கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 24 டிசம்பர், 2012

உழவர் நாள்


இந்த உழவன் உமக்கு ஏழையாகத் தெரிகிறான்.ஆனால் இவனுக்கோ இயற்கை செல்வமாகத் தெரிகிறது.பார்ப்பவர் கண்களுகேற்ப உயர்வு தாழ்வு இருக்கிறது.
 விவசாயிகள் தினம்.. 
டிசம்பர் 23 -

முன்பு நான் பதிந்திருந்த ஒரு பதிவில் ஒருவர் கருத்து பதிந்திருந்தார்.. பணம் வாங்கிக்கொண்டுதானே, விவசாயி பொருட்களை கொடுக்கிறார்கள் என்று.. உணவுப்பொருட்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது என்கிற எண்ணம் போலும் அவருக்கு.. பொருளைக்கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி.. விவசாயி உணர்வோடு உழைப்பை கொடுத்து காசு வாங்குபவன்.. விவசாயி படும் அல்லல்கள் தெரியுமா..?

வயலுக்கு நீர் பாய்ச்சும்போது பாம்பு தீண்டி பலியானவர்களை பற்றி தெரியுமா..?

மழை வரும் என்று நினைத்து விதைகளை புழுதியில் ஊன்றி வைக்கும் விவசாயியின் நம்பிக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

மழை சரியாக பொழியாமல் தூரலோடு நின்றுவிட்டால் வெளித்தெரியும் விதைகளை கொக்கும், மயிலும் உணவாக கொத்தி தின்பதை ஆற்றாமையால் காணும் மனதை பற்றி தெரியுமா..?

எல்லாம் சரியாக இருந்தாலும், உரங்களை பயன்படுத்த தேவைப்படும் நேரத்தில் உரத்தட்டுப்பாடு என்று விலையை உயர்த்தி வயிற்றில் அடிப்பதையும் ஏற்றுக்கொண்டு வீட்டில் இருக்கும் குண்டுமணி தங்கத்தையும் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து பணம் பத்தாமல் கடனுக்கு உரம் வாங்கி விதைப்பவனை பற்றி தெரியுமா..?

இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு அந்த குண்டுமணி தங்கத்தையும் திருப்ப முடியாமல் இருக்கும் விவசாயியின் சோகம் தெரியுமா..?

பால் தரும் பசுமாட்டின் காம்புகள் நோயினால் பாதிக்கப்பட்டு அடிமாட்டுக்கு விற்கும் அவலம் தெரியுமா.?

வெட்டியாக சம்பளம் வாங்கும் விவசாயத்துறை அதிகாரிகள் பேச்சை கேட்டு கண்ட விதைகளை ஊன்றி ஒன்றுமில்லாமல் போகும் அவலம் தெரியுமா..?

கர்நாடகக்காரன் தண்ணீர் கொடுப்பான் என்று நம்பி ஆற்று பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயியை தெரியுமா..?

கர்நாடகாவில் இருந்து நீர் வந்தாலும், புற்களாலும், மண்மேடுகளாலும் மூடப்பட்ட கால்வாய்மூலம் கடைமடைக்கு நீர் வந்து சேரும் என்று நம்பும் விவசாயியின் நம்பிக்கை தெரியுமா..?

விளைந்து வந்த பயிரை அடிக்க களம் இல்லாமல் திண்டாடும் அலைச்சல் தெரியுமா..?

களம் வரைக்கும் வந்த பயிர் மழையால் நமத்துப்போன சோகம் தெரியுமா..?

களத்திலிருந்து கமிசன் கடைக்கு கொண்டு சென்று வியாபாரியின் வில்லங்க தராசில் ஏமாறும் விவசாயியின் வெள்ளந்தி மனது தெரியுமா..?

வேறு எந்த தொழில் செய்பவனுக்கும் செய்த முதலீடு கண்ணுக்கு தெரியும்.. விவசாயிக்கு மட்டுமே விளைந்து விற்பனைக்கு கடைக்கு கொண்டுவரும் வரை அது கானல்நீர்தான்...

நன்றி
பாலாவின் இணையம்
படத்துக்கும் பதிவுக்கும்


கருத்துகள் இல்லை: