கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தமிழர்களின் கணக்கு - ஒரு அலசல்

தமக்கென்றோர் ஆண்டுக் கணக்கீட்டினைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிய போதும், கணக்கியலில் தமிழர் என்றுமே சளைத்தவராக இருந்ததில்லை. நானறிந்தவரை தமிழர்களின் பல்வேறு கணக்கீட்டு முறைகளை

எடுத்துரைக்கும் பழம்பாடல்களை இங்கிட்டிருக்கிறேன். தவறுகள் ஏதேனும் இருப்பின் அது எடுத்துரைத்த என்னுடைய குற்றமே அன்றி, தமிழ்ச் செய்யுள்களின் குற்றமன்று. இவற்றில் வரும் பல கணக்கீட்டு முறைகளின் விளக்கங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தெரிந்த விளக்கங்களைப் பாடல்களின் கீழேயே இட்டிருக்கிறேன். ஆயினும் இதை என் தளத்தில் இடாததற்குக் காரணம் சரிபார்க்கப்படாத பல விவரங்களே!

மேலும் நானொரு கணித வல்லுனன் அல்ல; எனவே அவ்விதம் தமிழ், கணிதம் இரண்டிலுமே ஆர்வம் இருப்பவர்கள் இவ்வாராய்ச்சியில் அதிகம் உதவக் கூடும்.

எண்ணறிதல்:

(1)

இம்மிதானீ ரைந்தரை யெனவே வைத்திதனைச்

செம்மைதரும் கீழ்முந் திரைசெய்து - பின்னையவை

மூன்றுபடி பத்திரட்டி முந்திரையே யொன்றென்றார்

ஆன்ற வறிவி னவர்.

(அளவீடுகளின் பெயர்கள் இம்மி, கீழ்முந்திரை, மேல்முந்திரை, ஆனால் அவற்றின் தொடர்புகளை அறிய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்த, சரிபார்க்கப் படாத விவரங்கள்: 1 முந்திரை= 1 / 320, ஒரு கீழ்முந்திரை= 1 / 102400, ஒரு இம்மி = 1/ 2150400 )

(2)

முந்திரைய ரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய்

வந்ததோர் காணிநான் மாவாக்கிச் - சிந்தித்து

நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதனை

நாலாக்கி ஒன்றாக நாட்டு.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: முந்திரை, காணி, அரை, அரைக்காணி, கால், நான்மா, ஒன்று. நான் அறிந்த சரிபார்த்த விவரங்கள்: ஒன்று=1, அரை=1/2, கால்=1/4; சரிபாராத விவரங்கள்: நான்மா=1/5, காணி=1/80, அரைக்காணி=1/160)

நிலவளம் அறிதல்:

(1)

உற்றசீர்பூமி யதனிளொளி பவளங்

கொற்றவேற் கண்ணாய் குவளையெழும் - மற்றை

இடைநிலத்து வேல்துராய் என்றி வைகளாகும்

கடைநிலத்து வெண்மையுவர் காண்.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: பவளம், வேல், குவளை, துராய், வெண்மையுவர் நிலம்; சரிபாராத விவரங்கள்: (1) உத்தம நிலம்: குவளை, சடை, காந்தை, காவேடு, காவேளை, பவளக்கொடி, புல், செற்றுப்பயிர். (2) மத்யம நிலம்: செருப்படை, துராய், கண்டங்கத்திரி, வேல், அறுகு, சாமை, கேழ்வரகு. (3) அதம நிலம்: ஓடு,

தலை, பொரி, விரை, துடைப்பம், வெண்ணுவர்நிலம், பருத்திக்குமாம்.

நுட்பம் அறிதல்:

(1)

சின்னம்பத் தேமுக்காற் செப்புந் தொகைநுண்மை

நுண்மையில் மூன்று நுவலிம்மி - யிம்மி

இருபத் தரையொன்றாங் கீழாக வேதான்

வருகுமுந் திரையெனவே வாட்டு.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: சின்னம், நுண்மை, இம்மி, முந்திரை, கீழ், பத்து, முக்கால், மூன்று, இருபத்தரை, முந்திரை)

கழஞ்சு வருமாறு:

(1)

ஒன்று மிரண்டாம் பிளவுமிரண் டாங்குன்றி

குன்றிய மஞ்சாடியைத் தாகும் - என்று

ஒருநா லொன்றா குமென்றோ துவாரெங்கள்

திருமாதே தேனே தெளி.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்:ஒன்று, இரண்டு, பிளவு, குன்றி, மஞ்சாடி. சரிபாராத விவரங்கள்:

ஒருதனி நெல் எடை=வீசம், 4 நெல் எடை= 1 குன்றி, 2 வீசம் = 1 பிளவு, 2பிளவு=1 குன்றி, 2குன்றி=1மஞ்சாடி,

5மஞ்சாடி= 1/4 கழஞ்சு, 4 கால்கழஞ்சு=1 கழஞ்சு)

எடையறிதல்:

(1)

கண்டகழஞ் சீரிரண்டு கைசாக்கை சாநாலு

கொண்ட பலநூறு கூறுநிறை - கண்ட

இரண்டு துலாமுப்ப தோடிரண்டாம் பாரம்

திரண்ட விளமுலையாய் செப்பு.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: கழஞ்சு, கைசா, பலம், நிறை, துலாம், பாரம். சரிபாராத விவரங்கள்: 2கழஞ்சு= 1கைசா, 4கைசா= 1பலம், 100பலம்= 1 நிறை, 2நிறை= 1துலாம், 22துலாம்= 1 பாரம்)

தமிழன்பர்கள் மேலதிக விவரங்கள் இருப்பின் அறியத்தர வேண்டுகிறேன். இன்னும் ஆழ இதனைப் பற்றி ஆராயலாம்.

_பாவலர் இராஜ. தியாகராஜன்.

தொடரும்...............

திங்கள், 17 ஜனவரி, 2011

குறுந்தொகைச் செல்வம்

முனைவர் உயர்திரு. மு.வரதராசன் அவர்கள் தொகுத்து வைத்த குறுந்தொகைச்செல்வம் அருமையான சொல்லோவியம். இளகிய தென்றல். குறுந்தொகைப் பாடல்களிலிருந்து தமக்குப் பிடித்த பாக்களை எல்லோரும் விரும்பி வண்ணம் உரைகளுடன் தொகுத்துள்ளார். தம் நீண்ட முன்னுரையிலே மிகத் தெளிவாய் எல்லோருக்கும் விளங்கும் வகையில் உரையைக் கட்டியுள்ளார்கள். நீலம் படர்ந்த ஆழியிலே அசைந்து செல்லும் படகைப்போல். 'குறுந்தொகைச்செல்வம்' எனும் நூல்.

குறுந்தொகையை பாடும் போழ்து எனக்குள் தோன்றிய சிறுதொகை

ஆழியிலே ஆடுகின்ற பாடகு போலே
அந்தரத்தில் ஆடுகின்ற வாழ்வு தனைஇ
பாடுபொருள் ஊடு தமிழ்கட்டி வைத்த
பாங்குடை நூலெனிலோ குறுந்தொகை யேஆம்.


அந்நூலில் யானுணர்ந்த பாட்டுகளை பதிவு செய்ய விழைகிறேன்.

*புதுமை யுணர்தல்

காட்சி:௧

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முள்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே!


_(அள்ளூர் நன்முல்லையார். குறுந்.202)

"நோகின்ற என் நெஞ்சே நோகின்ற என் நெஞ்சே
வளம் குறைந்த நிலத்தில் நெருங்கி வளரும்
சிறுசிறு இலைகளைக் கொண்ட
கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் அழகினையுடைய
மலர்களைக் கொண்ட நெருஞ்சி பின்
முட்களைக்கொட்டி வைப்பது போன்று
அன்பைத் தந்து கனவுத் தந்து
அருகிலிருந்து இன்பமூட்டிய
காதலுறவு
பின்பு,
அவராலேயே துன்பத்துக்கு
கரணியமானதென்று நோகிறாயே என் நெஞ்சே"

காட்சி:௨

கான மஞ்ஞை அறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரோடு ஒராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே_கபிலர்,குறுந்.38.

காட்டு மயில் பாறையிடுக்கில் இட்ட முட்டையை வெய்யிலில் விளையாடிக் கொண்டிருக்கும் கருங்குரங்கின் குருளை (குட்டி) அறியாது உருட்டுவது போன்று;காதலியான மனைவி கண்ணீர் விட்டு நொந்திருக்க அவள் துன்பத்தை உணராது உள்ளானே.அவனும் அறிந்து செய்ய வில்லை அறியாமலே செய்கிறான் என்பதனை உணத்துகிறார் புலவர்

காட்சி:௩

கண்தர வந்த காம ஒள்ளெரி
என்புற நலியினும் அவரோடு பேணிச்
சென்றுநாம் முயங்கற்கு அருங்காட் சியமே
வந்தஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திட களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது
களைவோர் இலையான் உற்ற நோயே


_குப்பைக் கோழியார்,குறுந்.305.

உரிமைப்போரில் சண்டையிடும் கோழிகள் வெற்றி கொள்வதற்காக உயிர் நீங்கும் வரை சண்டையிட்டுக்கொண்டே இருக்கும்;அதே போன்று வீட்டில் அடைபட்டு இருக்கும் காதல் கொண்ட பெண் தன் காதலன் மீட்டுக்கொண்டு செல்லும் வரை உயிர் நீங்கிலாலன்றி தன் நிலையிலிருந்து பின்வாங்காள் என்பதனைப் புலவர் கூறும் வகைதான் என்னே!


*பிறருள்ளம் உணர்தல்

காட்சி:௧

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே


_குறுந்.3.தேவகுலத்தார்.

தோழி:) "என்னடி தோழி(தலைவி)? உன்னை விட்டுப்பிரிந்த கண்ணாளன் தம் வேலை முடித்துத் திரும்பவில்லை. கூடா நட்பினால் உன்னை மறந்து விட்டாரோ. வருவதற்கு மனமின்றி வேறூரில் நிரந்தரமாக தங்கிவிட்டாரோ"?

தலைவி:) "எங்கள் காதலையறிந்த நீயுமா, அவரைப் பற்றி தவறாக கருதுகிறாய்.அவர் என்மீது வைத்துள்ள அன்பும் நேசமும் அளவற்றது;அது போல் நான் அவரை................................"( எண்ணிய போது),

அவள் நெஞ்சத்தில் பெரிய நிலவுலகம் உவமையாக நின்றது. அந்த உறவின் உயர்வை நினைத்தபோது வானம் தோன்றியது. அளத்தற்கரிய பெற்றியை நினைத்த போழ்து கடல்நீர் தோன்றியது. அவன் வாழும் மலையை நினைத்த பொழுது அவள் உள்ளம் பெருமிதம் எய்தியது. அந்த மலையில் இழைக்கப்படும் தேன் பெருந்தேனாக, அவற்றைத் தந்த மலர்கள் உயர்ந்த குறிஞ்சி மலர்களாக, அவளுடைய நினைவெல்லாம் சிறந்து விளங்கியது. கற்பு வழிபட்ட ஒரு பெண்ணின் உரமான நம்பிக்கையைப் புலவர் தேவகுலத்தார் கூறும் வகையை உணர்ந்தவரே அறிவர்.

காட்சி:௨

சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்து
எல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும்
பெரும்புலர் விடியலும் மாலை
பகலும் மாலை துணையி லோர்க்கே


_மிளைப்பெருங்கந்தன்.குறுந்.234.

சேப்ப - சிவக்க, படர் - துன்பம், கூர்ந்து - மிகுந்து,எல் அறு - ஒளிஅற்ற, நகர் - வீடு.

தோழி :) தோழி உன் துணைவர் இன்னும் வீடுதிரும்பாத கரணியத்தால்
மாலைப் பொழுதில் மனம் நோவாயென்றே உனக்குத் துணையாக வந்தேனடி.

தலைவி:) அப்படியா? நீ வந்ததில் மகிழ்கிறேன். ஆனாலும் கேளடி தோழி

"கதிரவன் மேற்கே மறைய அந்திவானம் சிவக்க ஒளி மயங்கும் ஒரு பொழுதைக் கண்டு,அப்போது முல்லை மலர்வதையும் கண்டு,அதுதான் மாலைக் காலம் என்று பலரும் கூறுகின்றனர்.அவர்கள் அனைவரும் அறிவு மயங்கியவரே, அது மட்டும் மாலைப்பொழுது அன்று;வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வருந்தும் என்போன்றவர்க்கு எல்லாம் மாலைக்காலமே. கோழி கூவும் விடியற்காலையும் மாலைக் காலமே;பகற்பொழுதும் மாலைக் காலமே" என்றாள். ஒரு பெண்ணின் மனதை கூறிய ஆண் புலவரின் திறந்தான் சிறப்பு.


*சொல்லும் திறன்

காட்சி :௧

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்ககத்துப் பாய்ந்து.உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்தும் யாமே.


_குறுந்.69. கடுந்தோட்கரவீரன்.

"கரிய கண்களையுடைய வலிய ஆண்குரங்கு இறந்துவிட, விதவை வாழ்விலிருந்து உய்ய முடியாத அழகிய பெண்குரங்கு அறிவற்ற தன் குட்டியைச் சுற்றத்திடம் சேர்த்துவிட்டு, உயர்ந்த மலைப்பகுதியில் ஏறிக் கீழே பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளும்"
என்று தன் தலைவியின் இடரை உவமையாற் அவள் தம் காதலனுக்குச் சொல்லும் சொற்றிரம் தான் என்னே!

யாரால்: தோழியால்

யாருக்கு : தலைவனுக்கு (தன் தலைவியின் காதலனுக்கு)

எவ்வேளை: தலைவியின் காதலனாகிய தலைவனுக்குச் சொன்னது அதாவது தலைவியைக் காணவரும் பாதையோ காட்டுவழியில் அமைந்ததால் அவனுக்கு இடர் நேர்து விடுமோ என தலைவி அஞ்சியதால் தோழியால் கூறப்பட்டுள்ளது.


*காதல் தந்த ஆற்றல்
*ஏமாற்றம்
*பாலையிலும் அன்பு
*துன்பத்திற்குத் துணை
*குடும்பப் பண்பாடு
*உணர்வோவியம்

*பழக்கவழக்கங்கள்

இவன்இவள் ஐம்பால் பற்றவும் இவள்இவன்
புன்தலை ஓரி வாங்கினள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
ஏதில் சிறுசெரு உறுப மன்னோ;
நல்லை மன்ற பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணையல் அன்னைவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே

(குறுந்,229.மோதாசனார்)

சில சொற்குறிப்புகள்
ஐம்பால் - மகளிர் கூந்தல், ஓரி - ஆண்தலைமயிர், வாங்கினாள் - வாங்கி - இழுத்து, தவிர்ப்ப - விலக்க, ஏதுஇல் - காரணியமற்ற, செரு - சண்டை, மன்ற - திண்ணமாக, பால் - ஊழ், துணை - இரட்டை, பிணையல் - மாலை.

எனதுரை: காரணியமற்று(காரணமற்று) இருவரும் அதாவது இவனும் இவளும் ஒருவரை ஒருவர் தலைமயிரை இழுத்து சண்டைசெய்கின்றனர். இவர்களை வளர்த்தவர்கள்(செவிலியர்) மறிக்கவும் விட்டுக்கொடாது சண்டைசெய்தவர்கள் பின்னாளில் தாம் துணையாகி புரிந்துணர்வோடு உறுதியாக இணைந்து வாழும் வாழ்வு, ஊழ்வினையால்(விதியால்)
அமைந்ததன்றோ!*குறிக்கோள்
*கேளாத பேச்சு
*பறவை விலங்குகளின் வாழ்க்கை
*கற்பனைக் குறிப்பு
*உவமைத் திறன்

இன்னும் தொடரும்.........
வலைப்பதிவர்
ச.உதயன்.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

தைப்பொங்கல்


வள்ளுவராண்டு சுறவம் ௨ய௪௨ (2042)
இவ்வாண்டிலிருந்து படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும் பதிவாகவே அமைகின்றது. பேராளர்களால் எழுதி வைத்த இலக்கியங்கள் பேசும் தளமாக மாறுகிறது 'பதிவேடு'.பார்ப்போருக்கு நல்ல பொங்கலாக அமையும் என்றே நம்புகிறோம்.