கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 28 ஜூன், 2007

சாமர்களின் வரலாறு

சாமர் ( Samar )
.
உலகெங்கும் " ஆதிப் பழங்குடி மக்கள் " என்று ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 300 மில்லியன் மக்கள் 70 நாடுகளில் பரந்து வாழ்ந்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக கிறீன் லாந்தில் வாழும் எக்சிமோவர் , வட அமெரிக்காவில் வாழும் இந்தியானர் , மற்றும் அவுஸ்ரேலியாவில் வாழும் பழங்குடி மக்கள் போன்றோர் வரிசையில் இந்த சாமரும் அடங்குவர் . சாமி மொழியை வீட்டுப்பாவனை மொழியாகக் கொண்டவர்களை சாமர் என்று அழைப்பர். இவர்கள் ஏறத்தாழ 70,000 பேர் உலகில் வாழ்கின்றார்கள் . இவர்கள் வாழும் பிரதேசம் " சாம லாண்ட்" அல்லது " லப்லாண்ட்" என்று அழைக்கப்படும்.
இது ஏறத்தாழ 150,000 km2 பரப்பளவை உள்ளடக்கியது. இந்தப்பிரதேசம் வடநோர்வே , வடசுவீடன் , வட பின்லாந்து மற்றும் ரஸ்சியாவின் கோலா பிரதேசங்களைக் கொண்டு அமைந்துள்ளது. நோர்வேயில் சுமார் 40,000 சாமரும் , சுவீடனில் 20,000 சாமரும், பின்லாந்தில் 6,000 சாமரும், மற்றும் ரஸ்சியாவில் 2,000 சாமரும் வாழ்கின்றார்கள். இம்மக்கள் கூட்டத்தினர் தங்களுக்கே உரித்தான தனித்துவமான பண்பாடு , சமய , மற்றும் சமூக வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டவர்கள்.
இவர்கள் பேசும் மொழி சாமி மொழியாகும். இது பின்ஸ்க் - உர்கிஸ்க் ( Finsk -Urkisk ) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது பின்லாந்து , லற்வியா , எஸ்ரோனியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் பேசப்படும் மொழிகளின் சகோதர மொழியாகும் . சாமி மொழியிலும் பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன. சாமர் வாழும் பிரதேசத்திற்கு ஏற்றவாறு மொழியிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. வடசாமி , தென்சாமி , கிழக்கு அல்லது கோலாசாமி மற்றும் மத்தியசாமி அல்லது லுலசாமி என்பனவாகும் .
சாமி மொழி ஒரு வளம் நிறைந்த மொழியாகும் . அதிலே " Snow" ஐ அதாவது பனித்துகள்களை குறிப்பதற்கு 300 வகையான சொற்கள் பயன்படுகின்றன. சாமர்களின் மதம் " ஷாமானிஸம்" எனப்படுகின்றது. இவர்கள் சூரியன் , இடி மற்றும் மின்னல் போன்றவற்றை வணங்குகின்றார்கள். இவர்களின் ஆடை அணிகலன்கள் பல வர்ணங்களைக் கொண்டவை. அவ் ஆடைகள் கைகளால் பின்னப்படுகின்றன. அவற்றில் ஆண் , பெண் வேறுபாடுகளைக் காணக் கூடியதாக இருப்பதுடன் பிரதேச வேறுபாடுகளையும் காணலாம்.
உணவுப் பழக்கத்தைப் பொறுத்த வரையில் துருவ மானின் இறைச்சியை பதப்படுத்தி உணவாக்கி உண்கிறார்கள். அவற்றின் தோலை கூடாரம் அமைக்கவும் வீட்டுப் பாவனைப் பொருட்களாகவும் பயன்படுத்துகிறார்கள். சாமரின் இசை வடிவம் "ஜொய்க்" என்று அழைக்கப்படுகிறது. இது மலைச்சாரலில் காற்று வீசும் போது எழுப்பும் ஒலி வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனித்துவமான இசை வடிவம் ஆகும். விளையாட்டைப் பொறுத்தவரையில் சாமர் பனிச் சறுக்கல் ஓட்டம், பனிச்சறுக்கல் வண்டியில் துருவ மான்களை இணைத்து ஓடுதல் மற்றும் துருவ மான்களை கயிறு வீசிப் பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
தொழிலைப் பொறுத்த வரையில் கடலை அண்டிய பிரதேசங்களில் வாழும் கரையோரச் சாமர் மீன் பிடித்தல் மற்றும் வேட்டையாடலை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர்.
மலையை அண்டிய பிரதேசங்களில் வாழும் மலைச்சாரல் சாமர் துருவ மான் வளர்ப்பு மற்றும் வேட்டையாடலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். சாமர்கள் வருடத்தில் 11 நாட்களை சிறப்பு நாட்களாகக் கொண்டாடி வருகின்றார்கள். அவற்றுள் பெப்ரவரி 6 ஆம் திகதி சமாரின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது. சாமருக்கு என்று ஒரு தேசியக் கொடியும் தேசிய கீதமும் இருக்கிறது. எனினும் அவர்களுக்கென்று சுதந்திரமான தனியான நாடு இல்லை. ஏனைய பழங்குடி மக்கள் போன்று சாமரின் உரிமைகளும் காலம் காலமாக மறுக்கப்பட்டே வந்துள்ளன. அவர்கள் தமது உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்கள். நோர்வேயில் சுமார் 1850 முதல் 1950 வரையான 100 ஆண்டு காலப்பகுதியில் சாமரின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்களின் சாம அடையாளங்களை அழித்து, அவர்களை தூய நோர்வேசியர்களாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பபட்டது. எனினும் சில சாமர்கள் விழித்துக் கொண்டு , நாடுகள் தழுவிய ரீதியில் சாமரின் தேசிய மாநாட்டைக் கூட்டினர். இந்த மாநாடு 1917 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி " துரோண்கெய்ம்" ( Trodheim-Norway) என்னும் இடத்தில் நடைபெற்றது. அந்த மகாநாட்டில் சாமரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். அந்த நாளே சாமரின் தேசிய நாளாக இன்றும் கொண்டாடப் படுகின்றது. 1959 ஆம் ஆண்டுவரை நோர்வேயில் சாம மொழியை பொது இடங்களில் பயன்படுத்துவற்குத் தடை இருந்தது. 1980களில் நோர்வே அரசு, வட நோர்வேயில் உள்ள அல்தா ( Alta ) என்ற இடத்திலுள்ள ஆற்றை மறித்து அணை கட்ட முயன்றது. இந்த முயற்சி சாமரின் வாழ்வியலைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார்கள். எனினும் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தது. நோர்வே தாம் நினைத்தது போல் அணையைக் கட்டி முடித்தது. ஆயினும் இப்போராட்டம் சாமரிக்கிடையே மேலும் ஒற்றுமையை ஏற்படுத்தியது.
சாமர்கள் எங்கு வாழ்ந்தாலும் , அவர்கள் எல்லோரும் ஒரே கொடியை சாம தேசியக் கொடியாகவும் , ஒரே கீதத்தை சாம தேசிய கீதமாகவும் 1986 முதல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சாமரின் தேசியக் கொடி பல வர்ணங்களால் ஆனது. அது அவர்களின் பனி படிந்த பிரதேசத்திலே தோன்றுகின்ற சூரிய , சந்திர காட்சிகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.1906 ஆம் ஆண்டு நோர்வேசியரான ஈசாக்- சாபா ( Isak Saba ) என்பவரால் இயற்றப்பட்ட பாடலே தேசிய கீதமாக விளங்கி வருகிறது. சாமரின் முக்கியமான கொண்டாட்டங்கள் அனைத்திலும் அவர்களது தேசியக்கொடி ஏற்றலும் , தேசியகீதம் இசைத்தலும் முக்கிய கடமையாக மேற்கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் சாமரின் உரிமைகளைப் பாதுகாக்க நோர்வேயில் ' சாமதிங்' எனப்படும் சாம பாராளுமன்றம் 1989 இல் உருவாக்கப்பட்டது. இதற்கு ஜனநாயக முறைப்படி 4 வருடங்களுக்கு ஒரு தடவை, மக்கள் வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் படுகின்றார்கள். இந்த வாக்களிப்பில் சாமராய்த் தம்மை பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். நோர்வேயில் பல்லாயிரக்கணக்கான சாமர்கள் வாழ்ந்த போதிலும் 1989ல் 5500 சாமர் மட்டுமே தம்மை சாமராக பதிவு செய்து கொண்டனர். ஒருவர் தன்னைச் சாமராகப் பதிவு செய்வதற்கு அவரின் வீட்டு அன்றாடப் பாவனை மொழி சாமியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. நோர்வேயில் பல்லாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட , சாமரை தூய நோர்வேசியர்களாக்கும் முயற்சி, அவர்கள் பலரின் சாம அடையாளங்களை இல்லாது ஒழித்துவிட்டது.
அத்தோடு சிலர் தம்மை சாமராகப் பதிவு செய்ய முன்வரவும் இல்லை. இந்த 'சாமதிங்' எனப்படும் சாமப்பாராளுமன்றுக்கு நிறைவேற்று அதிகாரங்கள் எதுவும் இன்று வரை கிடையாது. வெறும் ஆலோசனை சபையாகவே செயற்படுகின்றது. நோர்வே அரசால் சாமர் தொடர்பான விடையங்களில் முடிவு எடுக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது இந்த சபை அதற்கு ஆலோசனைகள் வழங்குவதாக அமையும். இந்த சபையின் நோக்கம் சாமரின் தனித்துவமான பண்பாடு, கலாச்சார வாழ்வியல் விழுமியங்களைப் பாதுகாத்தலும், அபிவிருத்தி செய்தலும் கூட்டிணைத்தலுமாகும். இப்படியான ஒரு சபை பின்லாந்தில் 1973ல் இருந்து இயங்கி வருகின்றது. எனினும் சுவீடனில் 1993ல் இருந்தே இயங்கி வருகின்றது. இந்த மூன்று சாம பாராளுமன்றங்களும் ஒன்றிணைந்து நூடிக் சாம கூட்டமைப்பு ( Nordic Sama Convention) என்ற ஒரு பொது அமைப்பாக இயங்கிவருகின்றது.
.
நோர்வேயின் முதலாவது சாமப் பாராளுமன்றத்தை 1989 ஆம் ஆண்டு, அன்று நோர்வேயின் மன்னராக இருந்த 'ஊலா' ( Ola) 'கரசோ' ( karasjo) என்ற இடத்தில் தொடக்கி வைத்தார். 2000 ஆம் ஆண்டு அதே இடத்தில் புதிய சாம பாராளுமன்ற கட்டடம் இன்றைய மன்னர் 'கரால்ட்' ( Harald) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டடம் , அவர்களது வளமையான வாழ்விடமான, துருவ மான்களின் தோலினால் வேயப்பட்ட கூடாரங்கள் போன்று , புதிய கட்டடக்கலை வடியப்பிலே உருவாக்கப்பட்ட அழகான கட்டடமாகும். சுவீடனில் புதிதாக வடிவமைக்கப்பட்ட புதிய சாம பாராளுமன்ற கட்டடடம் 2009 ஆம் ஆண்டு 'கிருனா' ( Kiruna) என்ற இடத்தில் திறந்து வைக்கப்படட உள்ளது.
பின்லாந்திலும் சுவீடனிலும் சாமரின் சில உரிமைகள் அரசியல் சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நோவேயில் அவ்வாறு அவர்களின் உரிமைகள் அரசியல் சட்டரீதியாக உறுதி செய்யப்படவில்லை. நோர்வேயில் வாழுகின்ற சாமரில் பெருபான்மையானோர் ஒஸ்லோவிலேயே வசிக்கிறார்கள். 1959 ஆம் ஆண்டு வரை நோர்வேயில் பாடசாலைகளில் சாம மொழியைக் கற்பதற்குத் தடை இருந்தது. இன்று அவர்கள் சாம மொழிப் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் அமைத்து தங்களது மொழியையும் கல்வியையும் மேன்படுத்தி வருகின்றார்கள். இன்று சாம மொழியிலே நாளிதழ்கள் வெளிவருகின்றன. வானொலி,தொலைக் காட்சி, இணையத் தளம் என்பன இயங்குகின்றன.
முன்புஅவர்கள் தங்கள் போக்குவரத்துக்கு பனிச்சறுக்கல் மரத்தினாலான பனிச்சறுக்கல் பொருட்களையும் துருவ மான் வண்டிகளையும் நம்பியிருந்தார்கள். இன்றோ ' snow skooter' எனப்படும் பனிச்சறுக்கல் உந்துருளி மற்றும் உலங்கு வானூர்தி போன்றவற்றை போக்குவரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.
உலக மயமாதல் அவர்களின் வாழ்விலும் பல மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது. எனினும் அவர்கள் தாம் ஒரு சாம தேசியம் என்ற உணர்வோடு வாழ்கின்றார்கள்.
.
எழுத்து வடிவம்> தயா. சொக்கநாதன்.

கருத்துகள் இல்லை: