கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 ஏப்ரல், 2010

திட்பமும் நுட்பமும் ஒட்பமும்

தமிழ் மொழியின் திட்பமும் நுட்பமும் ஒட்பமும்

தமிழ் என்றால் இனிமை என்று பொருள் என்பர் அறிஞர் தமிழுக்கும் அமுதென்று பேர் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். துமிழ் என்றால் அன்பு என்றும் அழகு என்றும் பொருள் கொள்ளலாம் என்பர் இன்னும் சிலர்.

தமிழ் என்பது தனிமைப்பொருள் குறித்த தமி என்னும் வினையடி கொண்ட சொல் என்றும் தமிழ் அறிஞர்கள் கருதுகிறார்கள் தமியன் தமியள் என்ற சொற்கள் தனித்தவன் தனித்தவள் என்று பொருள் கொள்வதை உற்று நோக்கும் போது இது தௌ;ளத் தெளிவாகும். எனவே தமிழ் என்பது தனித்ததொரு செம்மொழி என்பர் அறிஞர்.

தமி என்பது தனக்கு ஒப்பில்லாதது என்று பொருள் கொள்ளும் வகையிலும் அமைந்து விடுகின்றது. அந்த வகையில் பார்க்கும் போது தமிழ் என்பது தனக்கு ஒப்பில்லாத மொழி என்ற பொருளில் அமைந்த சொல்லாகும் என்பர் இன்னும் சில தமிழ் அறிஞர்கள்.

தமிழ் என்ற சொல்லில் வரும் ழ கரம் தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தாகும். முலையாளம் அரபு மொழிகளிலும் ழ கரம் உண்டு என்பர். இருப்பினும் ழ கரம் அரபு மொழியில் தமிழ் மொழியில் ழ கரம் ஒலிப்பது போல் ஒலிப்பதில்லை.

மலையாளம் தமிழ்தாய் ஈன்றெடுத்த குழந்தை என்பதால் மலையாளத்தில் ழ கரம் ஓளைவுக்குத் தமிழில் ஒலிக்கப்படுவது போலவே ஒலிக்கப்படுகிறது என்பர்.
ஆக தமிழிலுள்ள சிறப்பெழுத்தான ழ கரத்தை கொண்ட தமிழ் என்ற சொல்லே தனித்துவம் மிக்கதாக விளங்குவதைக் காணலாம். துமிழ் என்ற சொல்லில் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் இருப்பதைப் பார்த்து வியக்கிறோம். வேறு மொழிகளில் இத்தகைய சிறப்பைக் காணமுடியாது.

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில் தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவிகளின் பெயர்கள் ழகரத்தில் இருப்பதைப் பார்த்து வியந்து நிற்கிறோம். முழவு குழல் யாழ் என்பன முறையே தோல் துளை நரம்புக் கருவிகள் என்பது யாவரும் அறிந்ததே இந்த மூன்று பெயர்களிலும் தமிழின் சிறப்பெழுத்தாhன ழகரம் இருப்பதால் இக்கருவிகள் தமிழருக்கே சொந்தமான பாரம்பரிய இசைக்கருவிகள் என்று உறுதிபடக் கூறி உவகை அடைகின்றோம்.

தமழிலே ஓர் எழுத்தே சொல்லாகவும் வாக்கியமாகவும் வருகின்ற அழகையும் வளத்தையும் கண்டு வியக்காதவர்கள் இல்லை.
எடுத்துக்காட்டாக: ஆ ஈ கா கை கு தீ நா நீ பா பூ பை மா

கா (காப்பாற்று), தா போ வா வை ஈ முதலான வினைச் சொற்கள் ஓரெழுத்தைக் கொண்ட சொற்களாகவும் ஓரெழுத்தில் அமைந்த வாக்கியங்களாகவும் விளக்குவதைப் பார்த்து வியக்காத மொழியியல் அறிஞர்கள் இல்லை எனலாம். இவற்றை ஓரெழுத் தெருமொழியென இலக்கணக்காரர் கூறினும் வினைச்சொற்களை ஓரெழுத்தொரு வாக்கியம் எனவும் அழைக்கலாம்.

காரணப்பெயர்

நாய் என்ற பெயரை நா தொங்குகின்ற விலங்கிற்கு இட்டனர். பஃறி – பன்றி என்ற பெயரை பல் அதிகம் கொண்ட விலங்கிற்கு இட்டனர். நூற்பத்து நான்கு (44) பற்கள் பன்றிக்கு உண்டு எனப்படுகின்றது.
புல்லைத் தின்னாத விலங்கிற்கு புலி ( புல் இலி ) என்றும், மார்பினால் ஊர்ந்து செல்லும் பாம்பிற்கு உகரம் ( மார்பு ) என்றும் அளக்க முடியாத நீரைக்கொண்டே நீர் நிலையை அளக்கர் (கடல்) என்றும் அழைத்தனர்.

தம்பின்னால் பிறந்தவனைத் தம்பி என்றும் அழைத்தனர். அது பின்பு தம்பி ஆயிற்று. மூத்தவனை அண்ணா என்பது மூத்த மேலே உயர்ந்த முதலான பொருள்களைத் தரும் சொல்.
அண்ணம் என்பது மேலே உள்ளது என்பதைக் குறிக்கும் அண்ணாந்து என்பது மேலே உள்ளத்தைக் குறிக்கும் எனவே அண்ணன் என்றால் மேலே உள்ளவர் என்று பொருள்.

இப்படி எல்லாம் காரணப்பெயர் வைத்த சிறப்பை விட இன்னொரு நுட்பமான சிறப்பை இங்கு பார்ப்போம்.

நீர் நிலைகள்
நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் அழைத்த நுட்பத்தை அறியும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
குளம், ஏரி, ஊரணி, பொய்கை, சுனை, மடு, கேணி, மோட்டை, அள்ளல், கிணறு, துரவு, தடாகம், கயம், சமுத்திரம், ஓடை, அளக்கர், அகழி, அசம்பு, எனப்பல பெயர்களை நீர் நிலைகளுக்கு இட்டனர்.
ஏர் தொழிலுக்காக ( பயிர்ச் செய்கை ) அமைக்கப்பட்டதை ஏரி என்றும், குளிப்பதற்காக அமைக்கப்பட்டதை குளம் என்றும், ஊரார் உண்ணுவதற்காக ( சுத்தமான குடிநீர்த் தேவைக்காக ) அமைக்கப்பட்டதை ஊருணி என்றும். ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடங்களை அகழி என்றும் ( அகழ்ந்து உருவாக்கப்பட்டது ), சிறிகளவு நீருள்ள பள்ளத்தை சுனை என்றும், சேறு பொருந்திய நீர் பள்ளத்தை அள்ளல் என்றும், மலர் நிறைந்த நீர் நிலையை பொய்கை என்றும், தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டத்தை துரவு என்றும் ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்ததைக் கேணி என்றும், அளக்க முடியாத நீர் நிலையை அளக்கர் ( கடல் ) என்றும் நுட்பமான வேறுபாடு வியங்க பெயர் வைத்து அழைத்தனர்.
பூப்ப+வாய் : பூவின் பல்வேறு நிலைகளைத் தமிழ்ப் பெயரோடு அழைத்த நுட்பத்தை பார்த்தால்

அரும்பும் பருவம் அரும்பு, மொக்கு விடும் பருவம் மொட்டு, முகிழ்க்கும் பருவம் முகை மலரும் பருவம் மலர், மலர்ந்த பருவம் அலர், வாடும் பருவம் வீ, வதங்கும் பருவம் செம்மல்

சொல் நுட்பம்

இத்தகைய பல நுட்பங்களைதக் கொண்டது நம் தமிழ்மொழி. உரைத்தல், அறைதல், கூறுதல், செப்புதல், இயம்புதல், பிதற்றுதல், விளக்குதல், விள்ளுதல், கழறுதல், உளறுதல், புகளுதல், சொல்லுதல், பறைதல், ஏசுதல், பேசுதல், கதைத்தல், அளவளாவுதல், பகருதல், மிழற்றதல், பின்னுதல், அகவுதல், அலம்புதல், மொழிதல், விளம்புதல், சாற்றுதல், முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் நுட்பமான வேறுபாடு கொண்ட சொற்களாக விளங்கி இருக்கின்றன.

இன்று இவற்றில் பல சொற்கள் ஒரே கருத்தை உணர்த்துவனவாக இருக்கின்றன. இது
மொழியின் தேய்வையே காட்டுகிறது.

உரைத்தல் : வியக்கமாகச் சொல்லுதல்.

அறைதல் : கூறுகளாக பகுத்திச் சொல்லுதல் அல்லது யாவரும் அறியும்படி பகிரங்கப் படுத்திக் கூறுதல்.

செப்புதல் : தெளிவாகச் சொல்லுதல்.

பின்னுதல் : மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லுதல்.

அளவளாவுதல் : கலந்து மகிழ்ந்து பேசுதல்.

விளம்புதல் : விளக்கமாகச் சொல்லுதல்.

விள்ளுதல் : மெது மெதுவாக விடயத்தை சொல்லுதல்.

கதைத்தல் : கதைகளைச் சொல்லுதல்.

கழறுதல் : உறுதியாகச் சொல்வது.

என நுட்பமான பொருள் வேறுபாடுகளை மேற்குறித்த சொற்கள் உணர்த்திக் காட்டுகின்றன.

யாயும் ஞாயும்

இவை மட்டுமன்று எது ஒன்றையும் துல்லியமாகக் குறிப்பிட தமிழ்மொழியில் சொல் உண்டு. இன்று தாய் என்ற சொல்லை தன்மை முன்னிலை படர்க்கை என மூவிடங்களிலும் பயன்படுத்தும் போது என்னுடைய தாய் உன்னுடைய தாய் அவர்களுடைய தாய் என்று தான் சொல்கிறோம் ஆனால் முற்காலத்தில் சுருக்கமாக யாய் என்று தன்னுடைய தாயையும் ( தன்மை ) ஞாய் என்று உன்னுடைய தாயையும் ( முன்னிலை ) தாய் என்று அவனுடைய தாயையும் ( படர்க்கை ) குறித்தனர்.

இதுபோல எந்தை நுந்தை தந்தை, எங்கை நுங்கை தங்கை, எம்பி நும்பி தம்பி முதலான சொற்கள் பொருளுணர்த்திய நுட்பம் இன்று தமிழ் மொழியில் பாவனையில் இல்லை.

குடல் சார்ந்த நகரத்தை பட்டினம் என்றும் கடலில்லா நகரத்தை பட்டணம் என்றும் நுட்பமாக அழைத்ததை தமிழின் வளத்தை அறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக சொன்னால்

தமிழீழத்தில் ( வவுனியா கடலில்லாத பட்டணம், முல்லைத்தீவு கடலோடு தொடர்புடைய பட்டினம்)

உப்பு தப்பு
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
என்ற பழமொழியை சொல்கிறோமே இதன் நுட்பத்தை அறிந்து கொண்டா சொல்கிறோம் தேன் பால் முதலியவற்றிலும் பழவகையிலும் உப்பு இல்லை என்று குறைகூறி அவற்றைக் குப்பையிலே கொட்டுகிறோமா இல்லை விரும்பிச் சாப்பிடுகிறோமே இல்லையா?
உண்மையிலே உப்பு என்றொரு சுவையே இல்லை உவர்ப்பு என்பதைத் தான் உப்பு என்று இன்று அழைக்கின்றோம்.

தரித்திரம் என்ற சொல்லைப் பார்ப்போம்
வறுமை செல்வம் ஆகியவை இரண்டுமே மனிதனுக்கு நிரந்தரமானவை அல்ல என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தும் தத்துவ நோக்கில் வறுமையைத் தரித்திரம் ( தரித்து + இரம் ) தங்கி இருக்காது என்றும் பயன்படுத்திய சொல் நுட்பத்தை யார் தான் வியக்கமாட்டார். யார் தான் இரசிக்க மாட்டார்.

இத்தகைய நுட்பத்தை உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் காணமுடியாது இத்தகைய சிறப்பு தமிழ் மொழிக்கே உரிய பெரிய சிறப்பாகும்.

"குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப
விழவு அறா இயல் ஆவணத்து"
எனச் சங்க காலத்துப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை விளக்குகிறது.
குழலின் ஒலியை அகவல் என்றும்
யாழின் ஒலியை முரல்தல் என்றும்
முழவின் ஒலியை அதிர்தல் என்றும்
முரசின் ஒலியை இயம்பல் என்றும் நுப்பமாகக் கூறப்படுகிறது.

"உயர் தனிச் செம்மொழியே
ஓங்குக தமிழ்மொழியே"

ஆசான் : தமிழ்மணி
தொகுப்பாளர் : சிவராசா
பதிவாளர் : அரசன் . தமிழரசன்
உரிமை : தமிழ் கூறும் நல்லுலகு