கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 16 ஜூன், 2007

தமிழ் அறிஞர்கள்

தமிழிலக்கிய வாழ்வும் வளர்த்தவர்களும்
*
கருவிநூல்கள்< தமிழ் இலக்கிய வரலாறு , வெள்ளிப் பாதசரம்>
*
.
வரதபண்டிதர்
இப்பண்டிதர் சுன்னாகப்பகுதியிலே ஒல்லாந்தர் கால முக்கூற்றில் பிறந்தவர். அரங்கநாதன் என்பவர் இவருக்குத்தந்தை.சதுர்வேதம் ஆயுள்வேதங்களில் மிகுந்த அனுபவசாலியன்றி இலக்கண இலங்கியங்களை மிகவும் பயின்று திறகையுற்ற பாவாணருமாகச் சிவராத்திரிப்புராணம்,ஏகாதசிப்புராணம் என்னும் என்னும் இரு புராணங்களையும் பாடினார். சிவராத்திரிப்புராணத்தில் எழுநூற்றுப் பதினைந்து (715 ) விருத்தங்களும் மேற்குறிப்பிட்ட இரு புராணங்களைவிட அமுதாகரம் என்னும் பெரியமருத்துவ நூலையும் இவர் செய்தனன். அவற்றுள் முந்நூற்றுப்பத்து (310 ) விருத்தங்கள் உள்ளன.
"ஐயமின் முந்நூற்றையிரு விருத்தம்
செய்ய செந்தமிழாற் றெரிந்துரை செய்தனன்
கங்கை மாநதி சூழ் காசி மாநகரும்
பங்கமில் பங்கயப் பைந்துணர் மாலைலையும்
கோதகலோமதிக் கொடியுமிங் குடையோன்
கன்னியங்கமுகிற் கயவினங்குதிக்கும்
துன்னிய வளவயற் சுன்னைநன்னாடன்"
தாமோதரம் பிள்ளை
சி.வை. தாமோதரம் பிள்ளை ( கி.பி 1832 - 1901 ) பல பாட்டுகளையும் உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல்முதலில் பி.ஏ.பட்டம் பெற்றுச் சிறப்பாகத் தேறிய அவர், ஆங்கிலத்தில் பெற்றியருந்த புலமையையும் ஆராய்ச்சியறிவையும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு நல்ல முறையில் பயன்படுத்தினார். அவருடைய பாட்டுகளும் உரைநடையும் பழைய முறையில் சொற்செறிவும் பொருட்செறிவும் உடையன. இன்று அவர் இயற்றிய நூல்கள் மறைக்கப்பட்ட போதிலும், பனையோலையில் இருந்த பழைய தமிழ் ஏடுகள் சிலவற்றைப் பெருமுயற்சியுடன் படித்து முதல்முதலாக அச்சிட்டு வெளியிட்ட அவருடைய அரிய தொண்டு மறுக்கப்படவில்லை. நீதிபதி அளவிற்கு உயர்பதவி பெற்று விளங்கிய அவர், அக்காலத்தில் தமிழ்த் தொண்டைப் பெருமையாகக் கருதினார். உதய தாரகை என்ற தாளிகைக்கும் ( பத்திரைகைக்கும்) ஆசிரியராக இருந்து தொண்டு புரிந்தார். பனையோலை ஏடுகளைப் புறக்கணித்தால் பழைய நூல்கள் அழிந்துவிடுமே என்று பெருங்கவலை கொண்டு முதல் குரல் எழுப்பிப் பல தமிழ் நூல்களைக் காப்பாற்றியவர் அவர். தமிழ் மொழியைத் தாய் என்று வணங்கிப்போற்றும் அளவுக்கு முதல்முதலில் உணர்ச்சி ஊட்டியவர் அவர். " சங்கம் மரீஇய நூல்களுள் சில இப்போதுதானும் கிடைப்பது சமுசயம்... எத்தனையோ திவ்ய மதுர
கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!அயலான் அழியக் காண்கிலும் மனம் தளம்பிகின்றதே! தமிழ்மாது நும் தாய் அல்லவா? இவள் அழிய நமக்கு என் என்றுவாளா இருக்கின்றீர்களா?" என்று எழுதிய சொற்களில் தமிழ் மொழியிடத்திலும் இலக்கியங்களிடத்திலும் அவர் கொண்டிருந்த பத்தி உணர்ச்சி புலனாகிறது. (பரிதிமாற்கலைஞர்) வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் முதலான தமிழறிஞர் பலர் முன்னேற ஊக்கம் ஊட்டியவர் அவர்.
.
இலங்கையர்கோன்
மாணவப் பருவத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர் ' இலங்கையர்கோன்' இயற்பெயர் ந. சிவஞானசுந்தரம். பதினெட்டாவது வயதிலே இவரது முதற் கதையான ' மரிய மதலேனா' 1930 களில் ' கலைமகள்' இதழில் வெளியாகிற்று.
சமஸ்கிருதம், லத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஆழ்ந்தபயிற்சி இவரை விரிந்த தளத்தில் சிந்திக்கவும் எழுதவும் வைத்தது. ஷேக்ஸ்பியர் இவரைப் பெரிதும் கவர்ந்தவர். இதன் விளைவாக நிறைய ஒற்றையங்க, தொடர் நாடங்களை எழுதினார். அவற்றுட் பல இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்களை மகிழச்செய்தன ' பச்சோந்திகள்' 'லண்டன் கந்தையா', 'விதானையார் வீட்டில்' ' மிஸ்டர் குகதாஸன்' ஆகியன மேடை நாடகங்களாயும் வெற்றிபெற்றன.
ஈழகேசரி,கலைச்செல்வி,ஈழநாடு,தமிழின்பம்,வீரகேசரி,தினகரன் ஆகிய ஈழத்து இதழ்களிலும், கலைமள், சூறாவளி, மணிக்கொடி,பாரதத்தாய், ச்க்தி, சரஸ்வதி, ஆகிய தமிழக இதழ்களிலும் இவரது படைப்புக்க்கள் வெளியாகின.
எல்லாமாக இவர் முப்பது சிறுகதைகள் வரை எழுதியிருப்பார் இவரது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய ' வெள்ளிப்பாதசரம்' என்ற ஒரே ஒரு தொகுதி 1962 ஆம் ஆண்டு வெளியாகிற்று. பிறநாட்டுக் கதைகளையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலாக இவான் துர்க்கனேவின் ' முதற்காதல்' மட்டும் வெளிவந்துள்ளது.
' மாதவி மடந்தை' , ' மிஸ்டர் குகதாஸன்' என்ற நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன.
இவரது கதைகள் ' கதைக்கோவை' போன்ற திரட்டுகளில் அந்தக் காலத்திலேயே வெளியாகி உள்ளன.
தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்க ளில் ' இலங்கையர் கோன்' முன்னனியில் நின்ற ஒருவர் என்று அப்போதே பாரட்டுப்பெற்றவர். கு.ப.ரா,ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா,வல்லிக்கண்ணன் ஆகியோருடன் எழுதிக்கொண்டிருந்த இவரிடத்தில் கு.ப.ராவின் இலக்கியப்பார்வையும், நடையும் வசப்பட்டிருந்தன. எனினும் நாடக எழுத்தில் பல புதிய சிகரங்களை இவர் தொட்டிருக்கிறார். ஈழத்தமிழர் வாழ்வை மண்மணங்கமழ காவியநயத்துடன் உணர்ச்சி பொங்க சித்தரித்தவர் இவர்.
படைப்புத்துறையி மட்டுமன்றி சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய அழகுக்கலைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தவர் அருங்கலை விநோதர் ' இலங்கையர் கோன்'
சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார்.
காரியாதிகாரியாக பணியாற்றுகிற போது தனது அருமையான பழகு முறையால் சாதாரண மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவரென்று சிறப்பு ' இலங்கையர் கோனு' டைய மானிட நேயத்தை உணர்த்தி நிற்கிறது. இவருடைய படைப்பின் தளமும் எழுத்தின் வசீகரமான வெற்றியும் இதுதான்.
.
கனகசபைப் புலவர்
யாழ்பாணத்துக் கனகசபைப் புலவர் ( 1829 - 1873 ) கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர். விரைந்து கவிதை இயற்றுபவர். திருவாக்குப் புராணம், அழகிரிசாமி மடல் என்னும் நூல்களைப் பழைய மரபை ஒட்டி இயற்றியவர்.
.
வி.கனகசபைப்பிள்ளை
வி.கனகசபைப்பிள்ளை ( 1855 - 1906 ) என்ற அறிஞரும் யாழ்ப்பாணத்துக் குடும்பத்தைச் சார்ந்தவர். தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிந்தவர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த அவர், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், '1800 ஆண்டுகட்குமுன் தமிழர்' என்ற ஆராய்ச்சி நூல் எழுதியும் ஏடுகளை ஆய்ந்தும் தொண்டு செய்தார்.
.
தி.க.கனகசபைப்பிள்ளை
இலங்கை அளித்த வழக்கறிஞர்களுள் தி.க.கனகசபைப்பிள்ளை ( கி.பி. 1863 - 1922 ) என்பவரும் குறிப்பிடத்தக்க இலக்கியத் தொண்டு புரிந்தவர். வடமொழி வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தையும் சுந்தரகாண்டத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணத்தின் பாலகாண்டத்திற்கு உரை எழுதினார்.
.
நா. கதிரைவேற்பிள்ளை
நா.கதிரைவேற்பிள்ளை ( 1844 - 1907 ) மற்றொரு யாழ்ப்பாணப் புலவர். தமிழ்நாட்டில் பல சைவ நூல்களையும் நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். ஒரு நல்ல அகராதியும் தொகுத்தார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார்.
.
கு.கதிரைவேற்பிள்ளை
கு.கதிரைவேற்பிள்ளை ( 1829 - 1904 ) யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்து தொண்டு புரிந்தார்.
.
சிவசம்புப் புலவர்
ஏறக்குறைய அறுபது செய்யுள் நூல்களை இயற்றிய யாழ்ப்பாண அறிஞர் சிவசம்புப் புலவர் ( 1830 - 1909 ) அந்தாதிகள் பல பாடியுள்ளார். எல்லாம் இடைக்காலத் தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றிப் பழைய போக்கில் பாடப்பட்டவை. சில நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.
.
குமாரசாமிப் புலவர்
சுன்னாகம் குமாரசாமிப் புலவர் ( 1854 - 1922 ) வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார்; சாணக்கிய நீதி வெண்பா, மேகதூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை.சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு. சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த நல்ல வரலாற்று நூல். வேறு சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார்.
.
ஆறுமுக நாவலர்
.
யாழ்ப்பாணத்துத் தமிழறிஞருள் சிறப்பிடம் பெற்று வளங்கியவர் ஆறுமுக நாவலர் ( கி.பி. 1822 - 1889 ) . அவர் சிலகாலம் தமிழ்நாட்டுக்கு வந்த சென்னையில் தங்கி தமிழ்த்தொண்டு செய்ததும் உண்டு. சைவ சமயப் பற்று மிகுந்த அவர். பெரிய புராணம் முதலான நூல்கள் பரவுவதற்குப் பெரும் பணி புரிந்தார். சென்று நூற்றாண்டில் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்புக்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப்படுத்தியவர் என்பர். பலர் தமிழ் நூல்கள் படிக்குமாறு படசாலை ஏற்படுத்தியதோடு, அவர்களுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டுத் தருவதற்கு அச்சகமும் வைத்து நடத்தினார். அவற்றை நடத்துவதற்கு ஆகும் பணத்திற்கு வீடு வீடுடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்துத் தமிழ்த்தொண்டு செய்த சான்றோர் அவர். தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் நூல்களை அச்சிட்டுத் தரும் வகையில் சிறந்த வழிகாட்டிய விளங்கினார். மாணவர்களுக்கு உரிய தொடக்கப் பாடப் புத்தகங்களை எளிய தமிழில் இலக்கணப் பிழை அற்ற தமிழில் தாமே எழுதினார்.சைவ சமயத்தை விளக்கிக் கூறும் நூல்களை இயற்றினார். இலக்கணத்தை எளிதில் கற்பதற்கு உதவும் நூல்களும் எழுதினார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரைநடையில் எழுதிப் பலர்க்கும் பயன்படுமாறு செய்தார். வேறு சில செய்யுள் நூல்களுக்கும் நன்னூலுக்கும் உரை எழுதினார். சென்ற ஆண்டில் தமிழில் உரைநடை வளச்சிபெறத் தொடங்கிய சூழ்நிலையில், அதற்கு நல்ல வழிகாட்டிப் பிழையற்ற எளிய உரைநடைத் தமிழை வளர்த்தார். தமிழ் உரைநடையின் தந்தை என்று அவரைக் குறிப்பிட்டுப் போற்றுதல் தகும்.

கருத்துகள் இல்லை: