கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 22 டிசம்பர், 2012

திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை


தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனின் 190வது பிறந்தநாள்
*******************************************


தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 190வது பிறந்தநாள் (19.12.2012) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!…..

வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி
திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை!…..

1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த’திருமேனியாரின்’மைந்தனாக மாதேவியாரின் வயிற்றிலிருந்து 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி வியாழக்கிழமை அவதரித்தார். இது கலியப்பதம் 4924 இற்கும் சாலிவாகன சகாப்தம் 1745 இற்கும் சமமாகிய சித்திராபானு ஆண்டு மார்கழித்திங்கள் 6ம் நாள்ஆகும். இவர் பிறந்த கிரகநிலையானது சிங்கஇலக்கணத்திற்கு உரியதாகும். சோதிடநூற்ப்படி சூரியன் என்னும் கிரகத்திற்கு இராசிச்சக்கரத்தில் உள்ள ஓருவீடு சிம்மம். சூரியன் நவக்கிரகங்களிற்கு நாயகராக விளங்குபவர் மட்டுமல்ல. பால்வீதியில இருக்கும் பல்லாயிரம் நட்சத்திரகூட்டங்களிலும் சூரியக்குடும்பமே மிகவும் பெரியது. உலகின் பேரொளியாகவும் யாரும் அண்டமுடியாத அக்கி;னிக்கோளமாகவும் விளங்குவதும் சூரியக்கிரகமே ஆகும். கிரகம் என்பது இருத்தல் என பொருள்படும். இத்தகைய சூரியனின் பார்வை பெற்ற சிங்க இலக்கணத்தில் பிறந்த இவருடைய முன்னோர்களும் பின்னோர்களும் பெருமைபெற்ற வரலாறுடையவர்கள்.

இவ்வாறு பெருமைமிகு குடும்பத்தில் அவதரித்த இவரின் பிறப்பை நூறுவருடங்களிற்கு முன்வாழ்ந்த வல்வெட்டித்துறையின் மூத்ததமிழ் அறிஞரும் வல்வெட்டித்துறை வைத்திலிங்கப் புலவரின் சகமாணவரும் உடுப்பிட்டி சிவசம்புப்புலவரின் மாணாக்கனுமான பொன்னையா உபாத்தியாயர் என்றழைக்கப்பட்ட புலவர் நா.பொன்னம்பலம்பிள்ளை அவர்கள் பின்வருமாறு சிறப்புறபாடியுள்ளார்.

மல்லிகை முல்லை மலரிருவாட்சியாம்
நல்லபைந்தருநிறை நந்தவனமுஞ்
சூழ்ந்திடவதிவளந் துலங்குமிவ்வல்வையில்
ஆழ்ந்திடு கடல்சூழ்வணிகனின் மாக்கள்
வல்வினைப்பிறவியா மறிகடல்நீந்தி
எல்லையில்லா பேரின்பந்துய்ந்திட
கருமேனிகொள்ளாக் கரையறுபுண்யத்
திருமேனிவள்ளல் செய்தவத்துதித்த
தருவேங்கிடநிதித் தாரைபொழிகைத்
திருவெங்கடாசல சீதெந்தரியசிகாமணி!

திருமேனியாருடைய முதல்மைந்தனாக அவதரித்த இவருக்கு குழந்தைவேற்பிள்ளை தம்பிப்பிள்ளை, தம்பையா, இராமசாமி, அப்பாச்சாமி, என ஐந்து இளைய சகோதரர்;களும் ஒரு சகோதரியும் இருந்தனர். இதனால் மூத்தவர் என்கின்ற காரணப்பெயர் கொண்டு ‘பெரியதம்பியார்’ என அழைக்கப்படலானார். இளமைப்பருவம் முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரும் தமது பரம்பரைத்தொழிலான கடல்வணிகம் மூலம் பெரும்பொருள் ஈட்டியவர்களில் முதன்மையானவர். உரியபருவம் வந்ததும் வள்ளியம்மை எனும் மாதரசியை திருமணம் முடித்து குடும்பஸ்தரான இவருக்கு வேலுப்பிள்ளை, திருமேனிப்பிள்ளை, அருணாசலம் என மூன்று ஆண்மக்களும் ஆச்சிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை பொன்னம்மா என மூன்று பெண்மக்களும் வாரிசாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ள போதும் இவருக்கு மேலும் பலகுழந்தைகள் என செவிவழிக்கதையுள்ளது.

ஆரம்பத்தில் தென்கிழக்காசிய நாடான மலேசியாவின் துறைமுகநகரங்களான பினாங். போர்ட்வேலோ, பன்கூர், கிள்ளான் என்பவற்றுடன் அரிசி வர்த்தகத்தில் இவர் ஈடுபட்டார். இக்காலத்தில் தென்னிலங்கைநகரான காலியில் அமைந்திருந்த சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பல திருப்பணிகளை மேற்கொண்டதுடன் அதன் புனருத்தானபணிகளிலும் பெரும்பங்காற்றினார். 1850 – 1870 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான மலையாளநாடென்று அழைக்கப்பட்ட இன்றையகேரளாவிற்கும் யாழ்ப்பாணத்திற்;குமான புகையிலை வியாபாரமானது பெருவிருத்தியடைந்தது. தந்தைவழியில் கப்பல் உரிமையாளராகவும் சிறந்த கடலோடியாகவும் இருந்ததனால் மலையாளத்தேச வியாபாரிகளினாலும் இந்தியாவின் நாட்டுக்கோட்டை செட்டிகளினாலும் யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்யப்படும் புகையிலையையும் அதன் உற்பத்திப்பொருட்களான சுருட்டையும் ஏனைய நுகர்வுப்பொருடகளையும் மலையாளநாட்டின் கொச்சினிற்கும் திருவாங்கூருக்கும் ஏற்றிச்சென்று கொடுப்பதன்மூலம் அதிகவருவாயைப் பெருக்கினார்.

1856ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு சொந்தமான “கிங் ஒf அட்லன்டிc” என்ற கப்பல் திருகோணமலைக்கு வடக்காக முல்லைத்தீவுக்கு கிழக்கே வங்கக்கடலில் மூழ்கிவிட்டது. ஆங்கிலேயரின் கட்டிடநிர்மாணப்பணிகளிற்காக கொண்டு வரப்பட்ட சுண்ணாம்பு மூடைகளுடனேயே அக்கப்பல் மூழ்கியிருந்தது. பலநாட்களாக அதனை மீட்கமுயற்சிசெய்த கப்பலின் உரிமை யாளரான ஆங்கிலேயர்கள் செய்வதறியாது மூழ்கியநிலையிலேயே அதனைவிற்றுவிட முடிவு செய்தனர். ஆங்கிலேயநாட்டிலிருந்து இலங்கைவரை பயணம்செய்த இரட்டைப்பாய் மரக்கப்பலான அதனை மூழ்கியநிலையிலேயே விலைக்குவாங்கிய வெங்கடாசலம்பிள்ளை எல்லோரும் ஆச்சரியப்படும்படியாக அதனை நீரிலேமிதக்கவிட்டார். கப்பற்சாத்திரம் என்னும் மாலுமி சாஸ்திரத்திலும் வானசாஸ்;திரத்திலும் பூரணஅறிவுகொண்ட இவர் இதற்காக பலநாட்கள் முல்லைத்தீவில் கள்ளப்பாடு என்னும் கடற்கரைப்பிரதேசத்தில் தங்கியிருந்து மேற்படிமூழ்கிய கப்பலை மீட்டெடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் தன்னிடம் இருந்த சுழியோடிகள் மூலமாக கப்பலில் இருந்தபொருட்களை சிறிதுசிறிதாக வெளியேஎடுத்தார். கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சுண்ணாம்புமூடைகளை கடலில் இட்டு கப்பலின் பாரத்தைக்குறைத்தார். பின்னர் மூழ்கிய கப்பலுடன் நேராகப்பிணைக்கப்பட்டு மிதந்து கொண்டிருக்கும் பாரியமரக்குற்றிகளை பக்கவாட்டாக நகர்த்துவதன் மூலம் மூழ்கிய கப்பலை நீர்மட்டத்திற்கு கொண்டு வந்து ஆங்கிலேயரும் மெச்சும் வகையில் தமிழரின் பொறி;முறை அறிவினைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். ‘அத்திலாந்திக் கிங்’ என்னும் அக்கப்பல் மூழ்கியதும் அதிலிருந்த சுண்ணாம்பு மூடைகளை வெளியே கொண்டு வரமுடியாமல் அச்சுண்ணாம்புகள் அவ்விடத்திலேயே கடலில் இடப்பட்டன. முல்லைத்தீவிற்கு அண்மையில் வங்காளவிரிகுடாக்கடலில் இன்றும்கூட ‘கப்பல்தட்டு’ என அவ்விடம் அழைக்கப்படுகின்றது.

இக்காலத்தில் தன்னைப்போன்ற கடல்வணிகனான ‘மாநாயக்கன்’ னின் மகளான கண்ணகியின் பெயரில் சிறுகொட்டிலாக இருந்த ‘வற்றாப்பளை கண்ணகி அம்மன்’ ஆலயத்தை கற்கட்டிடமாக இவர் புனரமைத்ததுடன் கோயிலுக்கு அண்மையில் பக்தர்கள் தங்குவதற்காக ஓருமடத்தையும் தனது பெயரில் இவர்அமைத்திருந்தார்;. அத்துடன் கள்ளப்பாட்டில் இருந்து வற்றாப்பளைவரை உள்ள வீதியின் இருமருங்கிலும் ஒவன்;வருவருடைய வருணாச்சிரதர்மங்களிற்கு ஏற்றதான மடங்களை அமைத்து பக்தர்கள் தங்கிச்செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினார். (யாழ்பாணவைபவக்கொளமுதி பக்கம்) சிலவருடங்களிற்கு முன்புவரை வற்றாப்பளை கண்ணகிஅம்மன் கோயில் முன்றலில் இவர் பெயரில் அமைந்திருந்த யாத்திகர்களிற்கான தங்குமடம் அடையாளம் காணக்கூடியவாறு காணப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது. முறையான வீதிப்போக்குவரத்துகள் அற்ற அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கடற்பயணம் செய்துவரும் பக்தர்கள் வற்றாப்பளை கண்ணகியம்மனை வழிபடும் வசதிகளையும் இவ்வாறு ஏற்படுத்திக்கொடுத்தார். அத்துடன் கள்ளப்பாட்டில் பிள்ளையார் கோயிலொன்றையும் அமைத்திருந்தார். பாய்க்கப்பல் மூலமாகவும் நடந்தும் கதிர்காமம் செல்லும் யாத்திரிகள் ஓய்வெடுப்பதற்காக கள்ளப்பாடு கடற்கரையில் ஓருமடத்தினையும் அமைத்; திருந்தார் அக்காலத்தில் கள்ளப்பாடு கடற்கரையில் வேறுகல்லிலானகட்டிடங்கள் ஏதுமற்ற நிலையில் இவரால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரேகாணியில் இவை இரண்டும் அமைந்திருந்ததனால் அப்பிள்ளையார் கோவில் ‘மடத்தடிப்பிள்ளையார்’ கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் சிதைவடைந்த அப்பிள்ளையார் கோவில் உள்ளூர்மக்களினால் புனரமைக்கப்பட்டதன் பின்பு இன்று கள்ளப்பாடு பிள்ளையார்’ கோவில்என அழைக்கப்படுகின்றது.

மீழ்க்கப்பட்ட கப்பலை வல்வெட்டித்துறைக்கு கொண்டு வந்து தமது பரம்பரை வாடியில் (வாடி என்பது கப்பல்கள் மற்றும் படகுகளை உற்பத்திசெய்யவும் அவைகளைப் பழுதுபார்க்கவும் பயன்படுத்தும் இடமாகும்) அதனைச்சீரமைத்து மீண்டும் கடற்பிரயாணம் செய்யும் வகையில் மாற்றியமைத்தார். இவ்வாறான அவருடையவாடியமைந்திருந்த இடமே இன்றைய முத்துமாரியம்மன் கோவிலுக்கு வடக்காக அமைந்திருக்கம் வாடியெழுங்கைப் பகுதியாகும். ‘அத்திலாந்திக் கிங்’ என அழைக்கப்பட்ட இக்கப்பல் கெச் (கெட்ச்) சுக் கப்பல் எனப்படும் வகையைச்சேர்ந்தது. இவ்வகைக்கப்பல்களின் பாய்மரங்களின் உயரம் அதுவரை இலங்கை இந்தியா போன்ற கீழைத்தேசநாடுகளில் கட்டப்பட்ட சமஅளவு கொண்ட பாய்மரங்கள் போலன்றி முன்னிருக்கும் பாய்மரம் எப்பொழுதும் உயர்ந்ததாகவே காணப்படும். இதனால் பருவக்காற்றுக்களின் மூலம் நகரும் இவ்வகைக்கப்பல்கள் ஏனையகப்பல்களை விடவிரைவாக நகரும் தன்மை கொண்ட வையாக விளங்கின. இவ்வாறு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கப்பலைவாங்கி திருத்தியதன் மூலம் ஆங்கிலேயரின் கப்பல் கட்டும் நுட்பட்தையும் நன்கு அறிந்து கொண்டார். இத்தகைய பட்டறிவின் மூலம் தமிழரின் பாரம்பரிய கப்பல் கட்டும் முறையினைச் சீர்திருத்தினார். இதன் மூலம் புகழ்பெற்றிருந்த வல்ன்;வட்டித்துறையின் கப்பல்க்கட்டும் கலையினை மேலும் மொருகூட்டினார். இவ்வாறு எமது நாட்டின் கடலையும் அது தொடர்பாக இவருக்கு இருந்த நுண்ணிய அறிவையும் பொதுச்செயலில் இவருக்கு இருந்த பரந்த மனப்பாங்கையும் கண்ட ஆங்கிலேயரும் தமது கடல்பயணத் தேவைகளுக்காக பலசமயங்களில் வல்வெட்டித்துறையில் வாழ்ந்த இவரின் உதவியைப் தொடர்ந்து பெற்றுக்கொண்டனர். இதுபற்றிய சிறுகுறிப்பொன்று முருகர் குணசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட ‘இலங்கையில் தமிழர் முழுமையான வரலாறு’ என்ற புத்தகத்தில் 343 ஆம் பக்கத்தில் காணப்படுகின்றது. அது பின்வருமாறு

‘திரு சாண்டஸ்(சன்டெர்ச்) உடன் சாவகச்சேரியிலிருந்து போதகர் ஹன்ட்(Hஆண்D) இரு வினாவிடை உபதேசிமார் ஒரு ஆசிரியர் என நான்குசுதேசிகளும் ஆனி 16ந் திகதி வல்வெட்டித் துறையிலிருந்து மட்டக்களப்புக்கு பயணித்து எமது மத்தியநிலையமான புளியந்தீவில் தங்கினர்.’ எனத் தொடர்ரும் இக்குறிப்பானது 1864ம் ஆண்டிற்கு உரியது. இது அமெரிக்க கிறிஸ்தவ மிசனரிமாருடைய (ஆ.C.M) ரெபொர்ட் வொஇ.7 ரேஇ 451 – 1857 – 1871 பட்டிcஅஒல 20ஒcட்1864 என காணப்படுகின்றது. 1864 இல் வல்வட்டித்துறையின் எசமானாக அன்று விளங்கிய இவரைவிட வேறு யாரால் இது முடியும்.

தந்தையிடமிருந்து இரண்டு கப்பல்களை மட்டுமே பெற்றிருந்த இவர் சிவன்கோயிலைக் கட்ட ஆரம்பித்த காலத்தில் 12 கப்பல்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். என 1967ம் ஆண்டு வெளியிடப்பட்ட சிவன்கோயில் குடமுழுக்கு விழா மலரில் 17ம் பக்கத்தில் வல்வையின் மூத்த எழுத்தாளரும் விழாமலரின் ஆசிரியருமாகிய பண்டிதர் சங்கரவைத்திலிங்கம். எழுதியுள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கது.

பன்னிரண்டு கப்பல்களிற்கு அதிபதியாக இருந்த வெங்கடாசலம் பிள்ளையவர்கள் 1852இல் பிரிட்டன் பர்மாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பர்மாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்திலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியவர்களில் இவரே முதன்மையானவர். இவரால் ‘கெச்சுக்கப்பல்கள்’ வல்வெட்டித்துறையில் கட்டப்படத்தொடங்கி யதும் பர்மா வியாபாரம் மேலும் சூடுபிடித்தது. ஆரம்பத்தில் இங்கிருந்து சென்ற கடலோடிகளும் வியாபாரிகளும் அங்கே தரித்திருந்து அரிசியையும் நெல்லையும் கொள்வனவு செய்வதினால் கப்பல்கள் அங்கிருந்து திரும்புவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்;து செல்லும் கப்பல்களில் உடனடியாகவே பொதிகளை ஏற்றக்கூடியவாறு எம்மவர்கள் சிலரை அங்கேயே தங்கவைத்தார். இவர்கள் எப்பொழுதும் ‘மேலாளர்’களாக பர்மாவில் தங்கியிருந்து உற்பத்தியாளர்களிடமும் வியாபாரிகளிடமும் பேரம்பேசி குறைந்த விலைகளில் அரிசியை வாங்கி மூட்டைகளாக ;கட்டி தயாராகவைத்திருப்பர். வல்வெட்டித்துறையில் இருந்து செல்லும் கப்பல்கள் உடனடியாக அவைகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வல்வெட்டித்துறைக்கு திரும்பிவிடும். இவ்வாறு மேலாளர்களாக இவரால் அனுப்பப்பட்ட ஊழியர்கள் தங்குவதற்காக ‘அரக்கனில்’ ஓர்இடத்தை வாங்கி மடம், கிணறு என்பவற்றுடன் அவ்விடத்தில் ஒருமுருகன் கோவிலையும் இவர் உருவாக்கினார். 1853 முதல் பர்மாவுடனான அரசி வர்;தகத்தை இவர் ஆரம்பித்தது முதல் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தபலரும் இவ்வியாபாரத்தில் குதித்தனர்;. இவ்வாறாக வல்வெட்டித் துறைக் கடலோடிகளின் அதீததொடர்பினால் பர்மாவின் அரக்கன். இறங்கூன் மோல்மீன் போன்ற துறைமுகங்களில் இருந்து வல்வெட்டித்துறைக்கு நேரடியாகவும. விரைவாகவும் வரும் கடற்பாதை ஒன்று அடையாளம் காணப்பட்டது. ஆரம்பத்தில் கோரமண்டலக்கரை என அழைக்கப்படும இந்தியாவின் கிழக்குக்கரை துறைமுகங்களை ஒட்டியே பர்மாவை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சென்றடைந்தன. இப்புதிய கடற்பாதை இவரால் கண்டுபிடிக்கப்பட்டவுடன் வங்காளவிரிகுடாவின் 9364 அடி ஆழமுள்ள இக்கடற்பகுதியை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சர்வசாதாரணமாக ஊடறுத்து பயணம் செய்தன. பதினோராம் நூற்றாண்டில் இராஜேந்திரசோழனது காலத்தில் ‘சோழர்களின் ஏரி’ என வங்கக்கடல் வர்ணிக்கப்பட்டதுண்டு. அதனையும்விட அதிகமாகவே 19ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியிலும் 20 நூற்றாண்டின் முன்னரைப்பகுதியிலும் வல்வெட்டித்துறை கப்பல்கள் வங்காளவிரிகுடாவை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இத்தகையநிலைக்கு ஈழத்தமிழரின் ‘கடலாளுமையை’ வளர்த்த பெருமை பெரியவர்’ வெங்கடாசலம்பிள்ளையையே சாரும்.

இந்தியாவின் நாட்டுக்கோட்டைச் செட்டிகளுடனும் ஆந்திராவின் சிறந்தவியாபாரிகளான நாயுடுக்களுடனும் வர்த்தகத்தொடர்புகளை இவர் வைத்திருந்தார். பர்மாவின்புகழ்பெற்ற தேக்கு மரங்களையும் புட்டரிசி என்னும் சிறந்தரகஅரிசினையும் தனது கப்பல்களில்; கொண்டுவந்து பெரும்பொருள் ஈட்டியதுடன் தானதர்மங்கள் செய்வதிலும் முன்னின்றார். அத்துடன் எமது மக்களின் உணவுத்தேவையினை பூர்த்திசெய்வதிலும் பெரும் பங்காற்றினார். இவ்வாறு பல கப்பல்களை வைத்திருத்திருந்து கடல்வணிகம் செய்த இவரின் கப்பல்கள்.

அரு(ர)க்கன்போர்மான் வந்தேரிரங்கூன்
காக்கை நாடு வங்காளஞ் சென்னை
கூடலூர் கொற்றங் குடிநாகைத்தலம்
திண்டுக்கல்காரைக்கால் புதுச்சேரி
பறங்கிப்பேட்டை பம்பாய்குற(றி)ச்சி
மலையாள மாலபள்ளிதூத்துக்குடி
கொச்சிகள்ளிக்கோடு கொல்லம்
தகைசெறி திருவனந்தபுரம் கொழும்பு
மானார்(நகர்) திருகோணமலை மட்டக்
களப்பெனும் பலபதி அனனபூரணிஅம்மா

ஆகிய இடங்களிற்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டன. என கெச்சுக்கப்பலின் தண்டயைல் ஆகப்பணியாற்றிய நா.வேலுப்பிள்ளையின் சமரகவியில் (1904) குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில்மணியமாக விளங்கிய இவர் கோயிலின் சுற்று மதிலைக்கட்டியதுடன் கோவிலுக்கு தெற்குப்புறமாக ஒரு குளத்தையும் வெட்டு வித்தார். பன்னிரண்டு கப்பல்களுக்கு அதிபதியாக விளங்கிய இவரிடம் கப்பல் தண்டையல் (கப்ரன்) சுக்கானியர் (மாலுமிகள்) பண்டாரங்கள் (சமையல்காரர்) கிலாசுகள் (பாய்மரம்கட்டுவோர்) எனப்பலர் வேலைசெய்தனர். அதுபோல் கப்பலுடன் சம்மந்தப்பட்ட பொருட்களை ஏற்றுவது இறக்குவது எனத் தொழில் புரிந்த பலரும் கப்பலுக்கு தேவையான கயிறுகள் திரிப்போர் மற்றும் கப்பல் வாடியில் வேலை செய்வோர் என ஏறத்தாழ 300 பேர்களுக்கு மேல் இவரிடம் ஊழியம் புரிந்தனர். இவ்வாறு இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்த 300பேருடைய குடும்பத்தினரின் வாழ்க்கையினை இவர் தாங்கியுள்ளார். 1946ம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பின்படி வல்வெட்டித்துறை மக்களின் மொத்தத்தொகை 6015பேர் என 30.7.1950 இல் வித்துவான் வ.மு கனகசுந்தரம் வீரகேசரிவார வெளியீட்டில் எழுதிய ‘வல்வெட்டித்துறை வரலாறு’ என்னும் கட்டுரை தெரிவிக்கின்றது. இதில் சைவர்கள் 5035 பேரும் கிறிஸ்தவர்கள் 85 பேரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். அப்படியானால் அதற்கு 100வருடங்களுக்கு முன் எத்தனைபேர் வல்வட்டித்துறையில் வாழ்ந்திருப்பர். அவர்களில் 300குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள்? எனக் கணக்கெடுத்தால் அம்மக்களுக்கான இவரின் சேவை என்பதை அர்ப்பணிப்பென்றோ அல்லது அளவிடற்கரியது என்றோ கூறலாகாது. அம்மக்களுக்கு அனைத்துமே இவராகத்தான் இருந்திருக்கும். அதனால்தான் தன்னிடம் வேலை செய்தவர்களுக்கு எசமானாக விளங்கியது போலவே ஊர் மக்களனைவருக்கும் இவர் எசமானகவே கருதப்பட்டு ‘எசமான்’ என அம்மக்களால் அழைக்கப்படலானார். இன்றும் கூட அவர் வாழ்ந்த வீடு ‘எசமான்வீடு’ என்றே அழைக்கப்படுகிறது. இதன்மூலம் வல்வெட்டித்துறை மக்களினை வழிநடத்தும் தலைமைப்பதவி இயல்பாகவே கைவரப்பெற்றார். அவர் மறைந்து நூற்றியிருபது வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவரை குறிப்படும்போது ‘எசமான்’ எனவும் அவருடைய வழிவந்த குடும்பத்தினரை ‘எசமான் குடும்பத்தினர்’ எனவும் அளவிறந்த மரியாதையுடன் வல்வெட்டித்துறை மக்கள் இன்றும் அழைக்கின்றனர். என்பதனைக் கொண்டே அந்தமண்ணில் அவருடைய ஆளுமையானது அழிக்க முடியாதவாறு எவ்வளவுதூரம் ஆழவேருன்றி இருக்கின்றது என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு கிராமத்தின் அல்லது பட்டினத்தின் முதல் மனிதராக முன்னுரிமை பெற்றிருந்த வெங்கடாசலம்பிள்ளை அவர்களின் வாழ்வில் 1867ஆம் ஆண்டு பாரிய மாற்றம் உண்டாயிற்று. வல்வட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் ‘தர்மகர்தா’ என்னும் கோயில் மணியமாக அக்காலத்தில் கடமையாற்றிவந்த இவர் கண்டகனவில் ‘இவரது தந்தையார் வல்வட்டித்துறையில் சிவபிரானுக்கு கோயில் ஒன்றை எடுத்துத்தருமாறு பணித்திருந்தார். இவரது தந்தையராகிய ‘திருமேனியார்’ மறையும் போது வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர். இவற்றுடன் அவருடைய பூட்டனாரான திரு. ‘வேலர்’ ஆரம்பித்து வைத்த நெடியகாட்டு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோவில். புட்கரணிப்பிள்ளையார் கோவில். மற்றும் வைகுந்தப் பிள்ளையார் கோவில் எனும் நான்கு கோயில்களுக்கும் மணியமாக இருந்து பெருந்தொண்டு ஆற்றியவர்.

அக்கனவினைக்கண்ட நாள்முதலாய் பெரியதம்பியார் இதேநினைவிலேயே இருக்கலானார். சிவன்கோவிலை எங்கே அமைப்பது என தவிக்கலானார்! இக்காலத்தில் இவரிடம் ஊழியம் புரிந்த கம்பர்மலையைச்சேர்ந்த ஒருவர் தனது வேலைமுடிந்து தினமும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு தெற்குப்புறமாக அமைந்திருந்த கற்களும் பற்றைகளும் பலவித செடிகொடிகளும் மரங்களும் வளர்ந்திருந்த நடைபாதைவழியூடாக வீட்டுக்கு திரும்பிச்செல்வது வழக்கம். மின்சாரவசதியற்ற அக்காலத்தில் முன்னிரவில் சிறுபற்றைகளினுடாக நடந்து செல்லும் அவர் ஒருநாள் அப்பகுதியில் நின்ற கொன்றை மரத்தடியில் சிறிய வெளிச்சம் ஒன்றைக்கண்டார். தொடர்ந்து சிலநாட்கள் இவ்வாறு தான்கண்ட விபரத்தை தனது எசமானான வெங்கடாசலம்பிள்ளையிடம் அவர்கூறினார். நம்பமுடியாத வெங்கடாசலம்பிள்ளையும் அடுத்தநாள் அந்த ஊழியரையும் உடனழைத்துக் கொண்டு அவ்விடத்துக்கு சென்றுபார்த்தார். ஆம் அந்த ஊழியர் காட்டிய இடத்தில் நின்ற கொன்றைமரத்தடியில் பசுவின் சாணம் எரிந்து கிடக்கக்கண்டார். அத்துடன் கொன்றை மரத்தின்பூக்கள் எல்லாம் அதனைச்சுற்றி விழுந்திருக்கவும் கண்டார். அவ்விடத்தில் நின்று நிமிர்ந்து பார்த்தபோது நேர்வடக்காக இருந்த முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானத்தைக் கண்டார். தந்தையார் கனவில் சொன்ன பொருளைப்புரிந்து கொண்ட வெங்கடாசலம்பிள்ளையும் அவ்விடத்திலேயே சிவபிரானுக்கு கோயில் கட்டமுடிவெடுத்தார்.

கடலோடுவதால் கிடைத்த பெரும் செல்வத்தில் திளைத்த வல்வெட்டித்துறையில் திரும்பிய இடமெல்லாம் கோயில்களே இன்றுபோல் அன்றும் காணப்பட்டன. எனினும் அவைகஇளில் பெரும்பாலனவை பிள்ளையார் கோவில்களாகவும் வைரவர் கோயில்களாகவுமே காணப்பட்டன. முழுமுதற்கடவுளான சிவபிரானை வழிபடுவதாயின் பருத்தித்;துறையில் இருந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கே வல்வெட்டித்துறை மக்கள் செல்ல வேண்டியிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

கப்பல்வணிகம் மூலம் பெரும்பொருள்ஈட்டி புகழ்பெற்ற வர்த்தகராயும் பெரும்தனவந்தராயும் இருந்த வெங்கடாசலம்பிள்ளை முன்பிருந்த சைவநாயன்மார்கள் போன்று எக்கணமும் முழுமுதற் கடவுளாம் சிவபிரானை நினைத்து அவருக்கு கோயில் கட்டும் முடிவில் செயற்படலானார். கொன்றைமரத்தில் ஜோதி தோன்றியஇடத்தில் கோயில் அமைப்பதற்கு கொன்றை மரங்கள் நிறைந்திருந்த அம்மன்கோவிலுக்கு தெற்காகவும் புட்கரணிப்பிள்ளையார் கோவிலுக்கு மேற்காகவும் அமைந்திருந்த 60 பரப்புக்காணியை விலைக்கு வாங்கிக்கொண்டார். இந்நிலப்பகுதி வெங்கடாசலம்பிள்ளையின் பெரியதந்தையாராகிய ‘மணியகாரர்’ புண்ணியமூர்த்தியாருக்கே சொந்தமாக இருந்தது. அந்நிலப்பகுதியில் கற்பாறைகள் அதிகமாகக்காணப்பட்டன. ஊருக்கே எசமானாக வழிவந்து வாழ்ந்து காட்டிய குடும்பத்தில் வந்த பெரியவர் ஆனாலும் இறைவனுக்கு ஊழியம் புரியும் அடியவனாகி தனது கையினாலேயே பெரும் பாறைகளைப்புரட்டியும் தகர்த்தும் ‘புட்கரணி’ என்னும் அந்நிலத்தைச் செம்மைப்படுத்தினார். ‘புட்கரணிப்’ என்பது தாமரை அல்லது தாமரைக்குளம் எனத்தமிழில் பொருள் தருவதால் அதற்கு அண்மையில் அமைந்திருந்த பிள்ளையார் கோவில் புட்கரணிப்பிள்ளையார் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் பின்நாட்களில் புட்கரணி என்பது ‘புட்டணி’ என திரிபடைந்துள்ளது. முன்பு தாமரைக்குளம் என்னும் கருத்தில் புட்கரணிக்குளம் என அழைக்கப்பட்டகுளம் ஈற்றில் தூர்ந்த காலத்தில் தூர்ந்த அல்லது தீர்ந்த எனும் காரணப்பொருள் தரும் ‘தீரு’ என்னும் சொல்லடை வில் எனப்படும் குளத்துடன் கூடி தீருவில் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னாட்களில் ஒரேபொருள்தரும் வில் ஸ்ரீ குளம் என்பன இணைந்து தீருவில் என அழைக்கப்படவேண்டிய அக்குளம் தீருவில்க்குளம் எனவும் குளம் அமைந்துள்ள அப்பகுதி தீருவில் எனவும் இன்று அழைக்கப்படுகின்றது.
Andrew Stalin


கருத்துகள் இல்லை: