கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

குடிநிலையுரைத்தல்

பாடியவர்: ஔவையார்
திணை: கரந்தை
துறை: குடிநிலையுரைத்தல்

இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்
இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே

திங்கள், 2 ஏப்ரல், 2012

போர்க்களத்து நாயகன்

திணை இலக்கியம் : புறநானூறு
பாடியவர்: ஒரூஉத்தனார்
திணை: தும்பை
துறை: தானைமறம்


கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
திணிநிலை அலறக் கூவை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
ஓம்புமின் ஓம்புமின் இவண்! ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே!

கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய

வளைவாகக் கட்டப்பட்ட மாலையைச் சூடுதல் இவனுக்குப் பொருந்தியுள்ளது!வளைந்த அலை போன்ற ஆடையை அணிதலும் இவனுக்குப் பொருந்தியுள்ளது!வேந்தன் விரும்புவதையே தானும் விரும்பிச் சொல்லி அவனைத் தன் வயப்படுத்தலும் இவனுக்கே பொருந்தியுள்ளது

திணிநிலை அலறக் கூவை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி

(பகைவர்) வஞ்சம் கொண்டு புடைசூழ்ந்த போர்க்களத்தில் உள்ள பகைவீரர் அஞ்சி அலறி சிதறும்படி கூரிய வேலைக் கையில் எடுத்துக் கொண்டு படையைப் பிளந்து சென்றான். அப்போது,

ஓம்புமின் ஓம்புமின் இவண்என ஓம்பாது
"மேலே தொடர்ந்து செல்லாதபடு தடுத்துவிடுங்காள் தடுத்துவிடுங்கள்" என்று பகை தங்களுக்குள் கூறிக்கொண்டு தடுத்தனர்

தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே

அவர்களின் தடையை மீறிக்கடந்து சங்கிலியால் கட்டப்பட்ட யானைபோல் கொல்லப்பட்டு வீழ்ந்த வீரர் குடல்கள் காலைத் தடுக்கவும் வீச்சாய் கன்றை விரும்பும் ஆவைப்போல் முன்னரணில் பகைவரை எதிர்த்து பகைவீரர்களால் வளைத்துக்கொள்ளப்பட்டிருந்த தன் நண்பனிடம் வரலானான்.

அவனைப் போலவே இவனும்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

பெருநன் தாள் பணிவாயாக


திணை இலக்கியம்: புறநானூறு
திணை: கரந்தை
துறை: கையறுநிலை


பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
வண்டுமேம் படூஉம்இவ் வறநிலை யாறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
பெரிய ஆண் யானையின் அடிபோல விளங்கும் ஒரு கண்ணையுடைய

இரும்பறை இரவல! சேறி ஆயின்
பெரிய பறையை உடையவனே! இரவலனே நீ அவ்வழி செல்வாயின்

தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
தொழாமல் செல்வதைக் கைவிடுக (தொழுது போவாயாக)

வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யாறே
(அவ்வாறு செல்வாயானால் இந்தக் கொடியவழி வண்டுகள் இடைவிடாது மேம்பட்டு வாழும் இயல்புடையது, எமக்காய் வீழ்ந்தவன்

பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
பல ஆவின்கூட்டமான நிரையைத் தன்னுடன் மீட்டுவந்து

கல்லா இளையர் நீங்க நீங்கான்
அஞ்சியோடத் தான் மட்டும் போர்களத்தினின்று நீங்காதவனாய்ப்

வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
பகைவவர் விற்கள் எய்த அம்புகள் எல்லாம் தன் உடலில் பாய்ந்து புகக்

கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.
கரையை அழிக்கும் நீரில் அமைந்த அணையைப் போல எதிர்த்து நின்று விலக்கினான்

இதோ! இருக்கிறது அவன் நடுகல்




பொருளுரை:
பெரிய ஆண் யானையின் அடிபோல விளங்கும் ஒரு கண்ணையுடைய பெரிய பறையை உடையவனே! இரவலனே நீ அவ்வழி செல்வாயின் தொழாமல் செல்வதைக் கைவிடுக (தொழுது போவாயாக);அவ்வாறு செல்வாயானால் இந்தக் கொடியவழி வண்டுகள் இடைவிடாது மேம்பட்டு வாழும் இயல்புடையது, எமக்காய் வீழ்ந்தவன் பல ஆவின்கூட்டமான நிரையைத் தன்னுடன் மீட்டுவந்து அஞ்சியோடத் தான் மட்டும் போர்களத்தினின்று நீங்காதவனாய்ப் பகைவவர் விற்கள் எய்த அம்புகள் எல்லாம் தன் உடலில் பாய்ந்து புகக் கரையை அழிக்கும் நீரில் அமைந்த அணையைப் போல எதிர்த்து நின்று விலக்கினான் இதோ! அவன் நடுகல்

சனி, 31 மார்ச், 2012

விருந்தோம்பற் குடிமகன் பெருஞ்சாத்தன்

பாடியவர்: மதுரை நக்கீரர்.
பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.

மென்புலத்து வயல்உழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டொடு
நெடுவாளைப் பல்உவியல்
பழஞ்சோற்றுப் புகவருந்திப்
புதல்தளவின் பூச்சூடி
அரில்பறையாற் புள்ளோப்பி
அவிழ்நெல்லின் அரியலாருந்து
மனைக்கோழிப் பைம்பயி ரின்னே,
கானக்கோழிக் கவர்குரலொடு
நீர்க்கோழிக் கூப்பெயர்க் குந்து
வேயன்ன மென்தோளால்
மயில்அன்ன மென்சாயலார்
கிளிகடி யின்னே
அகல்அள்ளற் புள்இரீஇ யுந்து
ஆங்கப் பலநல்ல புலன்அணியும்
சீர்சான்ற விழுச்சிறப்பின்
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்
தன்கடைத் தோன்றி என்உறவு இசைத்தலின்
தீங்குரல்...கின் அரிக்குரல் தடாரியொடு
ஆங்கு நின்ற எற்கண்டு
சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
ஐயென உரைத்தன்றி நல்கித் தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி இவனை
என்போல் போற்று என்றோனே அதற்கொண்டு
அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே
அகன்ஞாலம் பெரிது வெம்பினும்
மிகவா னுள்எரி தோன்றினும்
குளமீ னோடும்தாள் புகையினும்
பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி
விளைவுஒன்றோ வெள்ளம் கொள்கஎன
உள்ளதும் இல்லதும் அறியாது
ஆங்குஅமைந் தன்றால் வாழ்க அவன்தாளே!

மென்புலத்து வயல்உழவர்
மென்புலமான (மருதநிலத்து) வயல்களில் (தொழில் செய்யும்) உழவர்

வன்புலத்துப் பகடுவிட்டுக்
வன்புலமான (முல்லை நிலத்தில்) எருதுகளை மேயவிட்டு

குறுமுயலின் குழைச்சூட்டொடு
(காட்டு) முயலின் சுடுஇறைச்சியுடனே(குளம்புக்கறி)

நெடுவாளைப் பல்உவியல்
நீளவாளைமீன் அவியலை

பழஞ்சோற்றுப் புகவருந்திப்
பழஞ்சோற்றுணவுடன் உண்பர்;

புதல்தளவின் பூச்சூடி
புதரில் பூத்த தளவமுல்லைப் பூவைச்சூடி

அரில்பறையாற் புள்ளோப்பி
கிணைப்பறை ஒலியெழுப்பி (நெல்மணிகளைத் தின்னும்) பறவைகளை துரத்துவர்

அவிழ்நெல்லின் அரியலாருந்து
நெற்சோற்றினின்று வடிக்கப்பட்ட கஞ்சியைக் குடிக்கும்

மனைக்கோழிப் பைம்பயி ரின்னே
இல்லத்தில்கோழியின் அழைப்பினால்

கானக்கோழிக் கவர்குரலொடு
காட்டுக்கோழி (தன்) கவர்ந்த குரலை உயர்த்தியும் அழைக்கும்;

நீர்க்கோழிக் கூப்பெயர்க் குந்து
புள்ளினங்கள் அங்கிருந்து நீங்கியோடும்

வேயன்ன மென்தோளால்
மூங்கில் தோள்களையுடைய

மயில்அன்ன மென்சாயலார்
மயிலின் மெல்லிய சாயலையுடைய பெண்டிர்

கிளிகடி யின்னே
கிளிகளைத் துரத்துவராயின்

அகல்அள்ளற் புள்இரீஇ யுந்து
அகன்ற சேற்றில் நின்ற நாரைகளும் நீங்கியோடும்;

ஆங்கப் பலநல்ல புலன்அணியும்
சீர்சான்ற விழுச்சிறப்பின்
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!


பலவாகிய நல்ல விளை புலன்கள் சூழ்ந்திருக்கும் மிக்க செல்வச்சிற்ப்பும் சிறிய யானைகளையும் உடைய பெறுவதற்கு அரிய தித்தன் என்பவனின் கெடாத நல்ல புகழ் பொருந்திய உறையூர்க்கிழக்கே நீண்ட கைகளையுடைய வேண்மானுக்கு உரிய காவல் பொருந்திய பிடவூருக்குரிய அறத்தால் உண்டான புகழையுடைய சாத்தனின் கிணைப் பெருநர் ஆவோம்
பெரும!
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
முன்நாள் நண்பகலில் வெம்மையால் நொந்து

கதிர்நனி சென்ற கனையிருள் மாலை
ஞாயிற்றின் செங்கதிர் கழிதலால் செறிந்த இருள் பரவிய மாலை நேரத்திலே

தன்கடைத் தோன்றி என்உறவு இசைத்தலின்
தன்வீட்டு முற்றத்தில் நின்று வந்திருக்கும் முறையாலின்

தீங்குரல்...கின் அரிக்குரல் தடாரியொடு
இனிய இசையான குரலையுடைய தடாரியோடு

ஆங்கு நின்ற எற்கண்டு
அங்கு நின்ற என்னை கண்டு

சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
சிறிது போதும் தாழ்த்தாமலும் மிகுதியாய்ப் பேசுதலும் இல்லாது

அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
அரிய அணிகலன்களைத் தந்து வரவிடுபவனாய் விரும்பி

ஐயென உரைத்தன்றி நல்கித்
"ஐ" எனச்சொல்லி மென்மையான சில சொற்களைச் சொல்லியது மட்டுமன்ரி(என்னிடம் அருள் கொண்டு)

தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி
இவனை
என்போல் போற்று என்றோனே அதற்கொண்டு
அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே

பொன்போன்ற தன்மனையாளையழைத்து இவரை என் உறவினன் போல் பேணுவீராக என்றவனை இனி நான் மறபேனோ? அவனை எண்ணிய மனத்தால் வேறு எவரையும் நினைப்பேனோ?

அகன்ஞாலம் பெரிது வெம்பினும்
அகன்ற உலகம் வரட்சியால் வாடினாலும்

மிகவா னுள்எரி தோன்றினும்
மிகவாக எரிகோள்கள் தோன்றினாலும்

குளமீ னோடும்தாள் புகையினும்
குளமீனும்(விண்மீன்கள்) தாள்மீனும்(வால்விண்மீன்கள்) எரிந்து புகைந்தாலும்

பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பெருவளமாக கொக்கின் நகங்களை போன்ற நெல்லரிசிச் சோற்றைப்

பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி
பசிய துண்டுகளான பொரிக்கறியும் சூட்டிறைச்சியும் உண்டு

விளைவுஒன்றோ வெள்ளம் கொள்கஎன
விளையக் கொள்க(எனச் சான்றோர் வாழ்த்துமாறு)

உள்ளதும் இல்லதும் அறியாது
உள்ளது இது என்றும் இல்லாத்து இது பாராமல்

ஆங்குஅமைந் தன்றால் வாழ்க அவன்தாளே!
வரையாமல் கொடுத்தலில் அமைந்தது அவனது தாளாண்மை. அது வாழ்க!

பொருளுரை:

மென்புலமான (மருதநிலத்து) வயல்களில் (தொழில் செய்யும்) உழவர், வன்புலமான (முல்லை நிலத்தில்) எருதுகளை மேயவிட்டு,(காட்டு) முயலின் சுடு இறைச்சியுடனே (குளம்புக்கறி) நீளவாளைமீன் அவியலை பழஞ்சோற்றுணவுடன் உண்பர்; புதரில் பூத்த தளவ முல்லைப் பூவைச்சூடி கிணைப்பறை ஒலியெழுப்பி (நெல்மணிகளைத் தின்னும்) பறவைகளை துரத்துவர். நெற்சோற்றினின்று வடிக்கப்பட்ட கஞ்சியைக் குடிக்கும் இல்லத்தில் கோழியின் அழைப்பினால் காட்டுக்கோழி (தன்) கவர்ந்த குரலை உயர்த்தியும் அழைக்கும். மூங்கில் தோள்களையுடைய மயிலின் மெல்லிய சாயலையுடைய பெண்டிர் கிளிகளைத் துரத்துவராயின் அகன்ற சேற்றில் நின்ற நாரைகளும் நீங்கியோடும். பலவாகிய நல்ல விளை புலன்கள் சூழ்ந்திருக்கும் மிக்க செல்வச்சிறப்பும் சிறிய யானைகளையும் உடைய பெறுவதற்கு அரிய தித்தன் என்பவனின் கெடாத நல்ல புகழ் பொருந்திய உறையூர்க்கிழக்கே நீண்ட கைகளையுடைய வேண்மானுக்கு உரிய காவல் பொருந்திய பிடவூருக்குரிய அறத்தால் உண்டான புகழையுடைய சாத்தனின் கிணைப் பெருநர் ஆவோம். பெரும! முன்நாள் நண்பகல் வெம்மையால் நொந்து ஞாயிற்றின் செங்கதிர் கழிதலால் செறிந்த இருள் பரவிய மாலை நேரத்திலே தன்வீட்டு முற்றத்தில் நின்று வந்திருக்கும், இனிய இசையான குரலையுடைய தடாரியோடு அங்கு நின்ற என்னை கண்டு, சிறிது போதும் தாழ்த்தாமலும் மிகுதியாய்ப் பேசுதலும் இல்லாது அரிய அணிகலன்களைத் தந்து வரவிடுபவனாய் விரும்பி "ஐ" எனச்சொல்லி மென்மையான சில சொற்களைச் சொல்லியது மட்டுமன்றி(என்னிடம் அருள் கொண்டு), பொன்போன்ற தன்மனையாளையழைத்து இவரை என் உறவினன் போல் பேணுவீராக என்றவனை இனி நான் மறபேனோ? அவனை எண்ணிய மனத்தால் வேறு எவரையும் நினைப்பேனோ? அகன்ற உலகம் வரட்சியால் வாடினாலும் மிகவாக எரிகோள்கள் தோன்றினாலும் குளமீனும்(விண்மீன்கள்) தாள்மீனும்(வால்விண்மீன்கள்) எரிந்து புகைந்தாலும் பெருவளமாக கொக்கின் நகங்களை போன்ற நெல்லரிசிச் சோற்றைப்பசிய துண்டுகளான பொரிக்கறியும் சூட்டிறைச்சியும் உண்டு "விளையக் கொள்க!(எனச் சான்றோர் வாழ்த்துமாறு) உள்ளது இது என்றும் இல்லாதது இது என்றும் பாராமல் (வரையாமல்) கொடுத்தலில் அமைந்தது அவனது தாளாண்மை. அது வாழ்க!

நன்றி:படம்
http://ssmunish.blogspot.com

அதியமான் போலும் பிரபாகரன்

பாடியவர்: ஒளவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.


சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!


சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

குறைவான கள் கிடைத்தாலும் அதை யாம் உண்டு பாட எஞ்சியதைத் தான் மகிழ்ந்து உண்பான். (நான் விரும்பும் மன்னன்)

சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானலும் நனிபல கலத்தன்; மன்னே!

சோறு எல்லோருக்கும் பொதுவாதலால் சிறிய சோறானாலும் அதை பலருடன் உண்பான். மிக அதிகமான சோற்றிலும் மிக கலத்தோடும் உண்பான்

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!

எலும்போடு கூடிய தசையிறைச்சித் துண்டை எமக்குத் தருவார். அம்போடு வேல் நுழைகின்ற இடமெல்லாம் (போர்க்களநிலையிலும் ) முன்னிற்பான்

நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே

நரந்தம் பூ மணக்கும் அவனுடையைய கையால் புலால் மணக்கும் (தீய மணம்) வீசும் தலையை அன்புடன் தடவுவான்(தாய்போல எண்ணி)

அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!

அரிய தலையையுடைய பெரிய பாணரின் அகன்ற தலையில் துளைத்து இரப்பவரின் கையுள்ளும் தைத்துத் தன்னால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் புன்மையான கண்பார்வைஒளி குன்ற அழகிய சொல்லை ஆராயும் நுட்பமான ஆராய்ச்சியையுடைய அறிவை உடையவரின் நாவில் போய் விழுந்தது கொடிய போர் வேல்.


ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;

எமக்கு ஆதரவாக இருந்த தலைவன் எவ்விடத்துள்ளான். இனிப் பாடுவோரும் இல்லை. பாடுபவருக்கு ஒன்றைத் தருபவரும் இல்லை

பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!

குளிர்ந்த நீரையுடைய நீர்த்துறையில் பகன்றை(பூ) என்ற தேன் பொருந்திய பெரிய மலர் மற்றவரால் சூடப்படாமல் கழிந்ததைப் போல் பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்காமல் இறந்து போகின்ற உயிர்கள் இந்நாட்டில் மிகப்பலவாகும்.


பொருளுரை:
குறைவான கள்(சிறிய அளவிலான கஞ்சி) கிடைத்தாலும் அதை யாம் உண்டு பாட எஞ்சியதைத் தான் மகிழ்ந்து உண்பான்(நான் விரும்பும் மன்னன்).சோறு எல்லோருக்கும் பொதுவாதலால் சிறிய சோறானாலும் அதை பலருடன் உண்பான். மிக அதிகமான சோற்றிலும் மிக கலத்தோடும் உண்பான்.எலும்போடு கூடிய தசையிறைச்சித் துண்டை எமக்குத் தருவான். அம்போடு வேல் நுழைகின்ற இடமெல்லாம் (போர்க்களநிலையிலும் ) முன்னிற்பான்.நரந்தம் பூ மணக்கும் அவனுடையைய கையால் புலால் மணக்கும் (தீய மணம்) வீசும் தலையை அன்புடன் தடவுவான்(தாய்போல எண்ணி).அரிய தலையையுடைய பெரிய பாணரின் அகன்ற தலையில் துளைத்து இரப்பவரின் கையுள்ளும் தைத்துத் தன்னால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் புன்மையான கண்பார்வைஒளி குன்ற அழகிய சொல்லை ஆராயும் நுட்பமான ஆராய்ச்சியையுடைய அறிவை உடையவரின் நாவில் போய் விழுந்தது கொடிய போர் வேல். எமக்கு ஆதரவாக இருந்த தலைவன் எவ்விடத்துள்ளான். இனிப் பாடுவோரும் இல்லை. பாடுபவருக்கு ஒன்றைத் தருபவரும் இல்லை. குளிர்ந்த நீரையுடைய நீர்த்துறையில் பகன்றை(பூ) என்ற தேன் பொருந்திய பெரிய மலர் மற்றவரால் சூடப்படாமல் கழிந்ததைப் போல் பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்காமல் இறந்து போகின்ற உயிர்கள் இந்நாட்டில் மிகப்பலவாகும்.