கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

ஒரு மரணம்


ஒரு மரணம் ஐரோப்பாவை காப்பாற்றியது


1238ம் ஆண்டு பிரான்சு மன்னன் ஒன்பதால் லூயியின் அரசவைக்கு ஒரு வித்தியாசமான தூதுக்குழு வந்தது. அவர்கள் பாரசிகத்தின் மிக உயர்ந்த மலையான எல்பர்ஸ் மலையில் வசிக்கும் ஒரு இனம். கத்தி எடுத்தௌ ஒருவனுக்கு குறி வைத்தால் அவனை தீர்த்து கட்டாமல் கத்தியை கீழே வைக்காத மூர்க்கமான மலைஜாதியினர். மலையில் விளையும் ஹஷீஷ் எனும் போதைபொருளை வெற்றிலை, பாக்கு போல சர்வசாதாரனமாக உட்கொள்பவர்கள். அதனாலேயே ஹஷாஷின் (Ismayili hashashin) என அழைக்கபட்டவர்கள். சிலுவைபோரில் பல கிறிஸ்தவ படைகளை வெட்டி சாய்த்தவர்கள். இவர்கள் மேல் இருந்த பீதியால் தான் பின்னாளில் கொலைகாரர்களை Assassins என அழைக்கும் சொல்லே ஆங்கிலத்தில் ஏறியது.

கிழக்கே சிலுவைபோர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. இந்த சூழலில் இத்தனை ஆயிரம் மைல்களை தாண்டி இத்தகைய கொலைகாரர்களின் தூதுக்குழு எதற்கு வந்தது என புரியாமல் லூயி மன்னர் குழம்பினார். அவர்கள் அளித்த தகவலை கேட்டு மேலும் அசந்துவிட்டார்.

"கிழக்கே மங்கோலியாவில் இருந்து மூர்க்கமான ஒரு படை கிளம்பி வருகிறது. அவர்கள் கால் வைக்கும் இடமெல்லாம் பேரழீவு, நாசம். மரண ஓலம். நாடு நகரங்களை அழித்து, தொன்மையான நாகரிகங்களின் சுவடே இல்லாமல் மண்ணோடு மண்ணாக்கி, மக்களை கசாப்புகடைக்கு அனுப்பி வருகிறார்கள். இவர்கள் அடுத்து எங்கள் பகுதியை நோக்கி வருகிறார்கள். எங்களுக்கு அடுத்து ஐரோப்பாவுக்கு வருவார்கள். இவர்களை எதிர்க்கும் சக்தி நம்மில் யாரிடமும் இல்லை, நாம் எல்லாரும் கூட்டு சேர்ந்தால் தான் தப்பிக்க முடியும்"

மங்கோலியர்களை பற்றி அதிகம் அறிந்திராத ஐரோப்பியர்களுக்கு இது வேடிக்கையாக இருந்தது. அசாசின்கள் யாருக்காவது அஞ்சுவார்கள் என்பதே அவர்களுக்கு நம்ப இயலாத விஷயமாக இருந்தது. இது ஏதோ சிலுவை போராளிகளை கூட்டணி என்ற பெயரில் அழிக்கும் சதி என நினைத்தார்கள். அதுபோக அப்போது மத்திய ஆசியாவில் வலிமை வாய்ந்த பிரஸ்டர் ஜான் எனும் கிறிஸ்தவ அரசன் ஆள்வதாகவும், முஸ்லிம்களை எதிர்த்து போரிட ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு அவன் உதவ இருப்பதாகவும் ஒரு மூட நம்பிக்கை ஐரோப்பாவில் பரவி இருந்தது. கெங்கிஸ்கான் தான் கிறிஸ்தவர்களை காப்பாற்ற வந்த பிரஸ்டர் ஜான், அதனால் தான் இஸ்லாமிய நாடுகளை அவன் அழிக்கிறான் எனவும் நினைத்து ஐரோப்பிய மன்னர்கள் இந்த கூட்டணிக்கு ஒத்துகொள்ளவில்லை.

மங்கோலியர்கள் நாடோடிகள். ஒரு குதிரை அல்லது ஒட்டகத்தில் ஏற்றும் அளவு தான் ஒரு மங்கோலியனுக்கு உடமைகள் இருக்கும். வீடு என்பது டெண்டு தான். மங்கோலியாவில் நகரங்களே சுத்தமாக இல்லை. இன்றும் மங்கோலிய நகரங்கள் பெயரளவு மட்டுமே நகரங்கள். கெங்கிஸ்கான் காலத்தில் சுத்தமாக நகரங்கள் இல்லை, ஏன் சொல்லபோனால் மங்கோலியா என்ற நாடு இல்லை, அரசு என்ற அமைப்பு இல்லை. வெறுமனே நாடோடி கூட்டங்கள் தான் இருந்தன.
இந்த நாடோடிகளுக்கு நகரங்கள் மேல் வெறுப்பு. நகர்புற நாகரிகம் மேல் வெறுப்பு. நகரங்கள் இவர்களை பிச்சைகாரர்களாக நினைத்தன. இவர்கள் அவர்களை மனிதர்களாகவே நினைக்கவில்லை. ஒரு இடத்தில் தங்கி வாழ்வது அன்ரைய மங்கோலியர்களுக்கு சாத்தியமில்லை. அப்படி வாழ்ந்த விவசாயிகள், நகரமக்கள் ஆகியோரை அவர்கள் நிலத்தை வீணடிப்பவர்களாக கருதினார்கள். சீனாவை கெங்கிஸ்கான் பிடித்தபோது சீனர்களின் நகர்புர நாகரிகம், மதம், விவசாயம் எல்லாமே அவனுக்கு வீணாக தெரிந்தது. அன்றைய சீனாவில் நாலரை கோடி மக்கள் வசித்தார்கள். "இவர்களை கட்டி மேய்ப்பதை விட ஒட்டுமொத்தமாக சீன மக்கள் அனைவரையும் கொன்றுவிட்டால் சீனா மொத்தமும் புல்லாவது முளைக்கும், குதிரைகளாவது மேயும்" என நினைத்தான் கெங்கிஸ்.கடைசியில் மக்கள் வரி கட்டுவார்கள், வருமானம் வரும் என்பதால் அந்த திட்டத்தை செயல்படுத்தமால் விட்டான்.

இப்படிப்பட்டவன் படையெடுத்த நகரங்கள் அனைத்தும் தரைமட்டமாகின. பிடித்த நகரங்களில் இருந்தவர்கள் அனைவரையும் கொன்று, நகரை தரைமட்டமாக்கி, நகரில் உள்ள நாய்,பூனைகளை கூட விடாமல் கொல்வது கெங்கிஸ்கான் வழக்கம். ஆப்கானிஸ்தான் மன்னர் அவனை சரிக்கு சமமாக மதிக்காதபோது மங்கோலிய படைகள் தலைநகரான க்வாசமை முற்றுகை இட்டன. அவர்களிடையே அன்று எந்த நாட்டிடமும் இல்லாத சீன வெடிமருந்து, சீன உண்டிவில் போன்ரவை இருந்தன. தலைநகரை பிடித்து அதில் இருந்த 80,000 பேரையும் கொன்று மன்னர் சுல்தான் அலாவுதீனை தேடியபோது அவரும் மகாராணியும் செங்கல் கட்டிடம் ஒன்றின் உச்சியில் பதுங்கி இருந்தனர். மேலே ஏற தெரியாமல் ஒவ்வொரு செங்கல்லாக பெயர்த்தெடுத்து மன்னரை பிடித்து காதிலும், கண்ணிலும் உருக்கிய வெள்ளியை விட்டு கொன்றார்கள் மங்கோலியர்கள்.

ஆப்கானுக்கு அடுத்து இந்தியாவுக்கு போவதா, பாரசிகத்துக்கு போவதா என மங்கோலியர்களுக்கு ஒரே குழப்பம். இறுதியில் முடிவெடுத்து பாரசிகம் மேல் பாய்ந்தார்கள். பாரசிகத்தை ஆன்ட அப்பாசிட் வம்ச கலிபா அரசு அத்துடன் அழிந்தது. பாக்தாததை பிடித்த மங்கோலியர்கள் அடுத்து அங்கே இருந்தவர்கள் அனைவரையும் கொன்றார்கள். சுமார் 10 லட்சம் பேர் வரை அவர்கள் கொன்றிருக்கலாம் என ஒரு கணக்கு உள்ளது. பாக்தாத் முழுக்க தீக்கிரையாகி, கலிபாவை பிடித்து கம்பளத்தில் உருட்டி மேலே குதிரைகளை விட்டு கொன்றார்கள். கலிபாவின் பிள்ளைகள் அனைவரும் கொல்லபட்டனர்.

இப்பேர்ப்பட்ட மங்கோலியர்களின் படை ஒன்று மேற்கே ரஷ்யா வழியாக ஐரோப்பா நோக்கி வந்தது. ரஷ்ய மன்னர்களை துவம்சம் செய்து மாஸ்கோவை பிடித்து டான்யூப் வழியாக வியன்னா வரை வந்தபோது தான் ஐரோப்பிய மன்னர்கள் வந்திருப்பது பிரஸ்டர் ஜான் அல்ல, எதிரி என உணர்ந்தார்கள். அவசர அவசரமாக படைகள் தயாராகின. போர்க்களத்துக்கு படைகள் விரைகையில் மங்கோலியர்கள் அங்கே இல்லை. அவர்கள் மன்னரும் கெங்கிஸ்கானின் பேரனுமான குப்ளாய்கான் மரணம் அடைந்ததால் படைகள் மங்கோலியா திரும்பிவிட்டன.

ஒரு மரணம் அன்று ஐரோப்பாவை காப்பாற்றியது. கெங்கிஸ்கான் இறந்தபோது அவன் வென்ற நிலப்பரப்பு அலெக்சாந்தர் வென்றதை விட நாலு மடங்கு பெரிய நிலப்பரப்பு. வரலாற்றில் முன்னும், பின்னும் அத்தனை பெரிய நிலப்பரப்பை யாரும் வென்றது இல்லை.
-செல்வன்

Denald Robert

கருத்துகள் இல்லை: