ப்பணி ஈழநன் னாட்டார்
தவமாய்த் தழுவல் தகும்.

_புலவர் நா. சிவபாதசுந்தரனார்.

தி.த.காவின் பதிப்பு முயற்சிகளை பின் வருமாறு குறிப்பிடலாம்:
1. தொல் - எழுத்ததிகாரம் - நச்சினார்கினியர் உரையுடன்
2. தொல் - சொல்லதிகாரம்
3. கம்பராமாயணம் - பாலகாண்டம்
4. தமிழ் நாவலர் சரிதம்

1.தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து வெளியிட விரும்பிய கனகசுந்தரம் பிள்ளை அவர்கள், ஏட்டுப்பிரதிகள், அச்சுப் பிரதிகள் பலவற்றையும் சேர்த்தெடுத்து அவற்றை ஆராயும் பணியில் ஈடுபட்டார். முதலில் எழுத்ததிகாரப் பணியை மேற்கொண்டார். ஏட்டுப்பிரதிகளையும் நூற் பிரதிகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து சூத்திரங்கள் சிலவற்றில் காணப்பட்ட பிழைகளையும் திருத்தியும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட உதாரணச் செய்யுள்கள் எந்தெந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவென எடுத்துக்காட்டியும் பிள்ளையார் அவர்களால் தயாரிக்கப்பட்ட நச்சினார்க்கினியர் உரையுடன் எழுத்ததிகாரத்தை திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. மேற்படி கழகம் அந்நூலுக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன், திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை B.A அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் பதிபிக்கப்படுகிறது".

2.தொல்காப்பியம் - சொல்லதிகாரம்
தொல் - சொல்லதிகாரம், பிள்ளையவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது.

3.கம்பராமாயணம் - பாலகாண்டம்
பிள்ளையவர்கள் சுண்ணாகம் குமாரசுவாமி புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு அரிய உரையை எழுதி வெளியிட்டும், கம்பராமாயணத்தை பிழையறப் பரிசோதித்து கூடிய மட்டில் ஏட்டுப்பிரதிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கிச் சுத்த பாடம் கண்டு முழுவதையும் அரும்பதவுரையுடன் அச்சிட முயன்று முதலில் பாலகாண்டத்தை அவ்விதம் வெளியிட்டனர். அயோத்திய காண்டத்துக்கு அரும்பதவுரை பூர்த்தியாகும் முன்பே இவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர்.மேற்கூறிய பாலகாண்டப்பதிப்புப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை "...ஆறு காண்டங்களுள் சுண்ணாகம் குமாரசுவாமிப்பிள்ளையும், தி.த.கனகசுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த 'பாலகாண்டம்' ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது" என்று கூறியுள்ளார். இது வசிட்டர் வாயிலிருந்து வந்த கூற்றல்லவோ!

4.தமிழ் நாவலர் சரிதை -1921-
இந்நூலினை இயற்றியவர் யாரென்பது தெரியவில்லை.எனினும் தமிழ் புலவர் வரலாற்றினைக் கூறப்புகுந்த முதல் நூல் எனப்பெருமை பெற்றது. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய பல்வேறு தமிழ் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக்கூறும் இந்நூலில் வரும் பாடபேதங்கள், பிரதிபேதங்கள், புதிதாகப் புகுத்தப்பட்ட பாடல்கள் ஆதியனவற்றையும் புலவர்கள் காலம், அவர்களின் பாடல்கள் முதலியனவற்றையும் ஆராய்ந்து பிள்ளையவர்கள் தாம் திருத்தித் தயாரித்த நூலை 1921 இல் வெளியிட்டுள்ளார். தமிழ் நாவலர் சரிதையை நாராயணசாமி முதலியார் என்பார் ஏற்கனவே 1916 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

புறத்திரட்டு - சென்னை சர்வகலாசாலை தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் 1- 1232 - ஏடு - 1938

1.இலக்கிய தீபம் - எஸ்.வையாபுரிப்பிள்ளை - 1952 பக்கம் 114

2.இலக்கிய மணிமாலை - எஸ். வையாபுரிப்பிள்ளை - 1954 - பக்கம் 114

3.அகராதி நினைவுகள் - எஸ். வையாபுரிப்பிள்ளை - 1954 - பக்கம் - 6

4.குறுந்தொகை - டாக்டர் உ.வே.சாமிநாதையர் - 1941 - பக்கம் - 12

5.நற்றிணை - அ.நாராயணசாமி ஐயர் - 1915 முகவுரை - பக்.2 தி.த.க - 2 பிரதிகள்

6.நாராயணசாமி ஐயர் மரணித்த பின்னும் தி.த.க பரிசோதித்து அச்சிடுவித்தார்.

7.சீவகசிந்தாமணி - நான்காம் பதிப்பின் முகவுரை:

8.சீவசிந்தாமணி சம்மந்தமாக ஒரு தனிப்பாடல் ஒரு சுவடியில் காணப்படுவதாகத்
திருக்கோணமலை த.கனசுந்தரம்பிள்ளை அவர்கள் தெரிவித்து அதனை ஒரு கடிதத்தில்
எழுதியனுப்பியிருந்தார்கள். அச்செய்யுள் வருமாறு:

"பனகமாற்ற முன்னிறாய்ப் பத்திலம்பத் தோடு
நகைமாற் றியதுறவி ,னோடும் - தொகையேற்றின்
மூவா யிரத்தோடு முந்நூற்று மூவைந்தே
கோவாய சீவகன்மேற் கூற்று"

9.அகநானூறு: மூலமும் பழைய உரையும் உ.வே.ரா.இராகவையங்கார் பரிசோதித்தது
வத்ஸசக்கரவர்த்தி இராஜகோபாலாரயன் பதிப்பு : 1933. பக்கம் 15 முகவுரை

10.புறப்பொருள் வெண்பா மாலை இரண்டாம் பதிப்பு: டாக்டர் உ.வே.சாமிநாதையர்
பதிப்பு : 1915. முதற் பதிப்பின் முகவுரை : பக்கம் 8.

11. ஆசாரக்கோவை:T.செல்வக்கேசரவாய முதலியார் பதிப்பு :1918
சிறிமான் தி.கனகசுந்தரம்பிள்ளையவர்கள் B.ஏ உதவிய பிரதியுமேயாம்.

12.கயாதரம்: எஸ்.வையாபுரிப்பிள்ளை (B.A.B.L) சென்னை சர்வகலாசாலை 1939.
திரு.த.கனகசுந்தரம் பிள்ளைக்குரியது பக்கம்13.
அவரது மகன் சிறிராயேஸ்வரன் அவர்கள் எனக்க்குத் தந்து உதவியது.
ஆறுமுகநாவலர் சரித்திரம் - த.கைலாசபிள்ளை - 1919

"இச்சரித்திரத்தை விரிவாக எழுதுதல் வேண்டுமென்று சிறி.தி.த
கனகசுந்தரம்பிள்ளை B.A முதலானவர்கள் என்னைக் கேட்டாரகள்"

13.நான்மணிக்கடிக்கை: ச.வையாபுரிப்பிள்ளை:ஒப்புநோக்கிய
ஏட்டுப்பிரதிகள்: திரு.தி.த கனகசுந்தரம்பிள்ளை - இராஜசேகரன் ஏடு எழுதி முடிந்தது பக்.16.

பதித்த நூல்கள்

1.தமிழ் நாவல் சரிதை 1921

இனி, இந்நூலை இயற்றினார் யாவரென்பது ஒருவாற்றானும் புலப்படவில்லை.
நாராயணசாமி முதலியார் பதிப்பு : 1916 - கரந்தைக் கட்டுரை: வெள்ளி விழா
நினைவு மலர் பக்.121. தமிழ்நூல் விபர அட்டவணை 1916 - 1920 பக் 449. நூல் எண் 2231.

2.வால்மீகி ராமாயண வசனம் - சுந்தரகாண்டம் - தி.த கனகசுந்தரம்பிள்ளையால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

எழுதிய கட்டுரைகள்

1. யாப்பிலக்கணம். செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 8, பரல்: 7.பக்:388 - 395

2. இராமாயணம். செந்தமிழ் செல்வி : சிலம்பு : 9 பரல் : 2 பக்.53 - 60

3. திருவள்ளுவர். செந்தமிழ் செல்வி : சிலம்பு : 9 பரல் : 3 பக்.121 - 133

4. தமிழ் வரலாற்றின் ஆராய்ச்சி : தஞ்சை சீனிவாசப்பிள்ளை. இது 26 - 3 - 1922ல்
தஞ்சை சீனிவாசப்பிள்ளையவர் கட்டுத் திருவாளர் தி.த. கனகசுந்தரம்பிள்ளையவர்கள் எழுதிய கடிதத்தினின்றும் எடுத்துப் பதிப்பிக்கப்பட்டது. செந்தமிழ்ச் செல்வி : சிலம்பு : பரல் :10,11 பக்கம் 610 - 618 பக்கம் 677 - 686.

குமாரசுவாமிப் புலவர் அவர்கள் பதிப்பித்து உரையுடன் வெளியிட்ட யாப்பருங்காலக்காரிகையில், புலவர்வாள், தி . த .க பற்றிக் குறிப்பிடுகையில் ஆங்கில திராவிட பண்டிதரும் வித்தியாவினோதரும் அதிகாரபுருடருமாய் இப்போது சென்னை நகரில் வசிக்கும் சிறிமான திரு. த.கனகசுந்தரம்பிள்ளையவர்களும், இவ்வுரையைப் பலமுறை பரிசீலனம் செய்து பல திருத்தங்களோடு எடுத்துக்காட்டுக்கள் சிலவற்றுக்கு நூற்பெயர் காட்டியும், அச்சிடுகையில் பரீட்சித்தும் வண்ணங்களைச் சேர்ப்பித்தும் பலவாறு
சிறப்பித்தவர். அக்காலத்தில் சென்னையில் வெளியிடப்பட்ட நூல்கள் பல
அவ்வாசிரியர்களினால் வெளியிட்டு முன்னர் "தி. த. க. வினால் பார்வையிடப்பட்டது" எனக் குறிப்பிட்டு பெருமை சேர்த்துக் கொண்டனர். இப்படியாக தி.த.க அவர்கள் தம் தமிழ்ப் புலமையினால் திருகோணமலைக்கும் ஈழத்தமிழ் நாட்டுக்கும் பெருமை கொண்டு சேர்த்தார்.

உசாத்துணை நூல்கள் (கருவி நூல்கள்)
1.'ஈழத்து தமிழ்ச்சான்றோர்' வித்துவான், தமிழ் ஒளி க.செபரத்தினம் B.A,M.litt,Dip in Edu.. மணிமேகலை பிரசுரம். சென்னை, 2002.
2.திறனாய்வாளர் திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை.தொகுப்பு: கலாபூசணம் த.சித்தி அமரசிங்கம், ஈழத்து இலக்கியச் சோலை, திருகோணமலை 2003.
(வித்துவான் நடராசா, நா.பாலேஸ்வரி, பேரா.செ.யோகராசா ஆகியோரின் கட்டுரைகளை உள்ளடக்கி - முன்னுரை வழங்கியுள்ளார் கா.சிவபாலன் அவர்கள்(இக்கட்டுரையாளர்).
3.தமிழ்நாடும், ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும் வித்துவான் தமிழ் ஒளி க.செபரத்தினம் B.A,M.litt,Dip in Edu. மணிமேகலைப் பிரசுரம். சென்னை, 2005.
*
**24.08.2010**
_ திருகோணமலை காசிநாதர் சிவபாலன்(முதுகலைமாணி/சர்வதேச உறவுகள்,சட்டவாளர்)_

அடுத்த பக்கத்தில் தொடரும்........

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

திருகோணமலை தமிழ் அறிஞர் வரலாறு

திருகோணமலை சிவபூமி, தென்கைலை என அழைக்கப்படுவது.ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாக கோணேஸ்வரம் அந்நாட்டில் அமைந்துள்ளது. 'கத்தோலிக்கருக்கு எப்படி ரோம் உள்ளதோ அப்படி மிலேச்சருக்கு திருக்கோணேஸ்வரம் ' என போர்துகேசிய இராணுவ ஜெனரல் கூறியது பதிவு செயப்பட்டுள்ளது. (இங்கே 'மிலேச்சர்' என்பது கத்தோலிக்கர் அல்லாத இந்துக்களை குறிப்பிடுவது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்).
திருஞானசம்பந்தரால் கோயிலும் சுணையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலையமர்ந்தாரே' என்றும் 'குடிதனைப்ப்பெருக்கி நெருக்கமாய்த்தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே' என்றும் பாடல் பெற்ற ஸ்தலம். அருணகிரி நாதர் பாடிய ஸ்தலம். அஹஸ்தியர் ஸ்தாபனம் அமைந்த மாவட்டம். உலகத்திலேயே பெயர் பெற்ற இயற்கை துறைமுகம் அமைந்த இடம். தமிழர் தாயகத்தின் தலை நகர் என்று கொள்ளப்பட்ட இடம். இராவணன் ஆண்ட இடம் என்று கூறப்படும் நிலம்.

மேலும் சோழர் ஆதிக்கம் ஈழத்தில் கி.பி.10,11ஆம் நூற்றாண்டில் திகழ்ந்தபோது திருகோணமலையில்
அவர்களின் செல்வாக்கு விரவிக் காணப்பட்டது. பராந்தக சோழன், 'மதுரையும் ஈழமும் கொண்ட சோழன்' என்ற விருதைப் பெற்றிருக்கிறான். (Nilakanda Sastri, Epigrophia Indica,1955. Vol 1,No.1,pp 19-24). தற்போதைய கந்தளாயில் உள்ள தமிழ் குடியிருப்பு, 'சதுர்வேதி மங்கலம்' என அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவன் கோவிலில் இப்பொழுதும் சோழரின் பிரதிநிதி, இலங்கேஸ்வர சோழனின் கல்வெட்டு உள்ளது. (குணசிங்கம்.செ,கோணேசுவரம்..பேராதனைப் பல்கலைக்கழகம்,1972)
தமிழர்களின் தேசிய அடையாளங்களான சைவ சமயமும், தமிழ் மொழியும், தமிழ் கலை கலாச்சாரமும் திருகோணமலையில் கோலோச்சியிருந்திருக்கின்றன.
அந்தவகையில் திருகோணமலையில் பல புலவர்களும், தமிழ் அறிஞர்களும், கலைஞர்களும் தமிழ் மொழியையும்,தமிழ் கலைகளையும் பேணி வளர்த்திருக்கிறார்கள். வித்துவான் க.தம்பையாபிள்ளை, சட்டம்பி தம்பையர் சரவணமுத்துக் குருக்கள், கதிர்காமத்தம்பிப்புலவர், தி.த.கனகசுந்தரம்பிள்ளை, தி.த.சரவணமுத்துப்பிள்ளை, புலவர் வே. அகிலேசபிள்ளை, ஆறுமுகம், பூர்ணானந்தேஸ்வரக்குருக்கள், மாசிலாமணி, முத்துக்குமாரபிள்ளை, பீதாம்பரனார், சரவணமுத்துப்பண்டிதர், பெ.பொ.சிவசேகரனார், கலாநிதி,புலவர் சத்தியமூர்த்தி,தா,சி.வில்வராசா(திருகோணமலை கவிராயர்), தர்மு சிவராம்(பிரேமிள்), சித்தி அமரசிங்கம் (வெளியீட்டாளர்), மேலும் ஈழத்தில் தமிழின் முதலாவது நாவல் என பல காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த,'ஊசோன் பாலந்தை கதை' எழுதிய கிறித்துவப் பெரியார் எஸ்.இன்னாசித்தம்பி, மூதூர் வ.அ. இராசரத்தினம், தமிழ் காவியங்கள் படைத்த மூதூர் முஸ்லிம் புலவர்கள், கிண்ணியா கவிஞர் அண்ணல், அண்மையில் மறைந்த பண்டிதர், சைவப்புலவர் இ.வடிவேல் என்போர் இதில் அடங்குவர்.விரிவு கருதி நாடகத்துறையில் தடம் பதித்த பலரையும் நான் குறிப்பிடவில்லை. இன்னும் பலரும் விடு பட்டிருக்கலாம். பொறுத்தருளல் வேண்டும்.
இவர்களுள் தி.த.கனகசுந்தரம்பிள்ளை,அவர்தம் இளவல் தி.த.சரவணமுத்துப்பிள்ளை.('மோகனாங்கி' வரலாற்று நூல் ஆசிரியர்), தர்மு சிவராமு (பிரேமிள்)-தமிழில் புதுக்கவிதை பிதாமகர்களில் ஒருவர்,ஆனால் மரபுக் கவிதையிலும் ஆற்றல் மிக்கவர்- தமிழ் நாட்டிலும் பெரும் புகழ் மிக்கோர். இந்த வரிசையில் முதலாவதாக நாம் ,
'என்றும் எழிலுடன் எங்கள் தமிழன்னை
நின்று நிலவ நிறை தமிழில் -ஒன்றுதிருக்
கோணமலை கனக சுந்தரம் மாண்பணியை
ஏணாகக் கொள்வோம் எடுத்து'
என்று நா.சிவபாதசுந்தரனார் பாடிப்போற்றிய தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்களைப்பற்றி முதலில் பார்ப்போம்.

_ திருகோணமலை காசிநாதர் சிவபாலன்(முதுகலைமாணி/சர்வதேச உறவுகள்,சட்டவாளர்)_

அடுத்த பக்கத்தில் தொடரும்........

சனி, 10 ஜூலை, 2010

சுற்றுலாப் பயணம் உயசக (2041)


ஓசுலோவிலிருந்து துரண்கெயிம் வரை, துரண்கெயிமிலிருந்து ஓசுலோ வரை(Oslo - Trondheim/ Trondheim - Oslo). நம் சுற்றுலாப் பயணம்.
நண்பகல் ஒரு மணியளவில் சிற்றூர்தியில் புறப்பட்டோம்.
மழை பெய்து கொண்டிருந்தது அதனால் வேகமாக ஓடாமல் அளவாகவே ஓடிக்கொண்டிருந்தோம். விண்ணூர்தி நிலைய தங்ககத்துக்கு அருகில் எரிபொருள் நிலையம் உள்ளது. அங்கே சற்று ஓய்வெடுத்துக் கொண்டோம்.

அதன் பின்,

அங்கிருந்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பயணித்து காமார்(Hamar) என்ற இடத்தை அடைந்தோம்.அங்கு பனிகால ஒலிம்பிக் நடந்த உள்ளரங்கம் உள்ளது.

அங்கு ஒலிம்பிக் நடைபெற்ற ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு.

நாம் அவ்விடத்தில் நின்று மீண்டும் ஓய்வெடுத்துக் கொண்டோம். அங்கே உணவரிந்தி விட்டு சின்னகாமாருக்குச் சென்றோம்.பல மணிநேரம் பயணித்து சின்னகாமாரை அடைந்தோம். அங்கே உள்ள பேரங்காடியில் சில பொருள்கள் வாங்கிக்கொண்டு குளிர்கூழும் உண்டுவிட்டு சிற்றூர்தியில் மீண்டும் பயணித்தோம்.
சிலமணி நேர ஓட்டம் இருமருங்கிலும் காட்டுமரங்கள் ஆற்றின் ஓட்டம் அழகான இயற்கைக் காட்சி
சின்னகாமாருக்கு(Lille Hammar) அடுத்ததாய் ஒய்யர் (øyer) என்ற இடத்தில் கம்பளியாடுகள் மேய்ந்துகொண்டு நின்றன.
அதன் அருகில் தற்கால தங்குமிடம் ( champing ). அங்கே பல இடங்களிலும் இருந்து நோர்வேநாட்டவர் வந்து தங்குவதுண்டு.அங்கு
பேர்கன் என்ற இடத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரரை சந்தித்தோம். அவர்கள் மகிழ்வான நண்பர்கள். அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.


பின், நெடுஞ்சேய்மையாகப் பயணித்துப் பல மாநிலங்களினூடாக இறிங்கபூ(Ringebu) அடைந்தோம். அதற்கிடையில் மலைத்தொடரினூடாக அருவிகளையும் ஆற்றின் ஓட்டத்தையும் கண்டுகளித்தோம்.அடுத்து வின்சுதிறா( Vinstra), வின்சுதிறா (Vinstra) ஒரு அழகிய ஊர். அங்கும் பல சிறப்புகள் உண்டு. மலையடிவாரத்தில் அமைந்துள்ள அவ்விடம் பார்ப்பதற்கு மிகமிக மகிழ்வானது.நிற்க, (முன்பு ஒரு முறை தொடர் வண்டியில் துரோணியம் செல்லும் போது இடையே இங்கிருந்து வின்சுதிறா (Vinstra) சில தொலைவில் ஆறு பெருகிவிட்டது அதனால் தொடர்வண்டி செல்லாது என்று ஏந்துகளாக பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர். அது எமக்கு தெரியாது.அவ்வண்டி மீண்டும் ஓசுலோ திரும்பியது. அதையறிந்து ஓடிக்கொண்டிருந்த போதே வண்டியில் பயணரோடு பேசினோம் உடனே அடுத்த தரிப்பிடத்தில் இறக்கிவிட்டார்கள்.


இதுவே வின்சுதிறா.
புரட்சியை வெளிப்படித்தும் இளைஞனின் கலைவடிவம்.
இது நோர்வே நாட்டு முன்னோடி ஒருவரின் சிலை
மீண்டும் நிற்க,
அவர்களின் உதவியோடு மகிழுந்தில் துரோணியம் சென்றோம். அதற்காக கொடுத்த பணம் பதினேழாயிரம் குரோணர். அப்பணத்தைப் பயணமுகவர்களே பொறுப்பேற்றனர்.அதனால் அன்று இறங்கிய இவ்விடத்தை எம்மால் மறக்க முடியாது).
வின்சுதிறா(Vinstra) தாண்டி ஒத்தா(Otta) ஊடாக சென்ருகொண்டிருந்தோம். ஒத்தாவில்(Otta) தங்குமிடங்கள் செய்திகொடுக்கும் பலகை அருகே ஓய்வெடுக்க ஏந்துகள் அமைக்கப்பட்டிடுந்தன.

இது செய்திபலகைக்கு எடுத்துக்காட்டு.சென்ற வாட்டி பன்றி இறைச்சியும் இறைச்சிக் கலவை உணவும் சுட்டுச் சாப்பிட்டோம்.இம்முறை தொவ்றே(Dovre) எரிபொருள் அருகே இறைச்சி சுடுவதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் அமைதியாக சாப்பிட்டும் ஓய்வெடுத்தும் கொண்டோம் .

நேரம் என்னவாக இருக்கும் என்று பார்தால் இரவு பத்துமணி.ஒசுலோவிலிருந்து(Oslo) தொவ்றே(Dovre) சிற்றூர்தி ஓட்டம் ஏ6 வழியாக கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் கழிந்துள்ளன. தொவ்றேவிலிருந்து கிட்டத்தட ஒருமணிநேரம் பயணித்து உடொம்பசு(Dombås) என்னும் இடத்தை அடைந்தோம்.

அங்கே உணவகங்கள் எரிபொருள் நிலையங்கள் தங்குமிடங்கள் உல்லாச பயணிக்கான செய்திப் பலகையென அனைத்து ஏந்துகளும் உள்ளன. நாங்கள் அங்கு நின்று ஓய்வெடுப்பதுண்டு.உடொம்பொசில்(Dombås) இருந்து இருகிளையாக பிரிகிறது ஒன்று ஓளசுண்டு (Ålesund)மோள்டே(Molde)மோள்டேயில் நம் தமிழரும் வாழ்கின்றனர்.அங்கு தமிழ்ப் பள்ளியும் உண்டு. மற்றையது துரண்கெயிம்.

நாம் துரண்கெயிம் பயணித்தோம். உடொம்பசிலிருந்து(Dombås) ஏ6 தொவ்றே மலைத்தொடர்(Dovre fjell) ஊடாக நீண்டவழிச் சேய்மை பயணிக்க வேண்டும் . உச்சிமலை, மக்கள் இருப்பிடங்கள் இருக்காது. அடிக்கடி ஓய்வெடுக்க இடங்கள் உள்ளன.ஒரு நாள் செல்லும்போது கடுமிடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது.சிற்றூர்தி அடிக்கடி ஆடியது. காற்றை அளப்பதற்கு காற்று அறிகருவியும் ஓரிரு இடத்தில் பொருத்தியுள்ளனர். பகலில் பார்த்தால் நாங்கள் துறக்கத்தில் நிற்பதாக தோற்றும் அவ்வளவு அழகு. சித்தப்பயிற்சி செய்வதற்கு ஏற்ற இடம்.நீண்டவழி பயணித்து ஒப்தாலை(Oppdal)அடைந்தோம் .சிறிய ஊரெனினும் அழகாக நகரம் போல் இருந்தது ஓடும் போது கவனம் வேண்டும் குடியிருப்புகள் பல உள்ளன. அங்கே ஓடும் அளவு மணிக்கு ஐம்பது கிலோமீற்றர்(50k/h).அங்கு விண்ணூர்தி நிலையமும் உண்டு.அங்கிருந்து பயணித்து சோறன்(Støren) இடத்தை அடைந்தோம். பண்ணைகள் நிறைந்த இடம். தங்குமிடங்களும் உண்டு. ஓய்வெடுக்காமல் நேரே துரண்கெயிம் சென்றோம். துரண்கெயிம் இருப்பிடத்தை அடைந்த பொழுது மணி விடியற் காலை இரண்டுமணி.ஒசுலோவில் (Oslo) இருந்து துரண்கெயிம் (Trondheim) வரை பன்னிரண்டு மணிநேரம்.மீண்டும் தொடரும்......

வெள்ளி, 9 ஜூலை, 2010

எழுக தமிழினமே

எழுந்த பனிமலை மடிப்புப் போடவும்
எழுநூறு காதம் நாவலந் தேயவும்
கிழிந்த மண்டக் கீழை நிலத்துள்
எழுந்து நின்றன சிற்சில தீவுகள்
ஐயகோ வன்று அறுந்த புவியிலே
இயற்கைச் சூழலும் எரிதண லாயிற்றே
அவலஞ் சூழ்ந்து அமைதியை வேண்டியே
அலைந்து திரிந்தன அறுதிணை யுயிர்களும்
மிதந்த மரங்களில் ஏறிச் சென்றன
மீண்டும் மீண்டும் பயிற்சி பெற்றன
கைகளைச் சேர்த்தன கருவிக ளாக்கின
கருவிகள் கொண்டு வேட்டைகள் ஆடின
கள்ளை யுண்டன கறியைத் தின்றன
கொள்ளை இன்பத்தில் கூடல் கொண்டன
அஞ்சியும் அழுதன ஐம்பூதம் தொழுதன
விஞ்சிய அறிவிலும் வேள்விகள் செய்தன
இப்படித் தானொரு இனமொன்று தோன்றிற்று
இற்றைக்கு பத்தா யிரத்துக்கு முன்பு
பஃறொளி ஆற்றுடன் பழுத்த பேரினம்
படிப்படியாய் கூர்ப்பும் கூர்மையும் பெற்றது
கீறிப் பழகியே கலைகள் படைத்தது
கீற்றுடன் இணைந்தே பாடவும் கற்றது
ஓலைச் சுவடியில் புலமை யாத்தது
ஒன்றாய் இணைந்து வாழவும் வைத்தது
சாலச் சிறப்பாய் திணைகள் வகுத்தது
சேலையும் வேட்டியும் நெய்து போட்டது
கற்காலம் இரும்புக் கரிக்காலம் பொற்காலங்
கற்றறிந்து கல்வியால் நிலங்களைக் கழனியாக்கி
நெல்லுடைத்துச் சோறுண்ட இனமடா எம்மினம்
சொல்லிக் கொள்ள மொழியும் இருந்தது
செல்வம் கொழிக்கும் வளமும் இருந்தது
அள்ளிக் குடிக்க நீருமி ருந்தது
அவனியில் தமிழர்க்கு நாடு மிருந்தது.
என்ன குறைகள் எங்கள் நிலத்திலே
மன்றமி ருந்தது மாட மிருந்தது
கோயி லிருந்தது கோபுர மிருந்தது
கோலொச்சி மன்னர் மாளிகை யிருந்தது
மும்முடி வேந்தர் மண்டலம் போலவும்
நம்மீழ மண்டலம் நம்மோ டிருந்தது.

அப்பால் நிலத்தி லிருந்து வந்தார்
ஆரியர் அவரை யன்புடன் ஏற்றார்
முப்பால் வள்ளுவன் காலத்து முன்பால்
முத்தமி ழேற்றியும் போற்றியும் வைத்தார்
சித்தர் போலவே சித்தம் பெற்றார்
சினந்து தமிழரை இழிந்த்து வைத்தார்
நரிகளாய் மாறி நற்றமி ழழிக்க
பரிகளாய்த் தமிழரைப் பயன்படுத்தி ,னாரே
இருந்த நிலத்தில் பாதியும் போயிற்று
இந்திய மென்றே மாறியும் போயிற்று
எஞ்சிய நிலங்களில் எங்கள் தமிழினம்
வஞ்சமின்றி பஞ்சமின்றி வாழ்ந்தேதான் வந்தது
வணிகம் செய்ய் வந்த பறங்கிகள்
பணிய வைத்தே பறித்துக் கொண்டனர்
வரிகள் போட்டனர் அடிமை யாக்கினர்
உரிக்கும் வரையெமை உரித்தே விட்டனர்
பொன்னும் பெண்ணும் யானையும் பனையும்
என்னென் .னவோவனைத் தையுமேற் றினர்பார்
எஞ்சிக் கிடந்த நிலத்தை விடவே
எங்களர் உரித்தை சிங்களர் எடுத்தனர்
இருபதி .னாயிரத்து முந்நூற் றெண்பது
அருந்தமிழ் நிலத்தையும் இருபங்கு கடலையும்
நேருசே .னனாயக்கா கூட்டுச் சதிகள்
நீறா யாக்கு மென்றஞ்சித் தந்தையர்
நீரா நோன்புகள் நித்தம் செய்தார்
காடைய ரேவிக் கட்டையால் பொல்லால்
காடேறி யரசு கொலையும் செய்தது
பொறுமை இழந்து போரில் குதித்து
போரை மூட்டினர் முப்பதாண் டுகளாய்
இறைமைப் போரில் எழுப தாண்டுகள்
இடரைத் தாங்கிய தமிழீழப் போராட்டம்
இந்தியச் சூழ்ச்சியால் வல்லர சாட்சியால்
குந்தகம் செய்தழித் தனவே யறிவோம்

முன்னே யுளது யிந்திய மாக
பின்னே யுளது சிங்கள மாக
இடையே யுள்ள ஈழத் தாயமே
படைகள் நடந்த தமிழீழம் கண்டோம்
பாய்ந்து திரிந்த எங்கள் நிலத்தை
மொய்யா யெழுத நீவீர் யாரோ
மீண்டும் தமிழர் ஆழுங் காலம்
மிடுக்காய் வருமென்றல் திண்ணம் திண்ணம்
எமக்கே யுரிய சொந்த நிலமதில்
எவனுக்கும் சொந்த மல்லவே வெளியேறும்
நலமாய் வாழ நமக்கொரு நாடு
பொல்லார்ச் சிங்களப் படைஞரே வெளியேறும்
கைகள் கால்கள் கண்களி ழந்தோமன்றி
வையம் தன்னில் வேங்கை கொண்ட
வேட்கை மட்டுமே மேனுமி ழக்கோம்
விடுதலை வரும்நாள் விரைவி லுண்டு
உலகத் தமிழரே யொன்று படுவீர்
ஈழம் மலரு மென்றே கூவுவீர்
புறத்தே நின்று தட்டிய கைகளே
உறைந்து போனீரோ வீழ்ச்சி கண்டு
போர்க்களம் நின்ற புலிகள வர்களை
மறவர் என்றே பரணீ யாத்தோரே
உலாப் பாடி வெற்றிக்கு வாகைசூடி
விழாவெடுத் தோரே புலவோரே நிம்தூவல்
இன்னல் கண்டும் எழுந்து பாடட்டும்
செத்தவீட் டுக்குபின் செலவு கழித்து
திதியொன் றாவதற்குள் திக்கெட்டும் கலைந்தீர்
சொந்தங் களில்லாது சோகத்தில் வாட
வெந்த புண்ணிற் வேல்பாச் சாதீர்
வந்துநீர் வாரும்நம் குழந்தைகள் நலமாக
பந்தமாய்த் தாங்கி நாளையும் வேளையும்
தாங்குமிந்த தாயுமா .னவள்போல்
தாங்கி வாழ்வோம் நம்நிலம் நாமே!

கோடைகால விடுமுறையும் களிப்பும்வள்ளுவராண்டு இரண்டாயிரத்து நாற்பத் தொன்று (2041).
இலத்தினாண்டு இரண்டாயிரத்துப் பத்து (2010).

இவ்வாண்டு கோடைகாலமும் கொழுத்தும் வெய்யிலும் ஓடை, ஆறு, அருவிகள் ஓடும் காட்சிகளும் அப்பப்பா பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் எவ்வகையான மகிழ்வைக் கொடுக்குமோ! அவ்வகையான மகிழ்வைத்தான் எமக்கும் கொடுக்கும் அத்தனையழகு.
பூம்பனிகாலம் முடிந்ததும் உறைபனிகாலம், அது முடிந்ததும் இலைதுளிர் காலம், பறவைகள் அடைகாத்து குஞ்சுபொரிக்கும் காலம், இக்காலத்தை நோர்வே நாட்டவர் மிகச்சிறபாக கொண்டாடுவார்கள். பின் பூ பூக்கும் காலம், காய்மரங்கள் காய்க்கும் காலம், கோடைகாலம் கனிகள் கிடைக்கும் காலம். ஊர்மாம்பழங்களை இக்காலத்திலேயே காணலாம். வீட்டுத்தோட்டத்தில் கனிகளை பறிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது.பள்ளி விடுமுறை குறிப்பாக அன்னைபூபதி விடுமுறை, விடுமுறைக்கு முன் இல்லவிளையாட்டுப் போட்டி பின்

தமிழர் விளையாட்டு விழா அதைத் தொடர்ந்து கோடைகால விடுமுறையும் தொடங்கி விடும். இவ்வாண்டு தமிழர் பலர் தாயகத்துக்குச் சென்றுள்ளனர். நாம் உள்நாட்டுக்குளேயே அதாவது (நோர்வே நாட்டுக்குளேயே) விடுமுறையை கழிப்பதற்கு முடிவு செய்தோம்.
நோர்வே மலையும் மலைசார்ந்த நிலமும் கொண்ட குளிர் நாடு. இந் நாடு வடதுருவத்தின் மேலே அமைந்துள்ளது. இது வள்ளுவர் காலத்தில் பனிமண்டலமாக இருந்துள்ளமை வரலாற்றின் ஊடாக அறிய முடிகிறது.நோர்வே என்பதன் பொருள் "வடக்கு நோக்கிய வழி என்பதாகும்". மக்கள் அமைதியாக வாழ்வதற்குரிய அருமையனான நாடு.மக்கள் சட்டத்தை மதிப்பதும் அரசியல் ஆளுமையுமே அதற்கு கரணியம்.

இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் முதலாளி தொழிலாளி என்ற ஏற்றத்தாழ்வுகள் இருந்தமையையும் கூறியாக வேண்டும். ஆனால் இன்று ஆண் பெண் நிகர் என்ற அடிப்படையில் வாழ்வதனால் ஆணோ பெணோ அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய தேவையில்லை. இன்று நோர்வேயில் ஒருவர் கிழமைக்கு நாற்பதெட்டு மணிநேரமே வேலை செய்தால் போதும். தலைவனும் தலைவியும் நிகராகவே இவற்றைச் செய்து வருகின்றனர். போதிய சம்பளமும் கிடைக்கின்றது.ஒருவரின் சாராசரி சம்பளம் இருபத்தைந்தாயிரம் குரோணர் (25,000.00).வாழ்வாதாரம் சீராகவே இயங்குகின்றது.எனவே இங்கு வாழ்க்கை அமைதியாகவே உள்ளது. கோகால விடுமுறையையும் இனிதே கழிக்கக் கூடியதாய் உள்ளது.

இன்னும் தொடரும்........

வெள்ளி, 25 ஜூன், 2010

தனிநாயகம் அடிகளார்


1913ல் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணக்குடானாட்டில் கரம்பொன் என்ற ஊரில் சேவியர் என்பவர் ஒருவர் பிறந்தார். தனது முதற்படிப்பை ஊர்காவற்றுரையில் உள்ள தூய அந்தோனியார் பள்ளியில் முதற்படிப்பு படித்து பின்பு தமிழகத்தில் உள்ள அண்ணாமலை கல்லூரியில் மேற்ப்படிப்பு படித்தார். இங்கு பல பட்டங்கள் கிடைத்து தமிழில் புலமையடைந்தார். தமிழில் உள்ள ஆர்வத்தால் இவர் தன் பெயரை தனிநாயகமென மாற்றிக் கொண்டார். தமிழில் மட்டுமல்ல ஐரோப்பிய
மொழி படினெட்டிலும் புலமையடைந்தவர். தமிழ்மொழி ஒரு சிறப்பு தொன்மையும் மிக்க மொழி என்று கருதி இம்மொழியை உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முனைந்தார். தமிழ் நூல்கள் மொழிபெயர்த்து வந்தால் தமிழ் இன்னும் போற்றப்படும் என்று அமெரிக்காவில் இரு இதழ்களை வெளியிட்டார். " தமிழ்ப்பண்பாடு" மற்றும் "தமிழியல் இதழ்" என்ற இதழ்களை வெளியிட்டார். ஓராண்டில் இருநூறு உரைகளை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உரையாற்றினார் என்று கூறப்படுகிறது. தமிழர்களின் வளர்ச்சி மற்றும் சிறப்புகளை பன்னாட்டு ஆய்வாளர்களுக்கு கூறுவதற்கு "தமிழர் ஆரய்ச்சி மன்றம்" என்ற நிறுவகத்தை தொடக்கி விட்டார். இம்மானாடு பரிஸ், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படுத்தினார். 1974ல் இரண்டாவது தமிழர் ஆரய்ச்சி மான்றத்தை யாழ்ப்பாணத்தில் பெரும் சிறப்புடன் நடத்தினார். இதை பொறுக்க முடியாத இலங்கை காவலர் இம் மானட்டை குழப்பினர், பல தமிழர்கள் கொல்லபட்டனர். சிலப்பதிகாரம், திருக்குறள், தமிழர் வணிகம் போன்றவற்றை ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மொழி பெயர்த்தார். செயக்ச்பேயர் போன்ற பெரிய எழுத்தாளர்களின். புத்தகங்கள் போல் இவை வரவில்லை. "தமிழ் மறை விருந்து" என்ற நூலை வெளியிட்டு, 1980ஆம் ஆண்டு இவர் இயற்கைச்சாவை அடைந்தார்.

எழுத்துரு : சர்மிலன் குணபாலா (நோர்வே)

சனி, 10 ஏப்ரல், 2010

திட்பமும் நுட்பமும் ஒட்பமும்

தமிழ் மொழியின் திட்பமும் நுட்பமும் ஒட்பமும்

தமிழ் என்றால் இனிமை என்று பொருள் என்பர் அறிஞர் தமிழுக்கும் அமுதென்று பேர் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். துமிழ் என்றால் அன்பு என்றும் அழகு என்றும் பொருள் கொள்ளலாம் என்பர் இன்னும் சிலர்.

தமிழ் என்பது தனிமைப்பொருள் குறித்த தமி என்னும் வினையடி கொண்ட சொல் என்றும் தமிழ் அறிஞர்கள் கருதுகிறார்கள் தமியன் தமியள் என்ற சொற்கள் தனித்தவன் தனித்தவள் என்று பொருள் கொள்வதை உற்று நோக்கும் போது இது தௌ;ளத் தெளிவாகும். எனவே தமிழ் என்பது தனித்ததொரு செம்மொழி என்பர் அறிஞர்.

தமி என்பது தனக்கு ஒப்பில்லாதது என்று பொருள் கொள்ளும் வகையிலும் அமைந்து விடுகின்றது. அந்த வகையில் பார்க்கும் போது தமிழ் என்பது தனக்கு ஒப்பில்லாத மொழி என்ற பொருளில் அமைந்த சொல்லாகும் என்பர் இன்னும் சில தமிழ் அறிஞர்கள்.

தமிழ் என்ற சொல்லில் வரும் ழ கரம் தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தாகும். முலையாளம் அரபு மொழிகளிலும் ழ கரம் உண்டு என்பர். இருப்பினும் ழ கரம் அரபு மொழியில் தமிழ் மொழியில் ழ கரம் ஒலிப்பது போல் ஒலிப்பதில்லை.

மலையாளம் தமிழ்தாய் ஈன்றெடுத்த குழந்தை என்பதால் மலையாளத்தில் ழ கரம் ஓளைவுக்குத் தமிழில் ஒலிக்கப்படுவது போலவே ஒலிக்கப்படுகிறது என்பர்.
ஆக தமிழிலுள்ள சிறப்பெழுத்தான ழ கரத்தை கொண்ட தமிழ் என்ற சொல்லே தனித்துவம் மிக்கதாக விளங்குவதைக் காணலாம். துமிழ் என்ற சொல்லில் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் இருப்பதைப் பார்த்து வியக்கிறோம். வேறு மொழிகளில் இத்தகைய சிறப்பைக் காணமுடியாது.

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில் தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவிகளின் பெயர்கள் ழகரத்தில் இருப்பதைப் பார்த்து வியந்து நிற்கிறோம். முழவு குழல் யாழ் என்பன முறையே தோல் துளை நரம்புக் கருவிகள் என்பது யாவரும் அறிந்ததே இந்த மூன்று பெயர்களிலும் தமிழின் சிறப்பெழுத்தாhன ழகரம் இருப்பதால் இக்கருவிகள் தமிழருக்கே சொந்தமான பாரம்பரிய இசைக்கருவிகள் என்று உறுதிபடக் கூறி உவகை அடைகின்றோம்.

தமழிலே ஓர் எழுத்தே சொல்லாகவும் வாக்கியமாகவும் வருகின்ற அழகையும் வளத்தையும் கண்டு வியக்காதவர்கள் இல்லை.
எடுத்துக்காட்டாக: ஆ ஈ கா கை கு தீ நா நீ பா பூ பை மா

கா (காப்பாற்று), தா போ வா வை ஈ முதலான வினைச் சொற்கள் ஓரெழுத்தைக் கொண்ட சொற்களாகவும் ஓரெழுத்தில் அமைந்த வாக்கியங்களாகவும் விளக்குவதைப் பார்த்து வியக்காத மொழியியல் அறிஞர்கள் இல்லை எனலாம். இவற்றை ஓரெழுத் தெருமொழியென இலக்கணக்காரர் கூறினும் வினைச்சொற்களை ஓரெழுத்தொரு வாக்கியம் எனவும் அழைக்கலாம்.

காரணப்பெயர்

நாய் என்ற பெயரை நா தொங்குகின்ற விலங்கிற்கு இட்டனர். பஃறி – பன்றி என்ற பெயரை பல் அதிகம் கொண்ட விலங்கிற்கு இட்டனர். நூற்பத்து நான்கு (44) பற்கள் பன்றிக்கு உண்டு எனப்படுகின்றது.
புல்லைத் தின்னாத விலங்கிற்கு புலி ( புல் இலி ) என்றும், மார்பினால் ஊர்ந்து செல்லும் பாம்பிற்கு உகரம் ( மார்பு ) என்றும் அளக்க முடியாத நீரைக்கொண்டே நீர் நிலையை அளக்கர் (கடல்) என்றும் அழைத்தனர்.

தம்பின்னால் பிறந்தவனைத் தம்பி என்றும் அழைத்தனர். அது பின்பு தம்பி ஆயிற்று. மூத்தவனை அண்ணா என்பது மூத்த மேலே உயர்ந்த முதலான பொருள்களைத் தரும் சொல்.
அண்ணம் என்பது மேலே உள்ளது என்பதைக் குறிக்கும் அண்ணாந்து என்பது மேலே உள்ளத்தைக் குறிக்கும் எனவே அண்ணன் என்றால் மேலே உள்ளவர் என்று பொருள்.

இப்படி எல்லாம் காரணப்பெயர் வைத்த சிறப்பை விட இன்னொரு நுட்பமான சிறப்பை இங்கு பார்ப்போம்.

நீர் நிலைகள்
நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் அழைத்த நுட்பத்தை அறியும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
குளம், ஏரி, ஊரணி, பொய்கை, சுனை, மடு, கேணி, மோட்டை, அள்ளல், கிணறு, துரவு, தடாகம், கயம், சமுத்திரம், ஓடை, அளக்கர், அகழி, அசம்பு, எனப்பல பெயர்களை நீர் நிலைகளுக்கு இட்டனர்.
ஏர் தொழிலுக்காக ( பயிர்ச் செய்கை ) அமைக்கப்பட்டதை ஏரி என்றும், குளிப்பதற்காக அமைக்கப்பட்டதை குளம் என்றும், ஊரார் உண்ணுவதற்காக ( சுத்தமான குடிநீர்த் தேவைக்காக ) அமைக்கப்பட்டதை ஊருணி என்றும். ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடங்களை அகழி என்றும் ( அகழ்ந்து உருவாக்கப்பட்டது ), சிறிகளவு நீருள்ள பள்ளத்தை சுனை என்றும், சேறு பொருந்திய நீர் பள்ளத்தை அள்ளல் என்றும், மலர் நிறைந்த நீர் நிலையை பொய்கை என்றும், தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டத்தை துரவு என்றும் ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்ததைக் கேணி என்றும், அளக்க முடியாத நீர் நிலையை அளக்கர் ( கடல் ) என்றும் நுட்பமான வேறுபாடு வியங்க பெயர் வைத்து அழைத்தனர்.
பூப்ப+வாய் : பூவின் பல்வேறு நிலைகளைத் தமிழ்ப் பெயரோடு அழைத்த நுட்பத்தை பார்த்தால்

அரும்பும் பருவம் அரும்பு, மொக்கு விடும் பருவம் மொட்டு, முகிழ்க்கும் பருவம் முகை மலரும் பருவம் மலர், மலர்ந்த பருவம் அலர், வாடும் பருவம் வீ, வதங்கும் பருவம் செம்மல்

சொல் நுட்பம்

இத்தகைய பல நுட்பங்களைதக் கொண்டது நம் தமிழ்மொழி. உரைத்தல், அறைதல், கூறுதல், செப்புதல், இயம்புதல், பிதற்றுதல், விளக்குதல், விள்ளுதல், கழறுதல், உளறுதல், புகளுதல், சொல்லுதல், பறைதல், ஏசுதல், பேசுதல், கதைத்தல், அளவளாவுதல், பகருதல், மிழற்றதல், பின்னுதல், அகவுதல், அலம்புதல், மொழிதல், விளம்புதல், சாற்றுதல், முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் நுட்பமான வேறுபாடு கொண்ட சொற்களாக விளங்கி இருக்கின்றன.

இன்று இவற்றில் பல சொற்கள் ஒரே கருத்தை உணர்த்துவனவாக இருக்கின்றன. இது
மொழியின் தேய்வையே காட்டுகிறது.

உரைத்தல் : வியக்கமாகச் சொல்லுதல்.

அறைதல் : கூறுகளாக பகுத்திச் சொல்லுதல் அல்லது யாவரும் அறியும்படி பகிரங்கப் படுத்திக் கூறுதல்.

செப்புதல் : தெளிவாகச் சொல்லுதல்.

பின்னுதல் : மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லுதல்.

அளவளாவுதல் : கலந்து மகிழ்ந்து பேசுதல்.

விளம்புதல் : விளக்கமாகச் சொல்லுதல்.

விள்ளுதல் : மெது மெதுவாக விடயத்தை சொல்லுதல்.

கதைத்தல் : கதைகளைச் சொல்லுதல்.

கழறுதல் : உறுதியாகச் சொல்வது.

என நுட்பமான பொருள் வேறுபாடுகளை மேற்குறித்த சொற்கள் உணர்த்திக் காட்டுகின்றன.

யாயும் ஞாயும்

இவை மட்டுமன்று எது ஒன்றையும் துல்லியமாகக் குறிப்பிட தமிழ்மொழியில் சொல் உண்டு. இன்று தாய் என்ற சொல்லை தன்மை முன்னிலை படர்க்கை என மூவிடங்களிலும் பயன்படுத்தும் போது என்னுடைய தாய் உன்னுடைய தாய் அவர்களுடைய தாய் என்று தான் சொல்கிறோம் ஆனால் முற்காலத்தில் சுருக்கமாக யாய் என்று தன்னுடைய தாயையும் ( தன்மை ) ஞாய் என்று உன்னுடைய தாயையும் ( முன்னிலை ) தாய் என்று அவனுடைய தாயையும் ( படர்க்கை ) குறித்தனர்.

இதுபோல எந்தை நுந்தை தந்தை, எங்கை நுங்கை தங்கை, எம்பி நும்பி தம்பி முதலான சொற்கள் பொருளுணர்த்திய நுட்பம் இன்று தமிழ் மொழியில் பாவனையில் இல்லை.

குடல் சார்ந்த நகரத்தை பட்டினம் என்றும் கடலில்லா நகரத்தை பட்டணம் என்றும் நுட்பமாக அழைத்ததை தமிழின் வளத்தை அறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக சொன்னால்

தமிழீழத்தில் ( வவுனியா கடலில்லாத பட்டணம், முல்லைத்தீவு கடலோடு தொடர்புடைய பட்டினம்)

உப்பு தப்பு
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
என்ற பழமொழியை சொல்கிறோமே இதன் நுட்பத்தை அறிந்து கொண்டா சொல்கிறோம் தேன் பால் முதலியவற்றிலும் பழவகையிலும் உப்பு இல்லை என்று குறைகூறி அவற்றைக் குப்பையிலே கொட்டுகிறோமா இல்லை விரும்பிச் சாப்பிடுகிறோமே இல்லையா?
உண்மையிலே உப்பு என்றொரு சுவையே இல்லை உவர்ப்பு என்பதைத் தான் உப்பு என்று இன்று அழைக்கின்றோம்.

தரித்திரம் என்ற சொல்லைப் பார்ப்போம்
வறுமை செல்வம் ஆகியவை இரண்டுமே மனிதனுக்கு நிரந்தரமானவை அல்ல என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தும் தத்துவ நோக்கில் வறுமையைத் தரித்திரம் ( தரித்து + இரம் ) தங்கி இருக்காது என்றும் பயன்படுத்திய சொல் நுட்பத்தை யார் தான் வியக்கமாட்டார். யார் தான் இரசிக்க மாட்டார்.

இத்தகைய நுட்பத்தை உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் காணமுடியாது இத்தகைய சிறப்பு தமிழ் மொழிக்கே உரிய பெரிய சிறப்பாகும்.

"குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப
விழவு அறா இயல் ஆவணத்து"
எனச் சங்க காலத்துப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை விளக்குகிறது.
குழலின் ஒலியை அகவல் என்றும்
யாழின் ஒலியை முரல்தல் என்றும்
முழவின் ஒலியை அதிர்தல் என்றும்
முரசின் ஒலியை இயம்பல் என்றும் நுப்பமாகக் கூறப்படுகிறது.

"உயர் தனிச் செம்மொழியே
ஓங்குக தமிழ்மொழியே"

ஆசான் : தமிழ்மணி
தொகுப்பாளர் : சிவராசா
பதிவாளர் : அரசன் . தமிழரசன்
உரிமை : தமிழ் கூறும் நல்லுலகு

சனி, 6 பிப்ரவரி, 2010

தமிழ் எழுத்து மாற்றம் தேவையா?தமிழ் எழுத்தே தமிழரின் தலையெழுத்து என்பதை அறிந்து கொள்ளாதவர்கள் நம் அரசியலாளர்கள் என்பதை தமிழ் பண்டிதர்கள் முன்னர் பல கட்டுரைகள் மூலம் விளக்கியுள்ளனர். அவற்றைச் செவிமடுக்காதவர்களை நாம் புறந்தள்ள வேண்டும். தமிழ் எழுத்து மாற்றம் தமிழ்குமுகத்தை இன்னும் கீழ்நிலைக்கு இட்டுச்செல்லும் என்பது உறுதி.

பழைய வரிவடிவில் எழுதமுடியாமைக்கு வருந்துகிறோம்.

சனி, 16 ஜனவரி, 2010

மக்களவை

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்கச்
சொந்த உறவாய்ச் செயல்வீர - மாந்தராய்ப்
பந்தியில் கூடி யருங்கருமஞ் செய்யவெனத்
தந்திட்டார் மக்க ளவை